கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி/தென்தமிழ் தெய்வப் பரணி
செஞ்சொற் கவியின்பம் பயக்கவல்ல இலக்கியங்கள் எல்லா மொழிகளிலும் எல்லா நாடுகளிலும் எண்ணற்றவை இருக்கின்றன. எப் பெயர்களால் வழங்கினாலும், நம் தமிழ் மொழியில் வழங்கும் ஒன்பது சுவைகள் அவ்விலக்கியங்களில் மலிந்து கிடந்தோ விரவிக் கிடந்தோ அவற்றைச் சிறப்பித்துப் படிப்போரை இன்பக் கடலில் திளைக்கச் செய்கின்றன. காப்பியங்களும், பிரபந்தங்களும், தனிப்பாடல்களும் இச் சுவைகளைக் கொண்டு இலங்குவதை இலக்கியச் சோலைகளில் புகுந்து பார்ப்போர் நன்கு அறிவர். பல்சுவைகள் ததும்பும் பிரபந்தங்களில் கலிங்கத்துப் பரணியும் ஒன்று : சுவைநலங்கனிந்த ஓர் அற்புதச் சிறு பிரபந்தம்:
' பரணிக்கோர் சயங்கொண்டான் ' என்று புலவர்களால் சிறப்பித்துப் பாராட்டப் பெறும் சயங் கொண்டார் என்ற புலவர் பெருமானால் பாடப் பெற்ற நூல்.
கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தமிழ்நாடு களப்பிரர் என்ற வேற்று மொழியார் ஆட்சியிலிருந்து கிட்டத்தட்ட மூன்றரை நூற்றாண்டுகள் பல்வேறு சீர்கேடுகளை அடைந்தது. இவர்கள் ஆண்ட காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் இருண்ட காலம் என்று குறிப்பிடுவர். இக்காலத்தில் தமிழ் மொழி தனித் தலைமையை இழந்து தளர்ச்சியுற்று இலக்கிய வளர்ச்சி பெறாது மங்கிக் கிடந்தது. பிறகு நாட்டில் ஏற்பட்ட பல்லவர், பாண்டியர்கள் ஆட்சியிலும் சோழர்களின் ஆட்சியிலும் தமிழ் மொழி ஏற்றம் பெற்றது. புலவர்கள் புத்துணர்ச்சி பெற்றுப் புதுப்புதுப் பிரபந்தங்களை இயற்றினர் ; பக்திப் பாடல்களும் பெருங் காப்பியங்களும் தோன்றத் தொடங்கின. காவியங்கள் கல்வியாளர்க்கென்றே இயற்றப் பெற்றன ; பக்தி இயக்கத்தின் விளைவாக எழுந்த பாடல்கள் பொதுமக்கள் மனத்தைக் கௌவும் நிலையில் அமைந்தன. வெற்றித் திறத்தால் நாட்டுப் பரப்பை பெருக்கிய அரசர்களையும் கொடையாலும் பிறவற்றாலும் புகழ் எய்திய வள்ளல்கள் வேளிர்கள் போன்றவர்களையும் புலவர்கள் கவிகளில் அமைத்துப் போற்றினர். கலம்பகம், பரணி போன்ற பிரபந்தங்கள் அவ்வகையைச் சார்ந்தவை. எனவே, அவர்கள் எளிதில் பொருள் உணரக்கூடிய ஒரு சீரிய நேர்மை அவற்றில் வாய்ந்திருந்தது. கற்றுவல்லோரும் புலவர்களும் நிரம்பிய அரசவையில் அவர்கள் அனைவரும் வியந்து போற்றும் முறையில் அப் பிரபந்தங்கள் பாடப்பெற்றன. கலிங்கத்துப் பரணியும் அங்ஙனம் பாடப்பெற்ற நூல்தான்.
