கலிங்க ராணி/கலிங்க ராணி 31


31


"ண்பா! நான் எவ்வளவோ முயன்றுதான் பார்க்கிறேன்; ஆனால் அந்த ஆடலழகியின் நினைவு என்னைச் சித்திரவதை செய்கிறது! அரண்மனையின் கொலுப்பொம்மையா நான்? எனக்குத் தெரியாதா? பெண் பித்தங்கூடாது——அது பேராபத்து விளைவிக்குமென்று! எல்லாம் தெரிந்துதான் இருக்கிறது. என்றாலும், என்னால் அவளை மறக்க முடியவில்லையே.

புயலில் சிக்கிய கலம்போல் மனம் தத்தளிக்கிறது. மனச்சாந்திக்கு மதுவருந்தினால், அந்த மதனசுந்தரியின் இதழ் சுவைத்தால், இதனினும் இனிக்குமே என்று ஏக்கம் பிறக்கிறது. கீதம் கேட்டு மனக்கொதிப்பைப் போக்கிக் கொள்வோம் என்று பார்த்தாலோ, கீதம் எனக்கு அவள் பேச்சை நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று மோகமேலீட்டால் ரகுவீரன், தன் நண்பனிடம் கூறித் தன் துயரைத் துடைத்துக் கொள்ள முயன்றான். ஆனால் கிளறிவிட்டதும் நெருப்பு மேலும் ஒளியுடன் எரிவதுபோல், ஆசைத்தீ அவன் உள்ளத்தை பற்றிக் கொண்டது. நடனராணிக்கோ ரகுவீரனின் சேட்டையைக் கண்டதால் ஆடவரின் மனநிலை, அதிகார வர்க்கத்தின் ஆணவம், சீமான்களின் சேட்டை, காமவிகாரங் கொண்டவர்களின் கபடம் ஆகியவற்றைப் பற்றிய எண்ணம், ஈட்டிபோல் குத்திக் குடைந்தது.

"இக்கொடிய நிலை வரக் காரணம், என் அன்பனை இழந்ததாலன்றோ வீரமணியின் சரசத்தை விரும்பிய எனக்கு இந்தக் கோமாளியின் தொல்லை தாங்கமுடியவில்லையே! தேன் குடத்தைத் தேடப்போய் தேள் கொட்டியது போலாயிற்றே என் நிலை இன்னும் எத்தனை நாட்கள் இதனைச் சகிப்பது."

பல பாகங்களில் தேடி அலுத்த காட்டரசனின் வேலையாட்கள் வீரமணி கிடைக்கவில்லை என்ற சேதியைக் கூறிவிட்டுத் தமது கால் வீக்கத்திற்கு மூலிகை தேடினர். உத்தமனும் ஊர்பல சுற்றி அலைந்து, வீரமணியைக் காணாது வருத்தமடைந்தான். வீரமணியோ பித்தங் கொண்டதால், அடவியில் ஓடியும் குன்றுகளிலே கூத்தாடியும், அருவிகளில் நீந்தியும், அட்டகாசஞ் செய்து கொண்டும், தனது பழைய நிலை பற்றிய கருத்தின்றி திரிந்து கொண்டுமிருந்தான். அவனுக்கும், பழைய நிலைக்கும், அவனிடம் மிச்சமாக இருந்த ஒரே தொடர்பு, கலிங்கக் கிழவன் தந்த நீலமணி ஒன்றுதான். பித்த சித்தத்திலும், அந்த நீலமணியிடம் மட்டும் அவனுக்கு ஒரு பிரேமை. அதை இழக்காமல் பாதுகாத்துக் கொள்வதில் ஓர் அக்கரை இருந்தது. நீலமணியைப் பார்ப்பது, நகைப்பது, பிறகு அதைக் கையிலே வைத்துக்கொண்டு கெம்பீரமாக நடப்பது, மடியிலே பத்திரப்படுத்திவிட்டு உறங்குவது—இது வீரமணியின் அன்றாட நிலைமையாக இருந்தது. நீலமணியை உற்று நோக்கும் போது ஏதோ கொஞ்சம் பழைய நினைவு வருவதுபோல் தோன்றும்; மறு விநாடியோ அந்த நினைவு மறைந்துவிடும். இங்ஙனம் வீரமணி, பல இடங்களில் சுற்றித் திரிந்துகொண்டே பாண்டியநாடு புகுந்தான்.

