கலிங்க ராணி/கலிங்க ராணி 10


10


"ண்மை! அந்த மருதமே, என் மனதை மகிழ்வித்தவள்! அவளுடைய விதவைக்கோலம் வெளி உலகுக்கு; எனக்கு அல்ல! வீரனே! மலர்புரி அரசிக்கு நான் ஆசை நாயகனாக இருந்தேன்! வஞ்சனைக்கல்ல, அதிகாரம் பெற அல்ல! அன்பால் நாங்கள் இருவரும் சேர்க்கப்பட்டோம். ஆடிப்பாடி களித்தோம். அரண்மனை என்பதை மறந்தோம். சோலையிலும் சாலையிலும் சுந்தரமாகச் சரசமாடினோம். அந்த நாளை எண்ணிக் கொண்டால் என் மனம் கரையும். நான் கலிங்கநாட்டிலிருந்து கிளம்பி, பல மண்டலங்களைக் கண்டு மகிழ்ந்து ஒரு நாள் மலர்புரி வந்தேன். மலர்புரி மருங்கேயுள்ள ஒரு சோலையிலே உலவிக் கொண்டு இருக்கையில், கம்பீரமான உருவுடன் ஒரு ஆரியன், என்னை அணுகினான். அவனுடைய நடையும் உடையும் என் மனதைக் கவர்ந்தது. அவன் என்னை அன்போடு ஏற இறங்கப் பார்த்தான். நான் ஆச்சரியத்துடன் அவனெதிர் நின்றிருந்தேன். "பொருத்தமான பாத்திரம்! அரண்மனைக்கேற்ற பண்டம்! என் யோகத்திற்கு ஏற்ற தண்டம்!" என்று மெல்ல சொன்னான். நான், "ஆரியரே! ஏதேதோ கூறுகிறீர். என்னை ஏற இறங்க பார்க்கிறீர். என்ன விஷயம்?" என்று கேட்டேன்.

"குரலிலே ஒரு குளிர்ச்சியுமிருக்கிறது. குமரிபாடு கொண்டாட்டந்தான். எனக்கு மட்டுமென்ன?" என்று தன்னை மறந்து பேசினான். எனக்கு கோபமும் வந்தது! அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கினேன். மரத்தைப் பிடித்தாட்டினால் கனி உதிர்வதுபோல் அவன் கலகலவெனச் சிரித்துவிட்டு, "குழந்தாய்! உன்னை அதிர்ஷ்டதேவி அணைத்துக் கொள்ள வருகிறாள். உனக்கு யோகம் பிறக்கிறது" என்று கூறினான். என்னை உற்று நோக்கியபடியே. "அதிர்ஷ்ட தேவியாவது, அணைத்துக் கொள்வதாவது!" என்று நான் கூறினேன். ஆரியன், என் இரு கரங்களையும் பற்றிக் கொண்டு, "வாலிபனே! உன்னை அழகும் இளமையும் ததும்பும் ஒரு அரசகுமாரிக்கு விருந்தாக அளிக்கப் போகிறேன்" என்றான்.

நான் பல மண்டலங்களிலே சுற்றிவந்தபோது, பல சுந்தராங்கிகளைக் கண்டு சொக்கியதுண்டு. சிலர் கிடைக்காததால் கருத்து கெட்டதுண்டு. என்றாலும், தானாக இந்த வாய்ப்பு வருவதென்றால், எவ்வளவுதான் குதூகலம் பிறக்கும். அவள் எப்படி இருப்பாளோ! எவளோ? எக்குணங் கொண்டவளோ, மதிமுகவதியோ மந்திமுகவதியோ, மலர்க்கொடியோ, மாமிசப் பிண்டமோ, சரசக்காரியோ, விரசவதியோ, என்று ஒரு விநாடியிலே என் மனதிலே எண்ண அலைகள் எழும்பின. என் முகத்திலே பொலிவு பிறந்திடக் கண்ட ஆரியன் புன்னகையுடன், "கன்னி பற்றிய பேச்சே ருசியாக இருக்கிறதல்லவா! கன்னியைக் கட்டித் தழுவும் போது, "ஆஹா! வாலிபனே! எந்த நிலையில் இருப்பாயோ? என்னை நினைப்பாயோ, மறப்பாயோ!" என்று கேலி செய்தான்.

