கலிங்க ராணி/கலிங்க ராணி 2


2


குலோத்துங்க சோழன் அரண்மனைப் பூங்காவிலே நடந்த காதற் காட்சி, நாம் மேலே தீட்டியது. அந்தப்புரத்திலே, அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயிர் போன்றிருந்த தோழி, தன் காதலனைக் காண, பூங்கா புகுந்தாள். அவளுக்காக மாமரத்தடியிலே காத்துக் கிடந்த வீரன், தென்றல் கண்டவன்போல், தாவிக் குதித்தெழுந்து தையலை ஆரத் தழுவினான். கையிலிருந்த பூக்குடலை தரையில் விழ, கூந்தல் சரிய, கோதை குதூகலமாகத் தன் காதலனைக் கட்டித் தழுவிக் கொண்டாள். அவர்கள் கிளப்பிய 'இச்'சொலி கேட்ட பறவைகள், மரக்கிளை விட்டு மற்றோர் கிளைக்குத் தாவின.

"வானம் துல்லிய நிறத்தோடு விளங்கிற்று. கதிரோன் ஒளிப் பிழம்பாக மட்டுமே இருந்தான். வெப்பத்தை வீசும் வேளை பிறக்கவில்லை. காலை மலர்ந்து, மாந்தர் கண் மலர்ந்த நேரம். மாலை மலரும் காதல் அரும்பாகி இருந்தது எனினும், அன்று அவனுக்குக் காலையிலேயே மலர்ந்து விட்டது. மாலையில் அவன் வீடு திரும்ப நெடுநேரம் பிடிக்கும்! வேட்டைக்குச் செல்கிறான் அன்று! வேட்டைக்குப் புறப்படுமுன், வேல்விழியாளைக் கண்டு, விருந்துண்டு போக மனம் தூண்டியது. கால்கள் வேலிகளையும் முட்புதரையும் தாண்டின. கள்ளத்தனமாக உள்ளே நுழைந்தான். காவலன் காணவில்லை என்பது அவன் நினைப்பு.

காவலனுக்குக் கண்ணுமுண்டு; கருத்துமுண்டு! எனவே காதலர் கூடிப் பேசுவதைக் கண்டுங் காணாதவன் போல், பலமுறை இருந்ததுபோல், அன்றும் இருந்தான். மேலும், அந்த வஞ்சி அரசிளங்குமரியின் ஆருயிர்த் தோழி குணவதி, கோலமயில் சாயலும், கிளிமொழியும், கனக நிறமும், கருணை உள்ளமும் பெற்ற பண்பினள். அவளது காதலன் வீரர்க்கோர் திலகம். மன்னன் குலோத்துங்கனின் குதிரைப் படைத்தலைவருள் ஒருவன். வீரத்தாலேயே, இளம் பருவத்திலேயே அந்த உயர்நிலை பெறமுடிந்தது. தொண்டைமானிடமிருந்து 'தோடா' பரிசு பெற்றவருள் அவன் ஒருவன். எனவே இவ்விருவரும் சந்தித்துப்பேச, மன்னனின் பூங்காவை மன்றலாக்கிக் கொண்டது கண்டு காவற்காரன் களித்தானேயன்றிக் கோபித்தானில்லை.

அவர்கள் சந்திக்கும்போது, அவன் உலகமே காதல் மயமாக இருப்பதை எண்ணுவான்! குக்குக்கூவெனக் குயில் கூவி, காதற் கீதத்தை அள்ளி அள்ளி வீசுவதை நினைப்பான். நெடுநாட்களுக்கு முன்பு, நீர் மொள்ள அருவிக்கு வரும் நீலநிறச் சேலைக்காரி வேலாயியைத் தான் கண்டதும், கனைத்ததும், அவள் முதலில் மிரண்டதும், பிறகு இணங்கியதும், ஆகிய பழைய காதல் நிகழ்ச்சியை எண்ணுவான். "நரைத்தேன் இன்று; ஆனால் நானும் முன்னம் நாடினேன், பாடினேன், ஆடினேன் அணங்குக்காக" என்று மனதில் எண்ணிக் கொள்வான். தோட்டத்து வாசலிலே நின்று, யாரும் உள்ளே நுழையாதபடி பார்த்துக் கொள்ளும் தொழிலைவிட்டு, காதலரைக் காண யாரும் புகாதபடி காவலிருப்பான். இதனைக் காதலர் அறியார். அவர் தம்மையன்றி வேறெதைத்தான் அதுகாலை அறிதல் முடியும்?

