கலிங்க ராணி/கலிங்க ராணி 26


26


"ப்படி என்ன மாயவித்தை செய்தான்" என்று ஒருவன் கேட்டான்.

"அது உண்மையிலேயே மாயந்தான். தேவி கோயிலிலே, நான் ஆரியனின் சிரத்தை வெட்டக் கத்தியை ஓங்கினேன். ஆனால், ஏதோ ஓர் சக்தி, என் கையிலிருந்த கத்தியை மேலுக்கு இழுத்துக்கொண்டது. வாள், கோயிற் கூரையிலே போய்த் தொங்கிற்று." என்று வீரமணி விளக்கினான்.

"அப்படியா? ஆச்சரியந்தான் அது" என்று பலர் வியந்து கூறினர்.

இப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஓர் கைதி, கேலிச் சிரிப்புடன் பேசலானான்.

"மகா பெரிய ஆச்சரியந்தான்! தேவி கோயில் கூரை மீது மாகாளி உட்கார்ந்துகொண்டு, இவன் வீசிய வாளை மேலுக்கு இழுத்துக் கொண்டாள். இதுதானே உங்கள் எண்ணம்? ஆச்சரியமாம் ஆச்சரியம். பாருங்கள், என் இரு கரங்களை! இவை செய்த ஆச்சரியம் அது. ஆமாம்; இப்போது எலும்புத் தோலுமாகிக் கிடக்கும் இக்கரங்கள் செய்து தந்த ஆச்சரியந்தான், உங்களுக்குத் திகைப்பை உண்டாக்கிவிட்டது. ஏன், என்னை விறைத்துப் பார்க்கிறீர்கள். கிழவனுக்கு புத்தி குழம்பி விட்டது என்று நினைக்கிறீர்களா! நான் புத்தியுடனேயே பேசுகிறேன். என் திறமையே, என்னைச் சிறையிலே தள்ளிற்று. அந்தத் திறமையே ஆரியனின் தலையைத் தப்ப வைத்தது. அத் திறமையே, இவனைச் சிறைக்கு அனுப்பி வைத்தது" என்று அக்கிழக் கைதி பேசினார்.

வீரமணி அவரை அன்புடன் உபசரித்து, "பெரியவரே! நாங்கள் அனுபவமில்லாதவர்கள். ஆகையினால் தங்களின் அற உரையின் பொருள் எமக்கு விளங்கவில்லை. தயவு செய்து, எமக்கு அந்த வாள் மேலேறிய விந்தையை விளக்குங்கள்" என்று வேண்டிக்கொண்டான். கிழவர், "அப்படிக்கேள், தம்பி! உன்னைவிட, அதிக வினயமாகத்தான் ஆரியன் என்னிடம் பேசினான். ஊராளும் அரசியையே தன் உள்ளங்கையில் அடக்கி வைத்துள்ள ஆரியன், என்னிடம் அன்போடும் மரியாதையுடனும் பேசக்கேட்டு நான் சற்றுக் கர்வமடைந்தேன். நமது பெருமையை உணர்ந்து, நம்மிடம் அடக்க ஒடுக்கமாய் ஆரியன் நடந்து கொள்கிறான்; அவன் மற்றவர்களை அடிமைபோல் நடத்தினால் நமக்கென்ன? நம் வரையில் அவன் மதிப்பு தருகிறான் என்று என் சுயநலத்தை மட்டுமே பெரிதென்று எண்ணினேன். நமது தமிழரிற் பலர், இத்தகைய நினைப்பினாலே நாசமாகின்றனர்."

"என்னிடம் ஆரியன் சரியாக நடக்கிறான். எனக்கொரு கேடும் செய்யவில்லை. என்னிடம் ஆணவமாக நடந்து கொள்வதில்லை; மற்றவர்களை அவன் எப்படி நடத்தினால் எனக்கென்ன என்று எண்ணுவது, ஆரியம் வளர மறைமுகமாக ஆக்கந் தருவதாகும். இதனை நான் அன்று உணராமல், ஆரியன் அடக்கமாகப் பேசுகிறான் — அன்புடன் பேசுகிறான் என்று எண்ணி அகமகிழ்ந்தேன். அதன் விளைவுதான், இச்சிறைவாசம்" என்று பேசிக்கொண்டே, வியர்வையைத் துடைத்துக்கொள்ளலானார்.

அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்குக் கிழவர் சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டிருக்கிறாரே, விஷயத்துக்கு வரக் காணோமே என்று சலிப்பு ஏற்பட்டது. அதையும் கிழவர் யூகித்தறிந்துகொண்டு, "கிழவன் வம்பளக்கிறான் என்று எண்ணுகிறீர்களா? கேளுங்கள், என் துயரமிக்க கதையை. நான் ஒரு சிற்பி; கட்டட வேலையில் கைதேர்ந்தவன். எத்தனையோ மன்னர்கள் நான் கட்டிய மண்டபத்திலே தர்பார் செய்திருக்கின்றனர். எவ்வளவோ அரசகுமாரிகளுக்கு நான் அழகான உப்பரிகைகள் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். கோட்டை அமைப்பதும், சுரங்க வழிகள் அமைத்திடுவதும், பொறிகள் அமைப்பதும் எனக்குப் பிரியமான வேலைகள். என் திறமையைத் தெரிந்து கொண்டு ஆரியன் ஓரிரவு என் வீடு வந்தான். அரசியை ஆட்டிவைக்கும் ஆரியன், என் வீடு தேடி வந்ததும் நான் மலைத்துப் போனேன். புன்னகையுடன் அவனை வரவேற்று, ஆசனத்திலமர்த்தி, அவன் அருகினிலமர்ந்து, "என்ன விசேஷம்? இவ்வளவு சிரமப்பட்டு, என்னை நாடிவந்த காரியம் என்ன?" என்று வினயமாகப் பேசினேன். உடனே அவன் சொன்னான்:

"மலையிலிருக்கும் மூலிகை வேண்டுபவன், மலையிருக்குமிடம் செல்லத்தானே வேண்டும். திறமைமிக்க உன்னை நான் தேடி வந்ததிலே வியப்பென்ன இருக்க முடியும்? உன் திறமைக்கு, மூவேந்தருமன்றோ உன் வீட்டு வாயிற்படியிலே காத்துக் கிடக்க வேண்டும்" என்று ஆரியன் என்னைப் புகழ்த்தான். அவன் ஏதோ சுயநலத்துக்காகவே என்னை முகஸ்துதி செய்கிறான் என்று தெரிந்தது. ஆனாலும் அவன் புகழ்ந்தது எனக்கு ஆனந்தமாகத்தான் இருந்தது. ஊரெல்லாம் இவனைப் புகழ்கிறார்கள். இவன் நம்மைப் புகழ்கிறான் என்ற நினைப்பு என் நெஞ்சிலே தவழ்ந்தது. நான் ஆரியனின் வலையில் வீழ்ந்தேன்.

"அப்படியொன்றும் நான் திறமையுடையவனல்லவே, நான் ஒரு சாதாரண சிற்பி" என்று சொன்னேன்.

"சிற்பி என்றால் சாதாரண விஷயமா! சிருஷ்டி கர்த்தா அல்லவா நீ! கரடுமுரடான கற்களை நீ, கண்கவரும் உருவங்களாக்குகிறாய்; உணர்ச்சியூட்டும் உருவங்களாகச் செய்கிறாய். அது இலேசான காரியமா! சிற்பத் திறமை சாமான்யமானதல்லவே. ஜெகத்திலே உள்ள அருங்கலைகளிலே அது சிறந்ததன்றோ! எங்ஙனம் ஓர் தாய், பத்து மாதம் சுமந்து, வலியைப் பொறுத்துக் கொண்டு, குழந்தையைப் பெற்றெடுத்ததும், அவள் களிப்பெனும் கடலில் மூழ்கி, "இதோ பாரீர் என் சிருஷ்டியை! நான் ஈன்ற இச்சேய் இருக்கும் வதனத்தைக் காணீர்" என்று பெருமையுடன் கூறிக் கொள்வாளோ, அதுபோல நீயும். கருங்கற்ளிலே உன் கருத்தின் திறனையும் கைத் திறனையும் காட்டிக் கலையின் இருப்பிடமாக்கி, உருவமாக்கியதும் உள்ளப் பூரிப்போடு உலகுக்கு உரைக்கலாம். உனக்கு அந்த உரிமை இருக்கிறது. ஆகவே சிற்பியே! உன் சமர்த்தை நான் ஆண்டவனின் சமர்த்துக்கு ஈடானதாகவே மதிப்பிடுவேன். ஆண்டவன் கோயிலுக்கும், சிற்பியின் கூடத்துக்கும் வித்தியாசம் காண்கிலேன்" என்று ஆரியன் பேசினான்.

நான் அவன் வயப்பட்டு, "என்னால் ஏதேனும் தங்கட்குக் காரியம் ஆகவேண்டுமா, கூறுங்கள்; செய்து தருகிறேன்" என்று உரைத்தேன். அப்போது அவன் தேவி கோயிலுக்குப் புதுமாதிரியான அமைப்புகள் செய்துதரச் சொன்னான். நான் என் திறமையைக் காட்ட, கோயில் மண்டபத்திலே மூன்று இடங்களிலே காந்தக் கற்களை அமைத்தேன். அந்தக் கற்கள் இருக்குமிடத்தினருகே இரும்பாலான எந்தப் பொருளைக் காட்டினாலும், காந்தக் கல்லின் சக்தியால் அப்பொருள் மேலுக்கு எழும்பிவிடும். நான் அமைத்துத் தந்த இந்த அற்புதக் கட்டட வேலை முடிந்ததும், அந்தக் கபட வேடதாரி, என் மீது பழி பல சுமத்தி இச்சிறையிலே தள்ளிவிட்டான். நான் வெளியே இருந்தால், காந்தக் கல்லின் சக்தியை அவன் தேவி திருவிளையாடலென்று உரைத்திட முடியாதல்லவா! அவன் சூதும் பலிக்காது. ஆகவேதான் என்னை இங்கே அநியாயமாகத் தள்ளிவிட்டான்" என்று கிழவர் கூறி அழுதிட, வீரமணி அவரைத் தேற்றிவிட்டு, கத்தி மேலுக்கு எழும்பியதன் காரணம் விளங்கிவிட்டதால், மனக்குழப்பம் நீங்கப்பட்டு, இனிச் சிறையைவிட்டு எங்ஙனம் வெளி ஏறுவது என்ற யோசனையில் இறங்கினான்.

