கலிங்க ராணி/கலிங்க ராணி 3


3


டனராணி, பதுமா என்ற பரத்தையின் வளர்ப்புப் பெண். வனப்பும், வளம்பெற்ற மனமும், இசைத்திறனும், நாட்டியக் கலைத்திறனும் ஒருங்கே பெற்றவள். மன்னன் மனமகிழவும், மற்றோர் கொண்டாடவும் 'மாதவியோ' என்று கலைவல்லோர் போற்றவும் வாழ்ந்து வந்தாள். அவளது அரிய குணம், அந்தப்புரத்துக்கு எட்டி, அம்மங்கையின் கருணைக்கண்கள் நடனராணிமீது செல்லும்படிச் செய்தன. நடனராணி அம்மங்கையின் ஆருயிர்த் தோழியானாள். பதுமா தன் வளர்ப்புப் பெண்ணின் மனப்பாங்கு, பரத்தையராக இருக்க இடந்தராததையும், பல கலை கற்று வாழவே பாவை விரும்புவதையும் அம்மங்கையிடம் கூற, "அதுவே முறை! இனி நடனராணியின் உறைவிடம் நமது அரண்மனையே" என்று கூறி, அவளைத் தன்னுடன் இருக்கச் செய்தாள். நடனராணியை வீரமணி நெடுநாட்களாகவே நேசித்து வந்தான். அவள் அரண்மனைக்கு வந்து சேர்ந்த பிறகு, அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கண்கள் பேசின; கனிந்தது காதல். கண்டவர் "சரியே" என்றனர். கேட்டவர் "முறையே" என்றனர். நடனராணியின் நற்குணம் நாடெங்கும் தெரியும். வீரமணியின் திறமும் வேந்தரும் மாந்தரும் அறிவர். "ஆற்றலும் அழகும் ஆரத்தழுவலே முறை" என்று ஆன்றோர் கூறினர். வீரமணியின் தாய் மட்டுமே "பரத்தையரிலேதானா என் பாலனுக்குப் பாவை கிடைத்தாள்? குன்றெடுக்கும் தோளான் என் மகன்; குறுநில மன்னன் மகள் அவனுக்குக் கிடைக்காளோ!" என்று கவலையுற்றாள். ஆனால், வீரமணி, நடனராணியிடம் கண்ட கவர்ச்சியை அவனன்றோ அறிவான்!

இருண்டு சுருண்ட கூந்தல், பிறைநுதல், சிலைப்புருவம், நெஞ்சைச் சூறையாடும் சுழற் கண்கள், அரும்பு போன்ற இதழ், முத்துப் பற்கள், பிடியிடை இவை கண்டு, கரும்பு ரசமெனும் அவள் மொழிச்சுவை உண்டு, கண்படைத்தோருக்குக் காட்சியென விளங்கும் நடன நேர்த்தியைக் கண்டு, மையல் கொண்ட வீரமணி நடனராணியிடம் நெருங்கிப் பழகியதும் சீரிய குணத்தின் பெட்டகமாகவும் இருப்பதையும், கருத்து ஒருமித்திருப்பதையும் கண்டு, களி கொண்டு, "அவளையன்றிப் பிறிதோர் மாதைக் கனவிலுங் கருதேன்" என்று கூறிவிட்டான். மணவினையை முடித்துக் கொள்ளாததற்குக் காரணம், தாய் காட்டிய தயக்கமல்ல! தாய் தனயனுக்குக் குறுநில மன்னனின் மகள் தேடிட எண்ணினாள். தனயனோ, கோமளவல்லிக்கு மணவினைப் பரிசாக வழங்க குறுநிலம் தேடினான். அதற்காகக் கொற்றவனிடம் தான் கற்ற வித்தையத்தனையும் காட்டிச் சேவை புரிந்துவந்தான். நடனராணியின் வாழ்க்கை நல்வழியிலே அமைய இருப்பது கண்டு, களித்து, பதுமா நிம்மதியாகவே நீங்காத் துயிலுற்றாள்.

பூங்காவிலே நடனராணி புதிதாகச் சேடியாக அமர்ந்த ஓர் ஆரியக் கன்னியிடம், தமிழர் சிறப்புப் பற்றி எடுத்துக் கூறிக்கொண்டிருந்தாள். கங்கைக் கரையிலே தனது இனத்தவர் கனல்மூட்ட ஓமத்தீ மூட்டுவதை ஆரியக்கன்னி உரைத்திட, நடனமணி "எம்மவரின் ஓமம் எதிரியின் படை வீட்டைக் கொளுத்துகையில் கிளம்பும்" என்றுரைத்து மகிழ்ந்தாள்.