அரசிளங்குமரியின் குரல்கேட்டு, அரைகுறையாயிற்று அன்று காதலர் விருந்து. விரைந்தோடிவந்த தோழியைக் கண்ட அம்மங்கை, கோபித்துக் கொண்டு, "காலமும் அறியாய், இடமும் தெரியாய், கடமையையும் மறந்தாய்." என்று கடிந்துரைத்தாள். தோழி தலைகுனிந்து நின்றாள். பூக்குடலை காலியாகவே இருந்ததைக் கண்ட மற்றத் தோழியர், "மனம் பறிக்கும் வேளையிலே மலர் பறிக்க மறந்தாள்" என்று கூற அதுவரை கோபித்ததுபோல் பாவனை செய்த அரசிளங்குமரி, கலீர் எனச் சிரித்து, தோழியின் கன்னத்தைக் கிள்ளி, 'கதிரோன் வராவிட்டால் தாமரை மலராது என்பார்களே, அதுபோல் உன் அன்பன் வராவிட்டால், உன் முகம் மலருமோ!' என்று கேலி செய்தாள். தோழி அப்போதுதான் பயந்தெளிந்தாள். பயம் போனது. நாணம் 'நான் உன்னை விடுவேனா?' என்றுரைத்துக் கொண்டே அவளைப் பிடித்துக்கொண்டது.

"வேட்டையாடக் காட்டுக்குப் போகக் கிளம்பியவன் இங்கே வந்தது ஏனடி?" என்று அரசிளங்குமரி ஒரு தோழியைக் கேட்க, அவள் "இவளைக் கண்டு மானென்று மயங்கி வந்தான் போலும்!" என்று சொல்லிச் சிரித்தாள்;

"வேட்டைக்குக் கணைகள் வேண்டும்; இங்கும் கணைவிடு காட்சிதான் நடந்தது" என்று கிண்டல் செய்தாள் அரசகுமாரி.

"ஆமாம் தேவி! சாதலுக்குச் செலுத்தும் கணைகள் காட்டிலே! காதலுக்குக் கணைகள் காட்டில் அல்லவே!" என்றாள் குறும்புக்காரத் தோழி.

"ஆமாம்! காட்டில் அல்ல! நம் வீட்டுத் தோட்டத்தில்" என்று கூறிக்கொண்டே, அம்மங்கை காதற் குற்றவாளியைக் கைப்பிடித்திழுத்துத் தரதரவெனச் சுற்றி ஆடினாள், களித்தாள். அம்மங்கையும் அதன் வயப்பட்டாளோ என்று மற்ற தோழியர் சந்தேகித்தனர்."

யார் கண்டார்! யார் காணவல்லார்! காதற் கணைகள் அம்மங்கையை மட்டும் விட்டுவிடுமோ! அதன் சக்தியின் முன்பு, பட்டத்தரசியாக வேண்டியவரும் தட்டுக்கெட்டு தடுமாறித்தானே தீருவர்! கண்டவர் அஞ்சிடக் கடும் போரில் தன்னிகரற்ற குலோத்துங்கனின் குமரியானாலும், குமரன் தோன்றிக் குறுநகை புரியின் குளிரும் விழியுடன் கொடியெனத் துவண்டு சாயத்தானே வேண்டும்.

"நடனராணி! கூச்சம் இப்போதிருந்து பயன் என்ன? வா, பந்தாடுவோம்" என்று அரசிளங்குமரி கூறினாள். நடனராணி என்ற பெயரே நாம் குறிப்பிட்ட தோழியுடையது. நடனத்திலே மிக்க கீர்த்தி வாய்ந்தவள். நாட்டினர் அதுபற்றியே, நடனராணி என்று அவளை அழைத்தனர்.

