கலிங்க ராணி/கலிங்க ராணி 39
தன்னால் தந்தைக்கும் தனயனுக்கும் தகராறு விளைவதையும், அரச குடும்பத்திலே அமளி மூள்வதையும் கண்டு சகிக்கமுடியவில்லை தவமணியால்! பெண்ணின் பொருட்டு தன் காதலர் இத்தனை இன்னலை அனுபவிப்பதா? அரசு இழந்து, சுற்றமிழந்து தவிப்பதா? இதற்கு நாம் இடந்தருவதா என்று போசித்தாள். காதலெனும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த என் அண்ணனை விடுவிக்க தன் உயிரையே தியாகம் செய்யத் துணிந்தாள். "விசாரணையா? இளவரசரையா, விசாரிக்கப் போகிறார்கள்! வீணர்கள்; அவர்கள் விவேகமில்லாத ஆணவக்காரர்கள்; இருதயத்தின் துடிப்பை உணராத மூடர்கள்! என்ன செய்தாராம், என் பதி! உள்ளம் உரைக்கும் வழிப்படியேதான் நடப்பேன்! ஊராள்வோன் குறுக்கிட்டாலும் கவலைகொள்ளேன் என்று கூறினால் இது குற்றமா? காதலுக்கு சட்டதிட்டமிடுவது முறையா? நெறியா?
காதல் என்ற உணர்ச்சி அரண்மனைகளிலே நுழையாதபடி, மன்னர் சட்டதிட்டமிடுவது, முடியுமா? நடக்குமா? ஆகுமா? மன்னராம் மன்னர்! நீதியாம் நீதி! இதற்கு ஒரு விசாரணையாம்! விசாரணை நடத்தட்டும் நாளைக்கு! விசாரணைக்குக் கூடிடும் விவேகிகளை நான் கேட்கிறேன் சில கேள்விகள்! பதில் கூறட்டுமே பார்ப்போம் அந்த அறிவாளிகள்" என்று வியாழனன்று இரவு, தவமணி, தான் அடைபட்டிருந்த சிறையிலே கூவிக் கொண்டிருந்தாளாம்! எப்போதும் அடக்கமாக இருக்கும் தவமணி அன்று ஆர்ப்பரித்தது கண்ட காவலாளிகள் கூடக்கொஞ்சம் கடிந்து, தவமணியைக் கள்ளி என்றும் காமச் சேட்டைக்காரி என்றும் திட்டினராம் "தூ! கூலிக்கு வேலை செய்யும் கூளங்களே! வாயை மூடுங்கள்! என்ன தெரியும் உங்களுக்கு நியாயம்! மந்தையிலே வாழும் உங்கட்கு மனதின் சுதந்திரம் என்ன தெரியும்? மன்னன் மொழிக்கு மறுமொழி இல்லையென்று கூறி, மண்டியிட்டு வாழ்ந்து, வயிறு கழுவுங்கள். அது உங்கள் நிலை; எனக்கென்ன? இந்த அரசன் எனக்கு ஒரு துரும்பு! இந்த உலகம் எனக்குப் பிடிமண்! சட்டம் எனக்குச் சாக்கடைச் சேறு! என்னை யார் என்று தெரிந்து கொள்ள முடியாது உங்களால் இன்று! நாளைக்குப் பாருங்கள் என்னை! நான் யார் என்பது விளங்கும்!" என்று தவமணி ஆத்திரமொழி பேசினாளாம். அவள் உரைத்ததன் பொருள் வெள்ளி விடிந்ததும் விளங்கி விட்டது.
கார்மேகம்போல இருண்டு, மினுமினுப்புடன் விளங்கி, நீண்டு அடர்ந்து இருந்த கூந்தலே அவளுக்குக் கூர்வாளாகிவிட்டது. அதனைக் கொண்டே, சங்கு போன்ற கழுத்திலே சுருக்கிட்டுக் கொண்டு, சிறை அறையிலேயே, பிணமானாள் அப்பெண்! நோயின்றி நலிவின்றி, இருந்தவள் திடீரென்று இறந்ததால், உடல் ஒரு துளியும் வாடவில்லை. சுருக்கிட்டிக் கொண்டிருந்ததால், விழி சற்று வெளியே வந்து விட்டது. மற்றபடி அலங்கோலம் இல்லை. பொன்னாற் செய்த பதுமைபோலக் காணப்பட்டாள். தவமணியின் தற்கொலை, ஊரைக் கலக்கிவிட்டது. என் தந்தையின் மனதைக் கரைத்துவிட்டது. என்னைக் குழப்பம் அடையும்படி செய்துவிட்டது. இனி, என் அண்ணண் நிலைமையைக் கூறவும் வேண்டுமோ! "ஆ! ஐயோ! தவமணி! தியாகவல்லி! கண்மணி! உன்னை இழந்தேனா!" என்று அவர் கதறியது கேட்ட, அரண்மனை வாசிகள், வேதனைப்படும் வேங்கை பேச ஆரம்பித்தால் இப்படித்தான் இருக்கும் என்று முணுமுணுத்தனர். என் அண்ணனுடைய குரலிலே, துக்கமும் கோபமும் கலந்திருந்தன.
