கலிங்க ராணி/கலிங்க ராணி 21


21


ரிமுகனும் அவன் ஆசானும் இதுபோல் உரையாடிய பிறகு, முதியவர் சங்கநூற் சுவடிகளைக் கொண்டு வந்து படித்துப் பொருள் கூறலானார். தமிழரின் வீரம், போர்த்திறம், மக்கள் மாண்பு ஆகியவை விளக்கும் கவிதைகளைக் கனிரசம் எனத்தகும் பொருள் அழகுடன் எடுத்துக் கூறினார்; கரிமுகன் சங்கக் கவிகளின் சுவையை ரசித்தான் என்ற போதிலும், அவன் உள்ளக்கொதிப்பு மட்டும் அடங்கவில்லை.

முதியவர் புன்னகையுடன், "நமது புலவர் பெருமக்களின் சொல், நமக்கு வரும் இடையூறுகளைப் போக்கும். கேள், கரிமுகா. கலித்தொகையில், ஓரிடத்திலே, தலைவனைப் பிரிந்த தலைவி தனியாக இருக்கிறாள்; முகத்திலே வாட்டம் கப்பிக் கொண்டிருக்கிறது. தலைவனோ, பொருள் ஈட்டச் சென்றவன் வந்தபாடில்லை. தலைவியோ பிரிவினால் பெருந்துயர் உறுகிறாள். அதனை அவள் பேசிக் கொண்டா இருந்தாள்? பேசுவானேன்? அவள் முகமே அகத்திலே ஆழ்ந்து பதிந்திருந்த கவலையை எடுத்துக் காட்டிற்று. நல்ல சித்திரம் சிதைந்தால் என்னென்போம்? பாழ்பட்டது என்று கூறோமோ! அந்தத் தலைவியின் முகத்தைக் கவி, "பாழ்பட்ட முகம்" என்றுதான் கூறுகிறார்.

தலைவனுடன் கூடி வாழ்வதே வாழ்வு, தலைவியின் முகம், அந்த வாழ்க்கை இன்பம் இருந்தால் மட்டுமே பொலிவுற்று விளங்கும். காதுவரை வளர்ந்த மான்விழி கொண்ட மங்கையாக இருக்கலாம்; சுருண்டு அடர்ந்த கூந்தல் கரிய மேகமோ என்று கூறும் விதமாக இருக்கலாம்; முல்லைப் பற்களிருக்கலாம் — இவை இருப்பதால் முகத்திலே பொலிவு உண்டாகிவிடாது. அந்த விழிகள், காதல் கனிந்தொழுகும் இருவேறு விழிகளோடு சந்திக்க வேண்டும். அப்போதுதான் முகத்திலே "பொலிவு" தவழும். மயிலுக்குத் தோகை உண்டு; விரித்து ஆடினால்தானே தோகையின் அழகு தெரியும்! மாதரின் முகப்பொலிவு, காதலரின் பிரிவினால் மங்கி மறைகிறது. மயில் தோகையை அடக்கி மடக்கிக் கொண்டு இருப்பதுபோலாகிவிடுகிறது. அந்த நிலையைத் தானே, "பாழ்பட்ட முகத்தோடு பைதல்கொண்ட மைவாளோ" என்று அழகாகக் கூறினார். இது கலித்தொகை கரிமுகா!" என்றார் ஆசான்.

"மன்னிக்க வேண்டும் பெரியவரே! நான் காதற் கவிதைகளைக் கேட்டு இன்புற வந்தேனில்லையே! தலைவனைப் பிரிந்த அத்தலைவியின் முகம் பாழ்பட்ட கதை கிடக்கட்டும்; என் முகத்தைப் பாரும் சற்று," என்று சலித்துக் கூறினான். அதனைக் கேட்டுச் சிரித்த பெரியவர், "கவி அதை மறந்தாரென்றோ எண்ணினாய்? பித்தா! கேள் இதை. தலைவியின் முகம் பாழ்பட்டது என்று கூறியதோடு திருப்தி பெறவில்லை. தலைவியின் முகநிலை எப்படி இருந்தது என்பதைத் தெளிவாக்க கவி கூறினார். இதோ பார்!