சிற்றூர் ஒன்றையடுத்த சிறு காட்டிலே சிரித்துக் கூத்தாடிக் கொண்டு வீரமணி சென்றபோது, வாட்போர் நடக்கும் சத்தம் கேட்டது. விழி அகன்றது; வீரம் ததும்பிற்று. மடமடவெனச் சத்தம் வரும் பக்கம் சென்றான். அங்கு இரு வீரர்கள் வாட்போர் புரிந்து கொண்டு இருக்கக் சுண்டு, அருகே இருந்த பாறைமீதமர்ந்து கொண்டு, "சபாஷ்! அப்படித்தான்! இப்பக்கம் வீசு!" என்று கூறினான். வாட்போர் புரிந்த இருவரும், 'அட! இவன் எங்கிருந்து வந்தான்' என்று ஒரு பித்தன் வெகுண்டான். பித்தனின் சேட்டையைக் கண்டு எங்கே குறிதவறி விடுகிறதோ என்று அஞ்சினர் இருவரும். எனவே கத்தி வீச்சை நிறுத்திக்கொண்டு, "யாரடா பைத்தியக்காரா! போடா, இங்கென்ன உனக்கு வேலை" என்று கூவினர்.

"எனக்கா என்ன வேலை என்று கேட்கிறீர்கள். அவ்வளவு திமிரா பிடித்துவிட்டது. நான் கற்றுக் கொடுத்த பாடத்தின்படி, 'போர் செய்கிறீர்களா' என்று நான் ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொண்டு இருக்கிறேன். உங்கள் குருவிடமே குறும்பு செய்கிறீர்களா?" என்று வீரமணி கோபமாகப் பேசினான். ஆம்; போரிட்டுக் கொண்டிருந்த இருவரும் அவன் சீடர்கள்; தானோர் வாட்போர் ஆசிரியன் என்ற நினைப்பு வீரமணிக்கு! சண்டையும் மறந்துவிட்டு, இருவரும் சிரித்துவிட்டு, "சரியான பைத்தியமாக வந்து சேர்ந்தது" என்று பேசிக்கொண்டே, வீரமணியின் எதிரே சென்று கும்பிட்டு, "குருவே! நீங்கள் எதிரே நின்றால், எங்களுக்குப் போரிடக் கூச்சமாக இருக்கிறது. ஆகையால் தாங்கள் தயைசெய்து வீடு போய்ச்சேருங்கள். நாங்கள் சண்டையை முடித்துக் கொண்டு சீக்கிரமாக வருகிறோம்." என்று கேலி பேசினர். வீரமணி அதற்கிசைய முடியாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டு, "இந்த ஆரம்ப பாடத்துக்கே இத்தனை நாளா? சுத்த முட்டாள்கள்! உம், ஆகட்டும், நேரமாகிறது. ஆரம்பியுங்கள் சண்டையை! சொல்லிக் கொடுத்த பாடத்தை நன்றாக நினைவிலே நிறுத்திச் சுத்தமாக சண்டை புரியவேண்டும். கத்தியைப் பிடித்திருப்பதே சரியாக இல்லை, கால் எப்போது நிமிர்ந்திருக்க வேண்டும். எப்போது வளைந்திருக்க வேண்டும் என்பதுகூடத் தெரியவில்லை. உங்கள் மண்டையிலே களிமண்ணா! எத்தனை நாளடா இந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுப்பது" என்று கோபமாகப் பேசினான். அதனைக் சேட்டு வயிறு குலுங்க நகைத்து வீரர்கள், "போடாபோ! போகிறாயா, உதை வாங்கிக் கொள்கிறாயா" என்று மிரட்டினர்.

"இதோ பாருங்கள்! ஒரு விநாடியிலே உங்கள் விழிகள் பிதுங்கி வெளிவரச் செய்கிறேன். என்னிடமா, வாலாட்டுகிறீர்கள்?" என்று வீரமணி கூறிக்கொண்டே தன்னிடமிருந்த நீலமணியை எடுத்து அவர்களிடம் காட்டிக் கொண்டு மந்திரவாதிபோல் முணுமுணுத்தான். ஒளிவிட்டுப் பிரகாசிக்கும், விலையுயர் அந்த நீலமணியைக் கண்டதும், இருவீரரும், ஆச்சரியப்பட்டுப் பித்தனிடம் இத்தகைய மணி எவ்விதம் கிடைத்தது என்று யோசித்து, இவனைத் தந்திரமாகத் தம்வசப்படுத்தி நீலமணியைப் பெற்று மன்னனிடம் தரவேண்டு
மென்று தீர்மானித்து நீலமணியின் மாயா சக்தியால் மதிமயங்கியவர்போல பாசாங்கு செய்து வீரமணியை வணங்கி நின்றனர்.

"அடங்கினீர்களா, துடை நடுங்கிகளே!" என்று சிரித்துக் கொண்டே பேசினான் வீரமணி. "குருவே! மன்னிக்க வேண்டும்; பிழை பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்று இருவரும் கூறி, வீரமணியின் தாளை வணங்குவதுபோல நடித்து, காலை வாரிவிட்டனர். வீரமணி குப்பறக் கீழே விழுந்ததும், தலைப்பாகைத் துணியினால் கைகால்களைப் பிணைத்துக் குதிரைமீது, மூட்டைபோலப் போட்டுக் கொண்டு, வீரமணி போட்ட கூக்குரலைப் பொருட்படுத்தாமல், பாண்டிய மன்னனின் அரண்மனைக்கு வெகு வேகமாகச் செல்லலாயினர்.