கருத்துக் கண்காட்சி/திரு.வி.க. வின் உரைநடை அழகு

எழுத்தாளர் பகுதி

6. திரு.வி.க.வின் உரைநடை அழகு

அழகு என்பது பார்த்து மகிழக் கூடியது என்றே பலரும் கருதுவர். மக்களின் நடையழகைப் பார்த்து மகிழ்வதுண்டு. பெண்டிரின் நடையை ‘அன்ன நடை’ என்றும் அவர்தம் நடையின் சாயலை ‘மயிலின் சாயல்’ என்றும் புலவர்கள் புனைந்து கூறுவர். ஆடவரின் பெருமித நடையை ‘ஏறுபோல் பீடு நடை’ என்று வள்ளுவனார் குறிப்பிட்டுள்ளார். அதாவது, சிங்க நடை போன்ற

பெருமித நடையாம். இந்நிலையில், உரைநடை அழகு என்றால் என்ன? உரைநடைக்கு அழகு அளிப்பது எது? என்பதற்குத் தீர்வு காணவேண்டும்.

உரைநடை அழகு கண்ணால் கண்டு மகிழக் கூடியது அன்று ஒலியுறுப்புகளால் வாய்விட்டுப் படித்துச் சுவைக்கக் கூடியது; காதால் கேட்டுச் சுவைக்கக் கூடியது. ஒலி எழுப்பாமல் வாய்க்குள் படித்தும் நுணுக்கமாக மனக்கண்ணால் கண்டும் சுவைக்கலாம். இவ்வாறு உரைநடையைச் சுவைக்க உதவும் கூறுகள் யாவை?

அழகுக் கூறுகள்:

உரைநடையில் உணர்த்தப்படும் கருத்தும் சிறந்ததாய் இருக்க வேண்டும்; உரைநடையில் அமைந்துள்ள சொற்களும் சொற்றொடர்களும் ‘இழும்’ என்னும் விழுமிய ஒலியுடையனவாய்ச் செவிக்கு இனிமை பயக்கவேண்டும். அதாவது, உரைநடையைப் படித்தால் ஒலிநயம்-ரிதம்(Rhythm) இருக்க வேண்டும். செய்யுளில் ஒலி நயம் இருப்பது போலவே, சிறந்த ஆசிரியர்களின் உரைநடையிலும் ஒலிநயம் இருக்கும். எடுத்துக்காட்டாக, இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தின் இடையிடையே உள்ள உரை நடைப் பகுதியைக் குறிப்பிடலாம். ஒலி நயம் உடைய உரைநடைப் பகுதி ‘உரைநடைப் பாட்டு’ என்று கூறப்படுவதும் உண்டு.

தமிழ் உரைநடையின் தொன்மை:

தொல்காப்பியக் காலத்துக்கு முன்பே தமிழில் உரை நடை நூல்கள் இருந்தன. தொல்காப்பியத்தில் நான்கு வகையான உரைநடை நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாளடைவில் செய்யுள் நடையின் சிறப்பு பெருகப்



பெருக, உரைநடை நூல்கள் அருகத் தொடங்கின. உரையாசிரியர்களின் உரையளவில் உரைநடை கண்ணை மூஞ்சைக் காட்டிக் கொண்டிருந்தது.பிற்காலத்தில், வீரமா முனிவர், ஆறுமுகநாவலர், முதலியோர் தமிழில் உரை நடை நூல்கள் எழுதத் தொடங்கினர். பின்னர், மீண்டும் தமிழில் உரைநடை நூல்கள் பெருகத் தொடங்கின. இப்போது உரைநடைநூல்களும் இலக்கியமாகக் கருதக்கூடிய அளவில் தமிழில் உரைநடை பெரிதும் அழகுபெற்றுள்ளது.

