கலிங்க ராணி/கலிங்க ராணி 5


5


"டி கங்கா! உங்கள் நாட்டுக் கதை ஏதாகிலும் சொல்லேன் கேட்போம்" என்று அம்மங்கை கேட்க, ஆரியப் பெண் "ஆயிரம் கணக்கிலே உண்டு கதைகள்; அவைகளிலே உமக்குப் பிடித்தமானது எதுவாக இருக்குமென்றே யோசிக்கிறேன்" என்று உரைத்தாள். நடனராணி "எதையாவது ஒன்று சொல்லு கேட்போம்" என்றாள். அரசிளங்குமரி "வீரக் கதைகள் கூறு" என்று கூற, நடனராணி சிரித்துக் கொண்டே, "அது கிடையாது" என்றுரைத்தாள். "ஏனில்லை ராணி? பத்துத் தலையும் இருபது கரங்களும் கொண்டு, அஷ்டதிக்கு பாலர்களை வென்று மாயா ஜாலம் மகேந்திர ஜாலம் கற்று மாவீரனெனப் பெயரெடுத்த இராவணனை எங்கள் இராமபிரான் சம்ஹாரம் செய்ததும் இலங்கையை நிர்மூலப்படுத்தியதும் வீரமில்லையோ? எங்கள் இனத்திடமே இந்த நடனாவுக்குத் துவேஷம். நாங்களும் வீரமான இனந்தான்" என்று கங்கா கோபித்துக் கூறினாள்.

நடனம் சாந்தமாகவே பதிலுரைத்தாள். "அடி பாலா! நீ சொன்ன கதை மனிதனுடையதல்லவே; மகாவிஷ்ணுவின் அவதாரக் கதையென்றுதானே உங்கள் புராணம் கூறுகிறது. அரசியார் கேட்டது, சாதாரண மக்களிலே வீரராக இருப்பவரின் கதையைத்தானே; கடவுளின் கதையல்லவே, கடவுளின் வீரம், தீரம், பராக்கிரமங்கள் பற்றிக் கதை வேண்டுமோ? கடவுள் என்றால் எல்லாவற்றையும் கடந்தவர் என்றுதானே பொருள்.

இராமரின் வீரத்தைவிட அந்தப் புராணமூலம் வாயுவாஸ்திரம், வருணாஸ்திரம், அக்னியாஸ்திரமாகியவைகளின் வேடிக்கைகள்தான் அதிகமாக விளக்கப்படுகின்றன. அரசியார் அதைக் கேட்கவில்லை; உங்கள் நாட்டு வீரர் கதை ஏதேனும் கூறச் சொன்னார்கள்; சொல்லு இருந்தால்" என்று நடனம் விளக்கினாள். கங்கா "எனக்கொன்றும் கவனமில்லை" என்றுகூறி முகத்தைச் சுளித்துக் கொள்ளவே அரசிளங்குமரி "இதென்ன வம்பாகிவிட்டது. வீரக் கதை கிடக்கட்டும்; மாதரைப்பற்றி கூறு" என்றாள். கங்கா மௌனம் சாதித்தாள். "நீ கூறு நடனா! பாலாவுக்குக் கோபம் அடங்கட்டும்" என்று அம்மங்கை கூறிட, நடனம் கதை சொல்லத் தொடங்கினாள். "தேவி! இது நம் நாட்டுக் கதையல்ல, கங்கைக் கரையோரத்துக் காதல் கதை என்று ஆரம்பிக்கும்போதே. கங்கா "தேவி! வேண்டுமென்றே நடனம் என்னை அவமானப்படுத்தப் போகிறாள். அதற்காகவே கதை சொல்ல முன்வந்தாள். நான் பூத்தொடுக்கப் போக உத்திரவு கொடுங்கள்" என்று வேண்டிக் கொண்டாள். அம்மங்கை, "சரி! சரி! உங்கள் சண்டையும் வேண்டாம்; கதையும் வேண்டாம்" என்று கூறிவிட்டாள்.

நடனராணிக்கும் அம்மங்கைக்கும் விரோதமூட்டிவிட வேண்டுமென்பதே பாலாவின் திட்டம். ஏற்கனவே அம்மங்கை தன்னிடம் பிரியமாக நடக்கும்படியான வழியை உண்டாக்கி கொண்டாள். ஆனால், தன்னை நடத்துவதைப் பார்க்கிலும் அம்மங்கை நடனராணியையே அதிக மரியாதையாக நடத்துவது கங்காவுக்குப் பிடிக்கவில்லை. எப்படியேனும் நடனத்தை அவளிருந்த பீடத்தினின்றும் கீழே இறக்கிவிட வேண்டுமென்று துணிவு கொண்டாள்.

