கலிங்க ராணி/கலிங்க ராணி 8


8


"ன்னன் மிக்க வல்லமைசாலி! அவன் படைத் தலைவன் மிக்க திறமைசாலி! மிக்க வீரமுடையன சோழனின் படைகள். களத்திலே வெற்றி உண்டு. கலிங்கப் போரிலே வெல்வான். ஆனால்..." என்று ஓர் தவசி காஞ்சியில், ஒருவீதி ஓரத்தில் நின்றுகொண்டு, எதிரே கூடியிருந்த மக்களிடைப் பேசலானான்.

போர்ச் செய்திகள் கேட்கக் கூடினர் மக்கள். தவசி ஏதோ கூறுவது கேட்க, மனம் தாளவில்லை.

"ஆனால்... என்று இழுப்பானேன்" என்றான் கூட்டத்திலே ஒருவன்.

"ஆனால்! ஆம், புறப்பகைவர்களை வெல்கிறான் மன்னன்; அகப்பகைவர்களை அழிக்கும் வகை தெரியான்" என்றார் தவசி.

"வேதாந்தம் பேசுகிறீரோ? வேலெடுக்க வகை தெரியாதார், நூல் கொண்டு, ஏதோ பிழைப்பர் என்பது தெரியும் எமக்கு. உமது சரித்திரத்தை இங்கு காட்டாதீர்." என்றனர் கூட்டத்தில் பலர்.

தவசி சிரித்துக் கொண்டு, "வேற்படையாளரே! இந்த வேதாந்தி பேசுவது வீண் என எண்ணாதீர். நாங்கள் வளர்க்கும் ஓமத் தீயைவிட, நாட்டுப் பற்று உள்ளவர் மனத்திலே எழும் கோபத் தீயே தேவருக்கும் மூவருக்கும் ஏற்றமுடையது. நான் வீரத்தைக் குறை கூறினேனா? வெற்றி சோழனுக்கில்லை என்றுரைத்தேனா! இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்? நான், சோழன் வெளி நாடுகளிலே வெற்றி பெற்றுப் பயன் என்ன, சோழ மண்டலத்திலேயே பகைவர்கள் உண்டு; அவர்களை ஒழிக்கவில்லையே, என்று தான் கூறுகிறேன்" என்றார்.

"விந்தை! எமது மன்னனுக்கு, உள்நாட்டில் பகைவரா! ஓய்! யோகியே! ஊரார் முன் உளறுகிறீர்" என்றனர் மக்கள்.

"உண்மையை உரைத்தேன். அது உளறுவதாக உமக்குத் தோன்றுகிறது; ஊர் அழிய அழிய, உமது மன்னனின் புகழ் வளருகிறது. நீர் களிக்கிறீர்; உமக்குக் களிப்புப் பிறக்க அங்கே, போர்க்களத்திலே கண்ணீரும் இரத்தமும் கலந்தோடுகிறது ஆறுபோல். இங்கு நீங்கள் வெற்றிவிழா கொண்டாடப் போகிறீர்கள். அங்குப் பேய்கள் உமது தோழர்களின் உடலை விருந்தாக உண்டு கூவும்" என்றான் முனிவன்.

"பேயும் பூதமும்! பிதற்றுகிறான்" என்று நகையாடினர் மக்கள்.

"தானென்ற வுலகத்தில் சிற்சில் லோர்கள்,
       சடைபுலித்தோல் காஷாயம் தாவடம் பூண்டு
ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல்பூசி
       உலகத்தில் யோகியென்பார் ஞானியென்பார்;
தோன்ற சிவபூசை தீட்சை என்பார்
       திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்,
கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடி
       காரணத்தை யறியாமல் கதறுவாரே!"
       - சித்தர் பாடல்கள்: வால்மீகர்; சூத்திர ஞானம்: 6

