கலிங்க ராணி/கலிங்க ராணி 6
கலிங்க நாட்டிலே கலக்கம் உண்டாகிவிட்டது. போர் தொடுக்கச் சோழன் கிளம்பினான் என்ற செய்தி கேட்டதும் ஒற்றர் ஓடோடி வந்து நடந்த வரலாற்றினைக் கூறி விட்டனர். தூதுவரும் போர் தொடுத்தாகிவிட்டதென்று ஓலை கொண்டு வந்து கொடுத்துவிட்டனர். தமது மன்னன் வீணாக விரோதத்தை வளர்த்துக் கொண்டதால், நாட்டிலே வேதனையே தாண்டவமாடப் போகிறதென்றுணர்ந்த மக்கள், கைபிசைந்து கொண்டனர். கண்களிலே மிரட்சி ஏற்பட்டு விட்டது. போருக்குச் சித்தமாகப் படை பல இருந்தன. காட்டரண், கடலரண், மலையரண் ஆகியவைகளும் இருந்தன. ஆனால் மக்களின் மன அரண் இல்லை! மன்னனின் மமதை எனும் அரண் கிடந்தது. மதிகேடர்கள் கட்டிக் கொடுத்த மனக்கோட்டையிலே உலவிக் கொண்டிருந்தான் மன்னன்.
குலோத்துங்கனுக்கு உள் நாட்டிலேயே எதிர்ப்பு என்றும், பழைய மன்னரின் மகன் கட்சி ஒன்று இரகசியமாக வேலை செய்து வருவதாகவும், அதனால் குலோத்துங்கனிடம் குடிபடைகளுக்கு வெறுப்பு வளர்ந்திருப்பதாகவும், வெளிநாட்டின் மீது போர் தொடுக்கவோ, தொடுத்தால் வெற்றி பெறவோ முடியாத நிலைமையிலே சோழ மன்னன் இருப்பதாகவும், சோழ மண்டலத்து ஆரியர்கள் கூறினர் எனக் கலிங்க நாட்டு ஆரிய மன்னனிடம் கூறினர். மந்தமதியினன் அதனை நம்பினான்; வம்பை வரவேற்றான். போருக்குத் தானும் தயார் என்று பதில் ஓலை விடுத்தான். போரிட ஆயத்தமானான்; சபை கூட்டினான்.
"மந்திரிமார்களே! பிரதானியரே! படைத்தலைவர்களே! குலோத்துங்கன் இந்தக் குவலயமே தனக்குச் சொந்தமெனக் கூறுகிறான், பிறர்மீது பகைகொண்டு போரிடத் துடிக்கிறான். சோழன் சூரன்; நாம் கோழைகளல்ல! அவன் வீரன்; ஆனால் நாம் மண் பொம்மைகளல்ல! அவனிடம் படைகள் உள்ளனவாம்; ஆனால் நம்மிடம் உள்ளவை பதுமைகள் என்றெண்ணுவதோ! கரியும் பரியும் அதிகமாம்; அதற்காகக் கர்வமும் பேதமையும் மிகுவதோ! கலிங்கத்தின் மீது குலோத்துங்கன் போர் தொடுத்து விட்டான். நான் களம்புகச் சித்தமாகிவிட்டேன் உம்மைக் கலந்து ஆலோசிக்கவே இன்று சபை கூட்டினேன்" என்று அனந்தவன்மன் கோபக்கனல் எழப் பேசித் தன் மீசையை முறுக்கினான். சபை நிசப்தமாக இருந்தது. முதியவரான எங்கராயன் எனும் மந்திரியார் எழுந்து நின்று "மன்னவா! விந்தையான பேச்சு நிகழ்த்தினீர்! எம்மைக் கலந்தாலோசிக்கச் சபை கூட்டினீர் என்றீர்; ஆனால் களம்புக முடிவு செய்து விட்டேனென்கிறீர். முடிவு கட்டிய பிறகு காலந்தாலோசித்தல் முறையோ? எற்றுக்கு அது? என்ன பயன்? முடிவு செய்யும் அதிகாரம் முடிதரித்த உமக்குண்டு. ஆனால் கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்வைத் தாங்கள் பிடி சாம்பலாகக் கருதினீர். எனவேதான் போரிட முடிவு செய்துவிட்டீர். பொதுமக்களிடையே ஏதேனும் புகல இன்று சபை கூட்டியுள்ளீர். நன்று, நன்று, உமது நியாயம்" என்றுரைத்தார்.