"என்ன பேச்சய்யா பேசுகிறீர்! தோட்டம் தெரியா முன்னம், தொடுத்திடு மாலையை என்று கூறுகிறீர்! யார் அம்மங்கை? அவ்வளவு மலிவாகக் கிடைக்கக் காரணம் என்ன? என்னைக் கண்டதும் உமக்கு இக்கருத்து ஏன் உதித்தது?" என்று அடுக்கடுக்காக நான் கேள்விக் கணைகளை விடுத்தேன். ஆரியன் சொன்னான், "வீரா! நீ அறியாயோ, நாங்கள் கால நிலை உரைப்பதுடன் காமநிலையும் உரைப்போர் என்பதை. காதற்கணைகளை எடுத்துச் செல்ல எம்மிலும் மிக்காரும் தக்காரும் உண்டோ? பொருத்தமுரைக்க அறிவோம்! பொன்னுக்கு மெருகு வேண்டுவதுபோல், உங்களின் வாழ்வு இனிக்க வேண்டுமானால், எமது "முலாம்" பூசப்பட வேண்டும் குழந்தாய்! நான் உன்னை இந்த மலர்புரி அரசி மருதவல்லி என்ற மங்கையின் மணாளனாக்கப் போகிறேன்" என்றான்.

"மலர்புரி அரசிக்கு மணவினை இன்னும் நடக்க வில்லையோ?" என்று நான் கேட்டேன்.

"நடந்தது, நலிந்தது, அவள் நாயகனை இழந்தாள்; நரம்பு தன் முறுக்கை இழக்கவில்லை, நேத்திரத்திலே ஒளி குன்றவில்லை, நுதலிலே மதி தவழ்கிறது, இதழோ கொவ்வை! இடை கொடிதான்! குணமோ, தங்கம்! குயிலோ என்பாய், குரல் கேட்டால்! கொஞ்சிடும் பருவம்; கோலமயில் சாயல்" என்று ஆரியன் வர்ணித்தான்.

"என்னை மயக்குகிறீர்" என்று நான் கூறினேன் அடிமூச்சுக் குரலால்.

ஆரியன், பின்னர் மெள்ளச் சொன்னான். "மருதம், விதவை! அவளுக்கு உன்னைப் பரிசளிக்க நான் தீர்மானித்ததற்குக் காரணம், ஆண்டவனின் பிம்பமே அவளை ஆரத்தழுவி ஆனந்தமூட்டும் என்று நான் பல நாட்களாகக் கூறி வந்தேன். நோன்பிருக்க வைத்தேன்; பூசைகளுக்கும் குறைவில்லை. பேதை அவள். ஆண்டவனை ஆரத்தழுவ முடியாது என்பதை அறியாள். ஆண்டவனை உருவமாக, உன்னைத் தான் நான் செய்யப் போகிறேன். பட்டத்தரசி நித்தமும் பூஜிக்கும் பாகீரதி கோயிலின் பூசாரி நான்! மலர்புரியை அவள் ஆள்கிறாள். அவள் மனதை நான் ஆள்கிறேன். அவளை உனக்கு அளிக்கிறேன். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. நீ மானிடன் என்று கூறிடக் கூடாது; ஆண்டவனின் பிம்பம், என் தபோவலிவால் தருவிக்கப்பட்டவர் என்றே கூறவேண்டும்; அவளிடம் ஆடிப்பாடிக் களிக்கலாம். ஜோடிப்புறா போல் வாழலாம்; ஆனால், எக்காரணத்தை முன்னிட்டும், உமது உண்மை வரலாற்றை நீ உரைத்திடக் கூடாது. உனது இச்சைப்படி மற்றவற்றிலே நடக்கலாம்" என்றான். என்னுள் ஆச்சரியத்துடன், சற்று ஆத்திரமும் புகுந்தது. "ஓஹோ! உணர்ந்தேன் உமது கபட நாடகத்தை! அரசியின் விதவைக் கோலத்தைக் கண்டீர், வைதீக வஞ்சனையால் வென்றீர்; என்னை இரவல் தந்து, அரசியின் உயிரை விட மேலான மானத்தை உமது உள்ளங்கையிலே வைத்துக் கொண்டு, அரசியை மிரட்டி வாழச் சூது செய்கிறீர். இதற்கு நான் ஒரு கூலியா! என்னை என்னவென்று மதித்தீர்?" என்று கேட்டேன். ஆரியன் சினங்கொண்டானில்லை, 'சகஜமான எண்ணங்களே, உனக்குத் தோன்றின. ஆனால் அவை அத்தனையும் தவறு. அவளை நான் இப்போதும், "பாகீரதியின் அருளால்" என் கைப்பாவையாகத்தான் கொண்டிருக்கிறேன். உன்னை நான் உபயோகிக்க வேண்டுமென்ற அவசியமே இல்லை. உலகிலே ஆணழகன் நீ ஒருவன் தானோ!" என்று கேட்டுவிட்டு, "அவளுடைய வாலிபத்துக்கு விருந்திடவே இந்த யோசனை; வேறெதற்குமல்ல! பரிதாபம்! அவளுக்கு எல்லாம் இருக்கிறது. அரசு, அந்தஸ்து, அழகு, இளமை, செல்வம் யாவும் இருக்கிறது; பயன் என்ன? அவளை அணைத்துக் கொண்டு "அன்பே! ஆருயிரே! இன்பமே!" என்று கொஞ்சிக் குலவிட ஒருவன் இல்லை. அது அவள் குற்றமுமல்ல! ஆடவரைக் காணும்போது தன் அரசு என்ற கடிவாளத்தைப் பூட்டியே இச்சை எனும் குதிரையை இழுத்துப் பிடிக்கிறாள். ஆனால் அந்தப் பொல்லாத குதிரை, சும்மாவா இருக்கிறது! அவளைப் படாதபாடு படுத்துகிறது. அவளை அந்தச் சிறையிலிருந்து மீட்கவே, நான் உன்னை அழைக்கிறேன்" என்றான். என் இளமை, ஆரியன் கூறுவதை ஏற்றுக் கொள் என்று தூண்டிற்று. என் ரோஷ உணர்ச்சி, 'சீ! வேண்டாம்' என்று சொல்லிற்று. தலை குனிந்து நின்றேன். தரையிலே, நீர் தளும்பும் கண்களுடன், அழகு ததும்பும் அந்த அணங்கின் உருவம் தெரிவது போலிருந்தது; பெருமூச்செறிந்தேன்.

