கரிகால் வளவன்/நாட்டுவளம் பாடிய நங்கை
8. நாட்டு வளம் பாடிய நங்கை
கரிகால் வளவனுடைய புகழ் பரவப் பரவ அவனைப் புலவரும் பாணரும் நாடி வந்தார்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் நிறுவிய பட்டி மண்டபத்தில் புலவர்கள் தங்கள் தங்கள் கவிதையை அரங்கேற்றினர்கள்; தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்தார்கள். மதுரையில் இருந்த சங்கத்தைப் போன்ற சிறப்புக் காவிரிப்பூம்பட்டினத்துப் பட்டி மண்டபத்துக்கும் உண்டாயிற்று. சேர சோழ பாண்டிய நாடுகளிலிருந்து புலவர்கள் அடிக்கடி வந்து கரிகால் வளவனைப் பாடிப் பரிசு பெற்றுச் சென்றாகள். வளவன் உறையூரில் சில காலமும் காவிரிப்பூம்பட்டினத்தில் சில காலமுமாக இருந்து வந்தான்.
ஒரு நாள் வளவனிடம் ஒரு பெண் புலவர் வந்தார். அவருக்குத் தாமக்கண்ணி என்று பெயர். அவர் கால் முடம். ஆதலின் முடத்தாமக்கண்ணியார் என்று யாவரும் அவரைக் குறிப்பிட்டுக் கூறுவர். உறுப்புக் குறை இருந்தால் அதை அடையாளமாகக் கருதுவார்களேயன்றி இழிவாக எண்ணுவதில்லை. கரிகாலன் என்ற சக்கரவர்த்தியின் பெயரே அங்கத்தைக் குறித்து வந்ததுதானே? கரிந்த காலை உடையவன் என்ற பொருளை உடையது அது.
முடத்தாமக் கண்ணியார் கரிகாலனுடைய அவைக்களத்துக்கு வந்தார். வழக்கம்போல அரசன் அவரை வரவேற்று உபசரித்தான். சில காலம் அரண்மனையில் அப்பெண்மணியார் தங்கினார். அவர் சோழநாடு நில வளமும் நீர் வளமும் நிரம்பப் பெற்று விளங்குவதை உணர்ந்தவர்; மற்றவர்கள் அந்த வளங்களைப் பற்றிக் கூறுவதையும் கேட்டவர்.
ஆதலின் அந்த வளப்பங்களை யெல்லாம் அமைத்து ஒரு பெரிய கவியைப் பாடவேண்டுமென்று எண்ணினார். கரிகால் வளவன் சிறப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் விரும்பினர். தமிழில் ஒருவருடைய புகழை வெளிப்படுத்தப் பல வழிகள் இருக்கின்றன. வள்ளல்களிடம் பரிசு பெற்ற ஒருவர் பரிசு பெறும் இடம் தெரியாமல் அலையும் மற்றவர்களைப் பார்த்து, “நீங்கள் இன்னாரிடம் போனால் உயர்ந்த பரிசில் கிடைக்கும்” என்று சொல்லி அவர்களிடம் போவதற்கு வழி காட்டும் முறையில் புலவர்கள் சில நூல்களைப் பாடியிருக்கிறார்கள். அந்த வகையான நூலுக்கு ஆற்றுப்படை என்று பெயர். பரிசிலைப் பெறப் போகிறவர்கள் புலவர், பாணர், பொருநர், விறலியர், கூத்தர் என்று பலவகையாக இருப்பார்கள். இவர்களில் யாரைப் பார்த்துச் சொல்வதாகப் பாட்டு அமைகிறதோ அவர்கள் பெயரால் அந்த நூலுக்குப் பெயர் அமையும். புலவரைப் பார்த்துச் சொல்வதாக இருந்தால் புலவராற்றுப்படை என்று அதைச் சொல்வார்கள். இப்படியே பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை,விறலியாற்றுப்படை, கூத்தராற்றுப்படை என்று மற்றவற்றுக்குப் பெயர்கள் அமையும். முடத்தாமக் கண்ணியார் பொருநர் ஆற்றுப்படை பாடி அதில் கரிகாலன் புகழைப் பதித்து வைக்கலாம் என்று முடிவு செய்தார். பொருநர் என்பவர்கள் கையிலே தடாரி என்ற பறையை வைத்துத் தட்டிக்கொண்டு பாடுகிறவர்கள். அவர்களுடன் யாழ் வாசித்துப் பாடியும் ஆடியும் பரிசில் பெறும் விறலியரும் வருவார்கள். வறுமையில் ஆழ்ந்து தன்னை ஆதரிக்கும் வள்ளல் யாரையும் காணாமல் ஊர் தோறும் அலைந்துகொண்டிருக்கும் பொருநன் ஒருவனைக் கண்டு, கரிகால் வளவனிடம் சென்று பரிசில் பெற்ற மற்றொரு பொருநன் சொல்வதாக அந்தப் பொருநராற்றுப் படையைப் பாடினர்.
