கலிங்க ராணி/கலிங்க ராணி 13


13



வெற்றி 'ஊர்வலமும், விழாவும், கொண்டாட்டமும் களிப்புமாக' காஞ்சியிலும், தலைநகரிலும் குதூகலமாக இருந்தன. "கலிங்க மன்னன் கர்வப்பட்டுக் குதித்தான்; பிடரியில் கால்பட ஓடினான்' என்று கேலி செய்வோரும், 'சோழ சூரர்கள் சூறாவளிபோல் கிளம்பிய பின்னர்க் கலிங்கக் கூளம் நிற்குமோ?' என்று நையாண்டி செய்பவரும், "தொண்டைமானின் தீரத்திற்குக் கலிங்கத்தார் துவளாது என் செய்வார்" என்று ஏளனம் செய்வோருமாக மக்கள் மகிழ்ந்தனர். மகனின் புகழ்கேட்டு முதுமையை மறந்து கூத்தாடும் தாயும், 'என் மகனின் நெஞ்சம் எஃகு; ஏறு போலும் நடையுடையான்' என்று பெருமையுடன் கூறிப் "புலியின் வயிற்றிலே பூனையா பிறக்கும்?" என்றெண்ணிப் பூரிக்கும் தந்தையும், களத்திலே கீர்த்திபெற காதலனைக் கட்டித்தழுவி முத்தமிட உடலும் உள்ளமும் ஊறலெடுக்க, ஓடி ஆடி மகிழ்ந்திருந்த மங்கையரும், 'போர் முடிந்தது! பகைவன் தோற்றோடினான்! வீரர்கள் வீடு திரும்புகின்றனர்!' என்று ஆனந்த கீதம் பாடியும், நடனமாடியும் கழித்தனர். "உன் அப்பா வருகிறாரடா குழந்தாய்! வந்ததும் கேள், 'என்னை விட்டு இத்தனை நாள் எங்கே போயிருந்தாய்?" என்று; பேசமாட்டேன் போ என்று சொல்லு என்று மகனுக்குத் தலைசீவிப், பூச்சூட்டிப் பொன்னணி பூட்டிப் பரிமள நீர் தெளித்து, முத்தமிட்டுக் கட்டித் தழுவிக் கொஞ்சினர் குமரிகள். "களத்திலே, இரத்தத்தைக் கண்டு, பிணத்தைத் துவைத்து, ஊண் உறக்கமிழந்தவர் வருகிறார். இனி அவருடைய மன மகிழ்ச்சிக்கு என்னென்ன செய்வது? ஆமாம்; அந்தப் பச்சை நிறச் சேலையைத்தான் கட்டிக் கொள்ள வேண்டும். அன்றோர் நாள் அதைக் கட்டிக் கொண்டிருக்கும் போதுதானே, 'சோலையிலே உலவும் கோலமயிலே!' என்று என்னிடம் கொஞ்சி...உம்! என்னென்னமோ செய்தார்! இன்று அந்தச் சேலையைத்தான் அணிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் கதை சொல்லுவார் அவர். அவர் எவ்வளவு மெலிந்திருக்கிறாரோ? எத்தனை காயங்களோ உடலில்? என்ன நிலையோ? எப்போது வருவாரோ? என்னைக் கண்டதும் சிரித்துச் சல்லாபிப்பாரோ! அலுத்து மௌனமாவாரோ?" என்று ஏதேதோ எண்ணி ஏந்திழையார்கள் மேகத்தைக் கண்ட மயில் ஆடுவதுபோலக் கதிரோனைக் கண்டு மலரும் தாமரைபோல ஆடை அணி புனைந்து, மாடங்களில் உலவினர்.

