கலிங்க ராணி/கலிங்க ராணி 14


14


வீரமணி, நடனாவை எண்ணி ஏங்கினான். அவள் மனம் என்னபாடு படுமோ என்று நினைத்து நொந்தான். கலிங்கத்தின் காட்டிலும் மேட்டிலும் சுற்றினான். பணிந்த கலிங்கரும் தன்னைக் கண்டால், கொடுமை புரிவர் என்பது அவனுக்குத் தெரியும். எனவே, ஒருவர் கண்ணிலும் படாமல் ஒளிந்து வாழலாயினான். வேடர்களுடன் வேடனானான். கல்வெட்டுவோருடன் கலந்தால் கல் வெட்டுவான். மண், சுமப்போருடன் சேர்ந்தால், மண் சுமப்பான். உலவினான், என்ன செய்வதென்று தெரியாமல். நடனாவுக்கு அரண்மனையிலே அபாரமான செல்வாக்கு இருப்பதால், எப்படியாவது அரசகுமாரி மூலமாக மன்னனின் மனத்தை மாற்றி, தன்னை மீட்பாள் என்று கருதினான். எவ்வளவு தான் வெளிப்படையாக, குகையிலே நடந்த விஷயத்தைக் கூறினாலும், மன்னன் நம்பமாட்டானே என்று பயந்தான். மேலும், விஷயமோ, ஓர் ராணியுடைய வாழ்வைப் பாதிக்கக் கூடியது. ஒரு நீலமணிதான் இருந்த ஆதாரம்! அது ஒளிவிட்டதேயொழியப் பேசுமா? யார் சொல்வார்கள் தனது தூய்மையைப் பற்றி என்று எண்ணி மனம் புண்ணானான். நடனாவின் இன்பக் கனவைக் கெடுத்தேன்; மன்னனின் மகிழ்ச்சியைக் குலைத்தேன்; வீரர்கள் கூட்டத்திற்கோர் கேலிக் கூத்தானேன் என்று நினைத்தான். இங்கு வீரமணி இவ்விதமிருக்க, நடனாவோ, நறுமலர்த் தோட்டத்திலே உலவினாள்; மலர் பறித்தாள். மானெனத் துள்ளி விளையாடினாள்; மடியிலே தலையைச் சாய்த்துக் கொண்டு மதுரமான மொழி பேசும் மணாளனின் நெற்றியைத் தடவினாள். இந்த இன்ப விளையாட்டிலே இருந்தவள் திடீரென அந்தகாரம் கண்டாள். 'ஐயோ' என்று அலறினாள்; 'பாம்பு' என்று பதைத்தாள்; 'பாரேன் உன் முகத்தை' என்று கடிந்துரைத்தாள்; 'காலிலே முள் தைத்ததே' என்று கதறினாள்; காடு மலை வனம் சுற்றினாள்; 'கழுகு கொத்துகிறதே' என்று கூறினாள்; 'கலிங்கம் அழியட்டும்' என்றும், 'காதலரே வருக' என்றும். 'மணாளனே எனக்கு மன்னன்' என்றும் உளறினாள். இவ்வளவும் படுக்கையில் ஜுர வேகத்தில்; மயக்கத்தில்!!

