கலிங்கம் கண்ட காவலர்/அசோகன் மேற்கொண்ட அருள்நெறி
7. அசோகன் மேற்கொண்ட அருள்நெறி
கலிங்கப்போர், இந் நாடாண்ட முடிமன்னர் எவராலும் அடைய முடியாத ஒரு பெருநிலையை அசோகனுக்கு அளித்தது. “அசோகனுக்கு முன்னும் பின்னும் அரசாண்ட இந்தியப் பேரரசர் எவரும் இவ்வளவு பெரிய நாட்டின் மன்னராய் விளங்கவில்லை” என்ற மங்காப் புகழளித்தது கலிங்கத்தில் அசோகன் பெற்ற வெற்றி. இவ்வாறு அரசியல் துறையில் இந்நாட்டு மன்னர் மன்றத்தின் தலைமையில் அசோகனை அமர்த்தியது அதுவே. உலக அறவோர்களின் அவைத் தலைமையினையும் அவனுக்கு அளித்தது. அவன் வாழ்க்கை முறையையும். ஆட்சி முறையையும் அது அறவே மாற்றி விட்டது; நாட்டு மக்களின் புறநலக் காவலனாய் வாழ்ந்த அசோகனைக் கலிங்க வெற்றி, அவர்களின் அகநலக் காவலனாய் மாற்றி விட்டது. அந்நாள் வரை ஆண்மை, ஆற்றல், மறம், மானம் எனக் கூறி வந்த அசோகன், அந்நாள் தொட்டு அன்பு, அருள், உண்மை, ஒழுக்கம் என்று உரைக்கத் தொடங்கி விட்டான்.
கலிங்கப் போர்க்களத்தின் கொடுமைகளைக் கண்டு அப்பேரழிவிற்குத் தானே காரணம் என்பதை அறிந்து அசோகன் நெஞ்சு நெக்குருகிற்று. உள்ளம் உடைந்தது. செய்த தவறினை எண்ணிச் சிந்தை நொந்தான். ‘என் வாழ்க்கையில் இத்தகைய பேரழிவின் நிலைக்களமாகும் ஒரு பேராசைக்கு இனி ஒரு போதும் அடிமையாகேன்” என்ற உறுதி அவன் உள்ளத்தில் உருப்பெற்றது. கலிங்கப் போர் நடந்து நான்காண்டுகள் கழித்து, “கலிங்கத்தில் என்னால் சொல்லப்பட்டவர், சிறை பிடிக்கப் பட்டவர்களில் ஆயிரத்தில் ஒருவரை இழக்கவும் இன்று இசையோன் இழக்க நேர்த்தால் ஆறாப் பெருந்துயர்க்கு மீளா அடிமையாவேன்” என்று கூறுமளவு அவன் மனம் பண்பட்டு விட்டது. அது முதல் போர் தரும் புகழை அவன் வெறுக்கத் தலைப்பட்டான். போர் உணர்வே வேர் அற்றுப் போய் விட்டது. “படைக்கலம் ஏந்திப் பெறும் வெற்றி, வெற்றியன்று; அன்பு நெறி அருள் நெறிகள் வழிவரும் வெற்றியே உண்மை வெற்றி; உயர்ந்த வெற்றி” என்று அறிவூட்டத் தொடங்கி விட்டான். அவன் உள்ளமும் மெல்ல மெல்ல புத்த சமயச் சாயல் பெறத் தொடங்கி, இறுதியில் அதுவாகவே ஆகி விட்டது.
கலிங்க வெற்றிக்குப் பிறகு, தன் வாழ்நாள் முழுவதும் புத்த மத ஆசிரியர்கள்பால் அறிந்த உண்மையறங்களைப் பரந்த தன் நாட்டில் அறிவூட்டவும், பரப்பவும், நடைமுறைக்குக் கொண்டு வரவுமே, தன் அரச ஆணை அனைத்தையும் பயன் கொண்டான். ஆட்சிக்கு வந்த இருபத்தி நான்காம் ஆண்டில் புத்தன் பிறந்து, மெய்யுணர்வு பெற்று உலகிற்கு உணர்வூட்டி வாழ்ந்து, உயிர் நீத்த புண்ணிய நகர்களைக் கண்டு வரப் புறப்பட்டான். வடமதுரையில் நறுமணப் பொருள் விற்கும் வணிகர் ஒருவரின் மகனாய்ப் பிறந்து புத்த மதப் பேராசிரியராய் விளங்கிய உபகுப்தா, அசோகனுக்கு வழித்துணையாக உடன் சென்றார். பாடலியிலிருந்து புறப்பட்ட அசோகன், நேர் வடக்கே செல்லும் அரசப் பெருவழியே சென்று இமயப் பெருவரையின் அடிவரையை அடைந்தான். சென்ற வழி நெடுக, தன் வருகையின் நினைவுச் சின்னங்களாக ஒற்றைக் கல்லால் ஆன உயர்ந்த பெரிய கற்றுாண்களை நிலைநாட்டிச் சென்றான். இமயப் பெருவரையடைந்த அசோகன், அதைக் கடவாமல், மேற்கு நோக்கி நடந்து, மாயாதேவி புத்தனை ஈன்ற பெருமை மிக்க லும்பினிச் சோலையை அடைந்தான். ஆங்கு உபகுப்தர்,