களத்திலே கணவர் இறந்த செய்தி கேட்டுச் சித்தம் சோர்ந்திருந்த சேயிழையார்கள், விழா நடப்பதுகண்டு விம்மினர்; மறைந்த மணியை நினைத்து அழுதனர். உண்ணவும் மனமின்றிச் சுருண்டு கிடந்தனர். மனோஹரமான மாளிகை நெடுநாட்கள் பூட்டப்பட்டு, கலனாகிப், புழுதி படிந்து கிடக்கும் கோலம்போல, அம்மாதர், திலகமின்றித், திருவிழிகளில் ஒளியின்றி, மேனியில் பளபளப்பின்றி, ஆடை திருத்தமின்றி, சீவாது, சிரிக்கமுடியாது, சிவந்த கண்களுடன், சோக பிம்பங்களாகிக் கிடந்தனர். போர் என்ற சொல்லைக் கேட்டதும் புண்பட்ட மனம் கொப்பளித்தது. "நாட்டின் நலன், மன்னனின் கீர்த்தி, இவைகளுக்காக வாழ்ந்தவருக்கா இக்கதி! கூரான வாளோ, வேலோ அவர் மார்பிலே பாய்ந்தபோது எப்படி அலறினாரோ? என்ன துடித்தாரோ? என்ன எண்ணி அழுதாரோ? என்ன கோரம்? எவ்வளவு கொடுமை? ஏன் சண்டை எனும் ஓர் சுழல், வாழ்க்கைப் பூங்காவை பாழாக்குகிறது? மலர் வனத்திலே ஏன் இக்கள்ளி?" என்று கூறிக் கதறினர். நிலவிலே கறைபோல் மகிழ்ச்சியிலே மூழ்கிய சோழ மண்டலத்திலே, இக்காட்சியும் இருக்கத்தான் செய்தது. போர் விளையாட்டா!

நடனராணியின் நிலையோ, விசித்திரமான வேதனை! காதலன் களத்திலே காட்டிய தீரத்தை, அவனது போர்த்திறன் கண்டு பகைவர்கள் மருண்டோடியதை, அவனது அஞ்சாத செயலைக் கூறிப் பின்னர், 'அத்தகைய வீரன் அயர்வறியாத வீரன், சோழ மண்டலச் சூரன், கடைசியில் கலிங்க நாட்டானிடம் கைக்கூலி பெற்றான், மன்னனைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தான், துரோகியானான். தொண்டைமான் அவனை நாட்டைவிட்டே துரத்திவிட்டார்' என்று கூறக்கேட்ட நடனராணி, மூர்ச்சித்துக் கீழே சாய்ந்து, "என் காதலனா துரோகி! நன்னெறியன்றி வேறறியா வீரனா துரோகி! சோழநாட்டுக்காக தன் உயிரையும் தரும் தூய்மையான உள்ளம் படைத்த உத்தமனா துரோகி! நான் நம்பேன்! என் அருமைக் காதலனை நானறிவேன் நன்கு. அவருக்குக் குள்ளநரிச் செயல் தெரியாது. குலப் பெருமைக்கே குவலயத்தில் வாழ்கிறோம் என்றே கூறும் கண்ணியரல்லவோ? நாட்டைக் காட்டிக் கொடுக்கவா களம் புகுந்தார்! கடும்போர் புரிந்தார்! எதிரிகளைக் கண்டதுண்டமாக்கினார்! இல்லை! இல்லை! இதில் ஏதோ சூது இருக்கும்; என் சுந்தரரூபன் மீது யாரோ சதி செய்திருக்கின்றனர்" என்று அழுது கூறினாள். அம்மங்கையோ திகைத்தாள்; தலை அசைத்தாள்; தேம்பும் நடனாவைக் கண்டாள்; என்ன செய்வதென்றறியாது விழித்தாள். நடனா அம்மங்கையின் அடியினைப் பற்றிக் கொண்டு, நீர் பெருகும் நேத்திரங்களால், அவளை நோக்கி, "தேவி! உமக்கே தெரியும். இந்த உயிரை நான் எவர்பொருட்டு வளர்த்து வருகிறேன் என்று. அவரைப் பிரிந்து நான் வாழ்வேனா? அவர் மதிப்புக்கு பங்கம் வந்தபிறகு, எனக்குத் தங்கக் கோட்டை கிடைப்பினும் சகிப்பேனா? அவரையும் என்னையும் அரசனின் ஆக்கினை பிரிக்கிறது; மலரையும் மணத்தையும் வேறாக்குவதோ? கண்ணிலிருந்து ஒளியை நீக்கிடுவதோ? என் மணாளரை இழந்திட நான் சம்மதியேன். அவர் ஒரு குற்றமும் செய்திருக்க முடியாது; செய்யும் வகையுமறியார். செந்தமிழ் நாட்டுச் சிங்கம், சூது வாது அறியாதார், அவரை மீட்டுத்தர வேண்டுகிறேன். என் உயிரை எனக்குத் தானம் தரக் கோருகிறேன். நாடெங்கும் விழா நடக்கிறது; வீதிகளிலே பூச்சூடி மங்களம்பாடிக் காதலரைத்தேடிக் காரிகையர் நடமாடுகின்றனர். பூங்காவிலே, மரநிழலிலே, களத்திலே தான் காட்டிய வீரத்தைக் கூறி, காதலியின் கன்னத்தைக் கீறி, நெஞ்சிலே காதல் ஊறிட உரையாடி, உல்லாசமாகப் பல்லாயிரவர் இருக்க, வீரத்திலே எவருக்கும் இளைக்காத என் வேந்தர், வேற்றூரிலோ, காட்டிலோ, மேட்டிலோ, கடும் குளிரிலோ, சுடும் வெயிலிலோ, நாடோடியாகச் சுற்றவும் நான் இங்குக் கதறவுமான நிலைவரவா கலிங்கப்போர் மூண்டது! கலிங்கப்போர், வீரர் பலரின் உயிரைக் குடித்ததோடு திருப்தியடையக் கூடாதா! போரின் பசி தீரவில்லையா! என் மனதை புண்ணாக்கி, என்னைச் சித்திரவதை செய்யவும் வேண்டுமா! என்னைப் பாரும் அம்மையே! என் வாழ்வு என்ன கதியாவது! சோழ மண்டலத்திலிருந்து துரத்தப்பட்ட பிறகு, தமிழனை, மற்ற இரு மற வேந்தரும் மதிப்பரோ? இடந் தருவரோ? என் மன்னனின் வாழ்வு இது போலவா ஆக வேண்டும்?" என்று கூறினாள்.