தமிழில் (திரு.வி.க.) திரு.வி.கலியாணசுந்தரனார், மறை மலை அடிகளார், சோமசுந்தர பாரதியார்,ந.மு. வேங்கடசாமி நாட்டார், மு. வரதராசனார் முதலியோரின் உரைநடை நூல்கள் மிகவும் சிறந்தனவாகும். - ஒவ்வொருவருடைய உரைநடையிலும் ஒவ்வொரு வித அழகைக் காணலாம். உலகில் கோடிக் கணக்கான மக்கள் உளர். ஒவ்வொருவரது முகமும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். ஒவ்வொருவருடைய குரலும் ஒவ்வாரு மாதிரியாயிருக்கும். ஆளைப் பார்க்காமல் குரலைக் கொண்டே இன்னாரென்று கூறிவிடலாம். வானொலியில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளைத் திடீரெனக் கேட்கத் தொடங்கிய வல்லுநர் சிலர், பாடுபவர் இன்னார்-மிருதங்கம் அடிப்பவர் இன்னார் -பிடில் வாசிப்பவர் இன்னார்-கடம் அடிப்பவர் இன்னார் - என்று கூறுவது உண்டு. வானொலியில் முதலில் பெயர் அறிவிக்கும்போது கேளாமல், இடையில் நாதசுரம் கேட்ட அளவிலேயே இது காரு குறிச்சி அருணாசலத்தின் வாசிப்பு என்று கூறும் திறமையாளர்கள் உண்டு. இதை மட்டும் என்னாலும் கூற முடியும்.

இது போலவே, பெயர் கூறாமல் படித்துக் காட்டினாலேயே, இது திரு.வி.க. வின் உரைநடை, இது மறைமலை யடிகளின் உரைநடை என்று கூற முடியும். இப்பெரியார்களின் உரைநடைகள் இத்தகைய சிறப்பு முத்திரை பெற்றனவாகும். இனி, திரு.வி.க. அவர்களின் உரைநடையைச் சிறப்பாக நோக்குவோம்:

அண்மைக் காலத்தில் அறிஞர் அண்ணாதுரையின் சொற்பொழிவைக் கேட்கப் பெருங் கூட்டம் கூடுவதைப் பார்த்திருக்கிறோம். அறிஞர் அண்ணாதுரை தலையெடுப்பதற்கு முன், திரு.வி.க.வின் பேச்சைக் கேட்கப் பெருங் கூட்டம் கூடுவதுண்டு. திரு.வி.க. வின் பேச்சு தனிச்சிறப்பு வாய்ந்தது. அதுபோலவே அவரது எழுத்தும் தனிப் பெருமை உடையது. அழகான எழுத்துநடை என்பது, ஒழுங்கான பேச்சுநடையின் விளைவே என்று ‘கிரீனிங்'(Greening) என்ற அறிஞர் கூறியுள்ளார். இதைத் தான் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் என்று ஔவையார் குறிப்பிட்டுள்ளார். எனவே, சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்த திரு.வி.க. அவர்கள், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கியதில் வியப்பில்லை. திரு.வி.க. வின் உரைநடைக்கு அழகு அளிப்பனவாகப்பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்

புதிய கருத்துகள்-புரட்சிக் கருத்துகள்-பழமையிலும் புதுமை காணும் கருத்துகள்-வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகள்-உடனடியாக நேர்ப்பயன் அளிக்கும் கருத்துகள்ஆகியவை அடங்கியிருப்பது, அவரது உரைநடைக்கு ஒரு வகையில் அழகு தருகின்றது. மற்றும், முற்றுப்புள்ளியிட்ட சிறுசிறு வாக்கியங்களும் அரைப் புள்ளியிட்ட தொடர்வாக்கியங்களும் அமந்திருப்பது-ஒருசொல்லையே திரும்பத் திரும்ப இருமுறை மும்முறை கூறும் அழுத்தம் உடைமை-பலர்க்குக் கைவராத சிறந்த மிகவும் இனிய சொற்களும் சொற்றொடர்களும் வலிந்து தேடாமல் இயற்கையாக முன்வந்தமைவது-ஆகியனவும் இன்ன பிறவும்.



அவரது உரைநடைக்கு அழகு தருவனவாம். அவருடைய நீண்ட வாக்கியங்களிலும் இனிமை ததும்பித் தவழும்.