அசோகனை நோக்கி, “அரசே! இங்குதான் நம் அருட் பெரியோன் தோன்றியருளினான்” என்று கூறிய உரைகள் பொறிக்கப் பெற்ற ஒரு தூண், அசோகன் வருகையின் நினைவுச் சின்னமாய் ஆங்கு இன்றும் நிற்கிறது. அதை நாட்டிவிட்டு ஆங்கிருந்து புறப்பட்ட அசோகன், புத்தன் தன் பிள்ளைப் பருவத்தில் ஆடியும் பாடியும், அருங்கலை பயின்றும் வாழ்ந்த கபிலவாஸ்து நகரடைந்து களிப்புற்றான். சில நாள் கழித்து, தான் அறிந்த உண்மைகளைப் புத்தன், உலகத்தவர்க்கு முதன் முதலாக உணர்த்தத் தொடங்கிய தொல்பெரும் சிறப்பு வாய்ந்த சார்நாத் சென்று சேர்ந்தான். காசி மாநகர்க்கு அணித்தாக இருந்த அந்நகரில், சிந்தை மகிழச் சில நாள் இருந்து விட்டுப் புத்தன் பல்லாண்டு வாழ்ந்த பெருமை வாய்ந்த புண்ணிய் நகராகிய ஸிராவஸ்தியை அடைந்தான். அந்நகரைக் கண்ணுற்று அகமகிழ்ந்த அசோகன், ஆங்கிருந்து, புத்தன் அறியாமை யிருளின் நீங்கி மெய்ஞ் ஞானவுணர்வு பெற்ற போதிமரம் நிற்கும் கயை நகர் சென்று கண்டு களி கூர்ந்தான். கடைசியாகப் புத்தன் வாழ்வால் பெருமையுற்ற அவ்விடங்களின் நல்வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் துணை செய்யும் அரும் பெரும் கொடைகள் பல அளித்து, அவ்வாறு அளித்த்தை அறிவிக்கும் தன் அரச ஆணைகள் பொறித்த கற்கம்பங்களை ஆங்காங்கே நாட்டி வைத்தான்; அவற்றை நாட்டி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும், அவை இன்றும் அழிவுறாமலே நிலை பெற்றுள்ளன.
புத்த சமயச் சார்புடைய இடங்களுக்குத் திருவருட் பயணம் மேற்கொண்டு சென்ற அசோகன், அவ்வாறே நேபாள நாட்டிற்கும் சென்றிருந்தான். தன் வருகையை நினைவூட்டும் வகையில், நேபாளப் பள்ளத்தாக்கில் லலித பாதன் என்ற பெயரில் புதிய தலைநகர் ஒன்றை அமைத்தான், நேபாளத்தின் இன்றைய தலைநகராய்த் திகழும்
காத்மண்டுவிற்குத் தென் கிழக்கில் இரண்டரை கல் தொலைவில் இன்று நின்று காட்சிதரும் அந்நகர், அசோகன் வளர்த்த புத்த சமய நெறியை, இன்றும் கடைப்பிடித்து நிற்கிறது. நேபாளத்திற்கு, அசோகனுடன் அவன் மகள் சாருமதியும் சென்றிருந்தாள்; தந்தை தாய்நாடு திரும்பவும் திரும்பாது, துறவறம் மேற் கொண்டு, பசுபதிநாத்திற்கு வடக்கில், தேவப்பட்டணம் எனத் தன் கணவன் பெயரால் ஒரு நகரையும், அதனி டையே கன்னியர் மாடம் ஒன்றையும் அமைத்து அறம் வளர்க்கத் தொடங்கி விட்டாள். அந்நகரும், லலிதயாதன் நகரின் நடுவிலும், அதன் நாற்புறத்திலும் அசோகன் நாட்டிய அழகிய கோயில் மாடங்கள் ஐந்தும் இன்றும் ஓங்கி உயர்ந்து விளங்குகின்றன.
