கலிங்க ராணி/கலிங்க ராணி 7


7


"போர்! போர்; கடும் போர்! சோழனின் படைகளுடன் போர்!" என்ற கூக்குரலும், "எல்லை"யிலே எதிரிப்படை வந்துவிட்டதாம். குதிரைப்படை கிளம்பிய தூசி கலிங்கத்தை நோக்கிக் கடுகி வருகிறதாம்! வீரமணியாம், தொண்டைமானின் 'அம்பு' போன்றவனாம்! துரிதமாகப் பாய்ந்திடும் பரிப்படையினனாம், போர் புரிவதிலே ஆர்வமிக்கவனாம். அவன் புகழ், விரிந்த மலரின் மணமென எங்கும் வீசுகிறதாம்!" என்று வீதிகளிலே பேசிக்கொண்டனர். பல வீடுகளிலே விம்மும் குரலும், வியர்க்கும் முகமும், நீர்வீழ்ச்சியன்ன கண்களும், வெடவெடக்கும் உடலும் கொண்ட வனிதையர் வாடிக் கிடந்தனர்.

கலிங்கனின் படைகள் அவசர அவசரமாக அணி வகுக்கப்பட்டன. வீரமணியின் குதிரைப் படையினைத் தாக்க கலிங்கத்தின் பரிப்படையினர் கிளம்பினர். கிளம்புங்காலை, மன்னன் கண்முன் பிணமானாலும் ஆகலாமேயன்றிப் பேடியாகலாமோ என்றெண்ணினர். எனவே சீறினர். செந்தூள் பறக்கக் குதிரைகள் பாய்ந்தன. எல்லையை அணுகும்போதே எதிரி அணிவகுத்து நின்ற சோழனின் குதிரைப் படைமீது கணைகளைக் கடுவேகமாக விடுத்தனர். அம்புகள் பாய்ந்து வருவதால் குதிரைகளின் உடலமும், வீரர்களின் உடலமும் தைக்கப்பட்டு படை வரிசை கலைக்கப்பட்டுவிட்டால் கலைந்துபோன படையினுள்ளே புகுந்து வாட்போரிட்டு, தைத்துவிட வேண்டும் என்பது கலிங்கக் குதிரைப் படைத் தலைவனின் கருத்து.

