கலிங்க ராணி/கலிங்க ராணி 15


15


"ன்று கேளும் வைத்தியரே! உமது கீர்த்தி என் செவியில் விழுந்தது" என்று பேச்சைத் துவக்கினாள் பாவை. அவர் முகத்திலே புன்னகை தவழ்ந்தது. "என் கீர்த்தியைக் கேட்டுமா என்னை நிராகரிக்கிறாய்" என்று கேட்டது அப்புன்னகை. "பிறகே உம்மை நான் கண்டேன்" என்றாள் நங்கை. உடனே வைத்தியரின் முகத்தில் கவலை குடிகொண்டது. பருவ முதிர்ச்சி, உடல் தளர்ச்சி ஆகியவைகளை அவள் பார்த்தாள்; பிறகு "மகிழ்ந்தேன்! போற்றினேன்" என்று மேலும் உரைத்தாள் அம்மயிலாள். வைத்தியனுக்குச் சந்தோஷம் மீண்டும் உதயமாயிற்று. நாம் உட்கொண்ட மூலிகை நமது முதுமையை மாற்றாமலா போய்விடும்; வயது அதிகமானாலென்ன? நமது கெம்பீரம் கெட்டா விட்டது? அதைக் கண்டே அவள் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று தவறாக எண்ணினார் அந்த ஏமாளி.

அவள் மேலும் கூறினாள்: "இன்னும் உமது திறமையை நான் பாராட்டுகிறேன். நான் உயிரோடு உங்கள் முன் நிற்பதே உமது அபூர்வ மருந்தின் சக்தியினால்தான் என்பதை உணருகிறேன். உமது உதவியை நான் மறக்கமாட்டேன்." —கிழவன், குமரியின் முகத்தை உற்று நோக்கினான். அந்தப் பார்வை, "உதவி செய்த என்னை உல்லாசப்படுத்து; உன்னை எனக்குத் தந்துவிடு," என்று கேட்டது, அவனது நோக்கு. பிறகு அவர் நினைப்பு யாவும் நொடியிலே தூளாகும்படி, நடனா கூறினாள். "ஆனாலும் உம்மை இனி காதலிப்பது முடியாத காரியம்; என் நெஞ்சை அவரிடம் நான் தந்து நெடுநாளாகிவிட்டன."

வைத்தியருக்கு வலி அதிகரித்தது. விழியிலே கோபம் குதித்தெழும்பிற்று. "அவன் பிரமாதமான வீரன் என்று எண்ணுகிறாய், நடனா! அவன்போல் ஆட்கொல்லிகள் அனந்தம்; என்போல் இதமளிப்போர் இலட்சத்தில் ஒருவர் கூடக் கிடையாது" என்று கூறினார்.

"அரச மன்றத்திலே என்றேனும் ஓர் நாள் உமது அருமையான வாதத்திறமையைக் காட்டுமய்யா; எனக்குத் தெரியாது வாதம் புரிய" என்றாள் மங்கை. "பேதமை—மாதர்க்கு அணிகலமாம்!" என்றார் வைத்தியர். "மருந்துக்காக நீர் பல சுவடிகளைப் படித்திருப்பீர். அது ஏட்டுச்சுரை. எனக்கேன் வைத்தியரே அவை! கேளும். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதுபோல, என்னை நீர் நாடி வருவதற்கு முன்பு, உமது கீர்த்தி என் காதைத் தேடி வந்தது. என் அன்பர் விஷயம் அப்படியல்ல! அவரை நான் முதலிலே கண்டேன். அவருடைய கீர்த்தி என்னவென்று அப்போது நானறியேன். உமது கீர்த்தியைக் கேட்டு இன்று எங்ஙனம் பாராட்டுகிறேனோ அதுபோல், அவரைக் கண்ட அன்றே என் நெஞ்சமெனும் கோயிலில் அவரை இருக்கச் செய்துவிட்டேன். மற்றவர்கள் இந்தச் சோழ மண்டலத்திலே, வாள் வீச்சு, ஈட்டி எறிதல், குதிரைச் சவாரி ஆகிய வீர விளையாட்டிலே வீரமணிக்கு நிகர் யாருமில்லை என்று புகழக் கேட்டேன். அவர் நெஞ்சிலே புகுந்த பின்னர், அவரது திறமையை நான் கண்டதுமில்லை. காணவேண்டுமென்று கருதினதுமில்லை. என்னை அவருடைய வாள் வீச்சு வீழ்த்தவில்லை. அவரிடம் நான் நெஞ்சைத் தந்த பிறகே, என் நேத்திரானந்த பூபதி, நிகரற்ற ஓர் போர் வீரர் என்பதை அறிந்தேன். எம்மைப் பிரிக்கும் மருந்து உம்மிடம் இல்லை; வீணே சிரமப்பட வேண்டாம். உண்மையிலேயே உமது திறமை கண்டு நான் வியக்கிறேன். ஆனால் வியப்பது வேறு; விரும்புவது என்பது வேறு" என்றுரைத்தாள் நடனா.