கலிங்கப் போருக்குப் பிறகு, அசோகன் உள்ளத்தில் அன்பும் அருளும் இடம்பெற்றன. அவன் க்ண்ட அற வழியின் தலையாய கொள்கையாக, விலங்கினத்தில் விளங்கித் தோன்றும் கடவுட்டன்மையைக் கண்டு மதித்தல் மேற்கொள்ளப்பட்டது. மிக மிக இழித்தது என்று கருதப்படும் உயிருக்கும், இறைவன் தனக்கு இயல் பாக அளித்துள்ள வாழ்நாளின் இறுதிவரை இருந்து வாழும் உரிமையுண்டு என அவன் உளமார உணர்ந்தான்; அந்நெறியில் நிற்குமாறு தன் நாட்டவர்க்கு ஆணையிட் டான்; சிற்றுயிர்க்கு உற்ற துணையாதல் வேண்டும் என்பதில் ஆழ்ந்த உள்ளம் உடைய அசோகன், அதை மதியாது. உயிர்களுக்கு ஊறு விளைவிப்பவர்களுக்குக் கொலைத்தண்டம் அளிக்கவும் துணிந்தான். அரிது அரிது. மானிடராதல் அரிது என்று போற்றத்தகும் மக்கள்
உயிரும், அவன் அறவழியின் கண்களுக்கு அற்பமாகவே. புலப்பட்டது. கொல்லாமை யறத்தை உலகத்தவர்க்கு ஊட்ட முன்வந்த அசோகன். அதைத் தன் வாழ்வின் தலையாய அறமாகக் கருதினான்; இளமையில், அரண்
மனையின் ஒரு வேளை விருந்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றவன், ஒரு நாளைக்கு ஒரு மான், இரண்டு மயில்கள் மட்டுமே கொல்லப்படுதல் வேண்டும் என ஆணையிட்டான்; அதுவும் நாளடைவில் அறவே நிறுத்தப்பட்டது. பாட்டன் சந்திரகுப்தன் காலத்தில் அரண்மனைப் பெருவிழாவாக மதித்துக் கொண்டாடப் பெற்ற வேட்டை விழாவை நிறுத்தி விட்டான். “வேந்தர்கள், விளையாட்டு வேடிக்கைகளில் விருப்பமுடையவராய் உலா வரும் பண்டை வழக்கம் கை விடப்படும்; இனி, அவர்கள், நாட்டு மக்களின் நலன் காணவும், அருட் பெரியார்களைக் கண்டு அவர்க்கு வேண்டுவன அளிக்கவும், அருள் நெறி முறைகளை ஆராய்ந்து, அவற்றை மக்களுக்கு அறிவிக்கவும், வேண்டிய அரண்மனைப் புறம் போவர்” எனப் பறை சாற்றி அறிவித்தான். நாளடைவில், அக்கொல்லாமை அறம் நாட்டின் சட்டமாகவும் ஆக்கப்பட்டது. அதன் பயனாய் எண்ணற்ற கோடி உயிர்கள் கொலையுண்டு போகாது காப்பாற்றப் பட்டன; நாட்டு மக்களில், புலால் தவிர்த்துப் புறவுணவு உண்டறியாத மக்களும் உள்ளனர் என்பதை அறிந்தவனாகிய, அசோகன், அவர்க்கு மட்டும் விலக்களித்திருந்தான் என்றாலும், ஒர் ஆண்டில் ஐம்பத்தாறு நாட்களைக் குறிப்பிட்டு, அந்நாட்களில், அவர்களும் கொல்வதோ, புலால் உண்பதோ கூடாது என்று ஆணையிட்டிருந்தான். கொல்லாமையறத்தை வலியுறுத்தும் அரச ஆணையைச் சிறிதும் வழுவாது காக்கும் கருத்துடையனாய், அதற்கெனச் சில அரசியல் ஆணையாளர்களை நியமித்திருந்தான். கொல்லாமையறம் மேற்கொண்ட மௌரியக் கோமகன், விலங்குகள், கொடுநோயால் கொலையுண்டு போவதையும் போக்க விரும்பினான்; அதற்காக நாடெங்கும் விலங்குகளுக்கான மருத்துவ, நிலையங்களை நிறுவினான். அகமதாபாத்திலும், சூரத்திலும் இன்று உள்ள மருத்துவ நிலையங்கள், மௌரிய மன்னன் நிறுவியனவேயாகும்; சூரத் நகரில் உள்ள கால்
நடை மருத்துவ நிலையம், பதினெட்டாம் நூற்றாண் டில் இருந்த நிலைமையை அறிந்தால் மௌரியர் காலத்தில் அது இருந்த நிலைமையை ஒருவாறு அறியலாம். தொன்றுதொட்டு ஆலின் கீழ் நடைபெற்று வந்தமையால் ஆலமர மருத்துவ நிலையம் என்று வழங்கப் பெறும். அது மிக உயர்ந்த மதில்கள் சூழ்ந்து, பரந்தகன்று, வகை வகையான விலங்குகள் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கும். வகையில், பல பகுதிகளாகப் பிரிந்திருந்தது ; நோயுற்ற விலங்குகள், மிகவும் விழிப்பாய்க் கண் காணிக்கப்பட்டன. அவ்விடம், அவற்றிக்கு ஒரு சிறந்த காப்பிடமாய்த் திகழ்ந்தது; கால் ஒடிந்தோ, அல்லது பிற வகையாலோ இயங்கும் ஆற்றலை இழந்துபோன விலங்குகளை, உரியார் அவ்விடத்திற்குக் கொணர்வர்: உரியவரின், நாடு, இனம், மொழிகளின் வேற்றுமை கருதாது அவை போற்றப்படும். அதில், குதிரைகள், கோவேறு கழுதைகள், காளைகள், ஆடுகள், குரங்குகள், போலும் விலங்குகளும், புறாக்கள், கோழிகள் போலும் பறவைகளும் பருத்துவம் பெற்றன. முதிய ஆமை ஒன்று, எழுபத்தைந்து ஆண்டுகள், அம்மருத்துவ மனை யில் இருந்து வந்ததாம். எலி, சுண்டெலி, மூட்டைப் பூச்சிகளுக்கான தனி விடுதிகளும் ஆங்கு இருந்தனவாம்.