வீரமணி, வீரமும் யுக்தியும் மிகுந்தவன். படைவரிசை கலைவது தனக்குப் பாதகமாகவும், எதிரிக்குச் சாதகமாகவுமே இருக்கும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டான். தந்திரமாக, எதிரியின் படையை நெருங்கி வருமாறு செய்து, போரிடவேண்டும் என்பது வீரமணியின் திட்டம். எனவே கேடயங்களால், தங்களை அம்புமாரியினின்றும் தடுத்துக் கொள்ளப் போர் வீரர்கள் பயிற்சி பெற்றிருப்பினும், யுக்தியாகப் போரிடவேண்டித் தன் படையைத் திருப்பிப் பின் நோக்கிப் போகும்படியும், ஆனால், வேகமாகச் சென்ற போதிலும் விநாடியிலே திரும்பி எதிர்நோக்கிப் பாயும் நோக்கத்தை மறக்கலாகாதென்றும் கூறி, உத்திரவிட்டான். சோழனின் குதிரைப் படைகள் பின்வாங்கி ஓடுகின்றன என்று நம்பிய கலிங்கக் குதிரைப் படைத் தலைவன் கைகொட்டி நகைத்து, "வீரர்காள்! விடாதீர் அந்த வீம்புக்காரரை" என்று கூறினான். கலிங்கப்படை களிப்புடன் பாய்ந்து சென்றது. வேகமாகப் பாய்ந்து வரும் வேளையிலே வீரமணி தனது குதிரைப் படையின் வரிசையை இரண்டாகத் துண்டித்து இடையே கலிங்கப்படை புகுவதற்கு வழி தோன்றிடச் செய்தான். முறையாகச் செய்யப்பட்ட இதனை உணராது, முறியடித்துவிடுவார்கள் என்று கிலி கொண்டு, சோழனின் படை பிளந்துவிட்டது என்று கலிங்கப் படையினர் கருதி, படை வரிசை இடையே ஏற்பட்ட பிளவுக்குள் பாய்ந்தனர். பாய்ந்ததுதான் தாமதம், வீரமணி, "தூக்குவீர் கத்தியை! தாக்குவீர் எதிரியை!" என்று கர்ஜனை புரிந்தான். உடைவாள் உருவினர் சோழவீரர்; இடையே வந்த கலிங்கக் குதிரைகளின் கால்களைத் துண்டிக்கலாயினர்! ஒரு வெட்டு, குதிரையின் காலில்! குதிரை குப்புற வீழ்ந்ததும், கலிங்க நாட்டானின் கழுத்துக்கு மற்றோர் வெட்டு! அவன் குதிரையுடன் பிணமாவான்; இத்தகைய முறையினால், கலிங்கக் குதிரைப் படையிலே பலத்த சேதத்தை உண்டாக்கிவிடவே, மிகுந்திருந்த படை ஊருக்குள் ஓடிவிட்டது. கோட்டை வாயிற் கதவைத் தாளிட்டுக் கொண்டது. கோல் கொண்டான் கோபக்கனல் உமிழும் கண்களுடன் அவர்களை நோக்கிக் "கோழைகளே! நானே நேரில் களம் வருகிறேன். நால்வகைப் படையும் நம்முன் கொண்டு வருக" என்று நவின்றான். படையும் பலமாகக் குவிந்தது. கலிங்க மன்னனின் கோபம் காட்டுத் தீப்போல் காணப்பட்டது. நறநறவெனப் பற்களைக் கடித்தான். அவனுடைய முகம் சிவந்துவிட்டது. கையிலே உருவிய வாளேந்தி நின்றான். அன்று அவன் இருந்ததுபோன்ற வீர உருவத்துடன் அதற்குமுன் கலிங்கம் அவனைக் கண்டதேயில்லை. உறுதி கொண்டான். 'ஊர் அழியினும் சரியே; படை முழுதும் பாழாயினும் சரியே; உடலில் உயிர் உள்ள மட்டும் போரிடுவேன்' என்று சூள் உரைத்தான். சூரனெனக் கிளம்பினான் களம் நோக்கி.

"கரடு முரடான பாதை! காட்டாறும் கடுவெளியும் கொண்டது. காலிடறினால் குழியில் விழவேண்டும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை இராது. நீரோடை தாகத்திற் கொன்றுமிராது. உதடுலர்ந்து, உளம் உலர்ந்து, உயிர் உலரும் நிலை! அத்தகைய கொடிய இடம்! மான்கள் தாகவிடாய் கொண்டு தத்தளித்து ஓடும். வேடுவரின் அம்புகள் வேறு பறந்துவரும். மிக்க பயங்கரமான பிரதேசம். ஆகவேதான், உன்னை அழைத்துச் செல்ல என் மனம் இடந்தரவில்லை" என்று காதலன் கூறிட 'தலைவரே! முன்பு உம்மை விட்டுத் தனியே எங்ஙனம் பிரிந்திருப்பது என்ற ஒரே எண்ணத்தால் மட்டுமே உம்முடன் வருகிறேன் என்றுரைத்தேன். நான் வரலாகாதென்பதற்காக நீர் போகும் வழிகள் பற்றிய வர்ணனையைக் கூறக்கேட்டபின், உம்முடன் வந்தே தீருவது என்று உறுதி கொண்டுவிட்டேன். என் ஆருயிரே! பயந்தேன் மிகவும்; நீர் போக இருக்கும் இடத்தின் கொடுமை என்னைக் கலங்கவைத்து விட்டது. எவ்வளவு இன்னல்! எவ்வளவு இடுக்கண்! இத்தனையும் நீர் சகிக்க வேண்டுமோ! நினைக்கும்போதே நெஞ்சம் திடுக்கிடுகிறது. ஆனால், அத்தகைய பிரயாணத்தைத் தாங்கள் செய்கையில் பாவியேனாகிய நான் இங்குச் சுகமாக இருப்பதா! நீர் நீருக்குத் திண்டாடுவது இங்கு எனக்குப் பானகமா! நீர் கரடுமுரடான பாதையிலே கால் கடுக்கச் செல்வது, இங்கு நான் சோலையில் சொகுசாக இருப்பதா! பசியின் கொடுமையை நீர் அனுபவிக்கப் பாதகி நான் இங்கு ருசியுள்ள உண்டி தின்று உடலை கொழுக்க வைப்பதா! பாறையிலே நீர் படுக்கப் பஞ்சணையா இந்த உடலுக்கு? வேண்டாம்! கூடாது! ஒருபோதும் சம்மதியேன். உமக்கு வரும் கஷ்டத்தை நான் சரிபாதி பங்கிட்டுக் கொள்வேன். உம்மை விடேன்; பிரியேன்" என்று காதலி கூறிவிட்டாளாம். வழியின் கேட்டை எடுத்துரைத்தால் வனிதை வர அஞ்சித் தன்னைத் தனியே போகவிடுவாள் என்று கருதிய காதலன் ஏதுங்கூற இயலாது நின்றானாம்.