"ஆள்பவர் கலக்குற
           உலைபெற்ற நாடுபோற்
பாழ்பட்ட முகத்தோடு
           பைதல்கொண்ட மைவாளோ."

ஆட்சி சரியில்லை என்றால் மக்களின் மாட்சிமையும் சரியிராதல்லவா! அதனால் கோல் நேர்வழி நில்லாது அலைகிறது; மக்களின் கண்களிலே நீர் அலைகிறது. மக்கள் பொலிவு குன்றிவிடுகிறது. தீய ஆட்சியினால் மக்களின் முகம் கவலையின் இருப்பிடமாகி விடுகிறதே, அதுபோல இருந்தது தலைவனைப் பிரிந்த தலைவியின் முகம்—இதுவன்றோ கவியுள்ளம். கரிமுகா! புரிந்ததா ஏடு படிக்கும் நோக்கம்?" என்று முதியவர் கேட்டார்.

"நன்றாகப் புரிந்தது. மதிமுகம் உடையோய்! தங்கள் மனநிலை தெரிந்தேன். மகிழ்ந்தேன். இன்பம் தரவேண்டிய தலைவன் இல்லை. தலைவியின் முகத்தில் பொலிவு இல்லை. நீதி தரவேண்டிய அரசநெறி இல்லையானால் மக்கள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. உண்மை, உண்மை! மீண்டும் பொலிவு பெற...?" என்று கேட்டான் கரிமுகன்.

"என்ன செய்வது? இதுபோல் ஏடு படிப்பதுதான் வழி" என்றார் முதியவர்.

"மீண்டும் விளையாட்டா? இவ்வேளையிலா?" என்று முணுமுணுத்தான் கரிமுகன். மீண்டும் பெரியவர் பேசலானார்:

"கரிமுகா. கேள்!"

"ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்
            குலையாது காத்தோம்பி
வெல் புகழுலகேத்த
            விருந்து நாட்டுறைபவர்."

மன்னரின் மாண்பு விளக்கமப்பா இது! கடும் வெயிலில் நடந்து செல்கிறாய்; களைக்கிறாய். பாதையிலே ஒரு மரம் கண்டாய். அதன் நிழலில் ஒதுங்கினாய்! குளிர்ச்சி கண்டாய். உடனே அந்த மரம் "ஓ! நீ போக வேண்டிய பாதை அது. அங்கு வெயில் என்று இங்கேன் வந்தாய்?" என்றா கூறும். அதுபோல், நாம் இருக்கும் நாட்டிலே நல்லாட்சி இல்லையானால் நல்லாட்சி உள்ள இடத்துக்குப்போய் வாழலாம். ஆனால், அது நமக்கு மட்டும்தானே நலன் பயக்கும். நம் நாட்டவர் அனைவரும் நலிய நாம் மட்டும் மகிழ்ந்திருப்பது நல்லதல்லவே. பாதையிலே நமக்கோர் நிழல்தரும் மரம் கிடைத்தது! அது நம்முடன் வந்த வண்ணம் இருக்குமோ? ஆகவே நல்லாட்சி இல்லாவிடத்து, நல்லாட்சி ஏற்படுத்த, அண்டை அயலிலிருக்கும் அரசர் படை எடுத்து வருதலும், தீய ஆட்சியை வீழ்த்தலும், நல்லாட்சி அமைத்தலும் மன்னர் மாண்புகளில் ஒன்று என்று தமிழ் இலக்கியம் கூறுகிறது. இன்னமும் தயக்கம் ஏன்?" என்று உணர்ச்சியுடன் கேட்டார்.