எங்கேயோ திருவிழாவுக்குப் பொருநன் போயிருந்தான். அங்கே அவனுடன் வந்த விறலி யாழ் வாசித்துப் பாடினாள். அவன் தடாரிப் பறை கொட்டினான். ஒரு கையால் வாசிக்கும் கருவி அது. விழாவில் நான்கைந்து நாள் அவர்கள் வயிறு நிரம்பச் சாப்பிட்டார்கள். விழா முடிந்தவுடன் அந்த ஊரை விட்டுப் புறப்பட்டுவிட்டார்கள். எங்கே போவது என்ற நிச்சயம் இல்லாமலே புறப்பட்டார்கள். விறலி தன் அழகிய யாழைச் சுமந்து சென்றாள். அவர்களுடன், உடம்பு மெலிந்த சுற்றத்தாரும் சென்றார்கள்.
இன்ன இடத்துக்குப் போவது என்ற திட்டம் இல்லாமையால் எதிர்ப்பட்ட வழியில் போனார்கள். அந்த வழி அவர்களை ஒரு காட்டினிடையே கொண்டுபோய் விட்டது. கோடை வெயிலால் ஈரத்தை இழந்து மரங்கள் எல்லாம் வாடி உலரப் பாலையாகிக்கொண்டு வரும் காடு அது. நடந்து நடந்து அவர்களுக்குக் கால் சலித்துவிட்டது. ஒரு மரம் அங்கே வழியிலே இருந்தது. அதில் மாத்திரம் சில இலைகள் இருந்தன. இலை செறிவாக இல்லை. அதனால் மரத்தின் கீழே அடர்ந்த நிழலைக் காணவில்லை; வலையை விரித்தாற்போல அந்த நிழல் இருந்தது. அதாவது கிடைத்ததே என்று அந்தப் பொருநனும் அவனுடைய பரிவாரங்களும் அங்கே சற்று அமர்ந்தார்கள்.
அப்போது கரிகால் வளவனிடம் சென்று அவன் அளித்த விருந்தை உண்டு மகிழ்ந்து பரிசில் பெற்றுக்கொண்டு மற்றொரு பொருநன் அங்கே வந்தான். மரத்தின் நிழலில் பொருநனும் அவனைச் சார்ந்த பட்டினிப் பட்டாளமும் இருப்பதைக் கண்டான். அவர்கள் நிலையைக் கண்டு இரங்கினான். ‘நாமும் இவர்களைப் போல இருந்தோமே! கரிகால் வளவனைக் கண்ட பிறகுதானே நம் கலி நீங்கியது? இவர்களையும் அவனிடம் போகும்படி சொன்னால் இவர்களுக்கும் நன்மை உண்டாகுமே!’ என்று எண்ணினான். உடனே அங்கே இருந்த ஏழைப் பொருநனைப் பார்த்து இந்தப் பணக்காரப் பொருநன் சொல்லத் தொடங்கினான்.
“பொருநர் தலைவனே, உன்னையும் உன் சுற்றத்தாரையும் நான் வரும் வழியிலே கண்டது, உங்கள் புண்ணியப் பயன் என்றே சொல்ல வேண்டும்.”
அமர்ந்திருந்த பொருநன், யாரோ பெரிய செல்வர் நம்மைப் பார்த்துப் பேசுகிறாரே! என்று எழுந்து நின்று மரியாதை செய்தான். மற்றவர்களும் எழுந்து ஒதுங்கி நின்றார்கள். அவர்கள் செயலைக் கண்டு, வந்த பொருநன் மனத்துக்குள்ளே சிரித்துக்கொண்டான்.