அரசிளங்குமரியின் சொற்படி சென்ற கங்காபாலா, நடனா மயக்கமுற்றுக் கீழே சாய்ந்திருக்கக் கண்டாள். அன்று முதல் பத்து நாட்கள் வரை நடனாவுக்கு மயக்கமும் ஜுரமும் அடக்க முடியாத அளவு ஏற்பட்டது. அந்த மயக்கத்திலே தான் நடனா, தனது காதல் விளையாட்டைப் பற்றி எண்ணியும், தனக்கு வந்த கஷ்டத்தை எண்ணிக் கலங்கியும், ஜுர வேகத்தால் உளறியும், தனது படுக்கையில் புரண்டு கிடந்தாள். அரண்மனை வைத்தியர் அற்புதானந்தர், தமது மற்ற அலுவல்களை மறந்து, நடனாவுக்கு அருமையான மூலிகைகளால் முறைப்படி செய்த மருந்து வகைகளை அன்புடன் கொடுத்து, "எப்படியும் அவளை உயிர்ப்பிப்பேன்; நான் கைபிடித்த பிறகு, மரணம் அவளை அணுகுமா?" என்று சூள் உரைத்து, இரவு பகல் தூங்காது, நடனாவுக்கு அருகே அமர்ந்திருந்து, உபசாரம் செய்யலானார். அடிக்கடி அரசிளங்குமரியும் நடனாவைப் பார்த்துவிட்டுப் போவாள். "வைத்தியரே, மிக்க ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டும். கலை, இளமை, அழகு, தூய்மை யாவும் உம்முடைய மருந்தினால் தான் பிழைக்க வேண்டும்" என்று கூறுவாள். வைத்தியர் இளித்துக்கொண்டே, "அரசகுமாரி! அடியேனுடைய திறமையை அறியாதார் சொற்பம், ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால், அருந்தமிழர் கற்ற அரிய முறைகளை நான் அறிவேன்; மூலிகைகளின் இடமும் இயல்பும் தெரிந்தவன்; நோய் மூலங் கண்டறிவேன்; நொடியிலே தீர்ப்பேன்; எப்படியும் நடனாவுக்கு, மனம் குழம்பி இருக்கிறது; மயக்கம் மேலிட்டுக் கிடக்கிறது, பயத்தினால் பாவை பதறியிருக்கிறாள். ஆகவே ஜுரம் - இது இப்போது குறைந்துவிடும்" என்று கூறி, நடனாவின் நெற்றியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே "கொஞ்சம் இருக்கிறது; போய்விடும் நோய்" என்று கூறுவார். அந்த நேரத்தில் மட்டும் வேறோர் வைத்தியர், அற்புதானந்தரின் நாடியை பிடித்துப் பார்த்தாலன்றோ தெரியும், காம நாடி கடுவேகமாக அவருக்கு அடித்து கொண்டிருப்பது! நடனாவின் நோய் குறையக் குறைய வைத்தியரின் நோய் வளர்ந்துகொண்டே இருந்தது. அவ்வளவு வசீகரமான மங்கையின் அருகேயிருந்து, உபசாரம் செய்தவரல்லவா வைத்தியர்! அதுவரையில் மணமாகாதவர்; மன்னரின் ஆதரவு பெற்றவர். மயக்கமுற்ற நடனாவுக்கு மருந்து தர வரவழைக்கப்பட்டார்; அவளழகைக் கண்டு மயங்கினார்; அவள் மயக்கத்தை போக்க மலையுச்சியிலிருந்து மூலிகைகள் எடுத்துவரச் செய்தார். ஆனால், பாபம்; அவருடைய மனமயக்கத்தைப் போக்கும் மூலிகை, அருகேதான் இருந்தது; எதிரே-மஞ்சத்தில்!

பத்து நாட்களுக்குப் பிறகு நடனராணிக்கு நோய் குறைந்தது; மயக்கம் தீர்ந்தது. ஜுரம் நின்றது; வைத்தியர் பூரித்தார். அரசகுமாரி ஆனந்தம் கொண்டாள்; 'நோய் போனாலும், படுக்கையிலேயே இருக்க வேண்டும்; பாலும் பழரசமும், தேனும் உணவாக இரண்டோர் மாதமிருக்க வேண்டும்; தேகத்திலே ஏற்பட்டுள்ள திடீர் அதிர்ச்சிபோக ஓய்வு வேண்டும்; மூன்று வேளைச் சூரணம் முறைப்படி சாப்பிட்டாக வேண்டும்; நான் கூடவே இருந்து, உபசாரம் செய்து, குறியறிந்து குணம் செய்ய வேண்டும்" என்று குழைந்து கூறினார் வைத்தியர். அவருக்கு, அவளருகே இருக்க, அவளுக்கு உபசாரம் செய்ய, நாடி பார்க்க, நெற்றியிலே அரும்பும் வியர்வையைத் துடைக்க, அவள் அயர்ந்து தூங்கும்போது பக்கத்திலே உட்கார்ந்துகொண்டு அவளழகைக் கண்டு பெருமூச்செறிய, இரண்டோர் மாதங்களல்ல, இரண்டோர் ஆண்டுகள் சந்தர்ப்பம் கிடைத்தாலும் சலிக்காது! அவ்வளவு இன்பமளித்தது, அவளருகே இருப்பது! ஆகவே, அவர் அரசகுமாரியிடம் கூறி, அந்தப்புரத்திலே, தனி ஜாகையிலே நடனராணி தங்கி இருந்திட வேண்டும்; பலரும் வந்து பேசிடுதல் கூடாது; தன் பார்வையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். தனிமையில் இருந்தால் வீரனை எண்ணி விம்முவாள்; உடனே ஓடிப்போன காய்ச்சல் வந்தேனென்று கூறும்; பலரும் பேசினாலோ பதைத்துப் பேசுவாள்; உடல் உரம் கெடும். எனவே, அவளை இங்கேயே தனிமையாக இருக்கச் செய்ய வேண்டும், என் சிகிச்சை முறைப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்பாடு செய்து கொண்டார். ஒரு பெரிய கோட்டையை முற்றுகையிடும் படைபோல, வைத்தியர் நடனாவை முற்றுகையிடுகிறார்; மோப்பம் பிடிக்கிறார் என்பதை அரசகுமாரி அறிந்து கொள்ளவில்லை. அவரது வைத்தியத் திறமையைப் பலரும் வியந்தனரேயன்றி அவரது வயோதிகம் திடீரென்று வாலிப உணர்ச்சி பெற்று விட்டதை அவர்கள் அறியவில்லை.