தவமணியின் பிரேத விசாரணை நடந்தேறியது. 'இளமையும், எழிலும் கொண்ட நான் உலவ, இந்த அரண்மனை இடந்தரவில்லை. இது முறையா? எனினும் எழிலுடைய மங்கை உண்டா. என்னைப் பார்த்துவிட்டுப் பதில் கூறுங்கள்' என்று தவமணி கேட்பது போலிருந்தது. சட்டமும் பட்டாளமும், அரசரின் கோபமும் ஆள்வோரின் ஆர்ப்பரிப்பும், சிறையும் பிறவும், என்னை என்ன செய்ய முடியும் என்று கேட்டுச் சிரிப்பது போலவே இருந்தது அந்தப் பிணத்தின் கோலம்! பார்த்தவர்கள், பிரலாபிக்காமலில்லை! மனதிற்குள் மன்னனைத் தூஷிக்காமலில்லை. அன்று அரண்மனை முழுவதும் அலங்கோலமாகத்தான் இருந்தது. அந்தத் துக்கம் ஆற, ஒருவாரம் ஆயிற்று. இதற்கிடையே என் அண்ணன் கொதிக்கும் எண்ணெய் நிரம்பிய கொப்பரையிலே வீழ்ந்தவரானரா! கோவெனக் கதறுவார்; சுவரிலே மோதிக் கொள்வார்; சோர்ந்து விழுவார்; சோறு உண்ணார்; சோகமே உருவானார். தவமணி இறந்தாளே தவிர, என் அண்ணன் மனதிலே மூண்ட காதற் தீ அணையவில்லை.
அவள் இறந்தாள். தந்தையும் தனயனும் ஒற்றுமைப்படுவர் என்று கூற முடியாத நிலை உண்டாகிவிட்டது. "சிறையிலிருந்து விடுவித்தால், முதல் வேலை, என் காதலி தற்கொலை செய்து கொள்ளும் நிலையை உண்டாக்கிய காதகனின் கழுத்தை முறிப்பதுதான்!" என்று என் அண்ணன் கூறினார். வெறுங் கோபத்தோடு மாத்திரமல்ல; அசைக்க முடியாத உறுதியுடன், 'கேட்பவர் அச்சங் கொள்ளும் விதத்திலே சிறைக் கதவுகளைத் தூளாக்குவேன்; கம்பிகளைப் பெயர்த்தெடுப்பேன்; சுவரினைப் பிளப்பேன்' என்று இடி முழக்கமிடலானார். காவலாளிகள் பயந்தனர்! துணை தேடினர். மன்னர் மிரண்டார். 'தவமணி இறந்ததுடன் ஆபத்தும் நெருக்கடியும் ஒழிந்தது என்று கருதினேன்; புதிய ஆபத்து புறப்பட்டு விட்டதே! வேதனை இவனுக்கு வெறியூட்டிவிட்டது. இதற்கென்ன செய்வேன்' என்று கதறினார்.