அம்மங்கை ஏதும் கூறாதவளாய், அரசனைக் கண்டு பேசுவோம் என்று எண்ணிக் கொண்டு, நடனராணியைத் தேற்றும்படி தோழியருக்குக் கூறிவிட்டுத் தனது அந்தப்புரம் சென்று சோகத்துடன், தன் அறைக்குள் நுழைந்தாள். திடுக்கிட்டாள். ஏனெனில். அங்கு, ஆரிய மாது கங்காபாலா புன்னகையுடன் நிற்கக் கண்டாள். புருவத்தை நெறித்தபடி, "புன்னகைக்காரி! ஏது இங்கு வந்தது?" என்று பாலாவை அம்மங்கை கேட்டிட, கங்கா பாலா, "தேவி! இன்றாவது உமது கண்கள் திறந்திருக்கும். கபட நாடகத்தைக் கண்டு கொண்டிருப்பீர்கள் என்றுதான் வந்தேன்" என்று கூறினாள். "கபடமும்; நாடகமும்! மீண்டும் உளறல்" என்றாள் அம்மங்கை மஞ்சத்தின்மீது படுத்துக் கொண்டு. கங்காபாலா விசிறிக் கொண்டு, உபசாரத்துக்கு வீசிக்கொண்டே "என் கன்னத்தில் அறைந்தீரே! களத்திலே நடந்தது கேட்ட பிறகு தெரிந்ததா உண்மை? கபடவேடக்காரனின் கதை வெட்ட வெளிச்சமாகிவிட்டது பார்த்தீர்களா? ஊர்கொதிக்கிறது தாயே! கலிங்கனுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்தவனைக் கழுகுக்கு இரையாக்க வேண்டியதை விட்டுக் கருணாகரர் சாதாரண தண்டனை தந்தாரே என்று மக்கள் கோபிக்கின்றனர் அம்மே! அதுமட்டுமல்ல! நடனாவின் மீதும் மக்களின் கோபம் திரும்பி இருக்கிறது. பாபம், அவள் சூதுவாதறியாத சுந்தரி! கொஞ்சம் பேராசை! சலபபுத்தி அவனிடம் மயங்கினாள்; அவனை அவள் ஒரு சாதாரண போர் வீரன் என்றே நினைப்பதில்லை. புவியாளப் பிறந்தவன் என்றே கருதி வந்தாள். அவன் அப்படிச் செய்து வைத்தான்" என்று மெள்ள மெள்ள விஷவாடையை வீசினாள். "மன்னன், என் வேந்தன்" என்று நடனா அவனைக் கூறினாள்.

"காதல் மயக்கமாகத்தான் இருக்குமென்று நினைத்தேன்," என்று அம்மங்கை கூறிட, அதுதான் சமயம் எனக் கண்டு, கங்காபாலா, "காதல் மயக்கமல்ல, கிரீடத்தின் மீது கொண்ட மோக மயக்கம் அம்மணி! வீரமணி வேந்தன்; நடனராணி அவனுக்கு ராணி! இதுவே அவர்களின் அந்தரங்கத் திட்டம். அன்று குகையிலே நடந்த சதி வெறும் பொக்கிஷத்துக்கு என்றா எண்ணுகிறீர்கள்? தூ! வீரமணி பணத்துக்காகவல்ல, அந்தப் பாதகம் செய்யத் துணிந்தது; முடிதரிக்கவே சதி செய்தான்" என்றாள் கங்காபாலா.