இத்தகைய அழகுகள் பொருந்தத் திரு.வி.க. பல துறை நூல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் சில வருமாறு:தமிழ்ச்சோலை, தமிழ்த்தென்றல், இளமைவிருந்து, முடியா -காதலா-சீர் திருத்தமா?, இந்தியாவும் விடுதலையும் முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, வாழ்க்கைவழி, உள்ளொளி, இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், சைவத்தின் சமரசம், சைவத் திறவு, சன்மார்க்க போதமும் திறவும், சமரச் சன்மார்க்கத் திறவு, தமிழ்நாடும் நம்மாழ்வாரும், இமயமலை அல்லது தியானம், கடவுள் காட்சியும் தாயுமானாரும், சித்த மார்க்கம், தமிழ் நூல்களில் பௌத்தம், நினைப்பவர் மனம், சைவ சமய சாரம், இருமையும் ஒருமையும்,அருகன் அருகே,மார்க்சியமும் காந்தியமும், இருளில் ஒளி,செத்துப் பிறத்தல், முதுமை உளறல்,வளர்ச்சியும் வாழ்வும்-முதலியன திரு.வி.க.வின் உரைநடை நூல்களாகும்.

இந்நூல்களேயன்றிப் பெரிய புராணத்திற்கும் காரைக்கால் அம்மையார் திருமுறைக்கும் குறிப்புரை எழுதியுள்ளார். திருக்குறளின் முதல் பத்து அதிகாரங்கட்கு விரிவுரை எழுதியுள்ளார். இவையேயன்றி, ‘தேச பக்தன்’ என்னும் செய்தித்தாளும், ‘நவசக்தி’ என்னும் வார இதழும் நடத்தியுள்ளார். திரு.வி.க. எழுதியுள்ள தனிக் கட்டுரைகட்கு அளவேயில்லை. செய்யுள் நூல்கள் சிலவும் இவர் இயற்றியுள்ளார்.

திரைப்பட நடிகர்களுள் சிலரது நடிப்பில் சிலர் மிகவும் ஈடுபாடு கொள்வதுண்டு. அதேபோன்று எழுத்தாளர்களுள் சிலருடைய நூல்களைச் சிலர் விரும்பிப் படிப்பதுண்டு . திரு.க.வின் நூல்களை மிகவும் விரும்பிப் படித்தவர்களுள் ஒருவரைச் சிறப்பாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன். புதுச்சேரிப் பெத்தி செமினர் உயர்நிலைப் பள்ளியில் பல்லாண்டுகள் தலைமையாசிரியராகப் பணியாற்றிய சுவாமிக்கண்ணு என்னும் அடிகளார். திரு.வி.க. வின் நூல்களில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார். இருவரும் மதத்தாலும்வேறுசிலவற்றாலும்வேறுபட்டவர்கள்.இருப்பினும், சுவாமிக் கண்ணு அடிகளார், திரு.வி.க.வின் நூல்களைத் தேடிக்கொண்டுவந்து தரும்படிஎன்னைக் கேட்டு வாங்கிச் சுவைத்துப் படிப்பார்; அவரது நடையழகின் இனிமையை அடிக்கடி என்னிடம் எடுத்துச் சொல்லுவார்; சில பகுதிகளைப் படித்தும் காட்டுவார். பின்னர், திரு.வி.க.வின் நூல்கள் சிலவற்றை விலைக்கு வாங்கிக் கொண்டு படித்து இனிமை கண்டார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திரு.வி.க.வின் உரைநடை அழகுக்குச் சில எடுத்துக்காட்டுகள் தரவேண்டும் அல்லவா? ஒவ்வொரு நூல் வாரியாகத் தருவது என்பது இயலாத செயல்-இடம் போதாது. எனவே, பொதுவாக அவர் நூல்களிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