பிரபந்த வகை
பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு என்று சொல்லுவது ஒருவகை மரபு. பிரபந்த இலக்கணங்கூறும் பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவ நீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் ஆகிய நூல்களில் ஒன்றிலாயினும் பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு என்ற வரையறை காட்டப் பெறவில்லை ; அவற்றிற்கு இலக்கணமும் கூறப் பெறவில்லை. அவற்றில் கூறப் பெறும் இலக்கணங்களும் மாறுபட்ட கருத்துக்களுடன் மிளிர்கின்றன. தொண்ணூற்றாறு என்ற வரையறைக்குள் அடங்காத நொண்டி நாடகம், கப்பற் பாட்டு, வில்லுப்பாட்டு, கும்மிப்பாட்டு, கோலாட்டப் பாட்டு, ஆனந்தக் களிப்பு, கிளிக்கண்ணி, விலாசம், புலம்பல், உந்திபறத்தல், சாழல், தெள்ளேனம், வள்ளைப்பாட்டு, கவசம், ஓடப்பாட்டு, காதல், ஏற்றப்பாட்டு முதலான பல பிரபந்தங்களையும் காண்கின்றோம்.
பரணியின் இலக்கணம்
போர் முகத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடுவதைப் ' பரணி ' என்று வழங்குவர்.
- ஆனை யாயிரம் அமரிடை வென்ற
- மாணவ னுக்கு வகுப்பது பரணி[1]
என்பது இலக்கண விளக்கப் பாட்டியல் சூத்திரம். பெரும்போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி என்று வழங்கும் மரபு உண்டு இவ்வாறு பரணி நூல் அரசர் முதலியவர்கள் மேல் செய்யப்படுவதன்றி, தெய்வங்கள் மேலும் தத்தம் ஆசிரியர்கள் மேலும் அறிஞர்களால் இயற்றப் பெற்று வழங்கும். கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி, இரணியவதைப் பரணி, கஞ்சவதைப் பரணி, அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணி, பாசவதைப் பரணி என்பன அவற்றிற்கு எடுத்துக் காட்டுக்களாகும். நூல் பாடுவோர் கொச்சகக்கலி என்னும் பாட்டின் உறுப்பாகிய ஈரடிக் கலித்தாழிசை என்ற உறுப்பை மேற்கொள்வது வழக்கம். இதனை,
மயக்கறு கொச்சகத் தீரடி இயன்று
நயப்புறு தாழிசை உறுப்பிற் பொதிந்து
வஞ்சி மலைந்த உழிஞை முற்றித்
தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை
வெம்புசின மாற்றான் தானை வெங் களத்தில்
குருதிப் பேராறு பெருகுஞ் செங்களத்து
ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே.[2]
என்ற பன்னிரு பாட்டியல் சூத்திரத்தால் அறியலாம். பொதுவாக நூலில் கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடு, காளிகோயில் முதலிய பல்வகைச் சிறப்புக்களும் பல்வேறு சுவைகள் கொப்புளிக்கும் படி அமைக்கப் பெறும், இந்த வழக்கத்தை,
' கடவுள் வாழ்த்துக் கடைதிறப் புரைத்தல்
கடும்பாலை கூறல் கொடுங்காளி கோட்டம்
கடிகணம் உரைத்தல் காளிக் கதுசொலல்
அடுபேய்க் கவள்சொலல் அதனல் தலைவன்
வண்புகழ் உரைத்தல் எண்புறத் திணை யுற
வீட்டல் அடுகளம் வேட்டல்[3]
என்ற இலக்கண விளக்கச் சூத்திரப்பகுதியாலும்,
தேவர் வாழ்த்தே கடைநிலை பாலை
மேவி அமரும் காளி கோயில்
கன்னியை ஏத்தல் அலகை விநோதம்
கனாநிலை நிமித்தம் பசியே ஒகை
பெருந்தேவி பீடம் அழகுற இருக்க
அமர்நிலை நிமித்தம் அவள்பதம் பழிச்சா
மன்னவன் வாகை மலையும் அளவு
மரபினி துரைத்தல் மறக்களம் காண்டல்
செருமிகு களத்திடை அடுகூழ் வார்த்தல்
பரவுதல் இன்ன வருவன பிறவும்
தொடர்நிலை யாகச் சொல்லுதல் கடனே.[4]
