கரிகால் வளவன்/கிழக் கோலம்


7. கிழக் கோலம்

ரிகால் வளவனுடைய ஆட்சியில் அறமும் பொருளும் இன்பமும் களிநடம் புரிந்தன. காவிரிக்குக் கரை கட்டிய பின் அந்த ஆற்றின் நீர் சோழ நாட்டுக்கு மிகுதியாகப் பயன்பட்டது. ‘சோறுடையது சோழ வளநாடு’ என்று மற்ற நாடுகளில் உள்ளவர்களெல்லாம் புகழத் தொடங்கினர்கள். ஒரு வேலி நிலத்தில் ஆயிரக் கலம் நெல் விளைந்தது. ஒரு பெண் யானை படுத்திருக்கும் இடத்தில் விளையும் நெல்லால் ஏழு களிறுகளைக் காப்பாற்றும்படியாகச் சோழ நாட்டின் நிலவளம் இருந்தது. பல காலமாக நெல் விளையாத இடங்களெல்லாம் இப்போது நெல் வயலாக மாறின. அந்தப் புதிய நிலங்களில் விளைந்த விளைவு மற்ற இடங்களைவிட அதிகமாக இருந்தது. காவிரி நீர் வண்டலோடு வந்து வயல்களிலே பாய்ந்ததால் எருவென்று தனியே போட வேண்டிய அவசியமே இல்லாமற் போயிற்று.

காவிரிப்பூம் பட்டினத்தில் புறநாட்டிலிருந்து வந்த மக்கள் சோழ நாட்டுப் பொருள்களை வாங்கித் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்றனர். யவனர் பலர் காவிரிப்பூம் பட்டினத்துக்கு வந்து வியாபாரம் செய்தனர். தமிழ் நாட்டிலிருந்து மிளகு, ஏலம், சாதிக்காய், பட்டு, துகில், மயில் தோகை முதலிய பண்டங்களை வாங்கித் தங்கள் நாட்டுக்கு அனுப்பினார்கள். தங்கள் நாட்டிலிருந்து பலவகையான விளக்குகளை வருவித்து விற்றார்கள். பல யவனர்கள் அரண்மனையிலும் பிற இடங்களிலும் வேலை செய்து வந்தார்கள். கப்பல் வியாபாரம் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது.

உறையூரில் கரிகால் வளவன் ஒரு நியாய சபையை அமைத்தான். அந்தச் சபை அறங்கூறவையம் என்ற பெயரோடு விளங்கியது. மக்கள் அதில் தங்கள் தங்களுக்குப் பிறரால் நேர்ந்த துன்பங்களை முறையிட்டுக் கொள்வார்கள். அந்த அவையத்தில் கல்வி கேள்வி அறிவு ஒழுக்கம் இவற்றாற் சிறந்த முதியவர்களைக் குழுவினராக அரசன் நிறுவினான். பெரும்பாலும் அறுபது ஆண்டுகள் கழிந்த மாந்தர்களே அறங்கூறவையத்திலே இருந்தார்கள்.

எந்த வகையான வழக்கானாலும் நன்றாகக் கேட்டு ஆராய்ந்து முறை செய்யும் சிறப்பு அந்த அறங்கூறவையத்துக்கு அமைந்தது. அவையத்துக்குத் தலைவனாகக் கரிகாலன் இருந்தான். அங்கே வந்த வழக்குகளெல்லாம் நியாயமாகவே தீர்ந்தமையால் அந்த அவையின் புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியது.