நடனராணி பழந்தமிழ்ப் பெண்களின் தன்மை கொண்டவள். எனவே போர் இப்படி இருக்கும், இன்னின்ன ஆபத்துக்கள் உண்டு என்று பிறர் கூறிடக் கேட்டு, அத்தகைய ஆபத்தான வேலையிலே, தன் அன்பன் ஈடுபட்டிருக்கும் வேளையிலே, அரண்மனையிலே தான் இருப்பதை எண்ணி ஏங்கினாள்! எவ்வளவு கஷ்டமோ! என்னென்ன ஆபத்தோ! எத்தனை அம்புகள் அவர்மீது சீறிப் பாய்ந்து வருமோ! எவனெவன் வாளை வீசுவானோ! வேல், வேழம், வெஞ்சின வீரர்கள் வாள், வீரரின் தோள், பலப்பல படைக்கலம், பாய்ந்தோடிவரும் பரிகள், இத்தனையையுங் கண்டு, வீரமணி களத்திலே இருக்கும் வேளையிலே, அரண்மனை வாழ்வா நமக்கு என்று எண்ணி நடனராணி நொந்தாள். வீரமணியுடன் கொஞ்சி விளையாடிய காட்சிகள், பலப்பல மனக்கண்முன் தோன்றித் தோன்றி அவளை வாட்டின. புன்னை மர நிழலும், முல்லைப் புதரும், அல்லி நிறைந்த ஓடையும், அரண்மனை மருங்கும் அவள்முன் தோன்றித் தோன்றிப் பரிகசிக்கத் தொடங்கின. இங்கு உன்னைப் பிடித்திழுத்து இதழ் சுவைத்தானே, அந்த இன்ப விளையாட்டல்ல நடனம்; இப்போது மரணம் ஒருபுறம் நின்று கொண்டிருக்கும், அவனுடைய உயிரைப் பிடித்திழுத்து என்னை அணைத்துக் கொள்ள வா! என்று ஆர்ப்பரிக்கும்! அதன் அணைப்பிலே அவன் அகப்படக்கூடாது; ஆமாம்! அல்லியும், முல்லையும், அல்ல, அவனெதிரிலே! யானையுஞ் சேனையும்! குயில் கூவாது கோரமான கூக்குரல் கேட்கும். "அவன் களத்திலே நிற்கிறான்" என்று நடனராணியின் காதருகே யாரோ சதா கூறுவதுபோல் எண்ணிக் கொண்டு ஏங்கினாள். தனது காதலன் வீரன் என்பதும், வெஞ்சமர் பல புரிந்து, வீரக் கழலணிந்தவன் என்பதும் அறிவாள். அறிந்து மென்ன? ஆபத்து ஆபத்துதானே! போர்! போர்!! என்று ஏன் அடிக்கடி இத்தகைய பொல்லாங்கு ஏற்படுகிறது?" என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். கண்ணிலே வேல் பாய்ந்தாலும், களத்தைவிட்டு ஓடாதவன் என்று, புகழ் மொழிக்காகப் புண்பட்டுக் கிடப்பதா! ஏன் போர் என்ற பேச்சுக்கே இடமில்லாதபடி ஓர் புதுமுறை அமைக்கக் கூடாது என்றும், குருதியிலே குளித்து, பிணத்தின்மேல் நடந்து, புகழ் தேடுவதைவிட வேறு வழியில்லையா இந்த ஆடவர்களுக்கு! கலை, சிற்பம், காவியம் முதலியன போதாதா புகழ் தேட என்றும், ஏதேதோ எண்ணினாள் நடனராணி. அந்தப் போரின் பயங்கரம் மனத்திலே புகுந்ததுபோல், வேறெப்போதும் இருந்ததில்லை. பார்க்குமிடமெங்கும் போர்க்களமாகவே தென்பட்டது! எந்தச் சத்தமும், சண்டையிலே கிளம்பும் ஒலியெனச் செவிக்கு இருந்தது. யார் எதைப் பேசினாலும், போர்க்களப் பேச்சாகவே தோன்றலாயிற்று. இள நங்கையின் இருதயம் அனலிடுமெழுகாயிற்று. அரசிளங்குமரி நடனாவின் மனநிலை உணர்ந்தாள். பரிதாபங் கொண்டாள். போர் மிக்கப் பொல்லாங்கானது என்று பேசி நடனாவின் நொந்த உள்ளத்திற்குச் சற்றே ஆறுதல் வரட்டும் என்று அம்மங்கை பேசலானாள்.