“நானும் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன் தான். என்னைக் கண்டதும் நான் யாரோ என்று மருண்டு விட்டீர்களென்று தோன்றுகிறது. நானும் உங்களைப் போலவேதான் பசியும் வறுமையும் வாட்ட வருந்தினவன். ஆனால் கரிகால் வளவனைக் கண்ட பிறகு என் வறுமை கால் வாங்கி ஓடி விட்டது. அவனுடைய அரண்மனை வாசல் என்றும் திறந்தே இருப்பது, நம்மைப் போன்ற இரவலர்கள் புகுந்தால் யாரும் தடை செய்ய மாட்டார்கள். நான் அங்கே போனேன். பல நாள் பட்டினி கிடந்தமையால் என் உடம்பு மிகவும் இளைத்திருந்தது. கையில் தடாரியை வைத்திருந்தேன். என் கை அழுக்கு அதில் படிந்திருந்தது. நான் விடியற்காலையில் அந்தத் தடாரியைக் கொட்டினேன். என்னவென்று சொல்வேன்! கரிகால் வளவன் நான் இருந்த இடத்துக்கே வந்துவிட்டான். நெடுநாட்களாகக் காணாத உறவினனைக் காண்பதுபோல அன்போடு என்னுடன் பேச ஆரம்பித்தான்.”
“உங்களிடம் கரிகால் வளவனே பேசினானா?”
“ஆம், நான் எந்தக் கோலத்தில் இருந்தேன் தெரியுமா? என் இடையிலே கந்தை இருந்தது; வேர்வையிலே நனைந்து பேனுக்கு உறையுளாக இருந்தது. கிழிந்த இடங்களைத் தைத்து உடுத்திருந்தேன். கரிகால் வளவன் என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தான். அந்தப் பார்வையிலே எத்தனை குளிர்ச்சி! என் என்பெல்லாம் சில்லென்று தண்ணிய உணர்ச்சியைப் பெற்றன. என் இடையிலே உள்ள ஆடையைக் களைந்தெறியச் சொல்லி வேறு புதிய ஆடையை அளித்து அணியச் செய்தான். பேன் குடியிருந்த ஆடை முன்பு என் இடையிலே இருந்தது.இப்போது மிகமிக மெல்லிய பூ வேலை செய்த ஆடையை அணிந்தேன். பிறகு மிக இனிமையான பான வகைகளைப் பொற்கிண்ணத்தில் அழகிய மகளிர் ஊற்றித் தந்தார்கள். என் தாகமும் பசியும் எனக்கல்லவா தெரியும்? அவர்கள் வார்க்க வார்க்க நான் வாங்கிக் குடித்துக்கொண்டே இருந்தேன்.
“பிறகு இளைப்பாறினேன். முதல் நாளில் நான் இருந்த இருப்பு என்ன! அப்போது நான் நுகர்ந்த இன்பம் என்ன! ஆளைப் பார்த்தால் அடையாளமே தெரியாது. அப்படி ஆடை அலங்காரங்களுடன் விளங்கினேன். முன்பு என் உடை நாற்றமும் உடல் நாற்றமும் எனக்கே சகிக்க முடியாமல் இருந்தன. இப்போதோ ஒரே நறுமணந்தான். எனக்கே, ‘நாம் கனவு காண்கிறோமோ!’ என்ற ஐயம் உண்டாயிற்று.
“அங்கே எனக்கு நடந்த உபசாரங்களை நான் முன்னே எங்கும் அநுபவித்ததில்லை. ஆகையால் அங்கே உள்ள பண்டங்களை எப்படி எப்படி உபயோகிக்கவேண்டும் என்பதே எனக்குத் தெரியவில்லை. அங்கிருந்த வேலைக்காரர்கள் அதையெல்லாம் எனக்குச் சொல்லித் தந்தார்கள்.”
நடுவிலே ஏழைப்பாணன் ஒரு கேள்வியைக் கேட்டான். “பானங்களை நுகர்ந்ததையும் ஆடை, அணிந்ததையும் சொன்னீர்கள். உணவு கொள்ள வில்லையோ?” என்று கேட்டான்.
