கலிங்க ராணி/கலிங்க ராணி 27


27


சிறையை நோக்கி நடுச்சாமக் காவலாளி வந்தான். கைதிகள் சிரித்துக் கொண்டும் கேலி பேசிக் கொண்டும் இருப்பதைக் கண்டு எரிச்சலடைந்தான். உடனே, அங்குள்ள விளக்குகளைத் தூண்டிவிட்டு, இடத்தைச் சோதித்தான். அப்போது தாழ்வாரத்திலே பள்ளம் இருக்கக் கண்டு, ஆச்சரியப்பட்டு, அறைகளைச் சோதிக்க, வீரமணியின் அறையிலே ஓர் உருவம் குப்புறக் கிடக்கக் கண்டு, விரைவாக அருகே சென்று பார்த்தான்.

வீரமணிக்குப் பதில், காவலாளி, கைகால் கட்டப்பட்டு உருண்டு கிடக்கக் கண்டதும், வீரமணி தப்பி ஓடிவிட்டான் என்பதைத் தெரிந்து கூவினான். காவலாளிகள் வெளியே சென்று தேடவும், அரசிக்குச் சொல்லி அனுப்பவுமாயினர். கூக்குரல் அடங்குமுன் வீரமணி ஊர்ப்புறம் சென்றுவிட்டான். அங்கிருந்து உடையைக் கலைந்துவிட்டு, ஓடலானான். குதிரை மீதேறிக் கொண்டு சிலர் தன்னைத் தேடிக் கொண்டு வரக்கண்டு, வீரமணி, ஊருக்கடுத்திருந்த கானகத்துக்குள் நுழைந்து, அடர்ந்த பகுதிக்குப் போய், அங்கு காணப்பட்ட ஒரு குகைக்குள் புகுந்தான். குகையிலே வீரமணி உள்ளே நுழைந்து குகையைக் கூர்ந்து நோக்குகையில், இரு நெருப்புப்பொறிகள் தெரிந்தன. பொறிகள் வரவரப் பெரிதாகிக் கொண்டே வரத் தொடங்கிற்று. காலடிச் சத்தம் கேட்டது. வீரமணி திடுக்கிட்டான். தன்னை நோக்கி ஒரு புலி வருகிறதென்பது தெரிந்தது. என்ன செய்வதென்று தீர்மானிக்கும் முன்பு, புலி சீறிக்கொண்டே வீரமணியை நெருங்கிவிட்டது.

புலிக்கு இரையாவதினின்றும் தப்பித்துக் கொள்ள ஒரு வழியும் இல்லையே. இதுவே வெளிப்புறமாக இருந்தால் புலியுடன் கட்டிப்புரண்டு போரிட்டாவது மாளலாம். ஓடிச் சண்டை செய்யமுடியாத குகையிலல்லவா சிக்கிக் கொண்டோம்; எப்படித் தப்பமுடியும் என்று திகைத்த வீரமணியின் மனக்கண்முன், கேலிச் சிரிப்புடன் ஆரியன் நிற்பது போலவும் அவனை அடிவருடிக் கொண்டு மலர்புரி அரசி இருப்பது போலவும், நீர் புரளும் கண்களுடன் நடனராணி நிற்பது போலவும் தோன்றிற்று. சாவுக்கும் தனக்கும் இடையே சில அடி மட்டுமே இருப்பதை எண்ணினான். மயக்கம் உண்டாயிற்று; கண்கள் மூடின. காது குடையும் படியான பெருங்கூச்சல் கேட்டு, மூடின விழியைத் திறந்தான். எதிரே இருந்த புலி மரணவஸ்தைப் படுவதைக் கண்டான்.