"என் திறமறிந்ததும் என்னிடம் உனக்கு அன்பு உண்டாகவில்லையா?" என்று கேட்டார் வைத்தியர்.

"திறமையைக் கண்டு வியந்ததும், ஒரு பெண், அந்த ஆடவனைக் காதலிப்பது என்று இருந்தால், வைத்தியரே! பெண்கள் எத்தனை எத்தனை ஆடவரை, நித்த நித்தம் காதலிக்க வேண்டி நேரிடும் தெரியுமா? கழைக்கூத்தன் பனை உயரத்தில் நின்று பம்பரம்போற் சுழன்றாடுகிறான்; பார்க்க மிக்க ஆச்சரியமாக இருக்கிறது; பாணரின் பாடல் பரமானந்தமூட்டுகிறது. கவியின் கற்பனை உள்ளத்தை உருக்குகிறது. ஓவியக்காரரின் சித்திரம் சித்தமதைக் களிப்புக் கடலிற் செலுத்துகிறது. அலைகடலை அடக்கி மரக்கலம் செலுத்துவோன், புலியையும் பிறவையும் வேட்டையாடிப் பிடிப்பவன், மல்யுத்தம் செய்து மார் நிமிர்த்தும் மறவன், போரில் வெற்றி பெற்றுக் கழலணிந்தோன்—ஆகியவருடைய செயல் திறமையாக இல்லையா? எந்தத் திறமையைக் கண்டு வியப்படையாமல் இருக்கிறோம். ஏன்? அரண்மனையின் விகடகவியின் திறமை கண்டு வயிறு வெடிக்கச் சிரிக்கிறோம்! இவ்வளவு பேருடைய திறமையைக் கண்டு சந்தோஷித்தால் அவர்களைக் காதலிப்பது என்று பொருள் இருப்பின், வைத்தியரே! உலகம் ஓர் விபரீத புரியாகிவிடுமே! இதையேனும் உணரக்கூடாதா?" என்றுரைத்தாள் நடனராணி.

"பெண்ணே! உன் பேச்சிலே அலங்காரம் இருக்கிறது; அறிவு காணப்படவில்லை."

"தங்கள் மனக்கண் குருடாகிவிட்டது. அதற்கு மருந்திடுங்கள் முதலில்."

"மமதை, மகா கொடிய வியாதி."

"வியாதியின் கொடுமை தெரிந்தும், அதை ஏன் வளர்த்துக் கொள்கிறீர்? உமது பேச்சு அதைத்தான் காட்டுகிறது"

"இரக்கமற்ற உனக்கு இயற்கை இவ்வளவு அழகைத் தருவானேன்? குற்றுயிராக நீ மஞ்சத்திலே படுத்துக் கிடந்தபோது, எத்தனை இரவுகள் உனக்காக இந்தக் கண்களை மூடாமல் காத்திருந்தேன்! எவ்வளவு கவலை கொண்டேன்? ஜீவசக்தி உன் உடலில் மீண்டும் வருவதற்காக எவ்வளவு பாடுபட்டேன்? வேறு வேலைகளை விடுத்தேன்; நீ பிழைத்தெழுந்தால் போதுமென்றிருந்தேன். உன்னைச் சாவுக்கிடலா உலவ வைத்தேன். நன்றி கெட்ட நங்கையே! நொந்த உள்ளத்தை நீ மேலும் வாட்டுகிறாய். நான் உன் பொருட்டு பட்ட கஷ்டம் எவ்வளவு என்பது உனக்குத் தெரியுமா?"