மன்னன்: "ஓய் மந்திரியாரே! வயோதிகம் உமது உடலை மட்டுமே வளைத்து விட்டதென்று எண்ணினேன். உமது மதியையும் வளைந்து விட்டதென்று விளக்குகிறீர், சோழனின் சொல்லம்பு என்னைத் துளைத்தது. இனி போர் எனும் கவசம் பூண்டாலொழிய நான் வாழ்வதெங்ஙனம்? அவன் போர் என்றதும் நான் பொறு என்பதா? அவன் 'வாள்' என்றதும், நான் கேள் தேவனே என்று முறையிட்டு மண்டியிடவா? என்னை நீர் மன்னனெனக் கருதாது ராஸத் துவேஷம் செய்கிறீர். என்னைப் போரிடக் கூடாது என்றுரைப்பது என்னை மானமற்றவனெனக் கூறுவதாகும். அது என் ஆண்மையைப் பழிக்குங் குற்றமாகும். இதை நான் மன்னிக்கமாட்டேன். உமது உயிர் தித்திப்பானால் வீட்டிலே இரும்; வெள்ளாட்டியருடன் விளையாடும். வீரர் ஒருவர் இருவர் உடன் வரட்டும்; களம் புகுவேன் நான்" என்று மன்னன் கடிந்துரைக்கவே, மந்திரி சோகித்து "அரசே! ஆத்திரத்திற்குச் சாத்திரமில்லை. பிஞ்சில் பழுத்தது வெம்பிற்று என்பர். வீரம் வேறு; வீம்பு வேறு. அரசு எனும் சகடத்திலுள்ள நுகத்தடியை ஒரு பக்கம் மன்னன்—மற்றோர் பக்கம் மந்திரிகள் தாங்கி இழுத்தாக வேண்டும் என்று ஆன்றோர் கூறுவர். மன்னா! காய்வதிலே கடுகத்தனையும் பயன் காண்பதற்கு இல்லை. கிழட்டுக் கோழையாக இதோ என்னைத் தாங்கள் கூறிவிட்டீர்கள். பதட்டமிக்க பாலகனே என்று தங்களை நான் கூற முடியாது, தாங்கள் மன்னர் என்ற காரணத்தால். ஒன்று கூறுவேன். அரசு எனும் எந்திரத்திற்கு மந்திரிகளே கண்கள்; மக்களே வாள்கள்; தோழர்களே, தோள்கள்; ஒற்றரே செவிகள் என்று மேலோர் கூறுவர்" என்று சாந்தமாகவே கூறினார்."ஆம்! அந்தக் கண்களிலே சில மங்கிவிட்டன. அரசே! போர் புரியச் சித்தமான உமது வீரத்தைச் சபை வரவேற்கிறது! கலிங்கம் வரவேற்கிறது, வீரர் வரவேற்கின்றனர்!" என்று கூறிக்கொண்டே திசைமுகன் எனும் மந்திரி எழுந்து நின்றான். மலர்ந்த முகத்துடன் மன்னன் அவனை நோக்கி "சபாஷ்! நன்று! இஃதன்றோ நான் கேட்க விரும்பியது" என்று புகழ்ந்துரைத்தான்.
"குலோத்துங்கனின் படைகள் பூங்காவுக்குள் புகுவது போல் இங்கு வந்து சேருமோ! இடையே பாலாறு, குசைத்தலை, முகரி, கொல்லி, பெண்ணை, வயலாறு, மண்ணாறு, பேராறு, கோதாவரி, கம்பை, கோதமை ஆகிய பல நதிகளைக் கடக்க வேண்டும். கலிங்கத்தின் மீது பாயுமுன் அந்தப் படைகள் களைத்துப் போகும். ஆகவே, அவைகளை முறியடித்தல் எளிது என்பேன். மேலும் சோழ மண்டலம் சுபிட்சமாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பெருமையாகப் பேசப்படுகிறது. அரசே! அந்தச் சுபீட்சமே போர்த்திறனை மாய்த்துவிட்டிருக்கும், மங்கச் செய்வதாயிருக்கும். எனவே சோழனின் சூரப்புலிகளுக்குக் கலிங்கம் அஞ்சத் தேவையில்லை. அஞ்சுவோருக்கு நாம் வளைகள் பரிசு தருவோம்! வாளேந்தும் கரங்களுக்குக் கலிங்கத்தில் பஞ்சமில்லை" என்று திசைமுகன் பேசினான்.
துடுக்குத்தனமான அவனது பேச்சுக்குச் சபையிலே பலர் சபாஷ் கூறினர். போர் கூடாது என்று வாதிட்ட எங்கராயன் எனும் மந்திரியாரின் மதிவழி செல்ல மன்னன் மறுத்து விட்டான். மதங்கொண்ட யானைபோல் ஆர்ப்பரித்தான். நெருப்புப்பொறி எத்துணைச் சிறிதாயினும் அது தங்க இடங்கிடைத்துவிட்டால், தங்குமிடத்தை அழித்தொழிக்கும் வகைபோல் கலிங்க மன்னனின் கெடுமதி எனும் சிறு தீப்பொறி தங்க இடமளித்ததால், கலிங்கமே அழியும் நிலையைப் பெறவேண்டியதாயிற்று.