வீரமணி மீது பாயவந்த புலியானது குகையின் கூரைச் சுவரின் பிலத்திலிருந்த மலைப்பாம்பு சீறி, வளைத்து புலியின் வயிற்றைத் தன் உடலால் அழுத்திக் கொல்ல முனைந்தது. திடீரென்று மலைப்பாம்பு, அதனைச் சுற்றி வளைக்கவே புலி பெருங் கூச்சலிட்டுச் சுவரிலே மோதியும், தரையிலே புரண்டும், கால் நகங்களால் பாம்பின் உடலைக் கீறியும், மலைப்பாம்பின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் போரிட்டுக் கொண்டிருந்தது. பாம்போ பிலத்திலே பாதி உடலை வைத்துக் கொண்டு, மற்ற பாதியால், புலியின் வயிற்றை இறுக்கிற்று. விநாடிக்கு விநாடி, புலியின் வேதனை வளர்ந்தது. பாம்பின்பிடி தளரவில்லை. புலியின் வாயிலே நுரை தள்ளலாயிற்று. விழி வெளிவந்துவிடும் போலாகிவிட்டது. மலைப்பாம்பின் பிணைப்பை நீக்க முடியாது புலி தவித்தது. இக்காட்சியைக் கண்ட வீரமணி களித்து, இதுதான் சமயமென்பது தெரிந்து குகையை விட்டு வெளியே வந்துவிட்டான்.

புலியின் சத்தம் வரவர அடங்கலாயிற்று. சரி, மலைப்பாம்பு வெற்றி பெற்றுவிட்டது போலும் என்று எண்ணியபடியே வீரமணி, கானகத்திலே மேலும் சென்றான். ஒவ்வோர் புதருக்கருகிலும் சலசலப்பு கேட்கும் போதெல்லாம் புலியோ, சிறுத்தையோ என்று பயப்படவேண்டி இருந்தது. காட்டைக் கடக்க முடியுமா? வழியிலேயே பிணமாக வேண்டியதுதானா என்று சந்தேகிக்க வேண்டியதுதானா என்ற பயம் அவன் நெஞ்சில் நிறைந்திருந்தது. எதிர்பாராத ஆபத்துக்கள் இமை கொட்டுவதற்குள் ஏற்படக் கூடிய அந்தக் காட்டைக் கடந்தாக வேணடும். ஆரியம் போலவே அடவியும் உயிர் குடிக்கும் விஷ விலங்குகளின் விடுதிதானே என்று நினைத்த வீரமணி தனக்குள் நகைத்துக் கொண்டான். ஓரிடத்திலே, கனி குலுங்கும் மாமரம் கண்டு பழத்தைப் பறித்து உண்ணலானான். அவனது ஆயாசம் சற்றுத் தீர்ந்தது; பசித்தொல்லை குறைந்தது; ஆனால் புதியதோர் ஆபத்து வந்து சேர்ந்தது. வீரமணி, இரண்டோர் கனிகளைப் பறித்துக் கையிலெடுத்துக்கொண்டு போகப் புறப்பட்டான்.