திரு.வி.க.வின் வாழ்நாளிலே, திருப்பாதிரிப் புலியூரில் “ஞானியார் சுவாமிகள் என்பவர், திருக்கோவலூர்-திருப் பாதிரிப் புலியூர் ஆதீனத்து ஐந்தாம் பட்டத்து அடிகளாராய் வீற்றிருந்தார். அவர் பெரிய கல்விக்கடல். வேறு எவர் காலிலும் விழாத திரு.வி.க. உட்படப் பலர் அவர் காலில் விழுந்து வணங்குவர். அப்பெரியாரைப் புகழ்ந்து திரு.வி.க. எழுதியுள்ள உரைநடை அழகுக்குச் சான்றாக ஒரு சிறு பகுதி வருமாறு: -

‘முருகன் சேவடி வருடி உருகும் ஈரநெஞ்சும், அவன் புகழ் பேசி இனிக்கும் நன்னாவும், தண்மை பொழியும் செவ்விய நோக்கும், வெண்ணிறு துதையும் நெற்றியும், மாணிக்கக் குழை பிறங்கும் செவியும், பொன்னொளிரும் மணிமார்பும், கருமைக் கதிர் விரிக்கும் திரு மேனியும், சண்முகா-சண்முகா என்று கூறி நீறளிக்கும் நீண்ட கையும் கொண்ட அடிகளின் திருவோலக்கப் பொலிவு என் உள்ளத்தில் ஒவியம் எனப் படிந்து நிற்கிறது ...... அடிகளாரின் பேச்சுத் திறனை எதற்கு ஒப்பிடுவது? கடல் மடைத் திறப்புக்கா? வெண்கலக் கோட்டைக்குள் அரகவா (பட்டத்து யானை) புகுதலுக்கா? பெரும் புயலுக்கா? ஒயா மழைக்கா? எதற்கு-எதற்கு ஒப்பிடுவது?... ...”

“அடிகள் கருமை பூத்த ஒரு பொறுமை மலை. அம்மலையின் உச்சியில் - அதாவது மூளையில் -கலை மேகங்கள் பொழிந்த அறிவு மழைநீர், தேங்கித் தேங்கிப் புரண்டு திரண்டு பன்முகங் கொண்டெழுந்து முட்டி முடுகி, வாயின் வழியே முழங்கி விரைந்து இடையீடு இல்லாச் சொற்றொடர் அருவியாக இழிந்து, பலதிறச் சுவை நுட்பப் பொருள்கள் மிதந்து சுழல, அன்பு வெள்ளப் பெருக்காய்ப் பரவிப் பரந்து அருள் அலை கொழித்துக் கொழித்து ஒடும்”......

திரு.வி.க.வின் சொல்நயம் பொருள் நயம் பொதிந்த உரை நடை அழகுக்கு இது போதாதா?இன்னும் சுவைக்க வேண்டுமா? சரி-இதோ தருகிறேன். திரு.வி.க.வின் இயற்கைப் புனைவு ஒன்றினைக் காண்போம். அவர் ஒரு சமயம் இலங்கையில் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது வழியில் கண்ட இயற்கைக் காட்சிகளைப் புனைவு செய்து எழுதியுள்ளார். ஒரு சிறு பகுதி வருமாறு: “வழி நெடுகப் பசுமை உமிழும் மலைகளின் செறிவும் சூழலும் நிரையும் அணியும் உள்ளத்தைக் கவர்கின்றன. முகிற் குழாங்கள் கொண்டல் கொண்டலாக அசைந்தும் ‘ஆடியும் ஒடியும் மலைமுகடுகளிற் சூழ்ந்து தவழ்ந்து பாகைபோல் பொலியும் காட்சியும் அம்மலைகளின் உடல் புலனாகாதவாறு பசும்பட்டுப் போர்த்தாலெனப் பொழில்கள் துதைந்துள்ள அழகும் புலன்களை ஒன்றச் செய்கின்றன ...... புகைவண்டியின் விரைவில், இடையிடையே ஒடும் சிற்றருவிகளின் தோற்றம், பசிய வானில் மின்னொளி தோன்றி மறைவது போலப் புலப்படுகின்றது”.