ஒரு நாள் சோழநாட்டின் ஒரு மூலையிலிருந்து சில முதியவர்கள் அறங்கூறவையத்தை நாடி வந்தார்கள். அறிவும் அநுபவமும் சான்ற முதியவர்கள் அந்த அவையத்தில் இருந்து நியாயத்தை நிலை நாட்டுகிறார்கள் என்பதைக் கேள்வியுற்றவர்கள் அவர்கள். அவர்கள் அறங்கூறவையத்துக்கு வந்தபோது வேறு ஒருவருடைய வழக்குப் பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. வந்த முதியவர்கள் அவையத்தில் உள்ளவர்களைப் பார்த்தார்கள். சுற்றிலும் பழுத்த சான்றோர்கள் அமர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தார்கள். ஆனால் அவர்களிடையே மிக்க இளமையை உடைய ஒருவன் அமர்ந்திருந்தான்.

அவன் வேறு யாரும் அல்லன்; கரிகாலன்தான். அறங்கூறவையத்தில் அறக் கடவுளே தலைவர். ஆதலின் தனக்கென்று தனிச் சிறப்பு ஒன்றும் இல்லாமல் அங்குள்ள சான்றோர்களோடு தானும் ஒருவனாக அவன் அமர்ந்திருந்தான். முடியை எப்போதும் கவித்துக்கொள்வது வழக்கம் அன்று. ஆதலின் அவனைக் கண்டதும் முறையிட வந்தவர்களுக்குச் சிறிது ஐயம் உண்டாயிற்று. அவன் கரிகாலன் என்று அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. “யாரோ இளைஞன் ஒருவன் இங்கே உள்ள சான்றோர்களோடு அமர்ந்திருக்கிறானே! இவன் இங்கே வரும் வழக்கில் இருசாராரும் கூறும் செய்திகளைக் கேட்டு முடிவு காணுவதற்கு ஏற்ற அநுபவம். உடையவன் அல்லவே!” என்று தம்முள் பேசிக்கொண்டார்கள்.

அவர்கள் அவ்வாறு பேசிக்கொண்டதை அருகில் இருந்த ஒற்றன் ஒருவன் கேட்டான். அன்று அறங்கூறவையத்தில் வந்த வழக்கு ஒருவாறு முடிவடைந்தது. மறு நாள் முன்னே சொன்னவர்களின் வழக்கை முறையிட்ட ஏற்பாடு செய்தார்கள். கரிகாலன் தன் அரண்மனைக்குச் சென்றான். வழக்கைத் தீர்த்துக்கொள்ள வந்தவர்கள் தன்னைக் கண்டு இளைஞன் என்று பேசிக் கொண்ட செய்தி ஒற்றன் மூலமாக அவன் காதிற்கு எட்டியது. அதைக் கேட்டு அவன் சினம் கொள்ளவில்லை. அவர்கள் ஐயமுற்றது நியாயமே என்று எண்ணினான்.

கரிகாலன் சான்றோர்களுடைய அறிவுரைகளைக் கேட்டு அவர்களின் போக்குப்படியே முடிவு கட்டுகிறவன். தன்னுடைய அறிவுத் திறத்தால் ஏதேனும் தெரிவிப்பதற்குரியது வந்தால் அதைத் தெரிவிப்பான். அது தக்கதாக இருந்தால் சான்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இல்லையானால் காரணம் கூறி அவன் கருத்தை மாற்றுவார்கள். எந்தக் காலத்திலும் கரிகாலன் தன் கருத்தையே முடிந்த முடிபாக நிலை நிறுத்துவதில்லை. இப்படித் தான் முடிவு செய்யவேண்டும் என்று குறிப்பாகக் கூடப் புலப்படுத்துவதில்லை. எப்படியாவது உண்மை வெல்ல வேண்டும், நியாயம் நிலை நிற்க வேண்டும் என்பது தான் அவனுடைய விருப்பம்.

இந்த இயல்பை வந்தவர்கள் கண்டார்களா? அவர்கள் தங்கள் வழக்கில் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள். நியாயத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் அநுபவம் இல்லாவிட்டால் தங்களுக்கு நன்மை உண்டாகாதே என்று அவர்கள் அஞ்சினார்கள். அதனால்தான் அவர்கள் கரிகாலனுடைய இளமையைக் கண்டு ஐயுற்றார்கள்.