'நடனத்துக்கு அரண்மனையிலே வளர்ந்துள்ள செல்வாக்கு வீரமணியின் உயர்வுக்கும் பயன்படும். வீரமணியின் உயர்வு தமிழரின் நிலையை உயர்த்தும், தமிழர் நிலை உயருமானால் ஆரியருக்கு அந்நாட்டிலே வேலையில்லை. ஆரிய குலத்தில் பிறந்து இன உயர்வுக்குப் பாடுபடாது இருப்பதோ! எதற்கு இந்த ஜென்மம்?' என்று எண்ணி ஏங்கினாள் பாலா. தன்மீது கங்கா காய்ச்சல் கொண்டிருப்பதை ஒருவாறு நடனம் உணர்ந்தாளேயொழிய, தன்னைக் கவிழ்கவும் சதி செய்வாள் என்று கருதவில்லை. 'நாம் அவளுக்கு ஒரு தீங்கும் செய்தோமில்லை; நம்மை அவள் என்ன செய்ய முடியும்?" என்று கருதினாள். அம்மங்கையின் செவியிலே ஆரியப் பெண்ணின் கலகம் புகாது என்று நம்பினாள்.

இந்நிலையில் கலிங்க நாட்டின் மீது மன்னன் போர் தொடுத்த செய்தியைச் சேவகன் கொண்டு வந்தான். நடனம் திகைத்தாள். காதலன் வருவான் என்று எதிர்பார்த்திருந்தவளுக்குக் கலிங்கக் களம் புகுந்தான் என்றால் கஷ்டம் விளையாதோ? அவளுடைய நிலையை உணர்ந்த அம்மங்கை, "நடனம்! உன் காதலனுக்குக் குதிரைப் படைத்தலைவன் பதவியைத் தந்தாராம் மன்னர். அதற்குச் சன்மானம் உண்டு. என்ன தெரியுமா? களத்திலிருந்து வீரமணி திரும்பியதும் திருமணம். திருமணம் நடக்கும்போது பரிசாக அழகிய கிராமம் ஒன்று தரப்படும் மன்னரால். நான் ஓர் முத்துமாலை தருவேன் பரிசாக" என்று கூறினாள். நடனராணி வேதனையை மறந்து வெட்கித் தலைகுனிந்து, "தங்கள் அருள் இருப்பின் போதும் அம்மையே" என்று சொன்னாள்.

பெருமூச்சை கங்கா அடக்கியபடி, "எப்படியோ நடனமாடி, கண்ணையும் கையையும் காட்டி மயக்கி விட்டாய்; சரியான ஆள் சிக்கிவிட்டார், உனக்கு யோகந்தானடி நடனம். ஆனால், கலிங்கப் போரிலிருந்து உன் காதலன் திரும்பி வர வேண்டும்; கௌரி பூஜை செய்" என்று கேலி செய்ய, நடனம் வெடுக்கென்று "கௌரி பூஜை நான் செய்து பயன் என்ன? அவருடைய கண் ஒளியும் வாள் ஒலியும் கூர்மையாக இருக்கும்வரை வெற்றி ஒலி கேட்டுத்தானே தீரும். அவர் சாமான்யமானவரா?" என்று பூரிப்புடன் பேசிட, இதுதான் சமயம் என்றுணர்ந்த பாலா 'தொண்டைமானிடம் இவன் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டு நடனத்தின் வாயிலிருந்து ஏதேனும் வம்பு வெளிவராதா என்று எதிர்பார்த்தாள். "தொண்டைமான் தீரர். என் காதலரும் வீரரே! மாற்றுக் குறைந்தவரல்லர்" என்று நடனம் பதிலுரைத்தாள். கங்கா கலகலவெனச் சிரித்துக் கொண்டே 'அவர் மாற்றுக் குறையாதவர்தான். ஆனால்..." என்று இழுத்தாள். "நான் மாற்றுக் குறைந்தவள் என்று கூறுகிறாயா?" என்று நடனம் கோபக்குறியுடன் கேட்கவே, அம்மங்கை மீண்டும் அமளி வந்துவிடப் போகிறதென்று அஞ்சி "கங்கா! என்ன இருந்தாலும் உனக்கு வாய் துடுக்குத்தான்" என்று கடிந்துரைத்துப் பாலாவின் வாயை அடக்கினாள்.