"அயல்நாட்டு மன்னரே வேண்டுமா? அன்றி..." என்று கரிமுகன் இழுத்தாற்போல் பேசினான். உடனே முதியவர், "அம்பு எதுவானால் என்ன? விலங்கு சாக வேண்டும்" என்றார்.

"தெளிந்தேன். உம்மை வணங்குகிறேன். மலர்புரி மக்களை இனி நான் விடுவிக்க முனைவேன்." என்று கூறிவிட்டுக் கரிமுகன் விடைபெற்றுச் சென்றான்.

அரசைக் கைப்பற்ற ஆரியன் அநேகவிதமான சூதுகள் செய்வது வீரமணிக்குத் தெரிந்தாலும்கூட, அவற்றை முறியடிக்குமளவு போதுமான ஆதரவு கிடைக்காததால், பாயமுடியாது திகைத்தான். அரசியுடன் அந்தரங்கமாகப் பேசினதில், காணாமற்போன பெண் விஷயமாக அரசி கசிந்துருகுவது தெரிந்தது. மறுபடியும் முழு விவரமும் கேட்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. உத்தமனைக் கண்டு பேசவும் முடியவில்லை. இந்நிலையில் ஆரியன் தன்னைத் தேவி சேனையுடன் சந்தனக்காடு சென்று மலைவகுப்பினரை அடக்கும்படி கட்டளையிட்டதறிந்து கலங்கினான். தான் ஊரிலில்லாச் சமயத்திலே ஆரியன் யாருக்கு என்ன கேடு செய்து விடுவானோ என்று அஞ்சினான். ஆனால் மறுத்துரைக்கவோ கூடாது. தேவிசேனையுடன் வீரமணி தத்தளிக்கும் மனத்தினனாய்ச் சென்றான். ஆரியன் அப்படை ஊர் எல்லையைக் கடந்ததும் "தொலைந்தது ஒரு பீடை" என்று எண்ணினான்.

கரிமுகன் ஆரியர் மொழிகேட்டு, ஆயாசம் நீங்கி, உறுதிபெற்றுத் தன் படையின் முக்கியஸ்தர்களைக் கலந்தாலோசித்தான். கரிமுகனே மலர்புரி காவலனாக வேண்டுமென்று அவர்கள் கூறினர். புரட்சிக்கோர் நாள் குறித்து விட்டான். புத்தாடை பூண்டு, பூமாலை சூடி, தேவி கோயில் சென்று வழிபாடு புரிந்தான். வாய் பிளந்து நின்ற மக்களிடம் "நான் இதுவரையிலே தேவியை நம்பாதிருந்தேன். இப்போது தேவியின் பெருமையை உணர்ந்தேன். தேவாலயம் புகுந்தேன்" என்று கூறி, ஊர்வலம் வந்தான். கள்ளச் சிந்தனைக்கார ஆரியனின் உள்ளம் களிப்புடன் கூத்தாடிற்று. கரிமுகனின் காலம் முடிந்து விட்டது என்று கருதினான். 'யுக்தியே யோகம்; தந்திரமே தவம்' என்று கூறிப் பூரித்தான்.

தேவிசேனை வேறாகவும், கரிமுகன் தலைமையிலிருந்த மலர்புரிப்படை வேறாகவும் இருந்தாலும் இரண்டுக்கும் தொடர்பு அறவே இல்லாமற் போகவில்லை. குதிரைகளின் தேய்ப்பு மேய்ப்புகளுக்கு ஒரே கூட்டத்தினர் அமர்த்தப் பட்டிருந்தனர். அவர்கள் தேவிசேனை சந்தனக் காட்டுச் சமருக்குப் புறப்படுகையில் உடன் போகவில்லை. ஒருசிலரே உடன் போனார்கள். இதனை வீரமணி ஊர் எல்லை போனதும் தெரிந்து, ஆச்சரியப்பட்டு, அவர்களிலொருவனை அழைத்து, "ஏன் மற்றவர்கள் வரவில்லை" என்று கேட்டான். "ஆரியன் உத்தரவு" என்றான் அவன். "ஏன்? படை கிளம்பும்போது உடன் வராதிருக்கலாமோ?" என்று வீரமணி கேட்க, அதற்கு அவன், "கரிமுகனின் குதிரைப் படைக்குத் தேவையாம்! அதற்காகவே மலர்புரியில் தங்கி விட்டனர். குதிரைகளைத் தேய்த்து மேய்த்து சரியான நிலைமையில் இருக்கச்செய்யும்படி ஆரியர் உத்தரவு பிறப்பித்தார். கடுமையான வேலைக்குச் சித்தமாகக் குதிரைப் படை இருக்க வேண்டுமாம்" என்றான்.