"பேஷாகத் தெரியும்! என்னை ஈன்றபோது என் தாய் பட்ட கஷ்டத்தைவிடத் தாங்கள் அதிகம் பட்டிருக்க முடியாது. என் தாயே தடுத்தாலும் நான் அவரை நெஞ்சிலிருந்து வெளியே தள்ளமுடியாது. என் இருதய சித்திரத்தை அழிக்க முடியாது."

"நீ அழிந்தால்..."

என்று கேட்டுவிட்டு வைத்தியர், மிகக் கோபமாக நடனாவின் அறையைவிட்டு வெளியே சென்றார்.

"நீர் என்ன துர்வாசரா, விஸ்வாமித்திரரா, அவளைச் சபிக்க!" என்று கேலி செய்துவிட்டுச் சிரித்தாள் கங்காபாலா. அவள், வைத்தியர் நடனாவிடம் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் மறைந்திருந்து. இதை வைத்தியர் வெளியே கோபமாக வந்ததும், வழி மறித்துக் கேட்டார்.

“எங்கள் பேச்சு…” என்று இழுத்தார் அற்புதானந்தர். “கனி கொடுக்க வந்தேன்; காதிலே விழுந்தது” என்று பாலா முடித்தாள்.

“இதை வெளியே சொல்லாதே பாலா! உன்னைக் கெஞ்சிக் கேட்டு கொள்கிறேன்” என்று வைத்தியர் வேண்டினார்.

பாலா, “இரகசியத்தைக் காப்பாற்றுகிறேன்; பரிசு உண்டோ…” என்று பேரம் பேசினாள்: “வா! வெளியே போய்ப் பேசுவோம். ஏன்? என் வீட்டுக்கே வா, அங்கு…” என்று பேசிக் கொண்டே நடந்தார் வைத்தியர். “அங்கு என்னையும் ‘கண்ணே, கனியே’ என்று சரச மொழி பேசி, இசையாவிட்டால், சபிப்பீரோ என்று திகில் வருகிறதே!” என்று மேலும் கேலி செய்தபடி, பின்தொடர்ந்தாள் பாலா.

“கங்கா! நான் என்ன காமுகனா” என்றார் வைத்தியர்.

“கண் இருக்கிறதே, உமக்கு. கண்ணுக்கு உருவாக எது தெரிந்தாலும், கருத்துச் சுழலுமாம். இதோ பாரும். தேவேந்திரன் நித்தநித்தம் அழகே உருவான அரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகியவர்களைக் கண்டு களிப்பவன். பாருங்களேன், ஒரு நாள்! எங்கோ பர்ண சலையிலே இருந்த ஒரு ரிஷி பத்தினியைக் கண்டான்; காதல் கொண்டான். ஆண்களின் சுபாவம் அதுதானே.” என்று ஆரியக் கன்னி கேட்ட போது, வைத்தியரின் மனதிலே, “ஆமாம்! இவள் சுந்தரியாகத்தான் இருக்கிறாள். அந்த மண்டைக் கர்வங் கொண்டவளிடம் மண்டியிட்டதை விட, இவளிடம் கொஞ்சம் ஜாடை காட்டி இருந்தாலும் போதுமே! இசைவாளே!” என்று தோன்றிற்று. மனதிலே நடனாவின் சித்திரம், பக்கத்திலே பாலா. இருவரையும் ஒப்பிட்டார். இருவரும் இளமைஎழில் உள்ளவர்களே. ஆனாலும் அந்த நடனாவின் வசீகரம் இவளிடம் இல்லையே!" என்று ஏங்கினார். இருவருமாக வைத்தியரின் வீடு போய்ச் சேர்ந்தனர். நேரத்தை வீணாக்காமல் பேச்சைத் துவக்கினாள், பாலா.

