கலிங்க ராணி/கலிங்க ராணி 38


38


டனா! அவர் எவ்வளவு கருத்துடன் பல நூற்களைப் படிந்திருந்தார் என்பது, அன்று அவர் பேசிய பிறகுதான் நன்கு விளங்கிற்று. காதலால் தாக்குண்டவர்களின் நிலைமையைப் பற்றி அவர் கூறியவற்றிலே ஒன்றைக் கூற என் மனம் என்னைத் தூண்டுகிறது. காதலால் தாக்குண்டு காடு மேடு சுற்றிய உனக்கும் வீரமணிக்கும் அது நன்மை பயக்கும் என்றும் கருதுகிறேன்.

ஒரு தமிழ் அணங்கின் காதலன், பொருள் தேட, வேற்றூர் சென்றான். அப்போது, அந்தப் பெண்மணி, தன் முற்றத்திலே, முறுவலின்றி முடங்கிக் கிடந்தாள். நெடுவழி சென்றவனை நினைத்தாள். அவன் சென்ற இடமா, நீரும் குளிர்ச்சியும் வளமையும் வசீகரமும் இல்லாத இடமாம். மழைகாணா மண்டலத்துக்குத் தன் மணாளன் சென்றிருப்பது தெரிந்து, வெப்பம் அவனை வாட்டுமே என்று அவள் வருந்தினாளாம்! வருத்தத்தோடு, அந்த வனிதை வானை நோக்கினாள். வெண்மேகக் கூட்டத்தைக் கண்டாள். "மேகங்களே! என் மணாளன் சென்றுள்ள மண்டலத்துக்கு விரைந்து சென்று, மழை பொழியலாகாதா!" என்று கேட்டாளாம். கேட்ட பின்னர் அவளே யோசித்தாள். "வெண்மேகம், மழை பொழியும் ஆற்றலற்றதல்லவா? நீர் இல்லையே, அதனிடம்! அது எங்ஙனம் மழை தரும்" என்று யோசித்தாள். அயர்ந்தாளோ? இல்லை; நீர் மொண்டு உண்டு வெண்ணிறம் மாற்றி கருமேகமாகுமின்! காதலன் சென்றுள்ள இடம் சென்று மழை பொழியச்செய்து அவன் வெப்பத்தால் வாடுவதைப் போக்குமின் என்று வேண்டினாள், வெண்மேகங்களை! எவ்வளவு அன்பு அவளுக்கு? காதலன் பிரிந்ததால் தனக்குற்ற கஷ்டம் மட்டுமே பெரிது என்று அவள் எண்ணவில்லை. வெப்பமிக்க இடத்திலே அவர் வருந்துவாரே என்ற நினைப்பே அவளுக்கு அதிக வருத்தத்தை உண்டாக்கிவிட்டது.

உடனே அவள், 'மேகங்களே! என் தலைவர் வறண்ட பூமியில் அவதிப்படுவாரே! வெப்பத்தைப் போக்கி மழைபொழி!' என்று மானசீகமாக வேண்டுகிறாள். இதில் அன்பு மட்டுமா? அறிவுமல்லவா ததும்புகிறது? வானமண்டலத்திடலே எவனோ தேவன் உட்கார்ந்துகொண்டு மழையைப் பொழிய என்ற வறண்ட நினைப்பல்ல அவளுக்கு! நிலத்தில் உள்ள நீரை உண்ட கருமேகம் பின்னர் மழையாகப் பொழியும் என்ற ஞானத்தோடு கேட்டுக் கொண்ட பரிசு! மேலும் சொல்கிறாள்:

வெண்மேகங்களே! நீரை மொண்டு உண்டு, கருமேகமாகி, மழை பொழியின் என்று நான் கூறிவிட்டால் போதுமா. நீர் நிலையங்களைக் காட்ட வேண்டாமோ! நீர் நிலையங்களை மட்டுமல்ல, நீர் வீழ்ச்சிகளையே வெண் மேகங்களுக்கு காட்டுகிறாள். எங்கேயோ எவருக்கோ சொந்தமானவை அல்ல, அவள் காட்டும் நீர் வீழ்ச்சிகள்; அவளுடைய சொந்தச் சொத்து!

"வெண் மேகங்களே! இதோ பாருமின்! அவர் இல்லாததால் வருந்திடும் நான், அழுதபடியிருக்கிறேன். என் கண்களிலே உள்ள நீரை மொண்டு, உண்டு, வெண்ணிறமாக மாறி, கருமேகமாகிப், பின்னர் வெப்பமிக்க இடத்திலே சென்றுள்ள என் மணாளன் மகிழ, அங்கு மழை பொழிமின்" என்று அந்த மங்கை வேண்டிக்கொண்டாளாம். அவளுடைய அன்பு எவ்வளவு ஆழமானது!

தம்பி! தமிழகம் இதுபோன்ற நிலையில் இருந்தது." என்று அன்று என் அண்ணன் உரைத்தார். பல நாட்களுக்குப் பிறகு, புலவரொருவர் ஏதோ ஓர் ஏட்டுச் சுருணையிலிருந்து ஏழெட்டடி பாடிக் காட்டினார். அக்கருத்துப்பட, ஒரு பாடலை, நடனா, மற்றும் பல காதற் சித்திரங்களை அவர் தீட்டினார் அன்று; என்ன அருமை தெரியுமா?