என்றுரைக்கும் மனப்பான்மை கொண்டு, வீரத்தையும் மானத்தையும், உழைப்பையும் மதித்து வாழ்ந்து வந்த தமிழர்கள், வஞ்சகக் கருத்துக்களையும், கோழைக் குணத்தையும் வரவேற்பரோ! மானிடம் என்பதே வாள்! அதை வசமாகக் கொண்டிட இரு தோள்! மானிடம் என்பது குன்று. அதன்மீது தமிழர் நின்று வாழ்ந்த காலம் அது. அவர்கள் அக்குன்றின் மீது நின்றிருந்த கோலம் மாற்றாரின் கண்களை உறுத்திற்று. காய்ந்து கருகிய வெளியையும், கற்பாறையையும், கடுஞ்சுனையையும், கண்டு கவலையை உண்டு, கால் நடைகளை மேய்த்துக் கொண்டு வாழ்ந்து வந்த ஆரியரின் தேய்ந்த வாழ்வைக் கங்கைக் கரையின் பசும் புற்றரையும் மணிகொழிக்கும் வயலும், வயல்மருங்கே அமைந்திருந்த தோட்டங்களும் துலங்கிற்று. பச்சை கண்டு இச்சைகொண்ட நச்சு நினைப்பினர். கச்சையை வரிந்து கட்டி, கட்கமெடுத்துப் போரிட்டு வாழும் தமிழரைப் பின்னர் கண்டனர். தங்கக் கோட்டைகளிலே வைர மணிகள் போல் ஒளிவிட்டு வீசி வாழ்ந்த தமிழரிடை, போரிடுவதோ இயலாது. ஆனால் என்ன? வீழ்ந்த வீரம் இல்லையெனினும், வஞ்சகமெங்கே போயிற்று! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமாம். ஆரியருக்குக் காய்ந்த புல் தர்ப்பையே—தமிழரை, தந்திரத்தால் வீழ்த்த ஆயுதமாயிற்று. "நாங்கள் இருக்கும் விதங்கண்டு நகைப்பீர் தமிழரே! எமது தேவர்கள் மகா பராக்கிரம சாலிகள்! மழை பெய்வது எமது வருணதேவனால்! நெருப்புக்கு எமது அக்கினிபகவானே கர்த்தா! காற்றுக்குக் காவலன் எமது வாயு!" என்று கட்டுக்கதைகளை விட்டனர். தமிழரிலே, தெளிவைத் துறந்தோர் நம்பினர். சந்து கண்டதும் நுழையுஞ் சர்ப்பம்போல், மூடமதி இதுதான் தக்க சமயமெனக் கண்டு, தமிழரின் உள்ளத்திலே புகலாயிற்று. அந்த நிலை வந்ததாலேயே தமிழரிடம், ஆரிய முனி ஆண்மையை இகழ்ந்து பேசிட, அரசனைப் பழித்திட, அந்த லோகம் இந்த லோகம் என்று பிரித்துப் பேசிடத் துணிந்தான். அன்று தமிழ்ச்சமுதாயம் தலை குனிந்திருக்கவில்லை! சமுதாயத்திலே சிலரே சாய்ந்திருந்தனர். எனவே ஆரிய முனிக்குப் பேசிடல் மட்டுமே எளிதாயிற்றுǃ நம்பவைத்தல் முடியாது போயிற்று. எனினும் அதைத் தூவிவிட்டு, வானத்தை நோக்கிடும், வறண்ட நிலத்துக்காரன்போல், ஆரியன் தனது சரக்கை அவிழ்த்தான்.