கொல்லாமை அறத்தை அடுத்து, அசோகன் மேற் கொண்ட அறம், தன்னை ஈன்ற தாய் தந்தையர்களையும், தனக்கு அறிவூட்டிய ஆசிரியனையும் உயர்வாக மதித்துப் பணிந்து ஒழுகவேண்டும் என்பதாம்; அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'; எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் என்ற உண்மைகளை ஒவ்வொரு வரும் உணர்தல் வேண்டும். தம்மினும் தாழ்ந்த தம் மக்கள், மாணாக்கர், ஏவல் இளையர், அடிமைகள் ஆகியோர் தம்மிடம் பணிவாய் ஒழுகுதல் வேண்டும் என்பதை எதிர்நோக்கும் முதியோர்கள், அதற்கு மாறாக,
அவ்விளையேர்ர்க்கு உரிய தகுதிகளை மதித்து, அவர்களிடம் அன்பாய்ப் பழகுதல் வேண்டும்; ஒருவர் பணிந்து நிற்க, மற்றொருவர் அன்பு காட்ட வாழும் இவ்வறம் அதையொட்டி, நண்பர், உறவினர், நல்லற நெறி நிற்கும் துறவிகள் பாலும் தொடர்தல் வேண்டும்; ஓரினத்தைச் சேர்ந்த ஒருவர்க்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்தல் வேண்டும் என்ற பண்பாட்டு நெறியைப் பாரெங்கும் பரப்பினான்.
இவ்விரு பெரும் அறங்களோடு, அசோகன் மேற்கொண்ட மூன்றாவது அறம் வாய்மை. உண்மை உயர்வளிக்கும் என்ற உயர்ந்த அறத்தை அறிந்து, மக்கள் எல்லோரும், எப்பொழுதும் வாய்மையே பேசுதல் வேண்டும் என்று விரும்பினான். அவ்வறத்தை நாட்டு மக்களிடையே வற்புறுத்தினான். அசோகனின் சிறு பாறைக் கல்வெட்டு அரச ஆணை வரிசையுள் இரண்டாவது ஆணை “தாயையும் தந்தையையும் வழிபட வேண்டும்; அதைப் போலவே வாழும் உயிர்களை மதித்துப் பேணுதலும் வேண்டும்; வாய்மையை வழங்குதல் வேண்டும். மக்கள் மேற்கொள்ள வேண்டிய அருள் அறத்தின் உயிர் நாடிகள் இவையே. அதைப் போல்வே, மாணாக்கர் ஆசிரியன்மாரைப் பணிந்து வழிபட வேண்டும்; சுற்றத்தவர் பேணப்படுதல் வேண்டும். இவையே முன்னோர் கண்ட அறமுறைகளாம்; இம்முறை வாழ்நாளை வள்ர்க்கும். நாட்டு மக்கள் இம்முறைப்படியே வாழ்தல் வேண்டும். மதிப்புக்குரிய மன்னன் ஆணை இது” என்று கூறுகிறது.
கொல்லாமை, பணிவுடைமை, வாய்மை போலும் விழுமிய அறங்களோடு, நாட்டில் சமரச நிலை நிலவவும் அசோகன் பெரும்பாடு பட்டான். தன் சமய நெறியைப் போலவே, பிற சமய தெறிகளும், தன்னடக்கம், துர்ய உள்ளம் ஆகிய உயர்ந்த குறிக்கோள் உடையனவே
யாதலின், புறத் தோற்றத்தில் அவை எவ்வளவுதான் மாறுபடுவனவாகத் தோன்றிலும், உண்மையடிப்படையில் ஒத்த இயல்புடையவேயாம் என்பதை அறிந்து, பிற சமய நெறிகளையும் மதித்து, அவை இனிது நடைபெறத் துணை புரியும் சமரச நோக்குடையராதல் வேண்டும் என்பதை அறிவுறுத்தினான். பாறைக் கல்வெட்டு அரச ஆணை வரிசையுள் இரண்டாவது ஆணை, “ஒருவன் தன் மதத்தைப் புகழ்ந்து, பிறர் மதத்தைப் பழித்தல் கூடாது; பிற மதங்களும் யாதேனும் ஒரு வகையால் பாராட்டத் தக்க பண்புடையனவே. இதை அறிந்து நடந்தால், ஒருவன் தன் மதத்தையும் உயர்த்தியவனாவன்; பிற மத வளர்ச்சிக்கும் துணை புரிந்தவனாவன்; இதற்கு மாறாக நடந்து கொள்பவன், தன் மதத்திற்கும் மாசூட்டி, பிற மதங்களையும் பாழ் செய்தவனாவன். தன் மதத்தை உயர்த்த வேண்டிப் பிற மதங்களைப் பழித்துப் பேசுபவன். உண்மையில், அவ்வாறு பழிப்பதால், தன் மதத்திற்குத் தானே கேடு விளைக்கின்றான்; ஆகவே, பிற மதத்தவர்க்குப் பொன்னும் பொருளும் போல்வன அளிக்கும் புறச் செயல்களால் சமரச நிலை ஏற்பட்டு விடாது; பிற மதங்களையும் தம் மதமே போல் மதிக்கும் பண்பாடு வளர்தல் வேண்டும்; அதுவே உண்மைச் சமரச நிலைக்கு வழித்துணையாம் என்று மாண்புமிகு மன்னன் மதிக்கின்றான்” என்று கூறுகிறது.