காதற் சித்திரங்களைத் தீட்டிக் கொண்டே, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்க என் அண்ணன் தயாராக இருந்தாரே தவிர, தவமணியைக் கைவிட ஒரு துளியும் சம்மதிக்கவில்லை. நான் குனிந்த தலையுடன், என் தந்தையிடம் சென்றேன். விஷயத்தை உணர்ந்து கொண்ட என் தந்தை "தெரிகிறது, அந்தத் தூர்த்தன் உன் சொல்லைக் கேட்க மறுத்துவிட்டான். ஆம்! போதை குறையாது அவனுக்கு. கள், உண்டவனையே கெடுக்கும்; காமம், அதினினும் கொடியது. அவன் அப்பேய் வயத்தானாகி விட்டான். எனவே இனிப் பிறர் சொற்கேட்கும் பெருங்குணம் அவனிடமிராது. பாம்பும் அவனுக்கு இனிப் பழுதையாகத் தோன்றும். படுபாதாளத்திலே அவன் விழ இருப்பதைத் தடுக்க நான் எடுத்துக் கொண்ட முயற்சி பலிக்கவில்லை. என் செய்வது? ஒரு காரிகையின் கருவிழிக்காக அவன் தன் பரம்பரை வழியையும் இழக்கத் துணிந்து விட்டான். அவன் ஒரு புன்சிரிப்புக்குப் பலியானான்! நான் அவனுடைய கண்களிலே புரளும் நீருக்குப் பலியாவதா? பாண்டிய மன்னனின் நீதி, மக்கட்கு ஒரு விதமாகவும் மகனுக்கு வேறு விதமாகவும் வரக்கூடாது. தலைமுறை தலைமுறையாக ஒளி வீசும், பாண்டியப் பண்பு, பாகு மொழிக்குப் பலியான ஒரு காளையைக் காப்பாற்றுவதற்காகக் கெட விடுவதா? இல்லை! அவன் என் மகனல்லன். என் சட்டத்தை மீறிய சாதாரண குடிமகனே! கட்டுக்கு அடங்க மறுக்கும் அவன் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுத் தயாரித்து, அடுத்த வெள்ளியன்று, விசாரணை நடத்தியே தீருவேன். இதற்கான காரியங்களைச் செய்யுமாறு, மந்திரிக்குக் கூறு. இதோ பார்! இன்று முதல், நீ மூத்தவன் மாளிகையை உனது இருப்பிடமாக்கிக் கொள். அம்மனைப் பணியாட்களிடம் பட்சமாக நட! இளவரச பதவிக்கேற்ற பண்புடன் வாழ வேண்டும்" என்று கூறினார்.

இனி, என் அண்ணன் தப்ப முடியாது என்பது நிச்சயமாகி விட்டதால், என் மனம் மிக அதிகமாக வேதனைப்பட்டது. அவர் உலவிய திருமனையிலே நான் எப்படி உலவுவேன்? அவருடைய பணியாட்களிடம் நான் எப்படிப் பேசுவேன்? அவருடைய உரிமையைப் பறித்துக் கொண்டு நான் எப்படி மக்களிடை உலவுவேன் என்றெல்லாம் எண்ணி ஏங்கினேன். ஊரார் எப்படியும் என்னைப் பழிப்பார்கள் என்று பயந்தேன். நான் ஏன் பாண்டிய மன்னனுக்கு மகனாகப் பிறந்தேன்? பழிச்சொல் ஏற்கவா என்று துக்கித்தேன். என் அண்ணனுக்கு என்ன தண்டனை தருவார்களோ என்று திகிலடைந்தேன். ஆனால், என் அண்ணனோ கவலையின்றி, இச்செய்தியைக் கேட்டுக் கொண்டார்.

"காலதாமதமின்றி விசாரணை நடத்தி, என்னை நாடு கடத்தட்டும். அவளையும் உடனழைத்துச் செல்ல மட்டும் அனுமதி தரவேண்டும். அவளைச் சிறையிலே அடைத்து வைத்துக்கொண்டு என்னை வெளியே துரத்தினால், நான் சும்மா இரேன். பிறகு பாண்டிய நாடு என் பகைவர் நாடுதான்! எந்தக் கோட்டையிலே அந்தத் தவமணியைக் கொண்டுபோய் வைத்திருப்பினும், எத்தனைப் பட்டாளத்தைக் காவலுக்கு வைத்தாலும், நான் நுழைந்தே தீருவேன். இது நிச்சயம்" என்றுரைத்தாராம், காவலாட்களிடம்.

திங்கள்போய் செவ்வாய்; பிறகு புதனும் வியாழனும் விடிந்தது! என் வேதனையும் கட்டுக் கடங்க மறுத்துக் கண்ணீராக வெளிவந்தது! வெள்ளியன்று விசாரணை நடந்தது. ஆனால் என் அண்ணன் செய்த குற்றத்தைப் பற்றிய விசாரணையல்ல, தவமணியின் பிரேத விசாரணை நடந்தது. நடனா! உனக்கு இது கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது போலத் தெரிகிறதல்லவா! வெள்ளி விடிந்ததும் வேலையாட்கள் ஓடோடி வந்து, தவமணி தற்கொலை செய்துகொண்டாள் என்ற செய்தியைக் கூறியதும் நான் துடித்துப் போனேன்.