கலிங்க ராணி/கலிங்க ராணி 18


18


"லே! பேஷ்! சரியான சமர்த்தனடா நீ" என்று, மலர்புரியிலே அரண்மனைக் குருவாகவும் அரசியை ஆட்டிப் படைப்பவனாகவும் இருந்துவந்த சூத்ரதாரி, தன் முன், குத்துச்சண்டை, ஈட்டி எறிதல், வேல் விடுதல், அம்பு எய்தல் முதலிய வீர விளையாட்டைச் செய்து காட்டிய வீரனைத் தட்டிக் கொடுத்தார். அந்த வீரன், முகமலர்ச்சியின்றிக் கைகளிலே படிந்திருந்த புழுதியைத் தட்டிக்கொண்டே நின்றான். இத்தகைய புகழ்ச்சியினால், பரிசுகளால், பூரிப்பு அடைய, அவன் என்ன, ஊர் சுற்றும் வஸ்தாதா? படைக்குத் தலைவன்; பரம்பரை வீரன்; எதிரிகள் கண்டு வியக்கும் ஏறு; மன்னர் மன்றத்தில் மதிப்புடன் திகழ்ந்த மணியாயிற்றே அவன். மலர்புரி எனும் சிற்றரசுக்குச் செல்லாக இருந்த ஓர் ஆரியனின், பரிவுக்கும் புகழ்ச்சியுரைக்கும் மகிழ்வானா? வீரமணியே மாறுவேடத்தில், மல்யுத்தக்காரனாக மலர்புரியில் வந்திருந்தான். அவனுடைய வீர விளையாட்டைக் கண்டு வியந்த ஆரியன் அவனைத் தனக்குப் பாதுகாவலனாக அமர்த்திக் கொள்ளத் தீர்மானித்ததும் பேரம் பேசினான்.

"மல்லனே! இப்படி நீ ஊரூருக்குச் சுற்றிக் கிடப்பதை விட, இந்த அரசில் ஊதியம் பெற்றுச் சமஸ்தான சேவகம் செய்யலாமே. சம்மதமா உனக்கு?"

"சந்தோஷம்! தங்கள் சித்தம்போல் நடக்கிறேன்."

"ஊதியம் என்ன வேண்டும் கேள்."

"இதுவரை ஒருவரிடமும் ஊதியம் பெற்றதில்லை. அதுபோல் ஊர் உழைப்பை தின்று வாழ்ந்ததுமில்லை."

"அதுதான் யோக்கியனின் செயல். ஆனால் இங்கு சமஸ்தான சேவகம், இழிவானதல்ல."

"தங்களிடம் சேவை செய்வது தேவசேவைக்குச் சமானமன்றோ."

"மெச்சினேன் உன் அறிவையும் ஆற்றலையும். இன்று முதல் நீ நம்மிடம் வேலைக்கமர்ந்துவிடு. தனி விடுதியும் ஆட்களும் தருகிறேன். செலவுபற்றி கவலைப்படாதே. உன் திறமையைக் கொண்டு, ஒரு சிறுபடை தயாரிக்க வேண்டும், 'தேவி சேனை' என்ற பெயருடன்."

"தேவிசேனை! தேவிக்குச் சேனை வேண்டுமாம்! தேவிக்கா, இந்தத் திருப்பிரம்மத்துக்கா? தேவி, சகல லோகரட்சகி, ஜெகன்மாதா என்று கூறுகிறான்; அவள் கையிலேந்தியுள்ள சூலம், எத்தனையோ கொடியவரின் உயிரைக் குடித்து, இரத்தக்கரை படிந்தது என்று பூஜிக்கிறான். தேவியின் திருவிழியிலே தீப்பொறி கிளம்பினால் திக்கெட்டும் தீக்கிரையாகும் என்று சிந்துபாடுகிறான். என்னைச் சேனை தயாரித்துக் கொண்டு—தேவி சேனை—என்று கேட்கிறான். இந்த ஆரியனின் அந்தரங்க நோக்கத்தை, அரசியோ, மக்களோ அறிவதாகக் காணோம். எவ்வளவு செல்வாக்கு! மதயானைகளை அடக்கும் வீரர்கள் இவன்முன் மண்டியிடுகின்றனர். உடலில் தைத்த அம்பு ஒடிந்தாலும், எதிரியின் யானையின் தந்தத்தை ஒடிக்கும் வீரமிக்கபோர் மரபினர் இவன்முன் ஆமைகளாகின்றனர். 'அம்பிகே!' என்று கூவுகிறான். ஆயிரக்கணக்கான மக்கள் இவனடி வீழ்கின்றனர்.