நடனாவுக்கோ, வைத்தியரின் விபரீத யோசனை தெரியாது. நோய் குறையக் குறைய, அவளுக்கு எப்படி அரண்மனையை விட்டு வெளியே போவது? எங்கெங்கு சுற்றினால் வீரமணி கிடைப்பார் என்ற எண்ணமே மேலிட்டது. யாரும் தனக்கு உதவி செய்யமாட்டார்கள் என்பதையும் அவள் தெரிந்து கொண்டாள். 'வீரமணி போனாலென்ன! சோழ மண்டலம் ஆண் ஏறுகள் இல்லாத இடமா!' என்று கூறுவரேயொழிய, தன் மனநிலையைத் தெரிந்து நடக்கும் தோழியர் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டாள். நன்றாக எழுந்து நடமாடும் சக்தி பெற்றதும், கள்ளத்தனமாக ஓடிவிட வேண்டியதுதான் என்ற தீர்மானத்துக்கு வந்தாள். அதைப் பற்றி நினைக்கவும், வெளியே போய் இதைச் செய்யலாம், அதைச் செய்யலாம் என்று யோசனைகள் செய்யவும், நடனாவுக்கு நேரமிருந்ததே யொழிய, வைத்தியரின் நிலைமையைத் தெரிந்து கொள்ள நேரமில்லை.

வைத்தியர், வெளியே போய்வரும் வழக்கத்தைக்கூட விட்டுவிட்டார். தோட்டத்துக்குச் செல்வார், மலர் தேடி நடனாவிற்குத் தர! அந்தப்புரச் சமையற்கூடம் போவார்; பழம் பால் தேன் கொண்டுவர, நடனாவுக்காகவே! மற்ற நேரத்திலே, அவள் மஞ்சத்திலே, இவர் பக்கத்தில்; ஓர் ஆசனத்தில் இந்த நித்திய விருந்து அவருக்கு. எவ்வளவோ ருசி தந்தது. ஆனால், கனியைக் கண்டால் பறித்துத் தின்ன வேண்டுமென்ற நினைப்பு அதிகரிக்க அதிகரிக்க, வேலி முள் பாராது; தோட்டக் காவலாளி வருவானோ என்ற பயத்தையும் கவனியாது; பறிக்கத் தூண்டுமல்லவா? எவ்வளவு நாட்கள்தான் அவர் "தவங்" கிடப்பார். கடைசியில் வரங் கேட்டே தீருவது என்ற முடிவுக்கு வந்தார். "வீரமணியை மறந்துவிட வேண்டும்; வாழ்க்கைக்கு அவன் சரியான வழிகாட்டியல்ல" என்று துவக்கினார். அவளுடைய சலிப்பும் சங்கடமும் அவருக்கு என்ன தெரியும்! மேலும் மேலும், மனநிலையை வெளியிட்டார். நடனா மிரண்டாள்! இது ஓர் புது விபத்து; இதினின்றும் எப்படித் தப்புவேன் என்று திகைத்தாள். நிதானமாகவும், தன் உறுதியைக் காட்டும் விதத்திலும், வைத்தியருக்குக் கூறினாள், முடியாது என்பதை. வீரமணியிடம் கட்டுண்டு கிடக்கும் அந்தக் கொடியிடையாள், வைத்தியரின் வாக்குச் சாதுர்யம் வென்றாலும் வென்று விடும் என்று எண்ணித் தனது வேலையை மும்முரமாகச் செய்துவந்தார். ஓர் நாள் விவகாரம் முற்றிவிட்டது. வைத்தியரின் குரலிலே வேதனை பிறந்தது. நடனாவுக்கு நடுக்கம் ஏற்பட்டது. வைத்தியர் சிறு குழந்தைக்குப் பெரியவர்கள் புத்திமதி கூறும் பாவனையிலே பேசினார்.

