கலிங்க ராணி/கலிங்க ராணி 11


11



ம்! மறுதினம், "தேவா!" என்று குழைந்து கூறி, மலர்புரி அரசி என் மீது சாய்ந்தபோது, அவளை மார்புறத் தழுவி, நெற்றியிலே முத்து முத்தாக வடிந்த வியர்வையைத் துடைத்து கன்னங்களைத் தடவி, இதழைச் சுவைத்து "இன்பமே! இன்னுயிரே!" என்று நான் அழைத்தபோது, "இகபர சுகங் கண்டேன்! என் பூஜாபலனை உண்டேன். இந்த ஜென்மத்திலேயே தன்யனானேன்" என்று மருதம் வணங்கி, என்னை வாழ்த்தினாள். ஆஹா! சிவந்த ரோஜா போன்ற உடலமைந்த அவளுக்குத்தான் மனம் எவ்வளவு வெள்ளை! கடல் போல் இருந்தன கண்கள், கபடத்தைக் கண்டாளில்லை. அவளுடைய மிருதுவான கன்னங்களை என் கன்னத்துடன் ஒத்தியபோது, அப்போது அலர்ந்த மலரை எடுத்து ஒத்திக்கொள்வது போன்று இருந்தது. அவளுடைய அணைப்பிலே நான் சில நிமிடம், என் அணைப்பிலே அவள் சில நிமிடம், என் இதழ் முத்தம் விளைவித்தது சில நிமிடம், அவள் இதழ் அதனைச் செய்தது சில நிமிடம்! பொழுது விடியுமாமே! இத்தகைய இன்பபுரியிலே இரவு போய் பகல் வருவானேன்!!

அந்த மறையாத வானவில், மங்காத மணம் என் வாழ்விலே, நான் கண்டறியாத களிப்பைத் தந்திடவே, நான் ஆரியனின் அடிபணிந்தேன்; திறம் வியந்தேன். அவனது இனத்தைப் புகழ்ந்தேன். 'எனக்கு இன்ப உலக வாழ்வு தந்த ஏந்தலே' என்று தொழுதேன். அவன் என் நிலையையும் என்னிடம் இழைந்து கிடந்த மருதத்தின் மனதையும் நன்கு தெரிந்துகொண்டு, நாகரிகமான நாட்டியப் பொம்மைகள் என்று எம்மை மனதிலே தீர்மானித்துக் கொண்டான். அவன் எதன் பொருட்டு இவைகளைச் செய்கிறான் என்று எண்ணிப்பார்க்கும் நிலையை நான் கடந்துவிட்டேன். அந்த நிலாமுக வழகியின், நேர்த்தியான நேசத்திலே நான் நெஞ்சையும் நினைப்பையும் இழந்தேன். வேதஜோதியே என்று கூறி என்னைத் தஞ்சமென்றடைந்த அந்த வஞ்சியோ, கொஞ்சியும் குலவியும், வாலிபக் கோலத்தைக் காட்டியும், என்னை மகிழ்வித்தாள். பாவம், என்னுடன் சரசமாடுவதை அவள், பக்தியில் ஓர் பாகம் என்று கருதினாள்.

"ராதையும் ருக்மணியும், கோபிகையரும் பிறகும் பெற்றபேறு, இந்தச் சாமான்யளுக்குக் கிடைத்ததே! எவ்வளவு பூர்வ புண்ணியமிருந்தால் இது கிடைக்கும் ஐயனே! செந்தாமரைக் கையனே!" என்று என்னிடம் கூறினாள். தேவனிடம் சரசமாடுவது பக்திப்பாசுரம் என்று எண்ணினாள். ஆரியன் சொற்படி கேட்ட என் சொல்லை நம்பினாள். ரோஜாவிலே முள் இருந்து பறிக்கும் நேரத்திலே கையைக் குத்துவதுபோல், அவளது சரசத்திலே பக்தி சாயல் இருப்பதுகாண, என் மனம் சற்று வேதனைப் பட்டது. சாமானிய மானிடம்! கலிங்கத்திலே பிறந்து, கட்கத்தை நம்பி வாழும் களத்துக் கூளம் என்பது தெரிந்தால், அவள் என்னைத் தீண்டுவாளோ? சந்தேகமே! பருவம் அவளுக்கு அந்த நினைப்பினைக் கொடுப்பினும், அரசி என்ற நிலை, அவளைத் தடுத்துவிட்டிருக்கும். நானும் "தேவஜோதி" என்ற "தில்லு"க்கு உடன்பட்டிராவிட்டால், வான வீதியிலே உலவும் மதிகண்டு மகிழ்வதுபோல், மருதம், உப்பரிகை மீது உலாவுவதைக்கண்டு மகிழ்வதோடு தீர்ந்துவிட்டிருக்கும்; கண்களுக்கு விருந்து, கருத்துக்கு நோய் என்று இருக்கும்!