வீரத்தைப் போற்றியது கண்டுள்ளேன்; புலவரைப் புகழ்வது கேட்டுள்ளேன். அழகை பூஜித்தது அறிவேன்; அரசனை அடுத்ததும் அறிந்ததே; ஆரியனை, ஏன், எக்காரணம் பற்றி, நமது தமிழ் மக்கள் வாழ்த்தி வணங்குகின்றனர்; பொய்யுரை கேட்டுப் பூரிக்கின்றனர்? இப் புலியோ பசுத்தோல் போர்த்துக் கிடக்கிறது. யோகம் புரிவதாகக் கூறும் அவன் மனத்திலே, எவ்வளவு குது கொழுந்து விட்டெரிகிறது! மேலுலகைக் கண்டதாகக் கூறும் அவன் விழிகளிலே, பேராசை கூத்தாடுகிறது. ஆண்டவனிடம் அளவளாவுவதாகக் கூறும் இவன் நடை, ராஜநடையாகவன்றோ மாறுகிறது. கலிங்கக் கிழவன் குகையிற் கூறியது நடந்ததில் ஆச்சரியமில்லையே. மனிதனைத் தேவனென்று கூறி அரசியை மயக்கினான்; இது ஆச்சரியமா! இல்லாத, காணாத, ஈரேழு பதினாலு லோகத்தை மக்கள் நம்பும்படி செய்துவிட்டானே! இனித் தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியோ, அல்லது அரசியை அடியோடு நீக்கிவிட்டு முடிதரிக்கவோ சூது செய்கிறான். அதற்கே தேவி சேனை திரட்டுகிறான். நன்று, நன்று! "சேனை திரட்டுவேன். ஆனால் அது தேவி சேனையா அல்லது அரசியின் சேனையா என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். நடனா! உன் நினைவுக்காக என் நெஞ்சம் குமுறுகிறதேயன்றி, இந்த ஆரியனின் சூதுக்கு நான் அஞ்சவில்லை" என்று வீரமணி மலர்புரியில் எண்ணிக் கொண்டு தேவி சேனைக்குத் தக்க ஆட்களைத் திரட்டுவதையும், விதவிதமான போர்ப்பயிற்சி பெற்று வருவதையும் கண்டு ஆரியன் களித்தான். அவனுடைய கபடத்தை நன்கறிந்த வீரமணி, மிக நன்றாக நடித்தான். மெள்ள மெள்ள ஆரியனின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானான். அடிக்கடி அவன், மணியிடம் ஆலோசனை கேட்கவும் தொடங்கினான். ஆனால் ஆரியனுக்குக் கடைசிச் செயலில் இறங்கத் துணிவு பிறக்கவில்லை. மரத்தின் உச்சி ஏறி, மதுரமான கனியைத் தொட்டுப் பறிக்கும் நேரத்தில், வேலியருகே சந்தடி கேட்டுத் தோட்டக்காரன் வந்துவிடுவானோவென்று திடுக்கிடும் திருட்டுப் பயலின் மனோநிலையிலே ஆரியன் இருந்தான். அரசன்—மலர்புரி மன்னன்—என்ற பெயர் ஒன்றுதான் இல்லையேயொழிய சகல அதிகாரமும் அவனிடமே இருந்தது. ஆனால், அந்தப் பெயர் மீது பேராவல் பிறந்தது. எவ்வளவு "அதிகாரம் இருந்து என்ன பிரயோசனம்? அரசு..என் சொற்படி ஆடுகிறது, என்றாலும் என்ன பலன்? முடி ஓர் முண்டையிடம் இருக்கிறது. ஜாடைதானே எனக்கு முடி! இந்தக் காவியைக் கலைத்துவிட்டு, அரச உடையுடன் நான் காட்சி தந்தால், என் இனத்தவருக்கு எவ்வளவு மதிப்பு பிறக்கும்? ஆனிரைகள் மேய்ந்துகொண்டு வந்த ஆரியன் மனிதரை மேய்த்திடும் மன்னனானான் என்று பெருமை பிறக்குமே! கரடு முரடான நிலத்திலே, காயும் வெளியிலே, குன்றுகளின் இடையிலே, தத்தளித்த நமது கூட்டம், குளிர்ந்த கங்கையில் மூழ்கி, வாழ்வு வளம் பெற்றுவிட்டனர், பல மண்டலங்களிலும்! இன்று புகுந்து சிறிது சிறிது செல்வாக்கும் கண்டனர். ஆனால்! அரசு ஏன்றால், அது அலாதியான ஆனந்தமே தரும். இனத்தின் எதிர்காலத்தைச் சிறப்புடையதாக்கலாம். இந்த மலர்புரிக்கு நான் மன்னனாகிவிட்டால்! எந்த மண்டலத்திலும் நம் இனத்தவருக்கு இடம் கிடைக்கும். ஏன்! சிலகாலம் சென்றபிறகு இந்த இடமே ஆரிய நாடாகியும் விடலாம். ஆலய அதிகாரி அரசியின் அதிகாரம் பெறுவது ஆகாத காரியமா! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். ஓர் நல்ல சந்தர்ப்பத்தைப் பார்த்து அரசியை ஒழித்துவிட வேண்டும். பிறகு முடி நம் காலடியில் கிடக்கும். வேளை சரியான வேளை வர வேண்டும். மணி வீரன், திறமைசாலி. ஆனால் அவனுக்குப் "பக்தி" ஏற்படவில்லை. என் கட்டளைகளை நிறைவேற்றுகிறானேயன்றி அவன் கண்களிலே, அந்தத் தாசத்தன்மை தோன்றவில்லை. அது ஏற்படாதவரை, அவனை எப்படி நம்ப முடியும்?" என்று ஆரியன் எண்ணினான். மலர்புரி அரசியோ, "தேவிசேனை"க்காகச் செலவுக்குப் பணந்தருவதை திருப்பணி என்றெண்ணி மகிழ்வதும் மீண்டும் தேவ தரிசனமும் சரசமும் கிடைக்குமா என்று ஆரியனைக் கேட்பதுமாக இருந்தாளேயன்றி, சேனை தன்னை ஒழிக்கவே தயாரிக்கப்பட்டிருப்பதை அறியாள். ஆரியனின் மாயவேடம் அரசியைப் பரிபூரணமாக ஏமாற்றிவிட்டது.