பந்தாடினர் பாவையர்; நடனராணியை விட்டுப் பிரிந்த அவள் காதலன் வீரமணியின் மனம் படும்பாடு, அவர்களாடும் பந்தும் படாது என்னலாம். கிளியைக் கண்டால் அவள் மொழி நினைவு! குயிலைக் கண்டால் அவள் கீதக் கவனம்! மயிலைக் கண்டால் அவளது நடன நேர்த்தியின் கவனம் அவன் நெஞ்சில் ஊறும். பொல்லாத பறவைகள், சும்மாவிட இல்லை. ஜோடி ஜோடியாகப் பறப்பதும், பாடுவதும், உண்பதுமாக உல்லாசமாகவே இருந்தன.

ஊராள்வோன் உல்லாசத்துக்காக வேட்டைக்குக் கிளம்ப, வீரமணியும் உடன் சென்றான்! வேட்டைக்காரர் கிளப்பிய பறையொலியும், ஊது குழலொலியும், குதிரைக் குளம்பொலியும், வீரர் முழக்கொலியும் கேட்டு, பேடைக் குயிலும், மாடப்புறாவும், கோலமயிலும், கொக்கு வக்காவும் பயந்து அலறிப் பறந்தோடின! புதர்களிலே சலசல வெனச் சத்தம் கிளம்பிற்று. தொலைவிலே காட்டு மிருகங்கள் உறுமுவது கேட்டது. மோப்பம் பிடித்துச் செல்லும் நாய்கள், வாலை மடக்கி, தலையைக் குவித்து தரையை முகர்ந்தன! இடையிடையே புலி சென்ற அடையாளம் காணப்பட்டது. வீரர்கள் இன்று நல்ல வேட்டைதான் என்று களித்தனர். மன்னன் குலோத்துங்கனும் வீரமணியும் மட்டுமே விசாரத்திலாழ்ந்திருந்தனர். வீரமணியின் விசாரம், காதலியிடம் சரசச் சமர் புரிவதை விட்டு, சத்தற்ற வேட்டைக்கு வந்தோமே என்பதனால்! குலோத்துங்கனோ பகை வேந்தர்களை வேட்டையாட சமயம் கிடைக்கவில்லையே, பயந்தோடும் மிருகங்களைத்தானே வேட்டையாடவேண்டி இருக்கிறது என்று கவலை கொண்டான். குலோத்துங்கச் சோழனின் வீரப்பிரதாபத்தை, வெஞ்சமர் பல நிரூபித்து விட்டதால் வேந்தர் பலரும் விழியில் வேதனை தோன்றிட வாழ்ந்தனர். பறை ஒலி கேட்டு அன்று மிருகங்கள் பயந்தோடியும், பதுங்கிக் கொண்டதும் போலவே, பல மன்னர்கள் குலோத்துங்கனின் படை ஒலி கேட்டஞ்சிப் பயந்துப் பதுங்கினர். மன்னனின் படைத்தலைவன், மாவீரன் கருணாகரத் தொண்டைமான் "கண்டதுண்டமாக்கிக் கழுகுக்கிடுவேன், காயும் எதிரிகள் களத்திலே நிற்பின்" என்று முழங்கினான். எவரே எதிர்ப்படுவர்! உயிரிழக்க, அரசிழக்க, எவரும் ஒருப்படாரன்றோ!

எனவே குறுநில மன்னரும் குலோத்துங்கனுக்கு அடங்கியே வாழ்ந்தனர்! தோள் தினவெடுத்தது. வேட்டை ஒரு சிறு பொழுது போக்காகுமென்றே மன்னன் புகுந்தான் காட்டிலே. தினவெடுக்கும் உள்ளத்தைத் திருத்தும் நிலை காணா வீரமணி, மன்னன் பின் சென்றான்; மனதை மங்கை பால்விட்டே வந்தான். வழி நடந்தான்.