கலிங்கப்படைகளை நம் வீரர்கள் கண்டதுண்டமாக்குவர். அதிலே எனக்குத் துளியும் சந்தேகங் கிடையாது. ஆனால் போர் என்றால் கஷ்டம். கலக்கம் இருந்துதான் தீரும். இது சகஜம். அரைக்காத சந்தனம் மணப்பதேது! ஆயினும், எனக்கென்னமோ நடனம் போர் என்ற போக்கே பிடிக்கவில்லை. புகழ்வருகிறது என்ற போதிலும், புண்வந்த பிறகல்லவா புகழ்!

"ஆமம்மா! ஆபத்து முதலில், அதைக் கடந்தபின் அழியாப் புகழ்; ஆன்றோர் அதைத்தானே அகமகிழ்ந்து வரவேற்றனர்."

"என்றாலும், உலகின் எழில் பாழ்பட்டு மக்கள் வாழ்வு சிதைந்து, பல குடும்பங்களில் கண் கசிந்து புகழைத் தேடுவது உசிதமா என்று நான் கேட்கிறேன்."

"போர்க்குறிக் காயமே புகழின் காயம்!"

"போடி! போரின்றி மக்கள் வாழ்ந்தால், புகழே இராதோ! புலவரின் கவிதை புகழ் தேடித்தரவில்லையோ"

"தருகிறது! ஆனால், புலவரும், 'புகழ் களம் புகுந்தோர்க்கே' என்று கூறினரே."

"ஏதோ புகன்றனர்! எவரோ மொழிந்தனர்! எத்தனை உள்ளம் பதைக்கிறது, ஒருமுறை போர் என்றதும். இதோ வீரமணி, களம்புகுந்தது முதல் நீ விம்முறாத விநாடி உண்டா?

"என்னை மன்னிக்க வேண்டும், தேவி! நான் கலங்குவது உண்மையே! அந்த வீரனுக்கேற்றவளல்ல நான்! கோழைத்தனம் என் உள்ளத்திலே கூத்தாடுகின்றது."

"இயற்கைதான் தோழி! எனினும் அஞ்சாதே! வீரமணி வெற்றி மாலையுடன் வருவான். உனக்கு மாலையிடுவான். நம் படைபலம் நீ அறியாததோ? இதே நேரத்தில் கலிங்கத்தில் நடக்கும் கடும் போரிலே எதிரிகள் தோற்று ஓடுவர், நமது படை முன், எந்த மன்னனின் படை நிற்க முடியும்?"