அதற்குள் அவசரப்படுகிறீர்களே! பக்குவமாக வெந்த ஊனோடு கலந்த விருந்தைப் பக்கத்தில் இருந்து, அதைச் சாப்பிடுங்கள், இதைச் சாப்பிடுங்கள் என்று சொல்ல நான் உண்டேன்; சுடச்சுடச் சாப்பிட்டேன். ஒருவகை உணவு சலித்துவிட்டதானால் வேறு வகையான பணிகாரங்களைத் தந்தார்கள். முனை முரியாத அரிசியினால் சமைத்த சோற்றை உண்டேன். இப்படித் தினமும் விருந்து உண்டு உண்டு என் பற்கள் கூடத் தேய்ந்து போய்விட்டன. பல நாள் அங்கே தங்கியிருந்தேன். பிறகு விடை பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணிக் கரிகால் வளவனிடம், எங்கள் ஊருக்குப் போய்வருகிறோம் என்று மெல்லச் சொன்னேன். அப்போது அவனுக்கு வந்த கோபத்தைப் பார்க்கவேண்டுமே!”
கோபமா? எதற்காகக் கோபம்?” என்று ஏழைப் பொருநன் கேட்டான்.
“உண்மையான கோபம் அல்ல. கோபம் வந்தது போலக் காட்டினன். எங்களை விட்டுப் போகப் போகிறீர்களா? என்று கேட்டான். நான் போக வேண்டுமென்று தீர்மானித்திருப்பதைத் தெரிந்துகொண்டான். அவனுக்கு வருத்தந்தான். உடனே யானை முதலிய பரிசில்களைத் தந்தான். அவன் பல பொருள்களைக் காட்டினான். நான் வேண்டியவற்றையெல்லாம் வாரிக்கொண்டேன்.”
“கரிகால் வளவன் பெருஞ்செல்வம் உடைய வள்ளலோ?” என்று கேள்வி வந்தது. "என்ன, அப்படிக் கேட்கிறீர்கள்? சோழ நாட்டு மன்னன் அவன். உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் புதல்வன். அவன் கருவில் இருக்கும்போதே தந்தை இறந்தமையால், அப்போது அரசுரிமை அவனுடையதாகிவிட்டது. சேர பாண்டியர்களை வெண்ணிப் பறந்தலையில் போர் செய்து வென்றவன். அவனிடம் போனால் உங்கள் வறுமை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.”
“நாங்கள் அங்கே போய் என்ன செய்ய வேண்டும்?”
“அவனை அணுகினாலே போதும். அவனை அணுகித் தொழுது நின்றால் அவனுடைய அன்புப் பார்வை உங்கள் மேலே படும். கன்றை ஈன்ற பசு தன் கன்றைப் பார்ப்பதுபோல அன்பு ததும்ப உங்களைப் பார்ப்பான். நீங்கள் யாழ் வாசித்துத் தடாரிப் பறையைக் கொட்டுங்கள். அவற்றின் ஒலி அவன் காதில் விழுந்ததோ இல்லையோ, அவன் உங்கள் தகுதியைத் தெரிந்துகொள்வான். உங்கள் இடுப்பிலுள்ள கந்தையைக் களைந்து பட்டாடையை உடுத்துக்கொள்ளக் கொடுப்பான். நல்ல மது வகைகளை வழங்குவான். பொன்னால் செய்த தாமரையை உங்கள் தலையிலே சூட்டுவான். விறலி அணியும்படி பொன்னரி மாலையை அளிப்பான். அழகான குதிரைகளைப் பூட்டிய தேரை வழங்குவான். யானையைத் தருவான். அவற்றை அவரவர்களுக்கு நீங்கள் பகிர்ந்து கொடுக்கும்படி மிகுதியாகத் தருவான். ஊருக்குப் போகிறோம் என்று சொன்னால் எளிதிலே உங்களை அனுப்பமாட்டான். அவனுடைய அன்புக்கு ஈடாக எதனையும் சொல்ல இயலாது.”