இது நிற்க, சோழநாட்டின் இயற்கை வளத்தைப் பின்வருமாறு புனைவு செய்துள்ளார்:

‘வான்ப்பாய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி, பாட்டெனப் பரந்து, கிளை கிளையாய்ப் பிரிந்து, கால் காலாய் விரிந்து’ சோழ நாட்டை அணி செய்கிறது. காவிரிப் பயனைச் சோழ நாடு நுகருதலால், அது புனல் நாடாய்ச் சோறுடைத் தாயது போலும்”.

இந்தப் பகுதிகள் தமிழ்ச் சோலை முதலிய நூல்களில் காணக் கிடக்கின்றன. ‘முருகன் அல்லது அழகு என்னும் நூலில் அவர் இயற்கையைப் புனைவு செய்துள்ள உரைநடை அழகு ஒன்றினைக் காண்பாம்:

‘செம்பொன்னை உருக்கி வைத்தா லெனக் காட்சியளிக்கும் அந்தி வான் செக்கர் அழகும், கொண்டல் கொண்டலாக ஒடும் புயலின் அழகும், அது பொழியும் மழையின் அழகும், அத் தண் புனல் மணற் கற்களை அரித்தோடும் அருவியின் அழகும், பச்சைப் பசேலெனப் பெருங்காட்சியளிக்கும் பொழில்களின் அழகும் அவற்றில் பச்சைப் பாம்பெனப் பின்னிக் கிடக்கும் பசுங் கொடிகளின் அழகும் அவற்றினின்றும் அரும்பியுள்ள நகைமலரின் அழ கும் மக்கள் உள்ளத்து உள்ள இன்ப ஊற்றைத் திறப்பன அல்லவோ? மயிலாடும் அழகும் மான் நடக்கும் அழகும் நந்துாரும் அழகும் புலவருக்கு விருந்தல்லவா?”

திரு.வி.க. பழமையில் புதுமையும் புதுமையில் பழமையும் காணும் இயல்பினர் என்பதை விளக்கும் உரை நடைப் பகுதி ஒன்றின் அழகினைக் காண்பாம்:

"ஆராய்ச்சித் துறை நண்ணாது, ஒன்றைப் பழைமை என்றதும் அதனைப் போற்றவோ தூற்றவோ புகுவதும் அவ்வாறே ஒன்றைப் புதுமை என்றதும் அதனைத் துாற்றவோ போற்றவோ புகுவதும் பகுத்தறிவுச் செயல் கள் ஆகா. பழைமையில் நல்லனவும் இருக்கலாம்; தீயனவும் இருக்கலாம். அங்ஙனமே புதுமையிலும் தீயனவும், இருக்கலாம்; நல்லனவும் இருக்கலாம். பழைமை புதுமை என்னும் அளவின் நின்று, ஒன்றைக் கொள்ளல் அல்லது தள்ளல் அறிவுடைமை ஆகாது. அதன் அதன் தன்மைகளை நன்கு ஆராய்ந்து உணர்ந்த பின்னரே தள்ளல் -கொள்ளல் விதிப்பது அறிவுடைமை".

அடுத்து, 'நவ சக்தி’ என்னும் வார இதழில் 'கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள ஒரு பகுதி வருமாறு:-

“ஏட்டுக் கல்வியை ஒரளவு நிறுத்திக் கொண்டு, அதன் பொருளாயுள்ள இயற்கைக் கல்வியில் கருத்திருத்தப் பயில வேண்டும். இயற்கை பெரிய பல்கலைக்கழகம். அக் கழகத்திற் பயிலப் பயில அஃது இறைக் கல்வி யாகிய இன்பம் ஊட்டும். இறைக் கல்வி அழியாதது; அருளுடையது; அறியாமையைக் கல்லும் ஆற்றல் அதற்கே உண்டு. 'கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்' என்னும் திருவாக்கில் போந்துள்ள 'கல்லார்’ என்பது, இயற்கை இறைக் கல்வி பெறாதாரைக் குறிப்பதென்க. ‘கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்’ என்னும் மெய்ம் மொழி, ஏட்டுக்கல்வி பயின்று தகாத செயல் செய்வோரை நோக்கி எழுந்ததென்க".