அரண்மனையிலே இந்தப் பேச்சு! காஞ்சியிலே மன்னன், கோபங்குறையாது வீற்றிருந்தான். களத்திலே கடும்போர் நடந்து கொண்டிருந்தது.

இருநாட்டுப் படைகளும் கடலைக் கடல் எதிர்ப்பது போல், ஒன்றை ஒன்று எதிர்த்தன. உக்கிரமான போர்! உருண்டன தலைகள்! மிரண்டன கரிகள்! பதைத்தன பரிகள்! பாரகம் செங்குருதி மயமாயிற்று! பகல் இரவு போலாயிற்று. பட்டினமும் புறமும் காட்டொலி! பயங்கரமான போர் நடந்தது.

கடலிலே அலைகள் பாய்ந்து வருவதுபோல், குதிரைப் படைகள் ஒன்றின்மீதொன்று, நுரை கொழிக்கும் வாயுடன் பாய்ந்தன. மலைகளை மலைகள் தாக்குவது போலிருந்தது, மதங்கொண்ட யானைகள் ஒன்றை ஒன்று தாக்குவது, தேர்களைத் தேர்கள் தாக்கின, மேகங்கள் ஒன்றோடொன்று மோதுவது போல், மின்னல் ஒளிபோல் வாள்வீச்சும், வேல் வீச்சும்! புயற்காற்றிலே சிக்கிய மரங்கள் கீழே சாய்வது போல், வில்வீரர்கள் விடுகணைகள் வீரர்களை வீழ்த்தின. வெட்டி வீழ்த்தப்பட்ட யானைகளின் உடல்களைக் கரையாகக் கொண்டு, வீழ்ந்துபோன வீரர்களின் குருதி ஆறென ஓட, அதிலே புதுவெள்ளம் அடித்துவரும் பல பொருள்போல் தலையறுபட்ட உடலம், கைகால் துண்டிக்கப்பட்ட உடலம், சிரங்கள், கைகள், கால்கள், குடல்கள், யானையின் துதிக்கைகள், குதிரையின் உடல் முதலியன மிதந்தன. இருகையிழந்தவர், எதிரிலே மிரண்டு ஓடிவரும் யானையின் காலடியிலே சிக்கிக் கூழாக்கப்படுவார், குதிரை ஓடும்; கணைபாயும்; கழுத்தறுத்து ஒருபுறம் வீழும் உடலம் குதிரை மீது சாய்ந்து, கீழே இரத்தத்தைச் சொரியும்! கணைகளால் கண்ணிழந்த யானைகள், காலிடறி இரத்தச் சேற்றிலே வீழும். கையறு பட்ட வீரர்கள், கண் இருப்பதால் களத்தின் கோரத்தைக் கண்டும், ஏதுஞ்செய்ய இயலாததால், "ஐயோ!" என்று ஓர் முறை கூவுவதும், எதிரி வரக்கண்டால், கையிழந்ததைக் கருதாது, 'விடாதே! பிடி! வெட்டு! வீழ்த்து!' என்று கூவுவதுமாகச் சில நேரம் இருந்து பின்னர் உயிர் துறந்தனர். சபையிலே, மகிழ்ந்தோர் அளித்த மாலையுடன் விளங்கும் புலவர்கள்போல், எதிரியின் யானை தன் துதிக்கையால் வீரனைத் தூக்கிச் சுழற்றி கழுத்தை நெறிக்க, அந்த நேரத்திலும் நெஞ்சுறுதியுடன், வாள் கொண்டு அவன் துதிக்கையைத் துண்டிக்க, அறுபட்ட துதிக்கை மாலைபோல் அவன் கழுத்திலே இருக்க வீரன் கீழே வீழ்ந்திட, யானையின் கால் அவனை நசுக்க, இறந்து கிடக்கும் வீரர்கள் பலர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலிங்க_ராணி/கலிங்க_ராணி_7&oldid=1725672" இலிருந்து மீள்விக்கப்பட்டது