"சூலோத்துங்க மன்னனுக்கு நான் எளியவனாக இருக்கலாம். திசைமுகா! அவன் ஏவும் படைகளுக்குமா எளியனானேன்?" என்று கலிங்க மன்னன் கடுப்புடன் கேட்டான். "மன்னவா! மாற்றாருக்கு நமது வலிமையைக் காட்டச் சந்தர்ப்பமின்றி வாடினேன். வெற்றி மாலையைத் தங்கட்கு விரைவில் தருவேன். ஏன்? சோழனின் சுந்தரகுமாரி அம்மங்கையின் கரத்தையும் தர இயலும்; சோகம் விடுக! உறுதியுடன் நமது படைகள் போரிடும். புதுப்புது ஆயுதங்கள் குவித்துள்ளேன். ஆயுத ஒளியே சோழனின் படைவீரரின் கண்களை கூசவைக்கும்" என்று கூறினான் திசைமுகன். சாந்தம் போதித்த எங்கராயன், "ஏனப்பா திசைமுகா! நீ புது ஆயுதங்களைப் பற்றிப் பூரிப்புடன் பேசுகிறாய். உன் பேதமையை என்னென்பேன்! சோழநாட்டிலே படைக்கலங்கள் மிகப் பழையன! புதியனவன்று! ஒளி இழந்தன, வளைந்தன. இன்று அவைகளை உலைக்கூடங்களிலே காய்ச்சியும் தட்டியும், நீட்டியும், மடக்கியும் சரிசெய்து கொண்டிருப்பார்கள். புதுப்படைக் கலன்கள் உன்னிடம் போரறியாக் காரணத்தால்! பழைய ஆயுதம், அங்கு போரிட்டுப் போரிட்டுப் பழகியதால்! உன் ஆயுதம் ஒளி உள்ளன; உறையிட்டுக் கிடந்ததால், அவர்களின் ஆயுதங்கள் எதிரியின் உடலைக் கீறி இரத்தத்தில் இறங்கி, கரியை துண்டித்துப் பரியைச் சிதைத்து, ஒளி இழந்தும் வளைந்தும் போயினவே, பளபளப்பான ஆயுதம் உள்ளவனே! வளைந்த ஆயுதக்காரன் வலிமை மிக்கான், போரிலே புரண்டெழுந்தவன் என்பதையன்றோ அவனது படைக்கலங்கள் காட்டுகின்றன. உனது ஆயுதம் பளபளப்பு! குலோத்துங்கனுக்கோ கீர்த்தி ஒளிவிட்டு வீசுகிறது! வீரன் உடலில் பல வடுக்கள் உள்ளன! வீம்புக்காரனுக்கு வடு இராது. முன்னவன் போர்க்களம் புகுந்தவன் என்பதன் அத்தாட்சி அந்த வடுக்கள்; போகப்புரட்டன் என்பதற்கு அத்தாட்சி வடுவற்ற வடிவமாக அவனிருத்தல். கலிங்கத்தின் நிலையை உன் கர்வம் எனும் அளவுகோல் கொண்டு விளக்குகிறாய்" என்று கண்டித்தார். மன்னன் வெகுண்டு, "நீ கலிங்க நாட்டு மந்திரியா? சோழனின் ஒற்றரா?" என்று கேட்டுக் கொதித்தான். ஆனால் அந்தச் சமயத்தில் அவன் சிந்தையை மருட்டிடும் சம்பவம் நடந்தது. ஓடோடி வந்த வேலையாள் ஒருவன், "அரசே! வீரமணி என்ற குதிரைப் படைத் தலைவன் நதிகளைக் கடந்துவிட்டான். கலிங்கத்தின் எல்லையிலே அவனது குதிரைப்படை புகுந்துவிட்டது" என்ற செய்தியைக் கூறினான். மன்னன் திசைமுகனைப் பார்த்தான்; திசைமுகன் திக்கெட்டும் மாறி மாறி நோக்கியபடி நின்றான்.
"மலைக்காதே மன்னா! வீரமணி குதிரைப்படையுடன் வரட்டும்; ரமணிபோல், அவன் ரணகளத்தைவிட்டு ஓடும்படிச் செய்ய நமது படைகளை ஏவுகிறேன். சளைக்காதே; சமரிலே சங்கடங்கள் நேரிடுவது சகஜந்தான்; ஆனால் சோழனின் சைன்யத்தை நமது வீரமெனும் சண்டமாருதத்தால் விழித்தொழிப்போம். இளிக்காதே எங்கராயா! திசைமுகனின் தீர்மானம், இலேசென்று எண்ணாதே. நிற்காதே காவற்காரனே! ஓடிச்சென்று, என் உத்திரவை படைத் தலைவர்களிடம் கூறு. முரசு கொட்டு! தோள் தட்டு! வாள் வீசு! வாகை தேடு!" என்று வெறிபிடித்தவன்போல் திசைமுகன், மன்னனைப் பார்த்து ஓர் மொழியும், மதியுரைத்த மந்திரியைப் பார்த்து ஓர் மொழியும், வேலையாட்களைப் பார்த்து வேறோர் மொழியுமாகப் பேசினான்.