சமரச நிலை வளரவேண்டும், வாழ வேண்டும் என்று ஆணையிடும் அசோகன், தான் மேற்கொண்ட அறங்களுள் தலையாயது கொல்லாமை அறமாகவும், தன் உயிரைத் தாமே பலி கொடுக்கும்,கொடுந்தவ நெறி நிற்கும் ஒருசார் துறவிகளுக்கும் பெருங்கொடை வழங்கியும், புலால் உண்ணாமையாகிய உயர்ந்த அறவழி நிற்கும் தன் ஆட்சியிலும், புலால் உண்டு உயிர் வாழும் இனத்தவர்க்கு அவ்வுரிமையை மறுக்காது வழங்கியும், அச்சமரச நெறியில் வாழ்ந்தும் காட்டினான்.
ஈதலின் சிறப்பை அறிந்தவன் அசோகன்; வறி யோர்க்கு வழங்கி வாழவேண்டும்; அற்றார் அழிபசி தீர்த்தல் வேண்டும். அரசன் கடமைகளுள் அதுவும் ஒன்று என்பதை அவன் அறிவான்; ஈதலும், இசைபட வாழ்தலுமே உயிர்க்கு ஊதியங்களாம் என்பது உண்மையே என்றாலும், உணவளித்து உடற்பசியைப் போக்குவது உண்மை ஈகை ஆகாது; அறிவு வழங்கி அறிவுப் பசியைப் போக்குவதே, ஈகையாம்; அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுவதைக் காட்டிலும், ஆங்கு ஒர் ஏழைக்கு அறிவூட்டுதலே சிறந்த அறக்கொடையாம் என்று கருதினான் அசோகன்; ‘'உணவளிப்பது உயர்ந்த கொடையாக ஏற்றுக்கொள்ளப் பெறினும், சிறந்த அற நூல்கள், அறிவிலாதவர்க்கு, அருளற நெறிகளை அறிவிப் பதுபோலும் கொடை உலகில் இல்லை; அருளற நெறியுணர்வைப் பகிர்ந்தளிப்பதுபோல் ஆகாது, பொன்னையும் பொருளையும் பகிர்ந்தளிப்பது’ என்று கூறுகிறது, அசோகன் அரச ஆணைகளுள் ஒன்று.
அக்காலச் சமயச் சடங்குகளையும், அரண்மனைப் பெரு விழாக்களையும் கண்டு வெறுத்தவன் அசோகன்; பிறந்த நாள் விழா முதல், நினைவு நாள் விழாவரை ஒருவரின் வாழ்நாளில் வந்து வந்து செல்லும் விழாக்களையும், அவற்றிற்காக பெரும் பொருள் செலவையும் கண்டு சிந்தை நொந்த அசோகன், வினைகளும் விழாக்களும் சிறு பயன் அளிப்பன; பிழையாது பயனளிக்க முடியாதன; உண்மையான கொடை அறம், ஒருவன் தன்னுடன் வாழ்வார்க்கு அருள் நெறி அறத்தை அறிவூட்டு வதில் நிற்பதுபோல், உண்மையான வினைகளும் விழாக்களும், அறிந்த அருளற நெறிவழி நடந்து காட்டுவதில் நிற்கின்றன; அடிமைகளையும், பணிபுரிவாரையும், அன்போடு நடத்துதல், ஆசிரியர்களை வழிபடுதல் பிற உயிர்களை மதித்துப் பேணுதல், அறவோர்களுக்கும், அந்தணர்களுக்கும் உரிமை அளித்தல் ஆகிய இவையே
உயர்ந்த வினைகளும், சிறந்த விழாக்களுமாம்” என்று கூறி வழி காட்டியுள்ளான்.
அருளற வழிகளைக் காட்டி, மக்களின் உயிர் வளர்ச்சிக்குத் துணை புரிந்த அசோகன், அவர்களின் உடல் வளர்ச்சியை மறந்தானல்லன். உடலார் அழியின் உயிரார் அழிவர் என்ற உண்மையை உணர்ந்திருந்தமையால், மக்களின் புற நலனுக்கான பற்பல வழிகளை வகுத்திருந்தான்; “படைபோகு பெருவழி போலும் வழிகளின் இருமருங்கும், மக்களுக்கும், மாக்களுக்கும் நிழல் தரும் ஆலமரங்களை வளர்த்தேன். ஆங்காங்கே, சுவை மிக்க காய்களையும் கனிகளையும் தரும் மாமரங்களையும் வளர்த்து வைத்தேன்; இரண்டாயிரம் கெஜத்திற்கு ஒன்றாகக் கிணறுகளை வெட்டி வைத்தேன்; அறச்சாலைகளையும் கட்டி வைத்தேன்; எண்ணற்ற தண்ணீர்ப் பந்தல்களை ஆங்காங்கே அமைத்து, விலங்குகளும், மக்களும் வழி வருத்தம் உணராது வழி கடக்கத் துணை புரிந்தேன்” எனக் கூறும் அசோகன் கல்வெட்டுக்கள், அவன் ஆற்றிய அறப் பணிகளை நாம் அறியக் காட்டுகின்றன.