மீண்டும் நான் தூதனுப்பப்பட்டேன் அண்ணனிடம். என்னைக் கண்டதும் அவர் கோவெனக் கதறி, 'இப்போதாவது திருப்தி உண்டாயிற்றா, அதிகார ஆணவம் பிடித்தலையும் உன் தந்தைக்கு? என் கண்ணைத் தோண்டி எடுத்துவிட்டார்; காரிருள் மயமே இனி எனக்கு இவ்வுலகம்' என்று கூறினார். நெடுநேரத்திற்குப் பிறகே, அவருக்கு ஓரளவு ஆறுதல் பிறந்தது. பிறகு நான், மன்னர் மிரண்டிருப்பதைக் கூறினேன். மகனுக்குத் தந்தை பயந்து வாழும் நிலைமை கூடாது என்று வாதிட்டேன். மன்னரின் உயிர் பிரியின் தவமணி மீண்டும் வாராளே என்றுரைத்தேன். மிகப் பக்குவமாகப் பேசித் தந்தையைக் கொன்றுவிடத் துணிந்த என் அண்ணனின் எண்ணத்தைக் கொன்றொழித்தேன். பிறகு, அவருடைய எதிர்காலத்தைப் பற்றிய பேச்சு எழுந்தது. வாழ்க்கையிலே எழும்பிய புயல் அடங்கி விட்டது. இனி பழைய நிலை அடைவதுதான் முறை என்றும், கொந்தளிக்கும் கடலிலே உலவும் மரக்கலம், பிறகு துறைமுகம் சேர்ந்துதானே தீர வேண்டும் என்றும் நான் உபமான உவமேயங்களுடன் பேசினேன். அவரோ, தீயினாற் சுட்ட புண் ஆறும்; ஆனால் நாவினால் சுட்ட வடு ஆறாது. நோய் தீரும்; ஆனால் உள்ளம் ஒடிந்தால், ஒட்டுவித்தை நடக்காது என்று உரைத்துவிட்டார். "இனி எனக்கு இங்கு வேலை கிடையாது. என் வேலை இனி உலகைச் சுற்றுவது. கானாறும், காடும், குன்றும், குடிசையும், மணல் வெளியும், முட்புதரும், எனக்கு இனி தோழர்கள். உங்கள் அரண்மனையிலே அழகிகள் ஆடுவர், பாடுவர்! இனிக் காடுகளிலே, தோப்புகளிலே பறவைகள் பாடிடக் கேட்டு இன்புறுவேன். நறுமண நீரில் குளித்துப் பட்டாடை பூண்டு, பட்டத்தரசனாகும் வேலை எனக்கு வேண்டாம். என்னை இனிப் பாண்டிய நாடு, உயிரோடு பாராது! இன்றே, இப்போதே, பட்டத்து உரிமை, அரண்மனை வாழ்வு, பாண்டிய நாடு வாசம் எல்லாம் துறந்தேன். இன்றிரவு ஊரடங்கியதும், எனக்கு நாடு கடக்க உத்தரவும், ஒரு வாள், ஒரு புரவி, பட்டத்துக்கு அரசியாகும் பேறு பெறுபவள் அணிவதற்கென நமது பொக்கிஷத்திலே உள்ள நீலமணி ஆகியவற்றைத் தரவேண்டும். நான் ஏறவேண்டிய பீடத்திலே நீ வீற்றிருக்கலாம். ஆனால் என் தவமணி அணிந்திருக்க வேண்டிய நீலமணியை, பாண்டிய நாட்டு ராணி யாரும் அணியக் கூடாது. இந்த என் வேண்டுகோளை நிராகரித்தால் நாளை காலை என் பிரேத விசாரணையைப் பாண்டிய மன்னர் நடத்தட்டும்! அவருக்குத்தான் பிண விசாரணை நடத்துவதிலே பழக்கமிருக்கிறதே!" என்று அண்ணன் கூறினார். வாழ்க்கையை அவர் எவ்வளவு வெறுத்துவிட்டார் என்பது அவருடைய பேச்சிலே முழுமையாகத் தோய்ந்து கிடந்தது.
நடனா! "கடைசி முறையாகக் காண வேண்டும்; நான் வயோதிகன்; அவன் மீண்டும் இங்கு வருவதானால் கூட, நான் உயிரோடு இருக்கமாட்டேனே! இன்றிரவு ஒரே முறை அவனைக் கண்டு அணைத்துக் கொண்டால்தான் என் மனம் கொஞ்சம் நிம்மதி அடையும்" என்று மன்னர் கெஞ்சினார். "என்னை அவர் பார்க்கக் கூடாது! தவமணியின் மரணத்துக்குக் காரணமாக இருந்த அவரைக் கண்டதும், "என் கரங்கள் அவருடைய கழுத்தை நெறித்து விடும்." என்று அண்ணன் கூறிவிட்டார். அன்றிரவு நடுநிசியில் நீலமணியை நான் எடுத்துச் சென்று அவரிடம் தந்தேன்; கண்களிலே நீர் புரள நின்றேன்; காலிலே வீழ்ந்து பணிந்தேன். ஒரு விநாடி அவருக்கு என்னிடம் கனிவு எழும்பிற்று; கட்டித் தழுவினார். மறுவிநாடி பழையபடி நின்றார். குதிரை ஏறினார். பறந்தார், அரண்மனைத் தோட்டத்தைவிட்டு! அன்று கண்டதுதான் அவரை. நடனா! பிறகு, இதோ நீலமணியைக் கண்டதும், அவரைக் காண்கிறேன்" என்று பாண்டியன் தன் அண்ணன் வரலாற்றை விழிநீரோடு கூறி முடித்தார்.