"வேடம் எப்படி?"

"மிகத் திறமையாக இருக்கிறது!"

"என் பெயர், இனி என்ன தெரியுமா?"

"குணாளன் என்று அழைக்கட்டுமா?"

"அது அவருக்குப் பொருத்தமான பெயர். எனக்கு அது பொருந்துமா? என்னை இனித் தொண்டன் என்று அழைக்க வேண்டும்."

"நாக்கெழாதே!"

"இல்லையானால் நமது காரியம் நடக்காதே உத்தமா!"

"சரி, தங்கள் இஷ்டம்போல்..."

"பார்த்தாயா! ஆரம்பத்திலேயே தவறு. "தங்கள்" என்று பேசக்கூடாது. 'நண்பா! தோழா! தொண்டா!' என்றே அழைக்க வேண்டும்.

"சரி, தோழா!"

"உத்தமனென்றால், உத்தமனேதான்."

இச் சம்பாஷணைக்குப் பிறகு, நடனராணி ஆணுடையுடன், உத்தமனுடன் ஊரூராய்ச் சென்று தன் காதலனைக் கண்டுபிடிக்கும் பிரயாணத்தைத் துவக்கினாள். பல இடங்களிலே சுற்றியும் துப்பொன்றும் கிடைக்காது துயருற்றுக் காட்டு வழிகளிலே செல்கையில், ஒருநாள், வணிகர் கூட்டமொன்று வழியில் செல்லக் கண்டு, அவர்கள் சென்றுவந்த பல்வேறு நாட்டு வளப்பங்களை கூறக் கேட்டு அவர்களின் வாய்மொழியாலும், வீரமணி பற்றிய சேதி ஒன்றும் தெரியப் பெறாது, உத்தமனைக் கண்ணீர் தளும்பும் கண்களுடன் நடனா பார்த்துப் பெருமூச்செறிந்தாள். ஓரிரவு, சற்று அடர்ந்த கானகத்தைக் காலையில் கடக்கலாம் எனக் கருதி, வணிகக்கூட்டம் காட்டோரத்தில் தங்கினர். நடனாவும் உத்தமனும், அவர்களுடன் தங்கியிருக்க முடிவு செய்தனர்.