பிரதி இரவும், நறுமணம் வீசும் தைலம் பூசிய கூந்தலில் முல்லை சூடி, முறுவலுடன், மருதம், கோயில் வருவாள். நான் தேவ வடிவும், வாலிபத் துடிப்பும் கொண்டு அவளை வரவேற்பேன். அவள் தொழுவாள். நான் தழுவிக் கொள்வேன், "தேவா" என்று அடிமூச்சுக் குரலாலே என்னை அழைப்பாள். அணைப்பைத் தளர்த்தாமல் "அன்பே" என்று நான் கூறுவேன். இதழ்கள் பிறகு இணைபிரியா, சில நிமிடங்கள்! இந்த இன்பம், பல நாள், பல வாரம், பல மாதம், அவள் "தாய்" ஆகும் நிலை பெறும்வரை! திருக்கோயிலிலே, தேவ பூசாரியின் திருவருளால், நடந்த திருவிளையாடல், இந்த அளவு வரை சென்றது. 'பகவத் பிரசாதத்தைத் தாங்கும் புண்ணியம் பெற்றேன்' என்று பூரித்தாள் அந்தப் பூவை. தேவன் என்ற பாவனையையும் மறந்து தந்தை என்ற நிலையிலே, "ஊர் அறிந்தால்?" என்று கேட்டேன் மருதத்தை. கள்ளமற்ற அவள் மெள்ளச் சொன்னாள், "தேவா! உமது லீலா விநோதத்தை நான் என்ன கண்டேன்? தங்கள் சித்தம்போல் நான் நடப்பேன்" எனக்கு, தேவப் போர்வையை கழற்றி எறிந்துவிட எண்ணம் பிறந்து, "மருதம்! என் கண்ணே! உன்னை நான் ஏமாற்றி விட்டேன்" என்று துவக்கினேன். உண்மையைக் கூறிட, ஆரியனின் புனைந்துரையை நம்பிய அவளோ, புன்னகையுடன், "என்னை ஏமாற்றுவது உமது திருவிளையாடலிலே ஒன்று போலும்!" என்று கூறி முத்தமிட்டாள். என் சித்தம் தடுமாறிற்று. பொன் விலங்கு எனக்கும் அவளுக்கும்! அதன் திறவுகோல், அந்தப் பூசாரியிடம். சாலையிலும் சோலையிலும், சிற்சில சமயங்களில் அரண்மனையிலும் யாருங்காணாத சமயத்திலே நாங்கள் சரசமாடினோம். என் சுமையை இறக்கச் சமயம் மட்டும் கிடைக்கவில்லை. நான் தேவனாகவே இருந்தேன்— திருக்கோவிலிலேயே, என் மகள் பிறந்தாள்—பாகீரதியின் மாலையை உதிர்த்து, தூவினான் ஆரியன்.