இனி, தமிழ்த் தென்றல் முதலிய நூல்களிலிருந்து சில பகுதிகளைக் காணலாம். தமிழைப் பற்றிக் கூறியிருப்பதாவது:

"நம் மக்கள் வாழ்வே தமிழ் வாழ்வு-அவர்கள் கண்டது தமிழ்; கேட்டது தமிழ்; உண்டது தமிழ்; உயிர்த்தது தமிழ்; உற்றது தமிழ்; அத்தமிழ் அமிழ்தம் கொண்டது இந்நாடு".

அடுத்துத் தொழில் துறையைப் பற்றிக் கூறியிருப்பதாவது: “ஆண்டவனே தொழிலாளியாயின், பின்னை எவன்தான் தொழிலாளியா யிருக்கமாட்டான்? தோட்டியும் தொழிலாளியே; தொண்டைமானும் தொழிலாளியே; நியாயாதிபதியும் தொழிலாளியே; வாயில் காப்போனும் தொழிலாளியே; உலகில் உள்ள அனைவரும் தொழிலாளரேயாவர்”.

பெண்ணுரிமை பற்றிய ஒரு பகுதி வருமாறு, "பெண்ணுக்கு உரிமை அருளிய என்னருமைத் தமிழ் நாடே! இது போழ்து யாண்டுளாய்-யாண்டுளாய் என்று அலமருகிறேன். அவ்வுரிமை நாட்டை மீண்டுங் காண எவர் முயலல் வேண்டும்? பெண் ஒரு பாதி; ஆண் மற்றொரு பாதி; இரண்டும் சேர்ந்த ஒன்றே முழு மனிதத் தன்மை. அங்ஙனமாக, வாழ்வின் ஒரு பாதி உரிமை கடிவது எத்தகை அறியாமை:" காந்தியடிகள் பற்றிச் சில சொற்கள்: “... ... இந்த சனநாயக உணர்வைக் கிளப்பியவர் யாவர்? மகாத்மாகாந்தி என்று மண்ணும் சொல்லும்; மரமும் சொல்லும்.”

விடுதலை உரிமை பற்றிச் சில தொடர்கள்: “பிறப் புரிமை இன்பத்திற்கு மனைவி இன்பம் ஈடாகுமோ? மக்களின்பம் ஈடாகுமோ? அரச இன்பம் ஈடாகுமோ? உலகிலுள்ள எவ்வின்பம்தான் அதற்கு ஈடாகும்?”

இளைஞர்க்கு ஒர் அறிவுரை:

"... ... கிளர் ஈரலும் தடைபடாக் குருதியோட்டமும் எஃகு நரம்பும் ஏக்கழுத்தும் பீடு நடையும் உடையவர் களாக நீங்கள் திகழ்தல் வேண்டும்."

செல்வர்கட்குக் கூறியிருப்பதாவது:- “தமிழ்நாட்டுச் செல்வர்களே! நீங்கள் பிறந்த நாடு திருவள்ளுவர் பிறந்த நாடு. அப்பெரியார் நூல் உங்கள் கையில் விளங்குகிறது. அதுவே உங்களுக்கு உரிமை கொடுக்கும் கருவி. அதை ஒதுங்கள். அதன்படி ஒழுகுங்கள் ... ... "

திருக்குறள் பற்றிய கருத்தோடு திரு.வி.க. வின் உரைநடையை நிறுத்துவோம். மேலே திரு.வி.க. வின் உரைநடைப் பகுதிகள் பல தரப்பெற்றுள்ளன. உரை நடை அழகு சொற்களால் விளக்கக் கூடியது அன்று; ஒவ்வொருவரும் படித்தும் கேட்டும் உணர்ந்து சுவைக்க வேண்டிய ஒன்றாகும் அது.

இங்கே, திரு.வி.க.வின் உரைநடை அழகோடு பல தரப்பட்ட சிறந்த செய்திகளையும் தெரிந்து கொண்டோம் அல்லவா?