"உமது மன்னன், கலிங்கப் போரிலே வெல்வான்; கலகப் போரிலே என் செய்வான்? நான் துறவி; எனக்கு மன்னர் கூட்டமே துரும்பு. எனவே நான் துணிந்தே கூறுகிறேன். பட்டத்துக்கு வாரிசுப்படி வரவேண்டிய மன்னன் வந்திருப்பின் இத்தகைய அமளிகள் ஏற்பட்டிரா தானுண்டு. தன் அரசுண்டு என்று இருந்திருப்பான். இவனோ எடு வாளை! வீசு தலையை!! என்று கூறினவண்ணமிருக்கிறான். கொலை! படுகொலை! கோரம்! உயிர்வதை! நடந்தபடி இருக்கிறது. யாவும் இன்னொருவனின் புகழ் வளர! இதற்கு எவ்வளவு கொலை! பாப மூட்டையைச் சுமந்து கொண்டிருக்கிறான் பார்த்திபன்!" என்றான் யோகி!

கொலையா! கொலை என்றால் கொல்லுவது என்பது தானே பொருள்! இதிலே பாபமும் புண்ணியமும் என்ன தொக்கிவிட்டது. தொந்தி சுமக்கும் தந்திரவாதியே! உலகிலே, போர்க்களம் ஒன்றில்தான் "கொலை" நடக்கிறதோ! இவ்வளவு காருண்யம் பேசி கண்ணீர் வடிக்கிறீரே, உமது காலடியிலே சிக்கி சிதைந்துபோன சிற்றெறும்பு, புழு பூச்சி எவ்வளவு! அவை கொலையல்லவா? பாபமல்லவா? போர்க்களந்தானா கொலைக்களம்! உலககே அதுதானே!! சாவது, சாகடிக்கப்படுவது என்பதை உலகிலே விநாடி தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகளல்லவா! காட்டிலும், நாட்டிலும், குருவிக் கூட்டிலும், குகையிலும், புற்றிலும், கடலிலும், விண்ணிலும், மண்ணெங்கும் கொலை நடந்து கொண்டே இருக்கிறது. பாபம், புண்ணியம் என்ற மொழி பேசி மன்னனை ஏசிடத் துணிந்தீரே, கொலை நடவாத இடம் எது? யோகிகளின் பர்ணசாலைகளிலே, பக்குவமாக வாட்டி தேனில் தொட்டுத் தின்னப்படும் மானிறைச்சி, புண்ணியத் துண்டுகளா? பசுங்கன்றின் இறைச்சியைப் பதம் பார்க்கும் முனி சிரேஷ்டர்கள் பாப பாயாசத்தைப் பருகினவர்களன்றோ! எமக்குத் தெரியும் எது முறை என்று! உமது கற்பனை உலகில் நாங்கள் குடி ஏறிடோம். கட்டும் உமது கடையை. இல்லையேல் நடவும் மன்னரிடம். முடியுடன் விளையாடுகிறீர்; தெரிந்தால் பிடி சாம்பலாக்கப்படுவீர்! கெடுமதி கொண்டு, கலிங்கனின் கைக்கூலியைத் தின்று, கலக புத்தியைப் புகுத்த வந்தீர். போர்க்குண மக்களிடம் பூனைப்பேச்சு பேசுகிறீர்" என்று கூட்டத்திலே ஒருவன் கொதித்துக் கூறினான். ஆரியன், "ஆத்திரம் விடுக! சந்தேகம் கொள்ளாதீர். நான் சாத்திரத்தை ஓதினேன். வேறில்லை. களத்திலே நடப்பதை நீங்கள் ஆதரிப்பதானால் நான் குறுக்கிடப்போவதில்லை" என்று கூறினான் விபரீதம் விளையாதபடி இருக்க. மக்கள், "வந்தான் வழிக்கு" என்று கூறிக் கைகொட்டி நகைத்தவர் பின்னர் 'ஓய் ஏதோ பேய் என்று சொன்னீரே, அதை உடனே களத்துக்கு அனுப்பும், நல்ல விருந்து கிடைக்கும்" என்று கேலி செய்தனர்.