அவர்களுடைய மன நிலையைக் கரிகாலன் உணரத் தக்க பேரறிவுடையவன். ஆகவே அவர்கள் மனம் திருப்தியடையும் வகையில் நியாயம் வழங்க வேண்டுமென்று எண்ணினான். அதுகாறும் நிகழாத ஒரு காரியத்தைச் செய்யலானான்.

றுநாள் உரிய காலத்தில் அறங்கூறவையம் கூடியது. சான்றோர்கள் வந்து அவையத்தில் அமர்ந்தார்கள். அரசன் வரும் நேரமாயிற்று. இன்னும் அவன் வரவில்லை. அப்போது யாரோ ஒரு முதியவர் அவையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவருடைய தலை நன்றாக நரைத்திருந்தது. அவைக்குள் வந்தவுடன் அரசன் அமரும் ஆசனத்தில் அவர் அமர்ந்தார். சான்றோர்கள் அவரைக் கவனித்தார்கள். அமர்ந்தவர் தலை நிமிர்ந்து யாவரையும் பார்த்தார். “என்னைத் தெரியவில்லையா?” என்று கேட்டார். அந்தக் கேள்வி அவர் இன்னார் என்பதைத் தெரிவித்து விட்டது.

கரிகால் வளவனே முதியவரைப்போல வேடம் புனைந்து வந்திருந்தான். “இவன் இளமையை உடையோன்; உரை முடிவைக் காணமாட்டான்” என்று முதல் நாள் சில நரைமுது மக்கள் சொல்லிக் கொண்டார்களே, அவர்கள் உவக்க வேண்டுமென்று தானும் நரைமுடித்து வந்திருந்தான்.

கரிகாலனே அப்படி வந்திருக்கிறான் என்பதை உணர்ந்த சான்றோர்கள், “என்ன இது!” என்று வியப்பு மீதூரக் கேட்டார்கள்.

“உங்களுக்கு நடுவில் நான் மட்டும் இளையவனாக இருந்தால் நன்றாக இருக்குமா? உங்களுடைய அநுபவம் எனக்கு உண்டாக வேண்டுமானால் இன்னும் பல ஆண்டுகள் ஆகவேண்டும். அதன் பிறகு இந்த அவையத்துக்கு வருவது முடியுமா? ஆகவே, இப்போதே புறத்தோற்றத்திலாவது உங்களைப்போல இருக்கலாமென்று எண்ணிக் கோலம் புனைந்தேன்” என்றான் மன்னன்.

முதல் நாள் வந்தவர்கள் அன்று தம் வழக்கைக் கூற வந்தார்கள். முதல் நாள் இளைஞன் என்று தாம் எண்ணியவன் சோழ சக்கரவர்த்தி என்பதை அவர்கள் அப்பால் தெரிந்து கொண்டார்கள். இன்றோ, அவன் கிழவனைப் போலக் கோலம் புனைந்து வந்திருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். ‘நாம் எண்ணியதை இப்பெருமான் எப்படி அறிந்துகொண்டான்? நம்முடைய அறியாமையால் தோற்றிய குறையைத் தீர்ப்பதற்காகவே இந்தக் கோலம் புனைந்திருக்கிறான். இனி நம்முடைய பெருங் குறைகள் எல்லாம் இங்கே தீருவதற்கு என்ன தடை?’ என்று எண்ணி அளவற்ற மகிழ்ச்சியை அடைந்தார்கள்.

அவர்களுடைய வழக்கை அறங்கூறவையத்தினர் கேட்டு ஆராய்ந்து நியாயத்தை நிலை நாட்டினர்.

கரிகாலன் நரை முடித்து வந்த நிகழ்ச்சியைத் தமிழுலகம் முழுவதும் அறிந்து அம் மன்னனைப் பாராட்டியது. புலவர்கள் அதைப் பாட்டால் புகழ்ந்து பரப்பினார்கள்.