என்ற பன்னிரு பாட்டியல் சூத்திரத்தாலும் அறியலாம். இதனைத் தேவ பாணியில் அடக்குவர் பேராசிரியர் என்னும் தொல்காப்பிய உரையாசிரியர். "பரணியுள் புறத்தினை பலவும் விராய் வருதலின் அது தேவ பாணியாம் என்றது என்னையெனின் அவையெல்லாம் காடு கெழு செல்விக்குப் பரணிநாட் கூழுந்துணங்கையும் கொடுத்து வழிபடுவதோர், வழக்குபற்றி, அதனுட் பாட்டு டைத் தலைவனைப் பெய்து சொல்லப்படுவன ஆதலால் அவை யெல்லாவற்றானும் தேவபாணியாம்” என்பது அவர் உரையாகும்.[5] நச்சினார்க்கினியரும் அதே சூத்திரத்திற்கு உரையெழுதுங்கால், "பரணியாவது-காடு கெழு செல்விக்குப் பரணிநாட் கூழுந் துணங்கையும் கொடுத்து வழி படுவதோர் வழக்கு பற்றியது ; அது பாட்டுடைத் தலைவனைப் பெய்து கூறலிற் புறத்திணை பலவும் விராயிற்று ” என்று கூறுகிறார்.
பரணி என்ற பெயர்க் காரணம்
பரணி என்ற பெயர்க் காரணம் பலவாறாகக் கூறப் பெறுகின்றது. டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அவர்கள் பரணி என்ற நாள்மீன் காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்றது என்றும் அந்நாள்மீனால் வந்த பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்றும் அவ்வாறு கொள்வதே ஏற்புடைத்து என்றும் கூறுகிறார்கள். இதற்கு
காடு கிழவோள் பூத மடுப்பே
தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப்
பாகு பட்டது பரணிநாட் பெயரே.
என்னும் திவாகரத்தையே அவர்கள் ஆதாரமாகக் கொண்டார்கள். திரு. அய்யர் அவர்களின் கொள்கையை நாமும் அப்படியே ஒப்புக் கொள்ளலாம்.
தொல்காப்பியத்தில் தொடர்நிலைச் செய்யுட்களின் இலக்கணமாக அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்ற எட்டுவகை வனப்புக்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் விருந்து என்பதை,
விருந்தே தானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே.[6]
என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். இளம்பூரணர் " "விருந்தாவது முன்புள்ளார் சொன்ன நெறி போய்ப் புதிதாகச் சொன்ன யாப்பின் மேலது என்ற வாறு...புதிதாகப் புனைதலாவது ஒருவன் சொன்ன நிழல்வழி யன்றித் தானே தோற்றுவித்தல்" என்று இதற்கு விளக்கம் தருகிறார். பேராசிரியர்," விருந்து தானும் புதிதாகப் பாடும் தொடர்நிலை மேற்று " என்று உரை கூறி சில பிரபந்தங்களை மேற்கோள் காட்டியுள்ளார். நச்சினர்க்கினியரும் அவ்வாறே சில பிரபந்தங்களை உதாரணங்களாகக் காட்டுகின்றார். எனவே, இப் பொது விதியே பல புதிய பிரபந்தங்கட்கு இடனாக அமைந்துள்ளது என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை.
கலிங்கத்துப் பரணிபற்றிய வரலாறு
"கலிங்கத்துப் பரணி" என்னும் நூல் அக் காலத்துப் பேரரசனாகத் திகழ்ந்த முதற் குலோத்துங்கன் தன் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் என்பவனைக் கொண்டு கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்து வென்ற செய்தியைக் கூறுவது. கலிங்கப் போர் நிகழ்ந்த ஒரு சில நாட்கள் கழித்து அரசவையில் குலோத்துங்கனும் அவன் அவைப் புலவராகிய சயங்கொண்டாரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அரசன் வேடிக்கையாக, 'புலவர் அவர்களே, கலிங்க நாட்டைச் சயங்கொண்டமையால் யானும் தங்களைப்போல் சயங்கொண்டான் ஆயினேன்' என்று கூறினான். அதனைக் கேட்ட புலவர் அங்ஙனமாயின், சயங்கொண்டானைச் சயங்கொண்டான் பாடுதல் சாலப் பொருத்தமாகும் என்று மாற்றம் உரைத்து கலிங்கத்துப் பரணியைப் பாடி முடித்ததாக ஒரு வரலாறு வழங்கி வருகிறது. நூல் அரங்கேற்றப் படுங்கால் அந்நூலின் சொற்சுவை பொருட்சுவைகளைக் கண்டு வியந்து ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பொன் தேங்காயை உருட்டி அவரையும் அவரது நூலையும் சிறப்பித்ததாகவும் அவ்வரலாற்றால் அறிகின்றோம். இது எத்துணை உண்மையாயிருக்கும் என்பதை ஆராய்ந்த பின்னர்தான் ஒப்புக்கொள்ளவேண்டும்.