'போகாதே! நில்!' என்று ஒரு குரல் கேட்டுத் திடுக்கிட்டான். ஆள் நடமாட்டமே இருக்க முடியாத அந்த அடவியில், பேச்சுக் குரல் கேட்டால், ஆச்சரியமாகத்தானே இருக்கும்! சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் தென்படவில்லை. மனப் பிராந்திபோலும் என்று எண்ணிக்கொண்டு, இரண்டடி எடுத்து வைத்தான், மறுபடியும் அக்குரல் கேட்டது. 'போகாதே நில்!'—வீரமணிக்கு ஆச்சரியம்போய், அச்சம் பிறந்துவிட்டது. 'யார் என்னைத் தடுப்பவன்?' என்று வலிய தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூவிக் கேட்டான். பதில் இல்லை. மறுபடியும் போகத் தொடங்கினான்; 'போகாதே நில்!' என்று மறுபடியும் குரல் கிளம்பிற்று. மறுபடியும் வீரமணி குரல் எப்பக்கமிருந்து வருகிறதென்று கவனித்தான். மரத்துக் கிளையிலே ஒரு கிளியும், வேறோர் பக்கத்திலே குரங்கும் தவிர அவன் கண்களிலே ஆள் யாரும் தென்படவில்லை. "இதேதடா பெரிய தொல்லை" என்று சலித்துக் கூறிக்கொண்டே மறுபடி நடக்கலானான். 'போகாதே நில்!' என்று கூவிக் கொண்டே, மரக்கிளையிலிருந்து கிளி பறக்கக் கண்டு, வீரமணி வாய்விட்டுச் சிரித்து, "அட, பேசும் கிளியே! நீயா, என்னைப் பயப்பட வைத்தாய்" என்று கூறிக் கொண்டே கிளியை நோக்க, அது, வேகமாகப் பறந்து சென்றிடக் கண்டு, "இவ்வளவு அருமையான இக்கிளிக்கு யார் பேசுவதற்குப் பழக்கப்படுத்தினார்கள்? பேசும் கிளி இங்கு காணப்பட்டதால் பக்கத்திலே யாரோ வசிக்கிறார்கள் என்று ஏற்படுகிறதே! இங்கே, இந்தக் காட்டிலே யார் வசிக்கிறார்கள்" என்று யோசித்தபடியே நடக்கலானான். சிறிது தூரம் நடந்ததும், 'போகாதே! நில்! போகாதே! நில்!' என்று உரத்த குரலொலி இரண்டு முறை கேட்டது. கிளியா இப்படிக் கூவிற்று என்று திரும்பிப் பார்க்க, தன்னை நோக்கி நாலைந்து வேடர்கள் ஓடிவரக் கண்டான்; நின்றான். அவர்கள் இளைக்க இளைக்க ஓடி வந்து, வீரமணியின் எதிரே நின்றனர். அவர்களுடன், முன்பு வீரமணி கண்ட குரங்கும் இருக்கக் கண்டு, இக்குரங்கு ஜாடை காட்டியே இவர்களை அழைத்து வந்தது போலும் என்று எண்ணி "வேடர்களே! நான் வேற்றூர் போகக் கருதி இக்காட்டிலே புகுந்தேன். 'போகாதே! நில்!' என்று கூவிடும் கிளியும், ஆள் நடமாட்டம் கண்டால் உங்கட்குச் சேதி கூற ஜாடை செய்யும் இக்குரங்கும், சற்றுத் தொலைவிலே இருக்கக் கண்டேன். என்னைத் தடுப்பானேன்?" என்று வீரமணி வேடர்களைக் கேட்டான்.

வேடர்களின் தலைவன்போல் காணப்பட்ட ஓர் இளைஞன், "கிளியும் குரங்கும், எம்முடையனவே. நீர் யார்? ஏன் இங்கு வந்தீர்? கையிலே இருப்பது மாங்கனி தானே! ஏன் பறித்தீர்?" என்று கடுமையான குரலில் கேட்டான்.

வீரமணி, "நான் யாரென்று கூறினால், உங்களுக்குத் தெரியாது. நீங்கள் இக்காட்டு வேடர்கள் என்பது எனக்குத் தெரிகிறது. இக்காடு இன்னும் எவ்வளவு தூரமிருக்கிறது? எவ்வளவு நேரம் பிடிக்கும் இதனைக் கடக்க" என்று வேடுவத் தலைவனைக் கேட்டான். வேடுவத் தலைவன் சிரித்தபடி, "அரைமணி நேரத்திலே இந்த அடவியைக் கடந்து அடுத்த ஊர் போகலாம், நாங்கள் அனுமதித்தால்" என்றான்.

வீரமணி, "நீங்கள் அனுமதிப்பதா? காட்டிலே நான் நடப்பதற்கு உங்கள் அனுமதி ஏன்?" என்று கேட்டான்.

