கலிங்க ராணி/கலிங்க ராணி 30


30


மூதாட்டியின் இல்லத்துக்கு வந்த நடனா தனக்கு நேரிட்ட சோதனையை அவளிடம் கூறலானாள்.

"விருந்திலே 'நடனம்' என்று அழைத்தான்; விபசாரத்துக்கு இழுத்தான். இங்கே ரகுவீரன் என்பவன் விருந்தென்றான்; பிறகு கூடிட வாடி கோகிலமே என்று அழைத்தான். 'கேவலம் நான் நடனமாதுதானே' என்று கூறினேன். அவன், 'ஆண்டவனே நடன சொரூபி' என்று காமப்பேச்சாடினான். என் நடனம் உமது கண்களுக்கு விருந்தாக இருக்கட்டும். ஆனால் விபரீதமான செயலுக்கு நீர் முற்பட்டால் நடப்பது வேறு. நீர் பெரிய படைத்தலைவர் என்பது நினைவிருக்கட்டும்" என்று கூறினேன்; அவனோ, 'நீ கலையின் சிகரமல்லவா கண்ணே', என்று காலில் வீழ்ந்தான். அத்தகைய காமாந்தகாரர்களின் பிடியிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கு வேறு என்ன வழி இருக்கிறது? அதனால்தான்" என்று அரைகுறையாக நிறுத்தினாள். அவளை மகளாக ஏற்றுக் கொண்டிருந்த மூதாட்டி, அவளைத் தேற்றி, "அஞ்சாதே தங்கமே! அரசனிடமே இதை நான் கூறுகிறேன்" என்று கூறினாள். நடனா, கோபச் சிரிப்புடன், "அவர்களை நான் நன்கு அறிவேன் அன்னையே!" என்று கூறிவிட்டு யோசனையிலாழ்ந்தாள்.

காட்டிலே வீரமணியும், பாண்டிய நாட்டிலே நடனராணியும் இங்ஙனம் கலங்கிக்கிடந்தநாட்களில், மலர்புரியிலே ஆரியனின் அட்டகாசமும், அரசியின் அடிமைத்தனமும், உத்தமனின் சோகமும் வளர்ந்து கொண்டிருந்தது. தேவி கோயிலில் பூஜை நேரத்திலே, அரசியைக் கொன்றுவிடத் தீர்மானித்த ஆரியமுனி, உத்தமனை ஓரிரவு சிலைக்குள் இருக்கக் கட்டளையிட்டு, அரசியை அழைத்தான். நடு நிசி! சிலைக்கு விசேஷ அலங்காரங்கள்! விக்ரகக் கிரஹம் தவிர மற்ற இடங்களிலே இருள்! மூலஸ்தானத்திலே மட்டும் விதவிதமான விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. ஆரியன் அன்று தன் மனோபீஷ்டம் நிறைவேறப் போவதாகக் கருதிக் கெர்வத்தோடு இருந்தான். உத்தமனின் உள்ளம் எதுவென உலுத்தனால் உணர முடியவில்லை. அவ்வளவு சாமர்த்தியமாக உத்தமன் தலையாட்டிக் கிடந்தான்.

'நடுநிசிப் பூஜைக்குப் பிறகு, தேவியின் திருவருளால், காதலன்-மகள் ஆகிய இருவரையும் காணப்பெறுவாய் என்று அரசிக்கு ஆரியன் கூறியிருந்தான். பேதை, அதை நம்பியே, பித்தம் மேலிட்டவள்போல ஆலயம் புகுந்தாள்; சேடியரை அரண்மனைக்குத் திருப்பி அனுப்பிவிட்டாள். அந்தகாரம் கவிந்திருந்த பிரகாரங்களைத் தாண்டி, ஜோதியாக விளங்கிய மூலக்கிரஹம் புகுந்து, தேவியைத் தொழுதாள். ஆரியன் சிலைக்குப் பக்கம், சிரித்தபடி நின்றான். சில விநாடிகள், கண்களை மூடிக்கொண்டிருந்த அரசி கண்களைத் திறந்தபோது ஆரியன், தீபங்களை ஒவ்வொன்றாக அணைத்துக் கொண்டிருக்கக் கண்டு பயந்தாள்.

"ஆரியரே! விளக்குகளை ஏன் அணைத்துவிடுகிறீர்?"

"அவள் ஒளிமுன், இவ்வற்ப ஒளிகள் எம்மாத்திரம்? மலர்புரி அரசியே! மாதாவின் ஜோதியைப் பார்! இந்தத் தீபங்கள் நிலையற்றன. அவள் நிரந்தர ஜோதி; அணையா விளக்கு."

"உண்மை. ஆனால், இருள் சூழச்சூழ எனக்குத் திகிலாக இருக்கிறதே."