"ஆமாம். நான் ஒரு நாட்டியக்காரிதான். பரத்தையின் வளர்ப்புப் பெண். இதைத்தானே நீ குறிப்பிட்டாய். இதுதானே என் மாற்றுக் குறைவு? பேஷ்! கங்கா! என் பிறப்புக்காக நான் வெட்கப்படவில்லை. என் நடனத்திற்காக நான் வெட்கப்படத் தேவையில்லை; என் நிலைக்காக நான் நாணிடவும் வேண்டியதில்லை. என்னை நான் நன்கு தெரிந்து கொண்டிருக்கிறேன். நீ உன்னை யார் என்று தெரிந்துகொள்" என்று அதிகக் கோபத்துடன் பேசிவிட்டு "தேவி! இன்று முதல் நான் வெளியே விடுதி ஏற்படுத்திக் கொண்டு வாழ விரும்புகிறேன். உத்திரவு தரவேண்டும்" என்று அம்மங்கையைப் பணிவோடு கேட்க அம்மங்கை திகைத்து நிற்கையிலே, "ஆமாம், தனி ஜாகை அவசியந்தான் உனக்கு. சதிகாரர்கள் கூடிட இரகசிய இடம் வேண்டாமோ?" என்று பாலா கூறினாள்.

"என்னடி உளறுகிறாய்" என்று அம்மங்கை அதட்டினாள். பயந்தவள்போல் பாலா பாசாங்கு செய்து கொண்டு, "மன்னிக்க வேண்டும். கோபத்தால் ஏதோ கூறிவிட்டேன். நான் அதைக் கூறியிருக்கக்கூடாது; என் மனதிலேயே போட்டு வைத்திருக்க வேண்டியதைக் கொட்டிவிட்டேன். அதைத் தயவுசெய்து மறந்து விடுங்கள்," என்று கூறினாள். அம்மங்கை ஒன்றும் புரியாமல் பாலாவின் கரத்தைப் பிடித்திழுத்துக் கடுங்கோபத்துடன், "விளையாடாதே! உண்மையை ஒளிக்காதே! சதிகாரர் என்று யாரைக் கூறினாய்? நடனாவுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? இப்போதே கூறு; இல்லையேல் நான் உன்னை தண்டிக்க ஏற்பாடு செய்வேன்" என்று மிரட்டினாள்.

"ஐயையோ! இதென்ன, எனக்கொன்றும் புரியவில்லையே" என்று கைபிசைந்து நின்றாள் நடனம்.

கங்கா, "தேவி! என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள்; நான் மட்டும் அதனைக் கூறவே மாட்டேன். அதனால் பலருக்குக் கேடு வரும்; அந்தப் பாபம் எனக்கு வேண்டாம். என்னை வேண்டுமானால் வேலையைவிட்டு நீக்கிவிடுங்கள்" என்று பிடிவாதமாகப் பேசவே, மேலும் கோபமுற்ற அம்மங்கை "உண்மையைக் கூறு" என்று உரத்துக் கூறினாள். "எப்படிச் சொல்வேன் தேவி! என்னை மன்னிக்க வேண்டுகிறேன். நடனாவும் வீரமணியும் தங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்கள். நான் கூறுவதைக் கேட்டாலோ அவர்கள் இருவரையும் தூக்குமேடைக்குத் தாங்கள் அனுப்புவீர்கள்" என்றாள் பாலா. அம்மங்கை மிரண்ட பார்வையுடன் நடனத்தை நோக்க நீர் வழியுங்கண்களுடன், "பாலா! என்ன பழியையடி சுமத்தப் பார்க்கிறாய் கள்ளிǃ கிராதகி!" என்று கூக்குரலிட்டு நின்றாள்.

"நானா கள்ளி! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் நீ உத்தமி, உன் கபடத்தை வெளிப்படுத்தப் போகும் நான் கள்ளியா? கேள் தேவி! வீரமணியும் நடனமும் பேசிக்கொண்டிருந்ததை நான் மறைந்திருந்து கேட்டேன். குலோத்துங்கச்சோழன் பட்டத்துக்குரியவரல்லவாம். அவரைக் கவிழ்த்து விட்டு பழைய மன்னரின் வாரிசாக உள்ள வேறு யாருக்கோ பட்டம் சூட்டப் போகிறார்களாம். மணி இதற்காகவே படையிலே சேர்ந்து பக்குவமாக நடக்கிறாராம், இவள் அரண்மனையிலே இருப்பதும் இதற்குத்தானாம். இவர்களுக்கு உதவியாக ஊரிலே யாராரோ இருக்கிறார்களாம்" என்று பெரியதோர் பழியைப் பாலா சுமத்தினாள்.