பலப்பல யோசனைகளுக்குப் பிறகு வழி தோன்றிற்று. உணவு கொண்டு வருபவனைப் பிடித்துக் கட்டி உருட்டிவிட்டு, அவன் உடைகளைத் தான் அணிந்து கொண்டு ஆவன செய்வதென்று முதலில் நினைத்தான். ஆனால், அவ்விதமாகப் பலர், தப்பித்துக் கொண்டதால், காவலாளிகள், சற்று எச்சரிக்கையுடனேயே இருக்கிறார்கள். எனவே, அந்த வழி சரியானதாக வீரமணிக்குப் படவில்லை. சிற்பியுடன் கூர்ந்து பேசியதாலேயே, வீரமணிக்குச் சரியான வழி தோன்றிற்று. "நான் இச்சிறையிலிருந்து தப்பித்துக் கொண்டு போக வேண்டுமென்று நினைத்திருந்தால், நெடுநாட்களுக்கு முன்பே, போயிருப்பேன். ஆனால் நான் வெளியே போனால், பலன் இல்லை என்றே உள்ளே தங்கிவிட்டேன்" என்றான்.

உடனே அந்தக் கிழவர் சொன்னார்: "நீ தப்பிப் போனால், ஏதேனும் பலன் ஏற்படக்கூடும். நீயோ வாலிபன்; வீரன்; உன் போன்றவர்களாலேயே ஆரிய ஆதிக்கத்தை ஒழிக்க முடியும்; இந்த வயோதிகனால் முடியாது. நீ தப்பிப் போக நான் ஓர் மார்க்கம் காட்டுகிறேன்." என்று கிழவர் உருக்கமாகக் கூறினார்.

வீரமணி "பெரியவரே! உமது தியாக உணர்ச்சி, தமிழ்ப் பண்பு இன்னமும் பட்டுப் போகவில்லை என்பதைக் காட்டுகிறது. நான் தப்பினால், உம்மைப் போன்ற உத்தமர்களைச் சிறையிலிட்ட அக்கொடியவனின் ஆதிக்கத்தை ஒழிக்க நிச்சயமாக வேலை செய்வேன். இனி மலர்புரியிலிருந்து கொண்டு, அக்காரியம் செய்ய முடியாது. நான் வேறு மண்டலம் சென்று, இக்காரியத்துக்கான வீரரைத் திரட்டிப் படை எடுத்து வரவே எண்ணுகிறேன்" என்று உறுதிமொழி கூறினான். கிழவர், களிப்புடன் வீரமணியைக் கட்டித் தழுவிக்கொண்டு, "நீ நிச்சயமாக வெற்றி அடைவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று பாராட்டிப் பேசினார்.

ஒருவார காலத்தில், சிற்பி சிறைச்சாலையிலேயே கிடைக்கக் கூடிய பொருள்களைக் கொண்டே கருவிகள் தயாரித்துக்கொண்டு, வீரமணிக்கென்று ஏற்பட்டிருந்த அறைக்கு வரும் தாழ்வாரத்திலே, சில கற்களைப் பெயர்த்தெடுத்துவிட்டுப் பள்ளம் உண்டாக்கிவிட்டார். அதன்மீது கருப்புக் கம்பளியைக் கற்பாறைபோலத் தெரியும்படி மூடி வைத்தார். இந்தச் சூது தெரியாத சிறைக் காவலன் அன்றிரவு, வீரமணியையும், மற்றக் கைதிகளையும் அறைகளுக்குப் போகச் சொல்லிவிட்டுத் தாழ்வாரத்தின் வழியாகச் சென்றான்; பள்ளத்திலே தொப்பென்று விழுந்தான் இதனை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வீரமணி, ஒரே அடியாகப் பாய்ந்து, காவலாளியின் குரல்வளையைப் பிடித்தழுத்திக் கட்டிப் போட்டுவிட்டு அவன் உடைகளைத் தான் அணிந்து கொண்டு, மற்றக் காவலாளிகளை ஏய்த்துவிட்டு வெளியேறிவிட்டான்.