மலர்புரியின் எல்லைக்காடு அது. காட்டைக் கடந்தால் மலர்புரி. காதலருக்கு இடையே அந்த அடர்ந்த காடும் ஓரிரவும் குறுக்கிட்டன. மலர்புரியிலே மணிக்கு, காட்டை அடுத்த கூடாரத்திலே தன் இருதய ஜோதிமணி இருப்பது தெரிந்திருந்தால் காட்டு மிருகங்கள் கிலி கொண்டோடும் விதத்திலே, பாய்ந்து சென்று, "கண்ணே நடனா! கண்டேனே உன்னை மீண்டும்" என்று கூவியிருப்பான். நடனாவுக்கும், தன் நாதன், காட்டை அடுத்த மலர்புரியிலே இருப்பது தெரிந்திருந்தால், இரவு, கொடிய மிருகங்களெல்லாம் அவளைத் தடுத்திருக்குமா! காட்டிலே விதவிதமான கூச்சல்! ஆனால் அவைகளில் ஒன்றாவது கலங்கும் காதலருக்கு தூது கூறவில்லை, ஆனால் கதிரோன் ஒளி கண்டு, கூடாரத்தைச் சுருட்டிக்கொண்டு பிரயாணத்தைத் துவக்கினால், காடு தடுக்கவா போகிறது, காதலரின் சந்திப்பை!

காதலருக்கிடையே இருந்த கடுங்கானகத்திலே இரவு! எத்தனையோ விதவிதமான காதல் விளையாட்டுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நிலவொளியினால் குதூகலமடைந்த மிருகங்கள், சில நேரம் இரைதேடுவதும் காதற்களியாட்டமாடுவதுமாக இருந்தன; மடுவில் இறங்கி நீர் பருகும் பெண் சிங்கத்தைக் கனிவுடன் நோக்கியபடி, மடுவின் கரையிலே நின்றிருந்த ஆண்சிங்கம், நிலக்கண்ணாடிமுன் நின்று ஆடை திருத்திக் கொள்ளும் அழகிய மனைவியை, மாளிகைக் கூடத்திலே கெம்பீரமாக நின்று கொண்டு பார்த்துப் பூரிக்கும் சீமான்போல் காட்சி தந்தது. மந்தியும் குரங்கும், மானினத்தின் ஜோடியும், மற்றவையும் மந்தகாசக விளையாடிய அவ்வேளையில், நடனராணி, ஆண் உடையில், தனது காதலனைப் பற்றிக் கவலையுடன் கண்ணுறங்காது புரண்டு கொண்டிருந்தாள். உத்தமன் சற்று அயர்ந்து தூங்கினான். தூங்கிக் கொண்டிருந்த வணிகர்களின் முகத்திலே, வியாபார இலாபத்தால் விளைந்த கலை தாண்டவமாடியது.