"போடி, பொல்லாங்குக்காரி" என்று அம்மங்கை கங்காபாலாவைத் திட்டினாளே யொழிய மனதிலே, "இருக்குமோ! நடந்திருந்தால்தான் நாம் என்ன கண்டோம்! வீரமணி மீது கருணாகரர் வீணாகவா தமது அதிகாரத்தைச் செலுத்தியிருப்பார்? இருக்கும்; அரண்மனைகளிலே இது நடப்பதுதானே. வீரமணிக்கு இந்த விபரீத புத்தி இருந்திருக்கக்கூடும். யார் கண்டார்கள்? பாம்பு என்ன பார்வைக்குக் கேவலமாகவா இருக்கிறது! சிறுத்தைதான் என்ன! சிரித்துக் குலுங்கி நடக்கும் சிங்காரியின் மேலாடை போன்ற போர்வையில்தான் இருக்கிறது. வீரமணியின் வெளித்தோற்றந்தானே, நடனாவுக்குத் தெரியும்? அவன் துரோகிதான். நாட்டுக்கு, நமக்கு, நடனாவுக்கு, தமிழகத்துக்கே துரோகிதான். சந்தேகமில்லை" என்று முடிவு செய்துகொண்டாள்.

ஒரு படி மேலேறிவிட்டோம் என்றுணர்ந்த கங்காபாலா, "தேவி! ஊரிலே கூடிக்கூடி பேசிக்கொள்கிறார்கள். அந்தத் துரோகியின் துணையாக இருந்து வந்தவளையும் நாட்டைவிட்டுத் துரத்த வேண்டுமென்று" என்று ஆரம்பித்தாள். அம்மங்கை சீறி எழுந்து, "சீ! இதென்னடி கொடுமை! அவன் துரோகம் செய்தால், அவள் என்ன செய்வாள்? அவனைத் தண்டித்தது முறை; அரசநீதி. அவள் என்ன குற்றம் செய்தாள்? அதை நான் ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன். அவள் என் சேடி; தோழி. அந்தக் கொடியிடையாளின் கண்களிரண்டும் குளமாகிவிட்டன; பாவம்! அவளது அழுகுரலைக் கேட்கச் சகியாமலே நான் இங்கு வந்துவிட்டேன். அவள் மீது கரம் வைக்க எவர் துணிவர்? கண்டதும் பரிதாபம் கொள்வர். மக்கள் ஏதோ மருண்டு ஆத்திரத்திலே பேசுகின்றனர்" என்றாள்.

"மக்களின் ஆத்திரம், மணிமுடிகளைக்கூட அகற்றியிருக்கிறதே தேவி!" என்று கங்கா கிளறினாள்.

"சதிபுரியும் கூட்டமல்லடி தமிழர்" என்றாள் அம்மங்கை.

"நானறியேன் அம்மையே! எமது நாட்டிலே மக்களுக்கு அடங்கியே மன்னர்கள் வாழ்வர்" என்றாள் கங்கா. "சாது போல், உன் நாடு! அது எது? ஓ! உன் மூதாதையர், முதன் முதல் சஞ்சரித்ததற்கு நாடு என்று பொருளா? எனக்குத் தெரியும் அந்நாட்டின் நிலை. ஆச்சரியமான பழக்க வழக்கங்கள். ஏனடி கங்கா! அவரில்லாவிட்டால் என்ன, அவர் கால் ஜோடி ஆளட்டும் என்று கூறின மக்கள், அயோத்தி நாட்டினர்தானே?" என்று கேட்டுவிட்டு, கைகொட்டி நகைத்தாள் அரசகுமாரி. கோபத்தை அடக்கிக் கொண்ட கங்காபாலா, "அது தேவ கதையன்றோ?" என்று விடை கூறினாள்.

"உங்கள் தேவ கதை கிடக்கட்டும்; நீ போய் தேம்பிக் கிடக்கும் நடனாவுக்குத் தேறுதல் கூறு, போ" என்று கூறிக் கங்காவை அனுப்பிவிட்டுக் கவலையுடன், மஞ்சத்திலே மன்னனின் மகள் படுத்துக் கிடந்தாள்.