களத்திலே, சோழனின் படைவீரர்கள், விழியினின்று கனலையும், உடலிலிருந்து குருதியையும் சொரிந்து, வெட வெடன வீரச் சிரிப்பு சிரித்துத் தமது நகை, நடை, இடி, பிடியால், கரிகள் திகைக்கும்படி காட்சியளித்தனர். மீனவர் மிரண்டதும், சேரர் மருண்டதும், விழிஞர் விரண்டதும், வந்தவர் செத்ததும் எம்மாலாயிற்றே என்று, முன்பு தாங்கள் முறியடித்த கூட்டத்தினரின் வரிசையைக் கூறி வாளை வீசிப் போரிட்டனர், குலோத்துங்கனின் வீரர்கள்.

வாளோடு வாள் கலகலவெனப் பேச, கடகடவெனத் தேர்கள் உருண்டோட, யானைகள் மிரள, குதிரைகள் கதற கோரமாகப் போர் நடந்தது. நெருப்போடு நெருப்பு, மலையோடு மலை, கடலோடு கடல் என்பதுபோல், படையுடன் படை உக்கிரமாக மோதிக் கொண்டன. யானையின் துதிக்கையை எதிரி யானையின் துதிக்கை பற்றி, முறுக்கி ஒரு புறம் இழுத்ததும், தந்தத்தால் மண்டையைக் குத்தக் காலால், குத்திடும் கரியைக் குப்புறக் கவிழ்க்கக் குத்துண்ட யானை முயல்வதும், எதிர்ப்பட்ட போர்வீரர்களை ஒருபுறம் யானைகள் கரகரவென இழுத்து, எலும்புகளை மளமளவென முறித்துக் கீழே வீழ்த்திக் காலால் தேய்ப்பதும் ஆகிய காட்சிகள், தமிழரையன்றி, மற்றவரைக் கலங்க வைக்கும் தன்மையினதாக இருந்தன. நெருப்பைப் பரவச் செய்யும் காற்றென, குதிரைப்படை களத்திலே, அங்கும், இங்கும், எங்கும் சுழன்று சுழன்று சுற்றிச் சண்டமாருதம் மரங்களைச் சாய்ப்பதுபோல், எதிரிகளைச் சாய்த்து அழித்தது. வீரமணியின் திறனை வியக்காதார் இல்லை. "அதோ வருகிறான்! இதோ பாய்கிறான்!" என்று எதிரிகள் மிரண்டு கூறினர். கலிங்கப் படையிலே பெரும் பகுதி அழிந்தது! மற்றது மிரண்டது! மண்டியிட்டாலன்றி மீளமார்க்கமில்லை! மார்தட்டிய மன்னன் களத்திலே இல்லை! கற்கோட்டையை நாடிச் சென்றான். மீசையை முறுக்கிய மந்திரி கேட்பாரற்று கிடந்தான். வேழங்கள் பிணமாயின. குதிரைகள் குடலறுபட்டுக் குவிந்துகிடந்தன! இரதங்கள் தூளாயின! படைவரிசை பாழாயிற்று! வாளேந்திய கரங்கள் குறைந்தன! வேதனைக்குரல் அதிகரித்தது! வெற்றி சோழனுக்கு! தொண்டைமானின் தோள்கள் பூரித்தன! வீரமணியின் முகத்திலே ஒளி வீசிற்று! வென்றோம்! வென்றோம்! என்று சோழனின் சோர்விலாச் சூரர்கள் முரசு கொட்டினர். கலிங்கர், களத்தை விட்டோடலாயினர்! மான் வேட்டையாடும் வேங்கைகளாயினர் தமிழர்! கலிங்கப் போர் சோழனின் கிரீடத்துக்கு மற்றோர் வெற்றி மணி தந்தது!

ஆரியமுனி குறிப்பிட்ட பேய்கள், களத்துக்கு வரக் கூடுமானால், வயிறு புடைக்க உண்டிடப் பிணங்கள் குவிந்து கிடந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலிங்க_ராணி/கலிங்க_ராணி_8&oldid=1725678" இலிருந்து மீள்விக்கப்பட்டது