தம்மைப் பற்றி வருத்தும் நோய்களை வாய் திறந்து கூற மாட்டா விலங்குகளின் நோய் போக, கால்நடை மருத்துவ நிலையங்களை நிறுவிய அசோகன், மக்களின் நோய் போக்கும் மருத்துவ மனைகளையும் கட்டி வைத்தான். அசோகனின் அருள் உள்ளம், அம்மனைகளைத் தன் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் மட்டும் அமைத்ததில் அமைவுற்றிலது; தன்னோடு நட்புடையராய்த் தனியரசு புரியும் தமிழரசர் நாடுகளிலும், கிரேக்கரின் ஆட்சி, நிலவும் ஆசிய நாடுகளிலும், உடல் நல உறைவிடங்களை எடுப்பித்தான். மருந்தாகிப் பயன்படும் மரம் செடி கொடிகளை ஆங்காங்கே நட்டு வளர்த்தான்; வேண்டிய் மருந்து வகைகளை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து அளித்தான்.
அருளற நெறி கண்ட அசோகன், அவ்வுணர்வும் ஊக்கமும் ஆட்சித் தலைவனாகிய தனக்கு மட்டும் போதாது; அதனால் கருதிய பயன் கை கூடாது; அவ்வுள்ளம் தன் ஆட்சிக் கீழ்ப் பணி புரியும், ஆணையாளர் அனைவரிடத்தும் அமைதல் வேண்டும். ஆகவே அவ்வுள்ளம் உடையாரையே ஆணையாளர்களாக அமர்த்துதல் வேண்டும்; அவ்வுள்ளம் அவர்கள் பால் இயல்பாக அமைந்து கிடப்பினும், அவ்வுணர்வினை அவ்வப்போது ஊக்கிக் கொண்டேயிருத்தல் வேண்டும் என்று கருதினான். அதனால், தான் மேற்கொண்ட அருளற நெறிமுறைகள், அவற்றைச் செயற்படுத்த வேண்டிய செயல் முறைகள், அவற்றைச் செயற்படுத்தும் ஆணையாளர்களின் கடமைகள் ஆகியவற்றை, அரச ஆணைகளாக அவ்வப்போது அறிவித்து வந்தான். அவர்கள், தங்கள் கடமைகளை ஆர்வத்தோடு ஆற்ற, அவர்க்கு உரிமை பலவும் வழங்கினான். தம் ஆட்சிக்குட்பட்ட மக்களுக்கு மனம் நிறை வாழ்வையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் வகையில், நல்லது புரிந்த மக்களுக்கு, நன்மை பல வழங்கியும், அல்லன புரிந்தார்க்கு அவர் திருந்தத் தண்டம் அளித்தும் தம் கடமைகளை நம்பிக்கையோடு, அச்சம் அற்றுச் செய்து வருவான் வேண்டி, “என் ஆட்சிக்குட்பட்ட மாகாணத் தலைவர்களுக்கு உரிமை பல வழங்கியுள்ளேன். ஒருவன், தன் குழந்தையை அறிவறிந்த ஒரு செவிலி பால் ஒப்படைத்து, “அன்பும், ஆர்வமும், அறிவும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற இச்செவிலி, என் மகவின் மகிழ்ச்சியில், மாறாகக் கருத்துடையள்” எனத் தனக்குள்ளே சொல்லி அமைதி பெறுவது போல், யானும், என் மக்களின் நல்வாழ்வில் ஆர்வமும் ஊக்கமும் மிக்காரையே மாகாணத் தலைவர்களாகத் தேர்ந்துள்ளேன். அவர் ஆட்சிக் கீழ் என் மக்கள் நல்வாழ்வு வாழ்வர் என்று கூறி அமைதி காண விரும்புகிறேன்” என்றும், “என் ஆட்சிக் கீழ் வாழும் மக்கள் அனைவரும், என் வயிற்றிற் பிறந்த மக்களே! என் மக்கள் ஒவ்வொருவரும் இவ்வுலகில் நன்கு
வாழ்ந்து மறுவுலகில் நன்னிலை பெறவேண்டும் என்பதில் எனக்கு எவ்வளவு ஆர்வம் உண்டோ, அவ்வளவு ஆர்வம் என் நாட்டு மக்களின் நல்வாழ்விலும், உண்டு. ஆகவே, மதிப்பு மிக்க மாகாணத் தலைவர்களே! நீங்கள் உங்கள் ஆட்சிக் கீழ் உள்ள மக்களை என்னை நம்பும்படியும், “அரசன் நமக்குத் தந்தை போல்வான். அவன் தன் பால் அன்பு காட்டுவது போலவே, நம்மீதும் அன்பு காட்டுகின்றான்; ஆகவே, அவன் மக்கள் அவன் பால் அன்பு காட்டுவது போல் நாமும் அவன் பால் அன்பு கொள்ளுதல் வேண்டும்” என்று உணர்வு பெறும்படியும் ஆட்சி புரிதல் வேண்டும்; அவ்வாறு பணி புரிந்தால், நீங்கள் மறுமையில் வீட்டுலக வாழ்வு பெறுதலோடு, இம்மையில் அரசனுக்கு, ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றிய பெருமையும் பெறுவீர்கள்” என்றும், “முறையும் தண்டமும், எவர்க்கும், எங்கும், எக்காலத்தும் ஒரு நிகரானவாதல் வேண்டும்; அதற்காக, இன்று முதல் இதுவே என் ஆணையாம்; கொலைத் தண்டம் பெற்றுக் கொடுஞ்சிறையில் வாழ்வார்க்கு,அத்தண்டம் நிறைவேற வேண்டிய நாளிலிருந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கின்றேன். இம்மூன்று நாட்களில், தண்டம் பெற்றவரின் உறவினர், வழக்கை மீண்டும் விசாரித்துக் குறை தண்டம் தண்டம் விதிக்க வேண்டிக்கொள்வதும், ஏழைகளுக்கு உணவளித்து மறுமையில் நல்வாழ்வு பெற ஆண்டவனை வேண்டிக் கொள்வதும், உயர்கதி அடைய உண்ணா நோன்பு மேற் கொள்வதும் செய்வார்களாக. இவ்வாணையை வெளியிடுவதன் நோக்கம், ஒருவர் வாழ்நாளின் முடிவு மாற்ற முடியாத வகையில் உறுதி செய்யப்பட்ட நிலையிலும், அவர்கள் மறுமையில் இன்பம் அடைய வழி செய்து கொடுத்தல் வேண்டும்; அது காணும் மக்களிடையே, தன்னடக்கம் விட்டுக் கொடுத்தல் போலும் நல்லியல்புகள் இடம் பெறவும் வழி காணுதல் வேண்டும் என்பதே” என்றும் அவன் ஆணை அறிவிக்கும் கல்வெட்டுச் செய்திகள் அவன் ஆட்சி நலத்தை அறிவிக்கின்றன.