இப்படிச் சொன்ன பொருநன் கரிகாலனுடைய சோழ நாட்டை வருணித்து, “இத்தகைய நாட்டையுடைய கரிகாலன் உனக்குப் பரிசில்களைத் தருவான்” என்று சொல்லித் தன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.
முடத்தாமக் கண்ணியார் பொருநனுடைய கூற்றாகச் சொல்லும் இந்தப் பாட்டில் சோழ நாட்டின் வளத்தை விரிவாக அமைத்திருக்கிறார்.
சோழநாடு முழுவதும் வயல்கள் இருக்கின்றன. நிலத்தில் விளையும் நெல்லை, அந்த நிலத்தின் ஒரு பக்கத்தில் உள்ள திடலில் சேர் கட்டிச் சேமித்து வைத்திருக்கிறார்கள் வேளாளர்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த நெற்கட்டுகள் நிரம்பியிருக்கின்றன. அங்கங்கே தென்னந் தோப்புகள் இருக்கின்றன. அங்கே குடிமக்கள் வாழ்கிறார்கள். உழவருடைய பெண்கள் மணலைக் குவித்து விளையாடுகிறார்கள். மயில்கள் பாகற்பழத்தையும் பலாப் பழத்தையும் கொத்தித் தின்கின்றன. ஆண் மயில்கள் அப்படியே மெல்ல அசைந்து அசைந்து வந்து மணற்பரப்பிலே ஆடுகின்றன. அருகில் உள்ள மலர்ச் செடிகளிலே வண்டுகள் முரல்கின்றன. அந்த ஒலி யாழோசை போல இருக்க, மயில்கள் நடனமாதரைப்போல ஆடுகின்றன.
வயல்கள் நிரம்பிய மருத நிலத்தில் கரும்பை வெட்டும் ஒசையும் நெல்லை அரியும் ஒசையும்
எங்கும் முழங்குகின்றன. வயல் இல்லாத மேட்டு, நிலங்களில் அடம்பங்கொடியும் பகன்றை என்ற கொடியும் படர்ந்திருக்கின்றன. புன்கமரமும் ஞாழல் மரமும் வளர்ந்திருக்கின்றன.
ஒரு பக்கம் முல்லை நிலம் பரந்திருக்கிறது. காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை நிலமாகும். அங்கே ஒரு சார் முல்லைக்கொடி பூத்துப் படர்ந்திருக்கிறது. செங்காந்தள், சிவந்த மலரைப் பூத்து நிற்கிறது. தேற்றா மரமும் கொன்றை மரமும் மொட்டவிழ்ந்து மலர்கின்றன. நீலமணியைப் போன்ற மலர்கள் காயா மரத்தில் மலர்கின்றன.
கடற்கரைப் பக்கத்தில் நாரைகள் இறால்மீனைக் கொத்தித் தின்கின்றன. அங்கே வளர்ந்திருக்கும் புன்னை மரத்திலே அவை தங்குகின்றன. கரையிலே மோதி முழங்கும் அலை ஒசைக்குப் பயந்து அந்த நாரைகள் பனைமரத்திற்குப் போய் அதன் மடலில் இனிமையாகத் தங்குகின்றன. அங்கங்கே குலைகுலையாகத் தேங்காய்களும் வாழைக்காய்களும் அந்த அந்த மரங்களில் தொங்குகின்றன.
ஒரு நிலத்தில் வாழும் மக்கள் வேறு நிலத்துக்குச் சென்று தம் நிலத்தில் விளையும் பண்டங்களை விற்றுவிட்டு அந்த நிலத்தில் விளைகின்ற பொருள்களை வாங்கி வருகிறார்கள். மலைப்பாங்கரில் வாழும் மக்கள் தேனையும் கிழங்கையும் கடற்கரைப் பக்கத்தில் விற்றுவிட்டு அங்கே கிடைக்கும் மீன் நெய்யையும் நறவையும் வாங்குகிறார்கள். மருதநிலப் பரப்பில் வாழ்பவர்கள் கரும்பையும் அவலையும் விற்று மான் தசையையும் வேறு உணவுப்பண்டத்தையும் வாங்கிச் செல்கிறார்கள்.