"நாட்டிலே நடமாட, அரசரின் அனுமதி வேண்டுமல்லவா?" என்று வேடுவத் தலைவன் கிண்டலாகக் கேட்டான். 'ஆம்' என்று வீரமணி பதிலிறுத்தான். "அதே சட்டம் காட்டிலேயும் உண்டு. இங்கு அரசு எங்களுடையது; ஆகவே எங்கள் அனுமதி இன்றி யாரும் இக்காட்டிலே நடமாட முடியாது" என்று வேடுவத் தலைவன் கெம்பீரமாகப் பேசினான்.

வீரமணி, "ஒஹோ! காட்டரசன் கூட்டமா நீங்கள்! சரி, என்னை அனுமதிக்க ஏதேனும் நிபந்தனை உண்டோ" என்று கேட்டான்.

"நீர் எடுத்துச் செல்லும் பொருளைத் தந்துவிட வேண்டும்; அதுதான் இங்கு சட்டம்" என்று கூறிக்கொண்டே ஒரு வேடுவன் களிப்புடன் கூத்தாடினான். மற்றவர்களும் 'எடு! எடு!' என்று கூவிக்கொண்டு தாளமிட்டனர். வீரமணி, தலைவனை நோக்கி, "கொள்ளை அடிக்கும் கொடியவர்கள்தானா? சரி! என்னிடம் ஒரு பொருளும் இல்லை" என்று கூறினான்.

'கொள்ளை' என்று நீ கூறுகிறாய். 'காணிக்கை' என்று நாங்கள் அதைச் சொல்லுகிறோம். சரி, உன்னிடம் பொருள் இல்லை என்று நீ சொன்னது முழுப்பொய். உன்னிடமிருக்கும் பொருளை நான் அறிவேன். நீ அதை மறைக்க முடியாது" என்று வேடுவத் தலைவன் பேசினான். அப்பேச்சிலே, அதிகாரத்தைவிட அதிகமாக அன்பு தொனித்திடக் கண்ட வீரமணி ஆச்சரியப்பட்டு, "உண்மையிலேயே என்னிடம் ஒரு பொருளும் இல்லையே" என்று மீண்டும் வியப்போடு கூறினான்.

"இதுவரை எப்போதாவது, நம்மிடம் சிக்கியவர்கள் நாம் கேட்டதும், பொருள் இருப்பதாகக் கூறினதுண்டோ?" என்று தன் சகவேடுவர்களைக் கேட்டான், அவர்கள் தலைவன்.

அதற்கு அவர்களில் ஒருவன், "மயில்கூட இறகு போடு என்று கேட்டாலா போடுகிறது" என்று தலைவனிடம் கூறினான். இதற்குள் மற்றும் பல வேடுவர் அங்கு வந்தனர். வீரமணிக்கு, இவர்களிடமிருந்து தப்பமுடியாது என்பது விளங்கிவிட்டது.

"நிச்சயமாக சொல்லுகிறேன். என்னிடம் பொருள் இல்லை—என்னைச் சோதித்துக் கொள்ளலாம். கையிலே ஒன்றுமில்லை. மடியிலேயுமில்லை" என்று கூறிக் கொண்டிருக்கையிலேயே வேடுவர்கள் வீரமணியைப் பிடித்துக் கொண்டு இழுத்துச் செல்லலாயினர். வீரமணி வேடுவத் தலைவனை நோக்கி, "ஐயா! இது அநீதி! நான் ஒருவன், நீங்கள் இவ்வளவு பேராகச் சூழ்ந்து கொண்டு, என்னைத் துன்புறுத்துவது பேடிச்செயல். என்னை வதைத்தாலும் பலன் இல்லை, என்னிடம் பொருள் இல்லை. நான் பராரி" என்று கூறினான்.

வேடுவத் தலைவன் புன்சிரிப்புடன், "இளமையும், எழிலும், செல்வமல்லவா! உன்னிடம் அவை பரிபூரணமாக இருப்பதை, நீ இல்லை என்று கூற முடியுமா?" என்று கேட்டான்.