நூற் பொருள்
சயங்கொண்டார் தம் நூலில் குலோத்துங்கன் அவையில் வீற்றிருக்கும் சிறப்பு, அவன் நால் வகைச் சேனையுடன் புறப்பட்டுப் பயணம் செல்லும் இயல்பு, படைகள் போருக்கெழுந்த தன்மை, அவை போர் புரியும் பான்மை, போர்க்களக் காட்சி முதலிய செய்திகளை நூலைப் படிப்போர் அவற்றைத் தம் மனக்கண்முன் நிறுத்திக் கண்டு மகிழுமாறு அழகிய சொல்லோவியங்களால் காட்டுகின்றார். அவற்றை ஆங்காங்கு கண்டு மகிழ்க. நூலிலிருந்து அக்கால அரசர் இயல்புகள், அக்காலப் போர்முறை, அக்கால மக்கள் இயற்கை, அவர்களின் பழக்க வழக்கங்கள் போன்ற செய்திகளை நன்கு அறியலாம். இவற்றைப் பின்னர்க் காண்போம்.
நூல் அமைப்பு
நூலைத் தொடங்குமுன் பாட்டுடைத் தலைவனாகிய குலோத்துங்கன் நெடிது வாழுமாறு சிவபெருமான், திருமால், நான்முகன், ஞாயிறு, யானைமுகன், ஆறுமுகன், நாமகள், உமை, சப்தமாதர்கள் ஆகியவர்களை வணங்கி வாழ்த்துக் கூறுகின்றார் ஆசிரியர். அடுத்து 'கடைதிறப்பு' என்ற பகுதி வருகிறது. கலிங்கப்போர் மேற்சென்ற வீரர் மீண்டு வரக் காலம் தாழ்த்தியதாகவும் அதுகண்ட அவர்களுடைய காதல் மகளிர் ஊடல் கொண்டு கதவடைத்துக் கொண்டதாகவும் கொண்டு, புலவர் தாம் பாடப் போகும் அக்கலிங்கப் போர்ச் சிறப்பைக் கேட்டு மகிழ்தற் பொருட்டு கதவைத் திறக்குமாறு வேண்டுவதாக இப்பகுதி அமைக்கப் பெற்றுள்ளது. இது பற்றி இரண்டு கருத்துக்கள் உள்ளன. அவற்றைப் பின்னர் விரிவாக ஆராய்வோம்.
அடுத்து பேய்களின் தலைவியாகிய காளிதேவியின் சிறப்பு கூறப் பெறுகின்றது. காளிதேவி வாழும் காட்டின் இயல்பு, அதன் நடுவேயுள்ள அவளுடைய திருக்கோவில் அமைப்பு முறை, அவள் வீற்றிருக்கும் சிறப்பு, அவளைச் சூழ்ந்திருக்கும் பேய்களின் தன்மை முதலியவற்றை ஆசிரியர் வருணிப்பது நம்மை வியப்புச் சுவையில் ஆழ்த்துகின்றது. தேவி வீற்றிருக்கும்பொழுது இமயத்திலிருந்து ஒரு முதுபேய் வருகிறது. அது தான் கற்ற இந்திர சாலங்களையெல்லாம் காளிதேவி முன் அரங்கேற்றுகின்றது. இப்பகுதி நகைச்சுவை ததும்பி நிற்கின்றது.