நடுநிசிக்கு மேலிருக்கும். தொலைவிலே குதிரையின் காலடிச் சத்தம் கேட்ட நடனா திடுக்கிட்டாள். நிமிடத்திற்கு நிமிடம் சத்தம் வளர்ந்தது. குதிரைக் காலடிச் சத்தத்துடன், பலர் ஒன்றாகக் கூடிப் பாடுகிற சத்தமும் கேட்டது. உத்தமனை எழுப்பினாள். அவன் உற்றுக் கேட்டான். பல வணிகரும் விழித்துக் கொண்டனர். சத்தத்தைக் கேட்டுத் திகைத்தனர்; காட்டிலே வசிக்கும் ஏதோ ஓர் கொள்ளைக் கூட்டத்தார் வருகின்றனர் என்பது விளங்கிற்று. வணிகர் திகில் கொண்டனர். வாளை எடுத்தான் உத்தமன். வணிகரை அழைத்தான். "வயது சென்றவர்கள் பொன் மூட்டைகளுடன், இப்போதே புறப்படுங்கள், வந்த வழியாக. உங்களுக்கு என் நண்பன் உதவி செய்வான். நாங்கள் இங்கு நின்று கொள்ளையருடன் போரிட்டு வருகிறோம். நாங்கள் அவர்களைத் தடுத்து நிற்கும் நேரத்தில், நீங்கள் பக்கத்து ஊரைப் போய்ச் சேரலாம். பிறகு நாங்களும் வந்து விடுகிறோம். மேலும் யோசிக்க நேரமில்லை. இந்த நேரத்தில் செய்யக்கூடியது இதுதான். சத்தம் பலமாகக் கேட்கிறது; ஊம்...தாமதிக்க வேண்டாம்" என்று உத்தமன் அவசரப்படுத்தி, குதிரைகளைத் தயார் செய்து நிறுத்தி, நால்வரை நடனராணியுடன் சேர்ந்து வந்த வழியே வேகமாகச் செல்லுமாறு அனுப்பிவிட்டு, மற்ற வணிகர்களை புதர்களிலே பதுங்கிக்கொள்ளச் செய்து, உருவிய வாளுடன், ஓர் பெரிய மரக்கிளை மீது அமர்ந்து கொண்டு சத்தம் வரும் திக்கை நோக்கினான். வெளிச்சமும் தெரிய ஆரம்பித்தது. நூறு பேருக்கு மேல் கையில் தீவர்த்திகளுடன் குதிரைகள் மீது அமர்ந்து, "தேவிக்கு ஜே! தேவிக்கு ஜே!" என்று கோஷமிட்டுக் கொண்டு வந்தனர். முகமூடி போட்ட ஒருவன் அப்படைக்குத் தலைமை வகித்து நடத்தி வந்தான். புதர்களிலிருந்து வணிகர்கள் இக்காட்சியைக் கண்டு பயந்தனர். உத்தமன் மரக்கிளையிலேயே இருந்து கொண்டு யோசித்தான், என்ன செய்வதென்று! வணிகர்கள் கூடாரத்தருகே வந்து சேர்ந்ததும், கொள்ளைக் கூட்டம், உள்ளே நுழைந்து பார்த்து, "பட்சிகள் பறந்துவிட்டன" என்று பதைத்துக் கூவினர். முகமூடிக்காரன், "இந்த வேளையிலே எங்கே பறக்க முடியும்? இங்கும் அங்கும் தேடிப் பாருங்கள்" என்று உத்தரவிட்டான். அங்ஙனம் தேடுகையில் சில வணிகர் சிக்கினர். வாளோடு வாள் சந்தித்தது. உத்தமன் மரத்திலிருந்து குதித்து, வீரமாகப் போரிட்டான். ஆனால் வந்தவர்கள் அதிக எண்ணிக்கையானதால், போர் முடிவு அவர்களுக்கே சாதகமாகிவிட்டது. சில வணிகர் கொல்லப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர். உத்தமனுக்கு உடலெங்கும் காயம். "வணிகரின் பிணம் கிடைத்துப் பயன் என்ன? பணம் எங்கே?" என்று பதைத்துக் கேட்டான் முகமூடித் தலைவன். ஒருவரும் பதில் உரைக்கவில்லை. கூடாரத்தைக் கிழித்தான். குற்றுயிராக இருந்தவர்களைக் காலால் மிதித்தான். கொடுமை பல புரிந்தான். ஆனால் ஒரு வணிகரும் வாய் திறக்கவில்லை. முகமூடித் தலைவன், "பிணங்களைக் கழுகு கொத்தட்டும்; பிடிப்பட்டவர்களை இழுத்துக்கொண்டு புறப்படுங்கள்" என்று உத்தரவிட்டான். மலர்புரிக்கு, கதிரோன் ஒளி கிளம்புமுன் குதிரைப்படை சென்றது. தேவி கோயில் தோட்டத்திலே, வணிகர்கள் கைதிகளாக்கி நிறுத்தி வைக்கப்பட்டனர். மலர்புரியைக் கொள்ளையிட வந்த கூட்டத்தை ஆரியன், தேவி சேனையின் ஓர் சிறு பகுதியால் எதிர்த்துக் கொள்ளைக்காரரைக் கொன்றும் சிறைபிடித்தும், மலர்புரி மக்களுக்கு மகத்தான சேவை செய்தார் என்ற பிரகடனம் அரசியாரால் வெளியிடப்பட்டது. ஊர் மக்கள் கொள்ளைக்காரரைக் காணத் தேவி கோயிலில் குழுமினர். கள்ளன், வணிகரையே கொள்ளைக்கூட்டம் என்று கூறி மக்களை ஏய்த்தான். தேவிசேனையிலே, கோயில் பாதுகாவலுக்கு என்று அமைக்கப்பட்டிருந்த ஒரு பிரிவினரை, ஆரியன் வீரமணியைக் கேட்காமலே அழைத்துச் சென்று, வணிகர் கூட்டத்தைத் தாக்கியதுடன், வணிகரையே கொள்ளைக் கூட்டத்தினர் என்று வாய் கூசாது கூறியது கேட்ட வீரமணி வெகுண்டான். "தேவிசேனை இந்தத் திருவிளையாடலுக்குத்தானா?" என்று தன்னிடம் பயிற்சிபெற்ற வீரரைக் கேட்டான். "தங்கள் கட்டளை" என்றே ஆரியர் எங்களிடம் கூறினார்" என்று அவர்கள் கூறினர்.