"சகல கலை வல்லவளே! பேச்சு போதும். பந்தாடுவோம் இனி" என்று அம்மங்கை கூறிட, பாவையர் பந்தாடலாயினர். உற்சாகமற்றிருந்த நடனராணியின் உள்ளத்தையும் பந்தாட்டம் குளிரச் செய்தது. கைவளைகள் 'கலீல் கலீல்' என ஒலிக்க, காற் சிலம்புகள் கீதமிட, கூந்தல் சரிய, சூடிய பூ உதிர, மகரக்குழை மானாட்டமாட, இடை திண்டாட, 'மன முந்தியதோ, விழி முந்தியதோ,' கரம் முந்தியதோ' என்று காண்போர் அதிசயிக்கும் விதமாக, பாவையர் பந்தடித்துக் களித்தனர். பூங்கொடிகள் துவளத் தொடங்கின. வியர்வை அரும்பினது கண்ட மன்னன் மகள் "பந்தாடினது போதுமடி, இனி வேறோர் விளையாட்டுக் கூறுங்கள். ஓடாமல் அலுக்காமலிருக்க வேண்டும்" என்றுரைத்திட, நடனராணி "பண் அமைப்போமா?" என்று கூற, ஆரிய மங்கை 'பதம் அமைப்போம்' என்று கூற, 'சரி' என இசைந்தனர். ஒருவர் ஒரு பதத்தைக் கூற அதன் ஓசைக் கேற்பவும் தொடர்பு இருக்கவுமான பதத்தை மற்றவர் இசையுடன் உடனே அமைந்திட வேண்டுமென்பது அவ்விளையாட்டு. சிந்தனைக்கே வேலை சேயிழையார் சுனையில் துள்ளும் மீன்போல், சோலையில் தாவும் புள்ளிமான் போல் தாவாமல் குதிக்காமல் விளையாட வழி இதுவே.

அம்மங்கை துவக்கினாள், பதம் அமைக்கும் விளையாட்டினை! நடனராணியும் ஆரிய மங்கை கங்காபாலாவும் அதிலே கலந்துகொண்டனர். மற்றையத் தோழியர் வியந்தனர்.

அம்மங்கை : நாட்டி
நடனராணி : இணைவிழி காட்டி
கங்கா : இளையரை வாட்டி
அம்மங்கை : மனமயல் மூட்டி
நடனராணி : இசை கூட்டி
கங்கா : விரக மூட்டி

இதைக் கேட்டதும் நடனராணி 'விரகமூட்டி' என்றதற்குப் பதில் 'இன்பமூட்டி' என்று கூறுவதே சாலச் சிறந்தது' என்றாள். "விரகம், விசாரம்! அது வேண்டாமடி கங்கா. அது நடனாவுக்கு நோயூட்டும்; வேறு கூறு' என்று அம்மங்கை கேலி செய்தாள். "எனக்கொன்றுமில்லையம்மா. ஆகட்டும் கங்கா, நீ துவக்கிடு இப்போது" என்றாள் நடனம்.

கங்கா : சரசமொழி பேசி
அம்மங்கை : வளை அணி கை வீசி
நடனம் : வந்தாள் மகராசி!

என்று கூறி, கங்காபாலாவைச் சுட்டிக்காட்டி சிரித்தாள்.

"நீங்கள் இருவருமே பதம் அமையுங்கள். நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம் உங்கள் சமர்த்தை!" என்று அம்மங்கை கூறினதால், ஆரிய மங்கையும் ஆடலழகியும் பதமமைக்கலாயினர்.


நடனம் : மாலையிலே
கங்கா : மலர்ச்சோலையிலே
நடனம் : மாங்குயில் கூவிடும் போதினிலே
கங்கா : மதிநிறை வதனி!
நடனம் : இதழ்தரு பதனி
கங்கா : பருகிடவரு குமரன்
நடனம் : குறுநகையலங்காரன்
கங்கா : குண்டல மசைந்தாட
நடனம் : கோமளம் விரைந்தோட
கங்கா : மயில்கள் ஆட
நடனம் : மகிழ்ந்தே நாட


"சரியான மொழி! நடனத்தின் நிலை இதுதான் இப்போது" என்று அரசகுமாரி கேலி செய்தாள்.

"கடைசியில் என்னைக் கேலி செய்யத்தானா தேவி இந்த விளையாட்டு?" என்றாள் நடனராணி. "கேலியல்லவே இது" என்று கூறிக் கன்னத்தைக் கிள்ளி காவலன் குமரி "மற்றொன்று ஆரம்பி பாலா" என்று பணித்தாள்.