இயற்கை எழில் செயற்கைப் பூச்சின்றி பூரித்துக் கிடக்கும் காட்டினுள்ளே, மன்னன் குலோத்துங்கன் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்காகப் புகுந்த காட்சியும், குதிரை மீதமர்ந்து பாய்ந்து சென்ற வீரர்களின் வருகை கண்ட துஷ்ட மிருகங்கள் மிரண்டோடினதும் கண்ட வீரமணிக்கு, குலோத்துங்கன், இளவரசராக இருந்தபோது, வடநாடு சென்ற காலையில், சோழநாட்டிலே சதிகாரர் கூடிக் கொண்டு, குலோத்துங்கனுக்கென்று கங்கை கொண்ட சோழன் குறித்திருந்த மணிமுடியை, கங்கை கொண்ட சோழனுடைய மகன் அதிராசேந்திரனுக்குச் சூட்டியதும், அதுபோது சோழமண்டலமே காட்டுநிலை அடைந்ததும், பிறகு, வாகை சூடி வடநாட்டிலிருந்து குலோத்துங்கன் திரும்பியதும் சதிகாரர் பதுங்கிக் கொண்டதுமான சம்பவமும், சமரும் காட்சியும் நினைவிற்கு வரவே புதர்களிலே மறையும் புலிக்குட்டிகளையும், மரப்பொந்துகளில் ஓடி ஒளியும் மந்திகளையும், வீறிட்டு அலறி ஓடும் வேங்கையையும், உறுமிக் கொண்டே ஓடும் காட்டுப் பன்றியையும், மிரண்டோடும் மான் கூட்டத்தையும் கண்டு களித்தான்.

காட்டிலே கணைகள் சரமாரியாய்க் கிளம்பின. ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும் பறை ஒலியும் பலவுமாகக் கலந்து காட்டிலே கலக்கத்தை உண்டாக்கிற்று. வேட்டை விருந்தை மன்னருக்குத் தந்த காடு, வனப்பு வாய்ந்தது. வேங்கை, குறிஞ்சி, தேக்கு, கமுகம், புன்னாகம் முதலிய மரங்கள் நிறைந்து காணப்பட்டன. உலர்ந்து காணப்பட்ட ஒமை மரங்களும், புகைந்து கிடந்த வீரை மரங்களும், காரைச் செடியும், சூரைச் செடியும் காண்போருக்கு இயற்கையின் விசித்திரத்தை விளக்கின.

சந்தன மரங்கள் ஓர் புறம்! அதன்மீது தமது உடலை மோதி யானைகள் தேய்த்ததால் உண்டான மணம், 'கம்'மென்று கிளம்பிற்று. இண்டங்கொடிகள் இங்குமங்குமாகச் சுருண்டு கிடந்தன. மரத்தின் வேரோடு வேர்போல் மலைப் பாம்புகள் உண்ட அலுப்பு தீரப் புரண்டு கிடந்தன. வாகையும் கூகையும், மூங்கிலும் பிறவுமான பல விருட்சங்கள் விண்முட்டுவோம் என்றுரைப்பதுபோல் வளர்ந்து கிடந்தன. சிற்சில இடங்களிலே குலைகுலுங்கும் வாழையும் காணப்பட்டன. வீரர்கள் தமது கணைகளை விடவே, கரிக் குருவியும் கானாங்கோழியும், காடையும், கிள்ளையும், மயிலும், மாடப்புறாவும், உள்ளான், சிட்டு, கம்புள், குருகு, நாரை, குயில் முதலிய பறவைகள், பயந்து கூவி, பல்வேறு திசைகளிலே பறந்தன. பறக்கும்போது பலவித ஒலி கிளம்பியது. புதியதோர் பண் போன்றிருந்தது. கானாறு ஒரு புறம், காட்டெருமைக் கூட்டம் மற்றோர்புறம், யானை ஒரு புறம், புலி கரடி வேறோர் புறம்! வீறுகொண்ட மரங்களிலிருந்து கிலிகொண்டு சிறகை விரித்துப் பறந்தன பெரும் பறவைகள்!