"அவன் ஒரு கொலைகாரன்; நான் இரட்சகன்! அவன் இரத்தம் குடிப்பவன்; நான் ஆபத்பாந்தவன். அவனால் எத்தனையோ, குடும்பங்கள் கோவெனக் கதறின. ஆறுதலும், புன்சிரிப்பும், மகிழ்ச்சியும், நான் அளித்துள்ளேன் பல குடும்பங்களுக்கு! எத்தனையோ மாதர்கள் வயிறெரிந்து அவனைச் சபித்தனர். எத்தனையோ தாய்மார்கள் என்னைக் கை எடுத்துக் கும்பிட்டு வாழ்த்தி இருக்கிறார்கள். தெரியுமா! எத்தனையோ இளைஞர்களின் வாழ்க்கையை அவன் பாழாக்கினான்; எத்தனையோ குடும்பங்களில் அணைய இருந்த விளக்குகளை நான் அணையாமற் செய்திருக்கிறேன். அவனுடைய கீர்த்தி, எவ்வளவோ பேர்களைக் கல்லறைக்கு அனுப்பிற்று. அதனை யோசித்துப்பார். இவ்வளவும் நடனா, அவனை ஓர் துரோகி என்பதை மறந்து பேசுகின்ற அந்தச் செயலையும் கவனித்தால், அவனைக் காண்பதும் தீது என்றே கற்றோர் கூறுவர், கனியே! என்மீது கருணை காட்டு."

வைத்தியர் பேசினார்; அந்த வஞ்சிக்கொடி வேதனையுடன் புரண்டாள். விட்டாரா? மேலும் தாக்கினார், வெறி கொண்ட வைத்தியர்.

"கொஞ்சும் கிளியைத் தள்ளிவிட்டு, கொத்தும் வல்லூறை வளர்ப்பார்களா! சேவைபுரியும் என்னை உதாசீனம் செய்துவிட்டுச் சாவைத் தரும் அவனை நேசிக்கிறாய். எட்டியை, இனிப்பென்று எண்ணுகிறாய். வேண்டாம் இந்தப் பிடிவாதம். வினயமாகக் கூறுகிறேன். உன் ஏவலுக்கு எதிர்நோக்கி நிற்பேன். உன் விழி எதைக் கூறுமோ அவ்வழி நடப்பேன். நான் மாதரிடம் மையல் கொண்டு அலைந்து திரிபவனல்லன். அந்தப் பருவமும் கடந்தவன். பெண்ணே! நீ மட்டும் என்னை அடிமை கொண்டால் போதும். உன் சேவையே, என் சிந்தனையாகக் கொண்டு வாழ்வேன்." —வைத்தியரின் மொழிகேட்டு, நடனா மனமிக நொந்தாள். அகலத் திறந்திருந்த அவளது கண்களிலிருந்து பெருகிய நீர்த்துளிகள், அவரைக் கண்டு பயந்தோடுவன போலக் கன்னத்திலே புரண்டன. வேதனையைப் பொறுத்துக் கொண்டு, அந்த விவேக சிந்தாமணி வெகுண்டுரைக்காமல் சாந்தமாகவே, "வைத்தியரே! நல்ல மருந்துகள் இருக்கலாம்; ஆனால் நாடிப் பரீட்சை தெரிய வேண்டியது முக்கியமல்லவா? இல்லையேல், எந்த மூலிகை கிடைத்தும் என்ன பயன்? எந்த முறை தெரிந்தும் என்ன பிரயோசனம்? என் மனம் நாடுவது யாரை என்பதைக் கண்டறியாமல், உமது மனம்போன போக்கின்படி மொழிக்கு வழி விடுகிறீரே! அது சரியா? நான் முழுமனதுடன் காதலிக்கும் அன்பரின் வீரத்தைக் கேலி செய்கிறீர். உமது பேச்சைக் கேட்ட பிறகு நீர் தந்த பச்சிலைப் பாகின் கசப்பு எனக்கு இனிப்பாக தோன்றுகிறது! ஈட்டிக்கும், வாளுக்கும், வேலுக்கும், சூலத்துக்கும், கணைக்கும், கழிக்கும் இடையே நின்று, போரிட்டு வெற்றி பல கண்ட வீரரை, நீர் கொலைகாரர் என்று கடிந்துரைக்கிறீர். தணலிலே வெந்து வெளியே வந்த தங்கமல்லவா அவர். அவருடைய உயிர் குடிக்க எத்தனை கூரிய வாட்கள் துடித்தன. எவ்வளவு அம்புகள் அவர் உடலைத் தைத்தன. உடலிலே எத்தனை வடுக்கள்! தேர்ச்சக்கரம், யானையின் துதிக்கை, குதிரையின் காற்குளம்பு, கோபங்கொண்ட வீரர்களின் ஆயுதம்-இவைகட்குத் தப்பி வீரமாக வெற்றிக்கொடி நாட்டியவரையா நீர் தூற்றுவது? உமது பொறாமையும், துவேஷமும், போக உணர்வும் போக்க ஏதேனும் மருந்து கிடைக்கவில்லையா?" என்று கூறினாள். வைத்தியரின் முகம் கோணிற்று; அகமோ ஆத்திரக் கூடாயிற்று. உடல் பதைக்க நின்றார் அவள் எதிரில்.