"வைத்தியரே! வேட்டையாடிய புலி, வலையில் வீழ்ந்தது போன்ற நிலை! ஆண்கள், தாங்கள் விரும்பும் கன்னி இசைய மறுத்தால் பெறுவாராம். உமக்குள்ள நிலை அதுதான். நான் தெரிந்துகொண்டேன். ஆனால் வெறும் ஆத்திரம் பயன் தராது. சபித்துவிடவும் முடியாது" என்றாள். விசாரத்திலாழ்ந்த வைத்தியர், "பாலா! அப்படியானால், நான் அவளை மறக்கத்தான் வேண்டுமா! அந்த ஒளி வீசும் கண்களை, துடிக்கும் அதரத்தை, கொடி இடையை." என்று பெருமூச்சுடன் பேசலானார்.

"சரி! சரி, அவளை நீர் வர்ணித்துக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருக்க நான் வரவில்லை. அவள் அதிரூபவதியா இல்லையா என்பது பற்றி எனக்கொன்றும் கவலை இல்லை. அவளைப் பிச்சை கேட்டீர்; அவள் காரித் துப்பினாள். நீர் இப்போது என்ன செய்யப் போகிறீர். அதுதான் கேள்வி" என்றுரைத்தாள்.

"என்ன செய்வது? ஏங்கிச் சாவது" என்றார் வைத்தியர். "அவளுக்காக?" என்று கேட்டாள் பாலா. வைத்தியரின் பெருமூச்சுதான் பதில் கூறிற்று.

"நீர் இறந்துவிட்டால், அவளை அடைந்ததாக அர்த்தமா?" என்று கேட்டாள் பாலா.

"வெந்த புண்ணிலே, வேலைக் குத்துகிறாய்! என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?"

"வஞ்சம் தீர்த்துக்கொள்."

"கற்பழிப்பதா?"

"சீ! அவளை அழிப்பது ஏன், உன்னிடம் வகை வகையான விஷமில்லையா! ஏதாவதொன்றை மருந்துடனோ, உணவுடனோ கலந்து தந்தால் ஒழிகிறாள். உனக்கு இணங்க மறுத்த அவள், பிறகு எவனாவது ஒரு வீரனுடன் கூடி ஆடிக் கிடப்பதைக் கண்டால், நீ புழுப்போல் துடிக்கமாட்டாயா?"

"துடிப்பேன். ஆனால் அதற்காக அவளைக் கொல்வதா! சீச்சீ! கூடாது, அது கொடுஞ்செயல்."

"ஓகோ! காவியணிய உத்தேசமா?"

"அதுவுமில்லை."

"வைத்தியரே! உடலிலே நோயூட்டும் கிருமிகள் இருந்தால், கிருமிகளை அழிக்க நீர் மருந்திடுவதில்லையா? கிருமிகள் சாகுமே என்று பரிதாபப்பட்டால் கிருமி, ஆளைக் கொல்லாதா? நடனா, உமது வாழ்வை வதைக்கும் கிருமி, நீர் அந்தக் கிருமியை அழிக்காவிட்டால், உம்மைக் கிருமி அழித்துவிடும்."

"ஆமாம்!"

"எதற்கெடுத்தாலும் 'ஆமாம், ஆமாம்' என்று கூறுகிறீர். துணிவாக எதையேனும் செய்யச் சொன்னால், 'ஐயோ, ஆகாது' என்கிறீர். சுத்தப் பித்துக் கொள்ளியாக இருக்கிறீர்."

"பாலா! நீ பேசுவதைக் கேட்கவே எனக்குப் பயமாக இருக்கிறது."

"கோழைத்தனம்! உமக்கு ரோஷம் இல்லை. அரண்மனையிலே ஒரு பணிப்பெண் அவள். அவள் உம்மைத் துப்பினாள்; உமக்கு உணர்ச்சி இல்லை. நான் ஆணாக இருந்து, எனக்கு அக்கதி நேரிட்டிருந்தால், நடனா இவ்வளவு நேரம் உயிரோடு இருக்க முடியுமா? மானத்தை இழக்க உமக்கு மனமிருக்கிறது. உமது இஷ்டப்படி செய்யும்! எனக்கென்ன? உம்மைப் பற்றித்தான் ஓயாது கேலி செய்வார்கள். நீர் தலை காட்டினால் போதும்; 'இதோ பாரடி, மருந்து கொடுக்க வந்த கிழவன், நடனாவை இழுத்தானாம்; அவள் உதைத்தாளாம்' என்று கேலி செய்வார்கள்."