கங்கா : பூங்காவில் பார் அரும்பு
நடனம் : பூவையருக்கே அது கரும்பு
கங்கா : மனமில்லையேல் வேம்பு

என்று கூறினாள். தன்னை மீண்டும் கேலி செய்வதைத் தெரிந்து கொண்ட நடனம், "பாய்ந்து வருகுதே பாம்பு" என்று கூறினாள். பாம்பு என்றதும் கங்காபாலா, பயந்து 'எங்கே? எங்கே?' என்று அலறினாள். நடனம் சிரித்துக் கொண்டே, "பதத்திலே பாம்பு, நிசத்தில் அல்ல" என்று கூறிக் கேலி செய்தாள். எல்லோரும் கைகொட்டி நகைத்தனர். கங்காபாலா வெட்கித் தலைகுனிந்தாள். அதேசமயம் 'கணீர் கணீர்' என்று அந்தப்புரத்து மணி அடிக்கப்பட்டது. 'ஏன்? என்ன விசேஷம்? மணி அடித்த காரணம் என்ன? என்று கூறிக் கொண்டே பாவையர் அந்தப்புரத்தை நோக்கி ஓடினர்.

அம்மங்கையும், நடனராணியும் அரண்மனைக்குள் சென்றனர். குலோத்துங்கச் சோழனின் தேவி, தியாகவல்லி அவர்களை எதிர்கொண்டழைத்து, "மங்கா! மன்னர் காஞ்சிபுரம் போகிறாராம். என்னையும் வரச் சொன்னார். காலையிலே புறப்படுகிறேன். நீயும் வருகிறாயா?" என்று கேட்க, "நான் வரவில்லையம்மா" என்று அம்மங்கை கூறிவிட்டாள். செய்தி கொண்டுவந்த மருதன், அம்மங்கையை வணங்கிவிட்டு, "தேவி! இதோ இந்தப் பஞ்சவர்ணக் கிளியை வீரமணி தங்களிடம் தரச் சொன்னார்" என்று கூறிக் கிளியைத்தர, அம்மங்கை ஆச்சரியப்பட்டு, நடனராணியை நோக்கியபடி, "கேட்டாயோ நடனம், வீரமணி கிளியை எனக்குத் தரச் சொன்னானாமே" என்று கூறிட, நடனம் 'நாட்டிலேயும் காட்டிலேயும் கிடைக்கும் எந்த உயர்தரப் பொருளும் தங்களுக்குக் குடிபடைகள் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்" என்று கூறினாள். ஆனால், நடனராணிக்குக் கொஞ்சம் மனக் கஷ்டந்தான். இதைத் தெரிந்து கொண்டாள் ஆரியப் பெண் கங்காபாலா! ஆகவே இருவரிடையேயும் விரோதத்தை மூட்டிவிட வழி கிடைத்துவிட்டது என்று எண்ணிக் களித்தாள். நடனராணி இருக்கும்வரை, அரண்மனையிலே தனக்குச் சரியான செல்வாக்குக் கிடைக்காது என்று கங்காபாலா கருதினாள்.

அம்மங்கையிடம் தனக்குச் செல்வாக்கு ஏற்பட்டுவிட்டால், ஆரிய குலத்துக்கே சோழ மண்டலத்திலே உத்தியோகம் உயர் ஸ்தானம் கிடைக்கும்படி செய்ய முடியுமல்லவா! பஞ்சவர்ணக் கிளியுடன் அம்மங்கை படுக்கையறை சென்று, தங்கக் கூண்டிலே கிளியைவிட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில், நடனராணியிடம் பாலா, "நடனம்! என்னடி பரிசு வேறு யாருக்கோ விழுந்து விட்டது போலிருக்கிறதே! உனக்கல்லவா கிளியை அவர் அனுப்பியிருக்க வேண்டும்? எதற்காக அரசகுமாரிக்கு அனுப்பினார்' என்று கேட்டாள். அவள் பேச்சு, கோபத்தையும் ரோஷத்தையும் நடனத்தினிடம் மூட்டவேண்டுமென்று இருந்தது. இந்தச் சூதை ஒருவாறு தெரிந்துகொண்ட நடனராணி, பாலாவின் நாவை அடக்கினாள்.

மந்தச் செவியன் மருதன் செய்த இந்தச் சங்கடத்தை ஏதுமறியாத வீரமணி, நடனத்தை எண்ணியபடி கச்சி சென்று, மன்னன் வருகிறார் என்ற செய்தியை, கச்சி நகர்க் காவலனிடம் கூறிவிட்டு, மன்னனை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதிலே ஈடுபட்டிருந்தான்.

மன்னன் தன் பரிவாரங்களுடன், காட்டைக் கடந்து, கச்சி நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலிங்க_ராணி/கலிங்க_ராணி_3&oldid=1724924" இலிருந்து மீள்விக்கப்பட்டது