"தேவி! உன் குழந்தையின் திகிலைப் போக்கு. ஓஹோ! தேகத்தில் ஜீவன் உள்ள வரையில் திகில் இருக்கத்தானே செய்யும் என்று கூறுகிறாயா? சரி, அப்படியானால், இவளை உன் பாதத்திலே சேர்த்துக்கொள்."

"ஆரியரே, இன்று ஏதோ அச்சமுட்டும் பேச்சன்றோ பேசுகிறீர்."

"நச்சுப் பொய்கையிலிருந்து இன்று உன்னை நம் தேவி கரையேற்றப் போகிறாள். நடுங்காதே, நளினி! உன்னை ஒரு முறை தழுவிக்கொண்டு இன்புற..."

"சீ! தூர்த்தா! என்னிடமா நீ இந்த வார்த்தை பேசுகிறாய்?"

"அரசியே, அவசரப்படுகிறீர்! நான் தழுவ ஆசைப்படுவதாகவா நினைத்தீர்? பேதாய், தேவி உன்னைத் தழுவப் போகிறாள். நான் உன்னைத் தழுவிக் கொண்டால், உன் அரசை தழுவிக் கொள்ள முடியாதே."

"என் அரசை நீ தழுவிக் கொள்வதா? என்னைத் தேவி தழுவிக் கொள்வதா? இதென்ன, இன்று மர்மமாகப் பேசுகிறீர்? எனக்கொன்றும் விளங்கவில்லையே."

"இன்னும் சில நொடிகளிலே விளங்கிவிடும். மலர்புரி அரசியே! என் மாதவம் ஈடேறும் நாள் இது. கோயில் பூஜாரி இப்போது நான். நாளையோ, நான் கொலு மண்டபத்து அதிகாரி. உன் வாழ்நாள் முடிந்தது."

"ஐயோ! இதிலேதோ சூது இருக்கிறது. நான் போகிறேன்."

"கோயிற் கதவுகள் தாளிடப்பட்டுவிட்டன. எவ்வளவு கூவினாலும் குரல் வெளியே கேட்காது. இந்த ஓர் இரவுக்காக, நான் எத்தனை இரவுகள் தூங்காது இருந்தேன் தெரியுமா?

"பாதகா! படுமோசக்காரா! என்னைக் கொல்லவா, இங்கு அழைத்தாய்? தேவி கோயிலிலே இந்தத் தீய செயலா? உன் மனம் கல்லா? நான் உன்னைப் பக்தியோடு தொழுது வந்ததன் பலன் இதுதானா? தேவி இந்த ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றமாட்டாயா?"

"தேவி உன்னைக் காப்பாற்றமாட்டாள்."

"ஏன்?"

"ஏனா? அவள் என்னுடைய தேவி! என் சிருஷ்டி. என் ஆயுதம்; என் கருவி! நீயே கூறு. அடி, தேவி! நானல்லவா உனக்கு மகிமை கற்பித்தேன். இங்கே என்னால்தானே உனக்கு இந்த அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் இப்போது அவளைக் கேள்."

"என்ன பேச்சு இது?"

"உண்மையான பேச்சு. தேவி, வா! உன் சிருஷ்டிகர்த்தாவாகிய நான் அழைக்கிறேன் உன்னை. உனக்கு இதுவரை நான் அடிமையாக இருந்தேன். எதற்காக? இவள் போன்ற எண்ணற்றவர்களை உனக்கு அடிமையாக்க! தேவியாம் தேவி; சக்தியாம் பராசக்தி; என் இஷ்டத்தை நிறைவேற்றி வைக்கும் அடிமை இவள். வீசு, உன் வாளை; உருளட்டும் இவள் தலை."

அரசிக்கும் பூஜாரிக்கும் நடைபெற்ற இவ்வுரையாடலால் அரசியின் அங்கம் பயத்தால் நடுங்கிற்று; ஓவெனக் கதறினாள். அப்போது சிலைக்குள்ளிருந்த உத்தமன், "அரசியே, ஆரியனுக்கு அடிமைதான் நான்; அவன் கட்டளையை நிறைவேற்றி வைப்பதே என் வேலை; அவனே என் சிருஷ்டிகர்த்தா. இதை அறிந்துகொள்" என்றுரைத்தான். ஆரியன் வெற்றிச் சிரிப்புடன், "கேட்டாயா தேவியின் திருவாக்கை" என்று கூவினான்.

அப்போது உத்தமன்....