குறமக்கள் குறிஞ்சி நிலத்திலே மலரும் குறிஞ்சிப் பூவை அணிந்து மகிழ்கிறார்கள். அது சலித்துவிட்டதானால் நெய்தல் பூவாலான கண்ணியைத் தலையிலே சூட்டிக்கொள்கிறார்கள். காட்டிலே வாழும் கோழிகள் அருகிலே உள்ள மருத நிலத்துக்கு வந்து அங்குள்ள நெற் கதிரைத் தின்னுகின்றன. வயலுக்கருகில் வீட்டிலே வளரும் கோழிகள் மலைப்பக்கத்திற் சென்று அங்கே விளையும் தினையைத் தின்னுகின்றன. மலையிலே வாழும் மந்திகள் கடற்கரைக்கருகில் உள்ள உப்பங்கழியில் மூழ்கிக் களிக்கின்றன. கழியிலே திரியும் நாரைகள் மலையிலே போய் இளைப்பாறுகின்றன. இப்படிக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு வகை நிலப்பரப்பிலும், அங்கங்கே வாழ்வதற்குரிய பறவைகளும் விலங்குகளும் மக்களும் மற்ற நிலங்களுக்கும் சென்று சலிப்புத் தீர இன்பம் நுகர்வதைக் காணலாம்.
எல்லாவற்றிற்கும் மேற்பட்ட சிறப்பைக் காவிரியாற்றினாற் பெறுவது சோழ நாடு. காவிரி எங்கே தோன்றினாலும் எவ்வெந்நாட்டின் வழியே வந்தாலும் அதன் முழுப் பயனையும் பெறுவது சோழ நாடுதான். சூரியன் வெம்மையாகத் தன் கதிர்களை வீசி எங்கும் பசு மரங்கள் வாடிப் போனாலும், மலைகளில் அருவி வறண்டாலும், மேகம் மழை பெய்ய மறந்தாலும், எங்கும் பஞ்சம் படர்ந்தாலும் என்றைக்கும் பொய்யாமல் நீர்வளம் பெருக்குவது காவிரியாறு.
காவிரியில் வெள்ளம் வருவதைப் பார்த்தால் எத்தனை அழகாக இருக்கிறது! மலைப்
பகுதிகளிலிருந்து வருவதனால் மலைவிளை பொருள்களை ஆற்று நீர் அடித்து வருகிறது. நறைக் கொடியும் நரந்தப் புல்லும் அகிலும் சந்தனமும் அதில் மிதந்து வருகின்றன. அவற்றைக் காவிரி கரையிலே ஒதுக்கிச் செல்கிறது.
சோழ நாட்டிலுள்ள குளத்திலும் மடுவிலும் தன் நீரை நிரப்புகிறது. அங்கே மகளிர் நீரில் குடைந்து விளையாடுகிறார்கள். இந்தப் புது வெள்ளத்தால் எங்கும் நெற்பயிர் மிகச் சிறப்பாக விளைகிறது. விளைந்த பயிர் காய்த்து முதிர்ந்து வளைகிறது. நெற்கதிரை அரிவாளால் அறுத்துத் தொகுக்கிறார்கள். கதிர்களை மலைபோலக் குவிக்கிறார்கள். பின்பு கடா விட்டு நெல்லைக் குவியல் குவியலாகப் போடுகிறார்கள். பொன்னிறம் பெற்ற அவற்றைப் பார்த்தால் மேரு மலையின் நினைப்பு வருகிறது. பின்பு நெல்லைக் குதிர்களிலே கொண்டு போய்க் கொட்டுகிறார்கள். எல்லாக் குதிர்களும் நிரம்பி விடுகின்றன. ஒவ்வொரு வேலியிலும் ஆயிரம் கலம் நெல் விளைகிறது.
எல்லாம் காவிரி தரும் செல்வம். காவிரிதான் சோழ நாட்டையே காப்பாற்றுகிறது.
இவ்வாறு சோழ நாட்டின் வளத்தை முடத்தாமக் கண்ணியார் வருணித்துப் பொருநர் ஆற்றுப்படையைப் பாடி நிறைவேற்றினார் 248 அடிகளை உடைய பெரிய பாட்டு அது அதைக் கேட்ட கரிகால் வளவன் பெண்புலவரைப் பாராட்டிப் பரிசில் வழங்கினான்.