"பேயே! நான் இதனைத் துளியும் நம்பமாட்டேன்" என்றாள் அரசிளங்குமரி.

"அதனை நானறிவேன் அம்மையே! நடனத்தின் நடிப்பு உங்களை ஏமாற்றி இருப்பதை நான் நன்கு அறிவேன். என் பேச்சை நம்ப வேண்டாம். தயவுசெய்து வீரமணி தந்தனுப்பினானே கிளி, அதைப் போய்க் கேளுங்கள்" என்றுரைத்தாள் பாலா.

"பித்தமா இவளுக்கு? சதி என்றாள், கிளி என்றுரைக்கிறாள். என்னடி சொல்லும் கிளி? சொன்னதைச் சொல்லும்" என்றாள் அம்மங்கை.

"ஆமாம்! சொன்னதைத்தான் சொல்கிறது. வீரமணி சொல்லிக் கொடுத்ததைச் சொல்கிறது.. அதைப் போய்க் கேளுங்கள் யார் என் மனைவி?" என்று. உடனே அம்மங்கை என் மனைவி என்று கூறும் நடனாவின் உதவியைக் கொண்டு வீரமணி சதி செய்து, அரசைக் கைப்பற்றித் தங்களையும் கைப்பற்றிவிடக் கனவு காண்கிறான். தனிமையில் கிளியுடன் பேசியிருக்கிறான்போல் தோன்றுகிறது. நான் அகஸ்மாத்தாய் இதைக் கண்டுபிடித்தேன்; கிளியை எடுத்துவரச் சொல்லுங்கள்" என்றாள்.

"விந்தையான பேச்சு! போடி. கிளியை எடுத்துவா இப்படி" என்று ஒரு சேடிக்கு அம்மங்கை கட்டளையிட்டாள்.

ஓடிச்சென்ற தோழி, கிளியின் உடலைத்தான் எடுத்து வந்தாள்; கிளி செத்துக் கிடந்தது.

"சரி! ஆரம்பமாய்விட்டது சதி. தேவி! நடனம் இதைக் கொன்றுவிட்டிருக்க வேண்டும். விஷயத்தை மறைக்கவே கிளியைக் கொன்றுவிட்டாள்" என்றாள் பாலா.

அம்மங்கை, ஓங்கிக் கங்காவின் கன்னத்தில் அறைந்து "என்முன் நில்லாதே! ஓடு!! என் அருமைத் தோழியின்மீது வீணான விபரீதத்தைச் சாட்டினாய், கிளியை நீதான் கொன்றிருக்க வேண்டும். கிளியையும் கொன்று கட்டுக்கதையையும் புனைந்து பேசுகிறாய். உங்கள் புராணத்திலே நடப்பதைப் புனைந்து பேசுகிறாய். உங்கள் புராணத்திலே நடப்பது போலவே நீ நடந்து கொண்டாய். பொல்லாங்குக்காரி! நீ ஒரு பெண்; ஆகவே உன்னைத் தூக்கிலிடச் செய்ய என் மனம் வரவில்லை; போய்விடு, அரண்மனையை விட்டு" என்று கூறிவிட்டுத் தேம்பி நின்ற நடனத்தை அணைத்துக் கொண்டு, "சீ முட்டாளே! எவளோ ஒருவள் ஏதோ சொன்னால் நான் நம்புவேனா! அவள் உறவே இனி நமக்கு வேண்டாம்; வா, நாம் போவோம்" என்று கூறி நடனத்தை அழைத்துக்கொண்டு அந்தப்புரம் போய்விட்டாள்.

கங்கா அழவில்லைǃ சிரித்தாள். விதை தூவிவிட்டோம்; அறுவடைக்குக் காலம் இருக்கிறது என்று மனத்திற்குள் கூறிக்கொண்டு அரண்மனையைவிட்டு வெளியேறி வெளியே நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலிங்க_ராணி/கலிங்க_ராணி_5&oldid=1724938" இலிருந்து மீள்விக்கப்பட்டது