பிறகு குலோத்துங்கன் பிறந்த 'குடிவழி' கூறப் பெறுகின்றது. இது இமயத்திலிருந்து வந்த முதுபேயின் வாயில் வைத்துப் பேசப்பெறுகின்றது. முதுபேய் இமயத்தில் வாழ்ந்த பொழுது கரிகாலன் இமயத்தைச் செண்டால் எறிந்து திரித்து மீண்டும் அது நிலை நிற்குமாறு தன் புலிக் கொடியைப் பொறித்தான். அப்பொழுது அங்கு வந்த நாரதர் திருமாலே குலோத்துங்கனாகப் பிறக்க இருக்கும் சோழர் குடி பெருமையுடைத்து என்று கூறினார். அவர் கூறிய சோழர் குடி வரலாற்றைக் கரிகாலன் இமயத்தில் எழுதுவித்தான். அந்த வரலாற்றையே முதுபேய் காளிக்குக் கூறுகின்றது.
இனி, குலோத்துங்கன் சிறப்பைக் கூறுவதற்கு முன்பதாக பரணிப்போர் நிகழ்வதற்கான நிமித்தங்களைக் கூறுகிறார் ஆசிரியர். பேய்கள் தம் பசிக் கொடுமையைத் தேவியிடம் கூறி அதைப் போக்குமாறு அம்மையை வேண்டி நிற்கின்றன. அவ்வமயம் இமயத்திலிருந்து வந்த முதுபேய் கலிங்க நாட்டின் வழியாக வந்த பொழுது ஆங்குக் கண்ட சில தீநிமித்தங்களைக் கூறுகின்றன. காளி தேவி கணிதப்பேய் கண்ட கனவு நிலையையும் நனவில் கண்ட தீக்குறிகளையும் அவர்களுக்குக்கூறி 'மிக்க விரைவில் கலிங்கநாட்டில் பெரும் போர் நிகழும் உங்கள் பசி முற்றுந் தொலையும்," என்று உரைக்கின்றாள்.
குலோத்துங்கனின் பிறப்பு, வளர்ப்பு,முடிசூடல் முதலிய செய்திகள் காளி பேய்களுக்கு உரைப்பதாக அமைக்கப் பெற்றுள்ளன. அங்ஙனம் காளி உரைத்துக் கொண்டிருக்குங்கால் ஒருபேய் ஓடி வந்து கலிங்க நாட்டில் நிகழும் போரையுரைக்க, எல்லாப் பேய்களும் தாம் உணவு பெறப் போவதை நினைந்து மகிழ்ந்து கூத்தாடுகின்றன. கலிங்கப் போர்க் காரணத்தைக் கூறுமாறு காளி வினவ, இமயத்திலிருந்து வந்த முதுபேய் அக்காரணத்தை உரைக்கின்றது. குலோத்துங்கன் சோழ நாட்டை ஆண்ட பொழுது ஒரு நாள் பாலாற்றங் கரைக்குப் பரிவேட்டையாடச் செல்லுகின்றான், வேட்டை முடிந்ததும் காஞ்சியிலுள்ள மாளிகை ஒன்றில் செய்தமைத்த சித்திர மண்டபத்தில் முத்துப்பந்தரின் கீழ் தேவியர், அமைச்சர், தானைத் தலைவர் முதலியோர் புடைசூழ வீற்றிருக்கும் பொழுது சிற்றரசர் பலர் வந்து அவனைத் திறையுடன் காண்கின்றனர். கலிங்க நாட்டரசன் அனந்தபன்மன் மட்டிலும் வந்து காணவில்லை. அதைக் கண்ட குலோத்துங்கன் தன் தானைத் தலைவனான கருணாகரத் தொண்டைமானை தண்டெடுத்துச் சென்று கலிங்க அரசனின் செருக்கை அடக்கி வருமாறு ஏவுகின்றனன். அது கேட்ட கலிங்க வேந்தன் 'வெந்தறுகண் வெகுளியினால் வெய்துயிர்த்துக் கைபுடைத்து வியர்த்து நோக்கி' ,
