கலிங்க ராணி/கலிங்க ராணி 20


20


"தேவி கட்டளையிட்டாளோ, இல்லையோ—அது ஒருபுறம் கிடக்கட்டும்; ஆரியனிடம் சிக்கி நாட்டை முடமாக்கிய மலர்புரி அரசியிடமிருந்து நாட்டை மீட்டிட நாம் ஏன் நமது சக்தியைப் பயன்படுத்தக் கூடாது?" என்று கரிமுகன் யோசித்தான். விநாடியிலே காட்டுத் தீப்போல அவனுடைய ஆவல் மூண்டுவிட்டது. ஆரியனை நோக்கினான்:

"சரி! நான் படைகளுடன் அரண்மனையை முற்றுகையிட்டால், நீர் புதிதாகச் சிருஷ்டித்துள்ள தேவி சேனை என் படையுடன் போரிடுமா?" என்று கேட்டான்.

'தேவியின் கட்டளையை நிறைவேற்றவே தேவிசேனை' என்று மறுமொழி புகன்றான் ஆரியன்.

"மக்கள் புரட்சி செய்தால்...." என்று கரிமுகன் இழுத்தான்.

"ஆம்! அது படைகளின் வலிமையைவிட ஆபத்து! பெரும்புயல் அல்லவா மக்களின் கோபம்? அதற்காகத்தான் தேவி முதலிலே உன்னைத் திருக்கோயிலை வலம்வந்து திருநீறணிந்து, அவளுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்டுப் பீதாம்பரங்களை நீ அணிந்து, பிறகே அரண்மனை செல்ல வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறாள். நீ தேவியிடம் அருள் பெற்று இக்காரியத்தைச் செய்கிறாய் என்பது தெரிந்தால்தான் மக்கள் புரட்சி செய்யாதிருப்பர். உனக்குத் தேவியிடம் பக்தி பிறக்கும்போது, பிறக்கட்டும்; என்றேனும் கனியும் காலம் பிறக்கும். இப்போது யுக்திக்காகக் கவனித்தாலும், நான் கூறினதே சரி என்று உனக்குத் தோன்றும்" என்று ஆரியன் மொழிந்தான்.

"உண்மைதான்! ஊர் மக்கள், என் உண்மையான நோக்கத்தைத் தெரிந்து கொள்ளாமல் உறுமி, எதிர்த்து, என் முயற்சியைக் கெடுக்கவும் முற்படுவர். ஆரிய முனியே! உன் யோசனையே சரி! அதன்படியே செய்வேன். ஆனால் ஒன்று. இக்காரியம் நடைபெறுவதற்கு மணிவீரன் தடையாக இருப்பான்! அவனை எங்காவது அனுப்பினால் நல்லது" என்று கரிமுகன் கூறினான்.

"வீரமணி இன்றிரவு தேவி சேனையுடன் மலர்புரிக்குத் தெற்கே உள்ள மலைக்காட்டிலே சந்தனக் கட்டைகளைச் சேமித்து வைத்துள்ள மலைவகுப்பினரை அடக்கி, சந்தனக் கட்டையைத் தேவிக்குக் கொண்டுவரப் புறப்படுகிறான். இங்கு அவன் வரும்போது சந்தன மணத்துடன் நுழைவான்! நீ அவனை அரச மணத்துடன் வரவேற்று உபசரிப்பாய், இதுவும் தேவியின் கட்டளைதான்!" என்றான் ஆரியன்.

"நல்ல தேவி! அரசியல் தந்திரங்கள் அவ்வளவும் அறிந்து தேவி திட்டமிடுகிறாளே" என்று கரிமுகன் கேலி செய்தான். "அன்னையின் தந்திரத்தை நீ என்ன அறிவாய்?" என்று ஆரியன் பதிலுரைத்தான். அப்போது அவன் மனதிலே, "மடையன்! ஆரிய ஆதிக்கத்தை அடக்கி அரசாள வேண்டுமென்று எண்ணுகிறான்; அதற்கு ஆரியனொருவன் கூறும் யோசனையைத் தழுவிக் கொள்கிறான்! சிலந்திக் கூண்டை நெருங்கும் பூச்சி இவன்" என்று எண்ணினான் அந்த எண்ணம் அவன் முகத்திலே ஓர் ஜொலிப்பைத் தந்தது.