"நான் பேசி முடிக்கவில்லையே. சிலசமயம், அடிமையே எஜமானுக்குத் துரோகியாவதுண்டு. ஆரிய முனியே! நீ அரசிக்குத் துரோகியானாய். நான் இதோ உனக்குத் துரோகியாகிறேன்" என்று உத்தமன் கூவினான். சிலை அசையக் கண்டு சிலையின் கரங்கள், ஆரியனின் கழுத்தைப் பிடித்திழுத்து நெரிக்கக் கண்டு, அரசி, மருட்சியும், மகிழ்ச்சியும் கொண்டு உடலாட நின்றாள். "கோயிற் கதவுகள் பூட்டப்பட்டன; கூவினால் சத்தம் வெளியே கேட்காது" என்று கூறிக் கொண்டே உத்தமன், ஆரியனைக் கொன்றான்.

"தேவியின் சக்தியே சக்தி" என்று அழுதுகொண்டே அரசி கூறினாள். அப்போது சிலைக்குள் இருந்த உத்தமன், "தேவியுமில்லை—தேவனுமில்லை. நான் ஓர் தமிழன்" என்று கூறிக் கொண்டே சிலையைவிட்டு வெளியே வந்து நின்று, அரசியிடம் தன் வரலாற்றைக் கூறி, ஆரியனின் சூது தெரியச் செய்தான். மலர்புரி அரசி, தன் மதியீனத்தால் வந்த அவமானத்தையும், ஆபத்தையும் எண்ணி, வாடி, பிறகு உத்தமனின் துணைக்கொண்டு, அரண்மனை சென்றாள்.

உத்தமனுடைய யோசனையின்படி, மறுதினம் ஆரியனைத் தேவி தன் திருப்பாதங்களில் சேர்த்துக் கொண்டாள் என்று ஊராருக்கு அறிவிக்கப்பட்டது. இறந்த பிறகு, தன் உடலைக் கழுகுக்கு இரையாக்கும்படி ஆரியன் விரும்பியிருந்தான் என்று மக்களுக்கு அறிவிக்கப்பட்டு, ஆரியப் பிணத்தைக் கழுகுகள் கொத்திடச் செய்யப்பட்டது. ஆரியனின் சூழ்ச்சியால் சிறைப்பட்டிருந்த தமிழர் விடுவிக்கப்பட்டனர். ஆலய வீணர்கள் விரட்டப்பட்டனர். தமிழ்மணம் மீண்டும் கமழத் தொடங்கிற்று. இரண்டொரு நாட்களுக்கெல்லாம் உத்தமன் நடனராணியையும் வீரமணியையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்று கூறினான். அப்போது மலர்புரி அரசி, தனது கள்ளக் காதலில் கனிந்த மகளையும் கண்டுபிடிக்க வேண்டுமென்று கூறி, ஒரு நீலமணியை அவனிடம் தந்து, 'இது என் மகளின் காதணி. ஒன்று என்னிடமும், மற்றொன்று அவள் தந்தையிடமும் இருந்தது. வீரமணி என் காதலரைக் கலிங்கத்திலே கண்டாராம்! மேற்கொண்டு தகவல்களை வீரமணி கூறுமுன்பு, நான் ஆரியனின் அடிமையாக இருந்ததால், பலவகையான இடையூறுகள் நேரிட்டன. அப்போது, என்னால் முழு விபரமும் தெரிந்துகொள்ள முடியவில்லை. நீ வீரமணியைக் கண்டதும், இந்த நீலமணியைத் தந்து, என் மகள் விஷயமாகக் கேள்" என்று கூறினாள். மலர்புரி தமிழ்புரியானதைக் கண்டுகளித்த உத்தமன் வீரமணியைத் தேடலானான்.

காட்டரசனும், அச்சமயம், வீரமணியைத் தேடும் வேலையில் ஈடுபட்டிருந்தான். கிழவியை மணக்க மறுத்த வீரமணியை ஏதோ மூலிகை கொடுத்து மனதை மாற்றி விடுவதாகக் காட்டரசரின் குடும்ப வைத்தியன் கூறி, மருந்து கொடுத்தான். ஆனால் மருந்து வீரமணிக்குக் கிழவியின்மீது மோகம் பிறக்கச் செய்வதற்குப் பதில், மூளைக்கோளாறு உண்டாக்கிவிட்டது. வீரமணிக்குப் பழைய நினைவு மறைந்துபோய், எதிர்ப்பட்டோரை அடிப்பது, கிடைப்பதைத் தின்பதும் ஓரிடத்திலே தங்காது ஓடுவதும், போன்ற செயல் புரியும் பித்தனாக்கிவிட்டது. வேறு மருந்துகள் தந்து வந்தனர். ஆனால், ஓரிரவு, கட்டுகளை அறுத்துக்கொண்டு காவலரை ஏய்த்துவிட்டு பித்தம் பிடித்த வீரமணி, எங்கோ ஓடிவிட்டான். அவனைத் தேடிப்பார்க்க, நாலாப் பக்கங்களிலும், காட்டரசன் தன் ஆட்களை ஏவினான்.