ஆரியனிடம் நேரடியாக வம்பு வளர்த்துக் கொள்ள அது சமயமல்ல என்பதறிந்த வீரமணி, தன் கோபத்தை அடக்கிக் கொண்டு, ஆரியன் அபார வீரத்துடன், போரிட்டுக் கொள்ளைக் கூட்டத்தை அடக்கினதைப் பாராட்டிப் பேசினான். அரசியார் கைது செய்யப்பட்ட கொள்ளைக் கூட்டத்தைப் பார்வையிட வந்தபோது வீரமணியும் உடனிருந்தான். ஆரியன் மேடைமீது நின்று கொண்டிருந்தான். எதிரிலே வரிசையாகக் கைதிகள் நிறுத்தப்பட்டிருந்தனர். அரசி, வீரமணியுடன், அவர்களைப் பார்வையிட்டுக் கொண்டு வருகையில், உத்தமன், வீரமணியைக் கண்டான். ஆச்சரியத்தால், வாய்பிளந்து நின்றான். வீரமணிக்கும் அதே நிலை. இருவர் முகமும் ஒரு விநாடியில் மாறிவிட்டது. அரசி இதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, "மணி வீரரே! ஏன், இக் கொள்ளைக் கூட்டத்தாரிலே யாரோ உமக்குத் தெரிந்திருப்பதுபோல் தோன்றுகிறதே. இவனைக் கண்டதும் உமது முகமும் மாறிவிட்டது; அவன் முகமும் மாறிற்றே. இதென்ன விந்தை?" என்று கேட்கவே, வீரமணி சமர்த்தாக "தேவி! உண்மையில் இவனைக் கண்டதும், ஒருவனுடைய பழைய முகம் என் நினைவிற்கு வந்தது. என் தாய், விதவையாக இருக்கையிலே, ஓர் விபத்து நேரிட்டது. விசித்திரமான அந்நிகழ்ச்சி இந்த விநாடி என் மனதிலே அலைபோல் மோதிற்று. அது ஒரு பெருங்கதை" என்று கூறிப் பெருமூச்செறிந்தான். அரசி, அவ்விடத்தை விட்டு நடந்து கொண்டே, "கதை பெரிதானால் என்ன? சுருக்கமாகக் கூறு" என்று கட்டளையிட, வீரமணி, "என் தாய், தேவ பிரசாதத்தால் விதவைக் கோலத்திலேயே ஓர் குழந்தையை ஈன்றாள்" என்றான். உடனே அரசியின் முகம் கறுத்துவிட்டது. பேச்சிலே நடுக்கமேற்பட்டது. வீரமணி அதனைத் தெரிந்துகொண்டு மேலும் ஆரம்பித்தான்;