"உண்மைதான். ஊர் பூராவும் கேலி செய்யும்."

"பிறகு உமது மதிப்பும் போகும்."

"போய்விடும். ஆ—மா—ம்"

"அரண்மனை வைத்தியமும் போகும்."

"ஆமாம்."

"இவ்வளவு ஆபத்தும் அந்த ஒரு சிறுக்கியினால்."

"என் வாழ்வுக்கே பெரிய ஆபத்து."

"புத்தி இருந்தால், அதை நீக்கிக் கொள்ளலாம்."

"பொற்கொடி போன்றவளை விஷமிட்டுக் கொல்வதா?"

"வேண்டாம், வேண்டாம்! அவள், வேறோர் புருஷனிடம் கொஞ்சி விளையாடும்போது, நீர் அங்கே போய், அவனுக்கு அடைப்பம் தாங்கும்."

"பாலா! பதட்டமாகப் பேசாதே."

"பேசினால் என்ன! பெண்ணுக்குப் பயப்படுபவர் நீர். என்னை மிரட்டுகிறீரே!"

இந்தச் சம்பாஷணைக்குப் பிறகு, அவசர அவசரமாக வைத்தியர், தமது மருந்துப் பெட்டிகளைத் தேடினார். ஒரு சிறு கருநிற மாத்திரையை எடுத்தார். கண்களிலே மிரட்சியுடன், அதைப் பாலாவிடம் கொடுத்தார். "இதை அவள் உட்கொண்டால் ஒழிந்தாள். விஷம் பருகிச் செத்தாளென்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு அபூர்வமானது இது. இயற்கையான மரணமாகவே தோன்றும். பாலா! இனி என்னெதிரில் இராதே. என் மனம் மாறிவிடும். போ, போ! நடனா ஒழியட்டும்." என்று கூவினார். பாலா, ஆவலுடன் அந்த மாத்திரையைப் பெற்றுக்கொண்டு, "இது ஆண் மகனின் தீரம். வைத்தியரே! உமது வாக்கு பலிக்கும். விரைவிலே நீர் நடனாவின் மரணச் செய்தியைக் கேட்பீர்" என்று கூறிவிட்டு, விடை பெற்றுக் கொண்டாள். அவள் வாயிற்படியைத் தாண்டுமுன்னம், வைத்தியர் மீண்டும் அழைத்தார்.

"ஏன்? மனம் மாறிவிட்டதா?" என்று பாலா கேட்டாள்.

"இல்லை! ஆனால், உனக்கு நடனா மீது இவ்வளவு விரோதம் ஏன்?" என்று கேட்டார்.

"உமக்கேன் அவளிடம் அவ்வளவு பிரேமை உண்டாயிற்று?" என்று கேட்டாள் பாலா.

"யாருக்குத்தான் உண்டாகாது" என்று பெருமூச் செறிந்தார் வைத்தியர்.

"நீர் அவள் அழகிலே சொக்கினீர்; நான் அவளுடைய நிலைகண்டு நினைப்பு கண்டு அவளை வெறுக்கிறேன். அவள் எனக்கும் நஞ்சு; உனக்குந்தான்! அவள் ஒழியத்தான் வேண்டும்."

"என்ன இருந்தாலும் பாலா! நடனாவுக்கு விஷம் கொடுக்க எனக்கு மனம் இடந்தரவில்லையே." என்றார் வைத்தியர்.

"அது சரி! கிடைத்த மாத்திரையை இழக்க நான் இசைவேனா? வைத்தியரே! நீர் நமது சம்பாஷணையை முற்றிலும் மறந்துவிடும். நீர் ஏவிய மரணம் அவளைத் தழுவக் காண்பீர் விரைவில்" என்றாள் பாலா. அதேசமயம்....