கரிமுகன் புரட்சி முதலிலும், பிறகே அரசியின் கொலையும் நடத்தப்பட வேண்டுமென்று ஆரியன் திட்டமிட்டு, உத்தமனிடம், "தக்க சமயம் வந்ததும் தெரிவிக்கிறேன்; பொறுத்திரு" என்று கூறிவிட்டு கரிமுகனை உடனே அரசிக்கு எதிரிடையாகப் புரட்சி செய்யும்படி தூண்டினான். 'எந்த அரசியல் சேவகம் செய்து உணவும், உடையும், விடுதியும், புகழும், செல்வாக்கும் பெற்றோமோ, அதே அரசுக்கு ஊனம் விளைவிப்பது அறமாகுமா?' என்று கரிமுகனின் மனம் கலங்கிற்று. "அரசாள வேண்டுமென்ற பேராசை பிடித்தலைந்தே கரிமுகன் இக்காரியம் செய்கிறான்" என்று அரசி எண்ணிடின் என்ன செய்வது! மக்களும் அதுபோலக் கருதினால், ஆபத்தாகவன்றோ முடியும் என்றும் அஞ்சினான் மக்களை மயக்க தேவி பக்தனாக வேடம் போடுவதே சிறந்த வழி என்று அவனுக்குத் தோன்றிற்று. ஆனால் புரட்சி செய்வது சரியா, தவறா என்ற சந்தேகம் மட்டும் அவன் மனத்தைக் குடைந்தபடி இருந்தது. அதிலும் முன் அறிவிப்பின்றி, திடீரெனப் பாய்ந்து தாக்குவதும், எந்தப் படை தனக்குப் பாதுகாப்பளிக்கும் என்று அரசி கருதியிருந்து வருகிறாளோ, அதே படையையே துரோகச் செயலுக்கு உபயோகித்துக் கொள்வதும் ஒழுங்காகுமா? தமிழகம் ஒப்புமா என்பது வேறு அவன் மனத்தைக் குடைந்தது. கரிமுகனுக்கு உண்மையில் அரச போகத்திலே மோகம் இருப்பின் ஆரியன் கூறினதும், "ஆம்" என்றுரைத்து, அரசிமீது பாய்ந்திருப்பான். ஆனால் அவன் உள்ளத்தில் அத்தகைய கள்ளச் சிந்தை இல்லை. அரசியின் கள்ளங்கபடமற்ற முகமும் கருணை ததும்பும் கண்களும் கரிமுகனின் நினைவிற்கு வரவே அவனது மனம் பதறிற்று. மனதிற்குச் சாந்தியும் உறுதியும் பிறந்தாலன்றித் தன்னால் ஏதும் செய்ய முடியாதென்று தோன்றவே, தனக்கு ஆசானாக இருந்த பெரியார் ஒருவரிடம் சென்று, விஷயத்தை வெளிப்படையாகக் கூறாமல் மறைமுகமாகப் பேசலானான்.

"மலர்புரி அரசு நிலைமை தங்கட்குத் திருப்தி தருகிறதா? தமிழ் வீரமும், நெறியும், அறமும் மலர்புரியிலே மணக்கிறதா?"

"நல்ல கேள்வி கேட்டாயப்பா கரிமுகா! பாலில் விஷங்கலந்த பிறகு, தங்கக் கோப்பையிலே உள்ள தீஞ்சுவைப் பால் எப்படி இருக்கும் என்று தர்க்கித்துக் கொண்டு இருப்பார்களா! ஆரியனிடம் பிடியைக் கொடுத்துவிட்ட பிறகு மலர்புரியிலே தமிழ் அரசு ஏது?"

"நம்மை ஆள்வது தமிழ் மங்கைதானே! ஆரியன் ஏவலனாகத்தானே இருக்கிறான்."

"ஏவலன்! காவலர் மகளைக் கேவலம், பதுமைபோல ஆட்டி வைக்கிறானே தம்பி! ஏதுமறியாதவன்போல் பேசுகிறாயே. ஆள்வது தமிழ் மங்கை என்றாய். சிங்கத்தின் முதுகில் சிறுநரி சவாரி செய்வதுபோல, மலர்புரி அரசியின் முதுகில், முனிவன் அமர்ந்திருக்கிறான். ஆரியனே ஆண்டால் நான் அஞ்சமாட்டேன். அந்த ஓர் காட்சியை தமிழர் கண்களைத் திறந்துவிடும். அரசனாக அவன் அதிக நாட்கள் நிலைக்கமுடியாது. இப்போது அரசி என்று ஓர் தமிழ் மங்கை இருப்பது, ஆரியனின் காரியத்துக்குத் தக்க நிறைவாகவன்றோ இருக்கிறது."

"நோய்தீர வழி இல்லையா?"

"யார் முயன்றார்கள் இதுவரையில்? என் முதுமை என்னைத் தடுக்கிறது. மணிவீரனின் வறுமை அவனுக்குக் குறுக்கே நிற்கிறது; உன் பதவி உன்னை மடக்குகிறது. ஊர் மக்களோ உண்மையை உணரவில்லை. ஆரியக் கற்பனை அவர்களின் உணர்ச்சியின் ஊற்றைக் கெடுக்கிறது."

"உண்மை! ஆனால், இந்த நிலையை மாற்ற நாம் என்ன செய்ய முடியும்? அரசியோ யார் கூற்றையும் கேட்பதில்லை. அரசிக்கு எதிராகக் காரியம் செய்வதோ கொடிய குற்றமாகும்."

"எந்த நீதிப்படி குற்றம்?"

"ஏன்? அரச நீதிப்படி குற்றந்தானே?"

"மனித நீதி, அரச நீதியைவிடப் பெரிது. அதுதான் அரச நீதிகளை அவ்வப்போது மாற்றியும் திருத்தியும் வருவது."

"வெளிப்படையாக எனக்கு உத்தரவு கொடுங்கள்! நான் வேதனைப்பட்டு இங்கு வந்துள்ளேன்."

"கரிமுகா! உனக்கு உத்தரவு தர உன் உள்ளம் ஒன்றே உரிமை பெற்றது. நான் உன் சிந்தனைக்கு வேண்டுமானால் சில தருவேன். உத்தரவு கிடையாது."

"என்ன கூறப் போகிறீர்கள்?"

"சங்க நூற்களைப் படித்துக் காட்டப் போகிறேன். நீயும் பாடங் கேட்டுப் பல நாட்களாகிவிட்டன."

"நாட்டு நிலையை எண்ணி நொந்திடும் நேரத்திலே ஏட்டின் கவிதையைக் காட்டினால்..."

"பாடமும் உண்டு; பலனும் உண்டு."