"அழகான ஓர் ஆண் குழந்தை; ஆனால், பிறந்ததும் அதனை ஊருக்கஞ்சி வேறு யாரிடமோ கொடுத்து விட்டார்கள். அந்த மகனின் முகக்குறிகளை, என்னிடம் கூறினார்கள். இன்று நான் கண்ட அக்கொள்ளைக்காரனின் முகம், என் தாய் சொன்ன குறிகளுடன் இருக்கக்கண்டே திகைத்தேன்" என்று கூறிமுடித்தான். அரசியால் அதற்குமேல் தன் துக்கத்தை அடக்க முடியவில்லை என்பதை வீரமணி உணர்ந்தான். "தான் பெற்ற குழந்தையைத் தத்தளிக்க விட்டு, தாய் தர்பார் நடத்த முடியுமா தேவி" என்று சொன்னான். "யாரைக் கேட்கிறாய் அக்கேள்வி" என்று அரசி கேட்டாள். "ஏன், என் தாயைக் கூடத்தான் கேட்பேன். தங்களையும் கேட்கிறேன். தங்கள் மகளின்..." என்று மெல்லக் கூறினான். அரசி தன் முகத்தை கைகளால் மூடினாள். "அழவேண்டாம் அரசியாரே! நான் தங்கள் வரலாறு தெரிந்தவன். அவர் மூலமாகவே கேள்விப்பட்டேன். இங்கு நான் வேலைக்கு அமர்ந்ததோ, தங்களின் இழந்த செல்வத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் தான்" என்று ஆறுதல் கூறினான்.—இப்படி அரசியும் வீரமணியும் பேசிக் கொண்டே தேவியின் கோயிலுக்குள் போனதைப் பார்த்துக்கொண்டிருந்த ஆரியன் அவசர அவசரமாகக் கைதிகளைச் சிறைச்சாலைக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்துவிட்டு, கோவிலுக்குள் புகுந்தான். அவன் வருவதை அறிந்த வீரமணி 'ஆரியன்' என்று மெல்லச் சொன்னான். அரசியும் சரேலென்று எழுந்து, கோயில் மூலக் கிரகம் சென்று, தேவியைக் கும்பிட்டு நின்றாள். முத்து முத்தாக நீர் கண்களிலிருந்து வெளிப்பட்டது. "என்ன, உருக்கம்! எவ்வளவு பக்தி" என்று வீரமணி, ஆரியனிடம் கூறி வியந்தான். "எல்லாம் அவள் சக்தி" என்று கூறிக்கொண்டே தேவி சிலையைக் காட்டினான் ஆரியன்.

மலர்புரியைக் கொள்ளையிடவந்த கூட்டத்தினரிலே பெரும்பாலோர் பிடிப்பட்டனர். சிலர் தப்பிச் சென்றனர். அவர்களைத் தேடிப் பிடித்து தூக்கிலிடவேண்டும் என்று மலர்புரி அரசியார் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஆரியன் கூறினான். அரசி ஓலை தயாரித்தால் ஒரு நொடியில் கையொப்பமிடுகிறேன் என்று பதில் உரைத்திட, மனம் மகிழ்ந்த ஆரியன், வீரமணியை உடனழைத்துக்கொண்டு தேவி கோயிலைவிட்டு வெளியே சென்றான். மலர்புரி அரசின் உத்தரவு அண்டை அயல் நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அங்குள்ள அரசியலாரும், எச்சரிக்கையாக இருக்குமாறு ஆரியன் தூண்டிவிட்டான். அநியாயமாகத் தம்மீது பழி சுமத்தப்பட்டதை எண்ணி வருந்திய வணிகர், தமது மன்னனிடம் சென்று முறையிடுவதைத் தவிர வேறு வழி தோன்றாது, தமது நாடாகிய பாண்டிய தேசத்துக்கு, வேறு பாதைகளிற் புகுந்து போவாராயினர். ஆண் உடையிலிருந்த நடனாவுக்கு, உத்தமன் கதி ஏதாயிற்றோ என்ற கவலை மிகுந்தது. ஆனால் வணிகர், 'நீயும் உடன்வரத்தான் வேண்டும்' என்று பல காரணம் கூறி வற்புறுத்தி இழுத்துச் சென்றனர்.