அருளறப் பெருநெறியை, இவ்வாறு தன் அரசியல் ஆணைகள் மூலம் தன் நாட்டு மக்களிடையே பரப்பிய அசோகன், அதன் பயனாகத் தன் காலத்து மக்கள் பெறுவதே போல், வருங்கால மக்களும் அடைதல் வேண்டும் என்று விரும்பினான்; அதன் பயனாய், அருளறத்தின் உண்மைகளையும், அவ்வ்றம் நிலை பெற மக்களும், மன்னனும் மேற்கொள்ள் வேண்டிய செயல் முறைகளையும், தன் நாடெங்கும் உள்ள கற்பாறைகளில் பொறித்து வைத்தான்; அவை பொறிக்கப் பெற்ற ஒற்றைக் கற்களால் ஆன தூண்களை ஆங்காங்கே நாட்டி வைத்தான். அவற்றைக் கால முறைப்படி எட்டு வகையாகப் பிரித்து வரிசை செய்துள்ளார்கள், வரலாற்றாசிரியர்கள்.
1. பாறைக் கல்வெட்டு ஆணைகள் பதினான்கு: இவை அசோகனின் அரசியற் கொள்கைகளையும், அறிவொழுக்க நெறிகளையும் விளக்குகின்றன; இவை அனைத்தும், தலைநகர்க்கு வெகு தொலைவில் உள்ள எல்லைப்புற மாகாணங்களிலேயே காணப்படும்.
2. கலிங்க நாடு குறித்த கல்வெட்டு ஆணைகள்: இவை புதிதாக வென்ற கலிங்க நாட்டில் நிலவ வேண்டிய அரசியல் முறைகளையும், அந்நாட்டின் எல்லைகளில் வாழும் காட்டு மக்கள் பால் காட்டவேண்டிய நெறி முறைகளையும் எடுத்து இயம்புகின்றன.
3. குகைக் கல்வெட்டுகள்: கயா மாவட்டத்தில் பராபர் என்னும் இடத்தில், அஜீவீக சமயத்தைச் சேர்ந்த அம்மண சந்நியாசிகள் வாழ்வதற்காகஜீவீ குகைகள் குடைந்து அவற்றை அவர்க்கு உரிமையாக்கும் அசோகனின் ஆணை, அம்மூன்று குகைகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
5. தராயி கற்றூண் கல்வெட்டுகள்: புத்தன் பிறந்த புண்ணிய இடங்களுக்கு அசோகன் சென்ற செய்தியை அறிவிக்கின்றன, இக் கல்வெட்டுக்கள் இரண்டும்.
5. கற்றூண் அரச ஆணைகள் ஏழு : இவை முன்னர் கூறிய பதினான்கு பாறைக் கல்வெட்டு ஆணைகளின் பிற் சேர்க்கை என மதிக்கும் வகையில், அவற்றில் கூறியனவற்றையே மேலும் வற்புறுத்துகின்றன. -
6. கற்றூண் அரச ஆணைகளின் தொடர் ஆணைகள் : இவ்வாணை அடங்கிய கல்வெட்டுக்களின் பொருள் இனிது விளங்காத வகையில், இவை பெரிதும் சிதைந்து விட்டன.
7. சிறுபாறைக் கல்வெட்டாணைகள் : அசோகன் ஆட்சி ஆண்டு நாற்பத்திரண்டில் வெளியிடப்பட்ட இவற்றில் அறிவிக்கும் செய்திகள் புரியாத புதிராகவே உள்ளன.
8. பாப்ரா அரச ஆணை : ஆட்சியின் இறுதிக் காலத்தில் துறவு நிலை மேற்கொண்ட அசோகன், இராஜ புதான மலைகளில் இருந்த ஒரு புத்தப் பள்ளியிலிருந்து, புத்த மதத் துறவிகளுக்கு, புத்தன் போதித்த ஒழுக்க நெறி நிற்கவும், அவன் அறிவித்த அருள் அறநெறி முறைகளை ஆராய்ந்து அறியவும் அறிவூட்டிய ஆணை அடங்கிய இக்கல்வெட்டு, புத்த சமயத்தின் பெருநிதியாகும்.