குரங்குக் கூட்டம் கீச்செனக்கூவி, கிளை விட்டுக் கிளை தாவி, வீரரின் வாள் வேல் ஒலியால் கிலி கொண்டு குதித்தோடின. வால் சுழற்றின வேங்கைகள். குள்ளநரிகள் ஊளையிட்டன. முட்புதர்களைத் தாண்டிக்கொண்டு சிறுத்தைகள் சினந்தோடின. கருங்கற்களிலே, பிலங்கள் தேடின பாம்புகள்! இத்தகைய காட்சிகளைக் கண்டு களித்து, வில் வளைத்து, கணைகள் தொடுத்து, விரைந்தோடி வாள் கொண்டு தாக்கி, வேல் எறிந்து வேங்கையும் வேழத்தையும் வீழ்த்தி, வீர விளையாட்டிலே ஒரு நாள் பூராவும் கழித்தனர். மன்னரும் அவர்தம் பரிவாரமும், வேட்டையிலே கிடைத்த பொருள்களைச் சேகரித்து வீடு திரும்ப மன்னன் கட்டளை பிறக்குமென்று எண்ணிய வீரமணி பொழுது சாய்வதற்குள் ஊர் சென்றால் மீண்டும் ஓர் முறை பூங்காவிலே நடனராணியைக் கண்டு களிக்கலாம்; காட்டிலே கண்ட காட்சிகளை, வேட்டையாடிய செய்திகளைக் கூறிடலாம் என்று கருதினான். மேலும் அவன் பக்குவமாக ஓர் பஞ்சவர்ணக் கிளியைப் பிடித்து வைத்திருந்தான். அதனை நடனராணிக்குத் தர விரும்பினான். ஆனால் அவன் எண்ணியது ஈடேறவில்லை. மன்னன் புதியதோர் கட்டளை பிறப்பித்தான். 'புறப்படுக காஞ்சிக்கு' என்று கூறிவிட்டான். புரவிகள் காவேரிக்கரை காட்டைக் கடந்து கச்சி செல்ல விரைந்தன.

அன்று மாலை! அரசிளங்குமரி அம்மங்கையும், நடனராணியும், மற்றும் சில தோழியரும், வழக்கம்போல் களித்தாடிக் கொண்டிருந்தனர். நடனராணியின் உள்ளம், காட்டிலே கணைவிடும் காதலன்மீதே இருந்தது. பல வகை விளையாட்டுகளில் பாவையர் ஈடுபட்டனர். பரிவாரங்களுடன் காட்டுக் காட்சிகளையும் இடையே உள்ள நாட்டு மாட்சியையும் கண்டுகளிக்க கச்சி போய்ச் சேரு முன்னம், மன்னன் வருகையை முன்கூட்டிக் கச்சிக் காவலனுக்குக் கூறிட, வீரமணியை விரைந்து முன்னாற் செல்லுமாறு மன்னன் கட்டளையிட்டான். மன்னன் மொழிக்கு மாற்றுமொழி கூறல் எங்ஙனம் இயலும்? பஞ்சவர்ணக் கிளியை, தோழனொருவனிடம் தந்து, அதனைத் தன் காதலியிடம் தந்து, தான் கச்சி நகருக்குக் கடுகிச் செல்லுவதைக் கூறுமாறு வேண்டிக் கொண்டான். செவி மந்தமுள்ள அத்தோழன், யாரிடம் கிளியைத் தருவது என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லை. "நான் மணம் செய்து கொள்ள இருக்கும் அம்மங்கையை நீ அறியாயோ?" என்று வீரமணி அவசரத்துடன் கேட்க, தோழன் "அம்மங்கையை அறியேனா!" என்று கூறிக் கொண்டே கிளியைப் பெற்றுக் கொண்டான். அவன் மன்னன் குமரி அம்மங்கைத் தேவியையே, வீரமணி குறிப்பிடுவதாகக் கருதினான்! அவனையே மன்னன் அழைத்து, "ஏ! மருதா! விரைந்து நம் நகர் சென்று, ஏழிசை வல்லியாரைச் சேடியருடன் கச்சி வரச்சொல்லு; நாம் அங்குச் சின்னாட்கள் தங்க எண்ணியுள்ளோம்" என்று கூறிட, மருதன் தலைநகர் புறப்பட்டான்.

பஞ்சவர்ணக் கிளியோடு மருதன் உறையூர் நோக்கியும், கவலையுடன் வீரமணி கச்சி நோக்கியும் விரைகின்ற வேளையிலே மன்னன் குமரி அம்மங்கை தோழியருடன் பூங்காவிலே விளையாடிக் கொண்டிருந்தாள். பொழுது சாய்கிறது; போனவர் திரும்பக் காணோமே என்று நடனராணி ஏக்கத்துடனேயே விளையாட்டில் விழியும், வீரமணியிடம் மனமும் செலுத்திக் கிடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலிங்க_ராணி/கலிங்க_ராணி_2&oldid=1724921" இலிருந்து மீள்விக்கப்பட்டது