வீரமணியின் முகம் கோபத்தால் சிவந்துவிட்டது. கரிமுகனின் படையைக் கொண்டு ஆரியன் ஏதோ காரியத்தை நிறைவேற்றிக் கொள்கிறான்; அதற்கு நாம் குறுக்கே நிற்போம் என்று அஞ்சியே சந்தனக்காட்டுக்கு நம்மை அனுப்புகிறான் என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது. தேவி சேனையுடன் திரும்பி மலர்புரி சென்றாக வேண்டும் என்று எண்ணினான். உள்ளே தேவிசேனை நுழைந்ததும், ஆரியன் கோபித்துத் தன்னை கைதுசெய்து காரியத்தைக் கெடுத்து விடுவானோ என்று அஞ்சினான். அவசரப்பட்டு, இதில் எதுவும் செய்வதற்கில்லையே என்று ஆயாசப்பட்டு மேலே படைகளைச் செல்லவொட்டாது நிறுத்தி அந்த இரவுக் கூடாரமடித்துத் தங்கும்படி ஏற்பாடு செய்துவிட்டு யோசிக்கலானான்.

தேவசேனையை, கூடாரத்தில் இருக்கச் செய்துவிட்டுத் தான் மட்டும் தனியே மலர்புரி சென்று வருவதென தீர்மானித்தான். தன் பரி ஏறி, மலர்புரி சென்றான். எவருமறியா வண்ணம் தேவி கோயிலுக்குள் நுழைந்தான். ஆரியன் சிலருடன் மிக மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருக்கக் கண்டு, அங்கோர் இடத்திலே பதுங்கிக் கொண்டான். கோயில் விளக்கை ஆரியன் தூண்டினான். அந்த வெளிச்சம், அவனுடன் கரிமுகன் நிற்பதைக் காட்டிற்று. வீரமணியின் உடல் நடுங்கிற்று. பலவான் சூதுக்காரனுக்குத் துணை நிற்கிறானே என்று துடிதுடித்தான்.

"தேவி! உன் பக்தனை இனி நீதான் இரட்சிக்க வேண்டும்" என்று ஆரியன் சற்று உரத்த குரலிலே கூறினான். கரிமுகன் சிரித்துக்கொண்டே "தேவியை ஏன் அடிக்கடி இழுக்கிறீர். நான் படையுடன் அரசியின் மாளிகையை முற்றுகையிடும்போது தேவியா எனக்குக் கத்தி கேடயம்?" என்று கேட்டான். ஆரியன் அதற்கென்ன பதில் சொன்னான் என்பதைக் கேட்கவும் வீரமணி அங்கு தங்கவில்லை. பூனைபோல் மெல்ல அடியெடுத்து வைத்தான். கோயிற் சுவரைத் தாண்டினான்; போர்வையை இழுத்து முகத்தை மறைத்துக் கொண்டான். வெளியே நடந்தான். விரைவிலே ஊர்க்கோடி சென்று, அங்கோர் தோட்டத்திலே கட்டி வைத்திருந்த குதிரையை அவிழ்த்து ஏறிக்கொண்டு கூடாரத்தை நோக்கிக் கடுவேகமாகச் சென்றான்.