கலிங்க ராணி/கலிங்க ராணி 17
"மரணம் கொடிதா? மனக்குழப்பத்தோடு கூடிய வாழ்க்கை கொடிதா?" என்று காஞ்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த நடனா காவலாளியைக் கேட்டாள். பொழுது போக்குக்காக ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். இடையே இக்கேள்வி பிறந்தது. உடனே காவவன், "மனக்குழப்பத்தோடு கூடிய வாழ்வுதான் மிகவும் கொடியது." என்று பதில் கூறிவிட்டு, "ஆனால் மனக்குழப்பம் நீங்கும் மார்க்கம் ஏற்பட்டுவிட்டால், வாழ்வு துலங்குமல்லவா? அதற்காகத்தான் சற்றுப் பொறுத்துக் கொண்டால், பிறகு நிம்மதி ஏற்பட்டதும், வாழ்வின் பயனைப் பெறமுடியும். கஷ்டம் ஏற்பட்டதும் கலங்கி உயிரைப் போக்கிக் கொண்டால், பெரிய நஷ்டமாகுமல்லவா?" என்று கூறினான்.
"உண்மைதான்! உத்தமன் என்ற உன் பெயருக்கேற்றபடியே, உன் எண்ணமும் இருக்கிறது. ஆனால் ஒருவர் இறந்துபோனால், வருத்தப்படும் ஆட்கள் இருந்தால் அந்த மரணத்தால் கஷ்டமும் விளையும்; நஷ்டமும் உண்டு. ஆனால் என்னைப்போல ஒரு அபலை; திக்கற்றவள்; கஷ்டமனுபவித்துக் கொண்டு காலந்தள்ளுவதைவிட இறந்து போவதால் நஷ்டமொன்றுமில்லையல்லவா?" என்று கேட்டாள் நடனா. காவலாளி, "உமது கேள்வியே எனக்கு வருத்தமூட்டுகிறது. உமது மரணத்தால் யாரும் வருத்தமடைய மாட்டார்கள் என்று நீர் எண்ணுவது, உமது நண்பர்களுக்கு நீர் துரோகம் செய்வது போன்றதாகும். ஏதோ பொழுது போகப் பேசுகிறீர் என்று எண்ணினேன். உண்மையிலேயே நீர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எண்ணவேண்டியிருக்கிறது, உமது விபரீதமான பேச்சைக் கேட்டபின். தயவு செய்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். தற்கொலை கோழைத்தனம்; துரோகம்" என்று படபடத்துக் கூறினான் காவலாளி. சில நிமிடங்கள் இருவரும் மௌனமாகவே சென்று கொண்டிருந்தனர்; காவலாளி மீண்டும் பேச்சைத் துவக்கினான்.
"தங்களின் துயரம் நான் அறியாததல்ல; வீரமணி எனக்கு நண்பர்" என்றான். "நண்பர்! உன் நண்பருக்காக என்ன பிரயாசை எடுத்துக் கொண்டாய்? நட்பின் இலட்சணம் என்ன? அவர்மீது அபாண்டம் சுமத்தப்பட்டபோது ஏன் வாய் பொத்திக் கிடந்தீர்கள்? ஒரு பேச்சு பேசினீர்களா? இப்போது அவர் எங்கு இருக்கிறாரோ? என்ன கதியோ? யார், அவர் விஷயமாக அக்கரை காட்டினார்கள்? உத்தமா! உன்மீது கோபிப்பதாக எண்ணாதே. என் மனக் கொதிப்பு என்னை இவ்வாறு பேசச்செய்தது! என் நிலையை நீ அறிந்து கொண்டதாகச் சொன்னாய். எனக்கு உதவி செய்வாயா? அவரன்றி நான் வாழ முடியாது. காஞ்சியிலே போய் தங்கிவிட நான் புறப்படவில்லை. இதே பிரயாணம், அவரைத் தேடுவதற்காகவே என்று மாறிவிடவேண்டும். என்னை உன் தங்கையாகப் பாவித்து என்னுடன் நீயும் வா. இருவருமாகப் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்து அவரைக் கண்டு பிடிக்கலாம்," என்று நடனா கெஞ்சினாள். உத்தமன் அந்த யோசனையை மறுத்து எவ்வளவோ பேசிப் பார்த்தான். ஆனால் அவனுடைய வாதங்களெல்லாம், நடனாவின் விழியிலே புரண்டோடிய கண்ணீரால் கரைந்து போயின. அவனும், வீரமணியைத் தேடும் காரியத்திலே ஈடுபட இசைந்தான். ஆனந்தத்தால் நடனா, குதிரையின் முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.