சிறு பாறைக் கல்வெட்டு ஆணையில் வரும். “இச்செய்திகள் மண்டலத் தலைவர்களுக்கு அனுப்பப் பெறுகின்றன; அவர்கள், இவற்றை நாட்டு மக்களுக்குப் பறை சாற்றி அறிவித்தல் வேண்டும். சமய ஆசிரியர்கள், இவற்றைத் தங்கள் மாணாக்கர்களுக்கு அறிவூட்டுதல் வேண்டும். இவற்றைக் கற்றறிந்தவர்கள், இவற்றில் அடங்கிய செய்திகளைக் கல்லாத தம் சுற்றத்தார்க்கு அறிவித்தல் வேண்டும்” என்ற தொடர், இக் கல்வெட்டு ஆணைகளை அக்கால மக்கள் எவ்வாறு பயன் கொண்டார்கள் என்பதைத் தெரிவிக்கிறது.
அருள்நெறி உண்மைகளை, அரசியல் ஆணையாளர் வழியாகவும், கற்பாறைகளிலும், கற்றுாண்களிலும் செதுக்கிய கல்வெட்டுக்கள் வழியாகவும், தன் நாட்டில் வாழும் பக்களுக்கும் இனி வாழப் போகும் மக்களுக்கும் உணர்த்திய அசோகன், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற உயர்ந்த உள்ளம் கொண்டு உலக மக்கள் அனைவருக்கும் உணர்த்த விரும்பினான்.
அரசன் இறந்தால், அவன் மக்களுள் மூத்தோன் அரியணை ஏற, இளையோர் பிற அரசியல் பணியேற்று வாழ்வர்; அம்முறையாலும், அவரிடையே மனவேறுபாடு தோன்றி பகை வளருமாதலின், அசோகன், அவ்விளையோர்களைத் துறவிகளாக்கி அருளற நெறி வளர்க்கும் அடியார்களாக்கி விட்டான். அவ்வடிகளாரைத் தன் சமய வளர்ச்சிக்குத் துணையாகக் கொள்ளக் கருதினான். அவர்களையும், வேறு பிற புத்தத் துறவிகளையும் கொண்ட புத்த மத வளர்ச்சிக் கழகம் ஒன்றை நிறுவினான். அவற்றின் வழியாக, அவர்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி புத்த மதத்தைப் பரப்பினான். இமயமலை நாடுகளாகிய திபேத், காம்போஜம், காபூல் பள்ளத்தாக்கு நாடுகளாகிய காந்தாரம், யவனம், விந்திய மலை நாடுகளாகிய போஜம், புலிந்தம், கிருஷ்ணையும், கோதாவரியும் பாயும் ஆந்திரம், முதலாம் தன் ஆட்சிக்குட்பட்ட நாடுகளுக்கும், தன் ஆணைக்கு அடங்காராயினும், தன் பால் அன்பும் நட்பும் உடையார் ஆளும், சேர,சோழ, பாண்டிய சத்திய புத்திரர் நாடுகளுக்கும், கடல் கடந்த ஈழ நாட்டிற்கும், சிரியா, எகிப்து, மாசிடோனியா, முதலாம் மேலை நாடுகளுக்கும் அடிகளாரை அனுப்பி அருளற நெறியை அங்கெல்லாம் பரப்பினான், இலங்கைக்குச் சென்ற அடிகளார் திருக்குழுவிற்குத் தன் இளவல் மகேந்திரனையே தலைவனாக்கி அனுப்பினான். ஈழ நாட்டின் வரலாறு உரைக்கும் மகாவம்சம், சங்கமித்திரை என்ற பெயர் பூண்ட அவன் தங்கையும் உடன் சென்றதாகக் கூறுகிறது. அதே வரலாற்று நூல், பர்மா நாட்டில் உள்ள, சுவர்ண பூமி என வழங்கும் பெருநாட்டிற்கும்
அசோகன், அறளறநெறி வளர்க்கும் அடிகளாரை அனுப்பிவைத்தான் என்று கூறுகிறது. அசோகன் ஆசை நிறைவேறிவிட்டது; புத்தமதம், பிறந்த நாட்டில் மறைந்துவிட்டது என்றாலும் உலகப் பெருமதங்களுள் ஒன்று என்ற புகழ் நிலையை இன்றும் பெற்றுத் திகழ் கிறது. அசோகன் வளர்த்த புத்தமதம், இன்று இந் நாட்டில் இல்லை என்று கூறுமளவு குறைந்துவிட்டது என்றாலும், அம் மதத்தின் அறங்களாகிய, அன்பு, அருள், கொல்லாமை, வாய்மை, முதலாயின, பல்வேறு மதங்களுக் குள் புகுந்துகொண்டு, அழியாப் பெருநிலை பெற்று விட்டன. அருள் அறநெறி வளர்த்த அசோகன் புகழ், பொன்றாது நின்று விளங்குகிறது; வாழ்க அவன் புகழ்; வளர்க அவன் வளர்த்த அருள் நெறி!
Wrapper-. Printed at:
Sri Gomathy Achagam, Madras-5