"தங்கள் வரப்பிரசாதம்" என்று குழைந்து கூறினாள் மருதம். தலைகுனிந்து நின்றேன் ஒரு விநாடி. பிறகு அந்தக் குழந்தையைக் கண்டேன். வாரி அணைத்தேன். முத்தமிட்டேன். கண்களில் நீர் கசிந்திட நின்றேன். பாவனையையும், பாசாங்கையும் வென்றேன். கபடத்தைக் கொன்றேன், திடமனத்துடன். மருதம்! நமது குழந்தை மீது ஆணையிட்டு இதைக் கூறுகிறேன். என்னை நம்பு. நான் தேவனுமல்ல, ஜோதியுமல்ல; உன்போல் மானிடப் பிறவிதான். நான் கலிங்க நாடு; தொழில், போர் புரிவது; நான் இந்தப் பக்கம் வந்தபோது, ஆரியன் என்னை தேவசொரூபம் என்றுரைத்து உனக்குத் தந்தான். நீ எனக்கு உல்லாசந் தந்தாய்! அதன் விளைவு, இதோ விளையாடுகிறது. இனி இந்த மானிடனை நீ ஏற்றுக் கொள்வதும், தள்ளுவதும் உன் இஷ்டம். இனி இந்தத் தேவ பாவனையை நான் தாங்கேன்" என்று கூறினேன். என் தேவ கிரீடத்தை வீசி எறிந்தேன்; மலர் மாலைகளைப் பிய்த்து எறிந்தேன். அணிகளைக் கழற்றி வீசினேன். அவள், "தேவா! தேவா!" என்று கூறித் தேம்பினாள்! நான் மயக்கமுற்றேன். பிறகு என்ன நடந்ததென்பது எனக்குத் தெரியாது. பல நாட்களுக்குப் பிறகு, நான் கலிங்கத்தில் என் வீட்டிலே காய்ச்சலுடன் இருக்கக் கண்டேன். யாரோ பல்லக்கில் கொண்டு வந்து என்னை விட்டுப் போயினர் என்று கூறினர். மீண்டும் மலர்புரி போகத் துணிவு பிறக்கவில்லை. சேதியை வெளியே சொல்லவும் பயமாக இருந்தது! கவலையைப் போக்க, கட்கமெடுத்து, கங்கைக்கு மேலேயும், காமரூப நாட்டிலுமாக பத்து ஆண்டுகள் திரிந்தேன். மருதம் என்ன ஆனாள், குழந்தை என்ன ஆயிற்று, கோயில் பூசாரி என்ன ஆனான், என்று கொந்தளிப்பு உண்டாகவே, மாறுவேடம் புனைந்து மலர்புரி சென்று பாகீரதி கோயிலில் தங்கினேன். வந்தான் பூசாரி. சற்று வயோதிகனாகக் காணப்பட்டான்; அவனை விசாரித்தேன். ஆரியன் ஆயாசப் படாது பேசினான். "ஆம்! பத்து ஆண்டுகள் பறந்து விட்டன! பாலப்பருவம் மாறிவிட்டது. மருதத்தின் பக்தி சிரத்தையும் குறைந்துவிட்டது. அவள் இன்னமும் உன்னை தேவனென்றே கருதுகிறாள்! திருவிளையாடல் தீர்ந்துவிட்டது. தேவன் மறைந்தான் என்று தினமும் கூறுகிறாள். அன்று நீ பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டாய். உனக்கு காய்ச்சலை வருவித்து, அவள் கண்படாமல் மறைத்துக் கலிங்கத்துக்கு அனுப்பினேன். காலை, நீ மீண்டும் இங்கு வந்தால் என் செய்வதென்று கலங்கினேன். வந்தால் வாளுக்குத்தான் பாவம், இரையாகி இருப்பாய். நீ புத்திசாலித்தனமாக பத்தாண்டுகளாக இப்பக்கமே தலை காட்டவில்லை" என்று பேசினான். என் மனம் கொதித்தது! எவ்வளவு துணிவு இவனுக்கு என்று கோபம் பிறந்தது; என் செய்வது? "ஆரியரே! நான் மருதத்தை மீண்டும்....." என்று கேட்டேன். "முடியாது! முடியாது! அந்தப் படலம் முடிந்து விட்டது" என்று தீர்மானமாகக் கூறிவிட்டான் தீயன். "என் குழந்தை எங்கே?" என்று கேட்டேன். அவன் புன்னகையுடன், 'தேவப் பிறவி, தேவரடியாளாக இருக்கிறாள்!' என்று திமிராகப் பேசினான். "எங்கே இருக்கிறது குழந்தை" என்று கெஞ்சினேன். "தெரியும்! கூறமுடியாது. அவள் வாழ்கிறாள். வசீகரமிக்க வனிதையாவாள். உனக்கேன் கவலை! மருதம் உன் சொப்பனத்திலே கண்ட சுந்தரி என்று எண்ணிக்கொள். குழந்தையும் கனவிலே ஓர் கனி! மீண்டும் அவர்களுக்கும் உனக்கும் தொடர்பு இல்லை—ஏற்படாது—ஏற்படுத்த முடியாது" என்று கூறிவிட்டான். மலர்புரியில் அந்தச் சமயம் அவனுக்கு இருந்த அதிகாரம், அரசிக்கே அவன் விரும்பினால் ஆபத்தைக் தரக்கூடியதாம்! எனவே நான் அவனை எதிர்க்க அஞ்சி, "ஆரியரே, எனக்குக் குழந்தை மீதே கவனமாக இருக்கிறது" என்று மீண்டும் கெஞ்சினேன். ஆரியன் ஓர் நீலமணியை என்னிடம் தந்து, "இது, உன் பெண்ணின் காதிலே தொங்கிய அணி. இதை ஞாபகப் பொருளாக வைத்துக் கொள். அவள் சுகமாக இருக்கிறாள். நீ உடனே ஊரைவிட்டுச் செல்" என்று கட்டளையிட்டான்.

"சோழ வீரனே, இதோ பார்! என் கழுத்தில் தங்கச் சங்கிலியில் கோர்த்துக் கட்டப்பட்டுள்ளது இந்த நீலமணி. இதுதான் என் கண்மணியை எனக்குக் கவனமூட்டுகிறது. இந்த நீலமணியைக் காதிலே அணிந்திருந்த பெண்ணைத் தான் நீ தேடிக்கண்டுபிடிக்க வேண்டும்" என்று கூறி, கலிங்க வீரன் தன் கதையை முடித்தான். நீலமணியைக் கையிலே எடுத்ததும், வீரமணிக்கு, கலிங்கக் கிழவன் கூறியது மறந்து விட்டது. "இந்த நீலமணி, நமது நடனத்தின் செவியிலே இருப்பின், மிகமிக சிங்காரமாக இருக்குமே" என்ற நினைப்பு தோன்றிற்று.