என் வாலிபத்துக்கு விருந்தளிக்க, அழகும், இளமையும், அந்தஸ்தும் படைத்தவளைத்தர ஆரியன் வந்தது என் நெஞ்சிலே நினைப்புச் சுழலைக் கிளப்பிவிட்டது. நான் அதனிடம் சிக்கிவிட்டேன். இன்று நடை தளர்ந்து, தேகமொடுங்கிய பிறகு, எவ்வளவு வெறிபிடித்து அலைந்தோம் இளம் பிராயத்திலே என்று எண்ணவேண்டி இருக்கிறது. அப்போது அப்படியா! நல்ல மலர், சுவையுள்ள கனி, இன்பகரமான இசை, இவை யாவும் ஓருருக்கொண்டுலவும் மங்கை என்றால், நரம்புகள் நர்த்தனமாடின. நெஞ்சு அலைந்தது, நேத்திரம் சுழன்றது! வாலிபனே! நீ அறியாததா! பாவம்! இப்போது நீயும் அந்த நிலையில் தான் இருப்பாய் என்று எண்ணுகிறேன். எவள் உன் நினைப்பால் சோழ மண்டலத்திலே சோர்ந்து கிடக்கிறாளோ யார் கண்டார்கள்! புன்னகை புரிகிறாய், போர் வீரா! ஆரியன் அன்று என்னை அழைத்ததுபோல் உன்னை அழைத்தால், உதாசீனம் செய்வாயோ! உல்லாசத்துடன் உலவ ஊராரிலே யார் விரும்பார்கள்! நான் இசைந்தேன். ஆரியன் தலை அசைத்தான்; பின்னர் சொன்னான்:

"மலர்புரி அரசியின் மனோரதம் இனி நீயே! மருதவல்லிக்கு இனி நீயே மதி, நிதி, கதி. விதவைக் கோலத்திலுள்ள அந்தக் கொண்டை விழிக்கிளிக்கு இனி நீயே வாழ்க்கைச் செண்டு, பாடிடும் வண்டு! காதல், பூத்திடச் செய்வதே என்போன்றாரின் தொண்டு. காதல் என்றால் சாமான்யமா? காதலுக்கும் கடவுளுக்கும் பேதமொன்றில்லை. காலவேறுபாடு அதை அழிப்பதில்லை. கவிகள் அதினின்றும் தப்புவதில்லை. கலைக்கு அதுதான் பிறப்பிடம். உலக வாலிபர்களின் ஊஞ்சல், அந்த உத்தியான வனத்திலே இனி நீ உலவலாம். மருதம் இனி உன் மனோஹரி. ஆனால், நான் சொன்னதை மறவாதே! நீ ஆண்டவனின் பிம்பம், தேவஜோதி, கடவுட்கனி; ஆமாம், மானிடனல்ல. மானிட உருவந் தாங்கி வந்து மருதத்தை மகிழ்விக்கப் போகும் மகேஸ்வரன்!" என்று ஆரியன் கூறிடுகையில், கோமளவல்லியுடன் கொஞ்சிடப் போகிறோமே என்ற குதூகலம் ஒருபுறம் என்னை இழுப்பினும், ஆரியக் கடவுட்தன்மை பற்றிய சந்தேகம் மற்றோர் புறம் இழுத்தது. நான் தாமிரபரணி, வைகை, காவேரி, பாலாறு ஆகிய அழகிய நதிகளை மலையாகக் கொண்டுள்ள தமிழகத்தில் இதுபற்றிய தர்க்கங்களை கேட்டிருக்கிறேன். தத்துவார்த்த உரைகளைப் பலர் பேசிடக் கேட்டதுண்டு. எனவே, ஆண்டவன், மானிட உருக் கொண்டு, மங்கையருடன் மந்தகாசமாக இருப்பது முறை என்று ஆரியன் பேசிடக் கேட்டதால், எனக்கு, எவ்வளவு இழிந்த கொள்கையை இந்த ஆரியர்கள் சுமந்து திரிகிறார்கள் என்று எண்ணவும், வெறுப்படையவும் ஏற்பட்டது. ஆனால் என் செய்வது? 'தேன் பருக வாராய்' என்று அவன் அழைக்கும்போது உமது தேவனின் சேதி எப்படி என்று கேட்பதா? "சரி! உமது இஷ்டப்படியே நடக்கிறேன்" என்று சுருக்கமாகக் கூறிவிட்டேன். "விவேகமுள்ளவனே, கேள்! நாளை இரவு எட்டு மணிக்கு நீ பாகீரதி கோயிலுக்கு வா! அரசி, இரவு 10 மணிக்குமேல், ஆடை அணி புனைந்து, பரிமளகந்தம் பூசி, தங்கத்தட்டில் பழவகைகளும், தங்கக் கோப்பையில் பாலும் எடுத்துக் கொண்டு வருவாள்—ஒவ்வோர் நாளும் இதுபோல் வழக்கம். நாளையத் தினந்தான் அரசியின் ஆசை பூர்த்தியாகப் போகிறது. எட்டு மணிக்கு நீ அங்கு வந்ததும், உனக்குச் சில விசேஷ அலங்காரங்கள் செய்யவேண்டும், தேவ வடிவத்துக்குத் தேவையான "முலாம்" பூசப்படவேண்டாமா? பிறகு உன்னைப் பாகீரதி சிலைக்குள் போயிருக்கச் செய்வேன்—திடுக்கிடாதே. அதற்கு வழி இருக்கிறது—சிலையினுள் நீர் இருந்து கொண்டிருக்கும்போது, அரசி சிலையும் உருகும்படி வேண்டிக் கொள்வாள்; ஆராதிப்பாள், அர்ச்சிப்பாள். நான் கணகணவென மணியை அடித்து, "அம்மே! பாகீரதி! அடியவரை இன்னமும் சோதிக்காதே. அரசியாரின் மனதை வதைக்காதே! உன் ஜோதியை ஆண் உருவில் வெளியே அனுப்பு! இகபர சுகத்தை இன்றே மருதவல்லியார் அடையும் மார்க்கத்தை அருள்!" என்று கூறுவேன். "மைந்தா! மெச்சினேன் உனது பூஜா விசேஷத்தை. குமாரி! கண்களை மூடிக்கொள்!" என்று கெம்பீரமான குரலிலே கூறு, அரசியின் கண்கள் மூடுமுன்னம், சிலையினுள்ளே இருக்கும் விசையைத் திருப்பு; பாகீரதி இரு கூறு ஆவாள். உடனே வெளியே வா! பாகீரதி பழைய நிலை பெறுவாள்! ஆச்சரியத்தாலும் ஆனந்தத்தாலும் தாக்கப்பட்டு, மருதம் மயக்கத்துடன் குழந்தைக் குரலிலே, "தேவா!" என்று கூறுவாள்! மார்போடு அணைத்துக் கொள்! பார் அப்போது அவள் மார்பு படபடவென அடித்துக் கொள்ளப் போவதை! பிறகு, நான் கோயில் திருவிளக்குகளை குளிர வைத்துவிடுவேன். மூலஸ்தானத்தை மூடித் தாளிட்டுவிட்டு வெளியே செல்வேன். விடியுமுன் வருவேன். அதற்குள் உனது மதனவித்தையைக் காட்டு" என்றான்.