"என் பின்னால் வா. ஊர்ப்புறமாக உள்ள சத்திரத்துக்கு" என்று ஒரு குரல் கேட்டது. கங்கா திடுக்கிட்டாள். உருவம் முகத்தைக் காட்டினதும் 'நீயா? என்ன விசேஷம்?' என்று கேட்டாள். "அங்கே சொல்கிறேன். நட" என்று அதிகாரத் தோரணையில் அந்த உருவம் கூறிக்கொண்டே நடந்தது. பாலா அதனைப் பின்தொடர்ந்தாள். உருவம் சரியாக வெளியே தெரியாதபடி மேலே ஓர் போர்வையுடன் காணப்பட்டது.

இருவரும் ஊர்க்கோடியிலிருந்த சத்திரத்தை அடைந்தனர். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு வந்தவன், பாலாவைப் பார்த்து "பாலா! நீ சுத்த மக்கு! ஒரு காரியமும் நடப்பதில்லை. அரண்மனையிலே ஒரு துளிகூடக் கலகம் ஏற்படவில்லை; மாதா மாதம் பணம் பெறுவது மட்டுமே வேலை என்று எண்ணுகிறாய். நமது நோக்கம் ஈடேற ஒரு வழியும் செய்யக் காணோம்" என்று கடிந்துரைத்தான். பாலாவின் முகத்திலே கோபமும் சலிப்பும் கலந்து வீசிற்று. ஏதோ பேச வாயெடுத்தாள்; வந்தவன் அதைத் தடுத்துவிட்டு மேலும் பேசினான்: "பாலா! உனக்கு மட்டுந்தான் இந்த அர்ச்சனை என்று எண்ணாதே; எனக்குந்தான் இன்று வந்த ஓலையிலே. எனக்கும் ஒரு முழ நீளமுள்ள அர்ச்சனை நடந்திருக்கிறது. கலிங்கப்போர் நடந்தபோது சோழமண்டலத்திலே கலகம் நடக்கும்படி ஏன் தூண்டவில்லை? எதற்கு நீ ஜனனமெடுத்தாய்? குல முன்னேற்றத்தைக் கவனியாத நீ பிறந்து பயன் என்ன? என்றெல்லாம் எனக்கும் வசவு கிடைத்திருக்கிறது. நான் எவ்வளவோ கரடியாகத்தான் கத்தினேன், போரை ஆதரிக்க வேண்டாமென்று; பலிக்கவில்லை; நான் என்ன செய்வேன்? பாலா! நமக்கு அவர் கட்டளைகள் பிறப்பிக்கிறாரேயொழிய நமக்கிருக்கும் கஷ்டங்கள் தெரிகிறதா? சோழமண்டலம் என்ன மலர்புரியா? அங்குதான் ஒரு ஸ்திரி கிடைத்தாள்; அவர் ஆட்டி வைக்கிறார். இங்கு முடியுமோ? பாலா! எனக்கு இருக்கும் கஷ்டந்தானே உனக்குமிருக்கும். இருந்தாலும் சொல்லியனுப்பியதை உனக்குக் கூறினேன். என் மீது கோபங்கொள்ளாதே" என்றுரைத்தான். அவள் சொன்னாள்.

"பதஞ்சலி! உன் மீது கோபித்து என்ன பயன்? நானும் என்னாலானதைச் செய்துதான் பார்க்கிறேன். ஒன்றும் சரியாக முடிவதில்லை. இப்போதும் ஒரு அருமையான ஏற்பாடு என் மனதிலே இருக்கிறது. எனக்கு அந்தப்புரத்திலே ஒரு தடையாக இருக்கும் நடனா என்ற நாட்டியக்காரியைக் கொன்றுவிடத் தீர்மானித்துவிட்டேன். அருமையான விஷம் கிடைத்திருக்கிறது, ஒரு வைத்தியனிடமிருந்து. அவளிடம் காதல் வேண்டினான்; அவள் மறுத்தாள். இடையிலே நுழைந்தேன். இதைப் பெற்றேன்." என்று கூறி மாத்திரையைப் பாலா காட்டினாள்.

"விஷமிடுவதா?" என்று கேட்டான் பதஞ்சலி.

"ஏன்! பாபம் சூழ்ந்து கொள்ளுமா?" என்று கேலியாகக் கேட்டாள் பாலா.