வண்டினுக்கும் திசையான மதங்கொடுக்கும்
மலர்க்கவிகை அபயற் கன்றித்
தண்டினுக்கும் எளியனோ எனவெகுண்டு
தடம்புயங்கள் குலுங்க நக்கே[7]
கானரணும் மலையானும் கடலரணும்
சூழ்கிடந்த கலிங்கர் பூமி
தானரண முடைத்தென்று கருதாது
வருவதுமத் தண்டு போலும்.[8]
[கவிகை - வெண்கொற்றக்குடை ; தண்டு - சேனை நக்கு - சிரித்து ; கான்-காடு,]
என்று கூறி போர் தொடங்குகிறான் ; போர் கடுமையாக நடைபெறுகின்றது; இறுதியில் கலிங்க வேந்தன் தோற்றோடுகின்றன். கருணாகரன் கலிங்கத்தை எரிகொளுவி அழித்துப் பல்வகைச் செல்வங்களைக் கவர்ந்து வாகை மாலை சூடி குலோத்துங்கன் அடியை வணங்கி நிற்கின்றான். இப் பகுதியில் வீரச் சுவை செறிந்துள்ளது.
போரைச் சொல்லி முடித்த பேய் காளியைப் போர்க்களத்தை வந்து காணுமாறு அழைக்கின்றது. அந்த அழைப்பை ஏற்று காளிதேவி பேய்கள் சூழ களத்திற்கு வந்து பல்வேறு காட்சிகளைப் பேய்களுக்குக் காட்டுகின்றாள். காட்சிகளைக் கண்டு களித்த பிறகு தேவி நீராடிக் கூழ் சமைத்து உண்ணுமாறு பேய்களைப் பணிக்கின்றாள். அங்ஙனமே பேய்கள் பல் துலக்கி, நீராடிக் கூழ் அட்டு உண்ணுகின்றன. உண்டபின் பேய்கள் வள்ளைப் பாட்டுக்களால் குலோத்துங்கன் புகழ்பாடி வாழ்த்துகின்றன.
[களி-மகிழ்ச்சி; அருள்-மக்கள் மாட்டு வைக்கும் அருள் ; பரக்க-எங்கும் பரவுக; கலி-துன்பம் : கரக்க-தலை காட்டாது மறைக; புகழ்-புகழ்ச் செயல்கள் ; நிலைக்க-கலங்காமல் நிலை பெறுக.]
என்ற வாழ்த்துடன் நூலும் முற்றுப் பெறுகின்றது.
இறுவாய்
கலிங்கத்துப் பரணி தாழிசையால் முதன் முதலாகப் பாடப்பெற்ற ஓர் ஒப்பற்ற பரணி நூல். இந்நூல் பரணி நூல்களுக்கெல்லாம் தலை சிறந்ததாய், பரணி பாடுவோர்க்கெல்லாம் முன்மாதிரியாய், இலக்கிய வானில் ஒரு கலங்கரை விளக்கம் போல் நின்று நிலவுகிறது. காவியங்களுக்கெல்லாம் சிறந்ததாய்க் கம்ப ராமாயணம் திகழ்வது போல, பரணி நூல்களுக்கெல்லாம் சிறந்தாய்க் கலிங்கத்துப் பரணி மிளிர்கின்றது. கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தரும் தாம் பாடிய தக்க யாகப் பரணியில் "தென்தமிழ் தெய்வப் பரணி" என்று இந்நூலைச் சிறப்பித்துள்ளார். நூலைப் பாடிய கவிஞரையும் பிற்காலத்துப் புலவர் பல பட்டடைச் சொக்கநாதர் என்பார், "பரணிக்கோர் சயங் கொண்டான்" என்று பாராட்டியுள்ளார். எனவே, அணி நலன்களும் சுவை நலன்களும் பிற நூல்களில் காண்டற்கரிய கற்பனைகளும் செறிந்துள்ள இந்நூலைத் தமிழ்மக்கள் படித்துச் சுவைக்க வேண்டியது அவர்கள் கடமை.