கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/12. அறியாமை முன்பு, அறிவுபட்ட அவமானம்!

12. அறியாமை முன்பு, அறிவுபட்ட அவமானம்!

போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித்தூற்றுபவர் தூற்றட்டும் என்ற சுபாவப்பெருந்தன்மையிலே; கலீலியோ அவர்கள் மீது கோபப்படாமல், கழிவிரக்கமே கொண்டார்! ஓரளவு வரம்பு வரைப் பொறுத்திருந்த அவர், கடைசிவரை அவர்களை அலட்சியப்படுத்தி விட்டார். காலம்தான் அந்த மனிதர்களைத் திருத்த வேண்டுமே தவிர மனித சக்தி அல்ல என்பதை உணர்ந்து மௌனமாகி விட்டார்.

ஆனாலும், யார் யார்; எப்படி யெப்படி எதிரித்தாலும் அவற்றைத் தனது ஆராய்ச்சிப்பயிருக்கு மனஉரம் ஆக்கிக் கொண்டார்; அதனால், மேலும் ஊக்கமடைந்தார்.

சொன்னால் கேட்டுக் கொள்ளக் கூடியவர்கனை மட்டுமே அழைத்து, வியாழன் கிரகத்தைச் சுற்றிச் சந்திரன்கள் செல்வதைத் தம் தொலை நோக்கிக் குழாய்கள் மூலமாக அவர்களைப் பார்க்க வைத்தார்!

அப்படி அவர்கள் பார்த்ததால் கலீலியோவுக்கு கிடைத்த பலன் என்ன தெரியுமா? "மாயக் கண்ணாடி ஜால வித்தைகள் மூலமாகத் தோன்றும் காட்சிகளை எல்லாம் உண்மை என்று நம்பலாமா?" என்ற எதிர் கேள்விகளை வந்து பார்த்தவர்கள் கலீலியோவை நறுக்கென்று கேட்டு விட்டார்கள்.

புண்பட்ட மனமானார் கலீலியோ! போகட்டும் என்று ஆவர்களைத் தாண்டி மதவாதிகளாக பாதிரிமார்களை அழைத்து வந்து ஆர அமர பொறுப்போடு விளக்கி விளக்கித் தொலைநோக்கி மூலம் காணச் செய்தார்!

அந்த பாதிரிமார்கள் கலீலியோவை முகத்துக்கு முகமாகப் பார்த்து, "கடவுள் கொடுத்த கண்களுக்குத் தெரியாத ஒன்று, ஏதோ ஒரு ஜாலக்கண்ணாடி மூலம் புலனாகிறது என்றால்; அது உண்மையானது ஆகுமா? என்று கருணை பொங்கும் மனத்தோடு குருமார்கள் வெண்டைக்காய் சமாதானம் பேசினார்கள்!

பாதிரிமார்களது பதிலே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி என்ன நினைப்பது என்று மனம் வெதும்பினார் கலீலியோ!

அவர்களை விட்டு விட்டு செல்வச் சீமான்கள் எனப்படும் பிரபுக்களை, பணக்காரர்களை அழைத்து வந்து அவர் தனது தொலை நோக்கிகளை அவர்களிடம் கொடுத்து "நோக்குங்கள்" என்றார்!

பார்த்த நேரம் வரை பலதடவைப் பார்த்து விட்டு, என்ன சொல்வது என்றே அரியாமல் குழம்பிப் போய், “கலீலியோ ஒரு மாயாவி! செப்படி வித்தைக் காரன் என்று மட்டும் கூறியவாறே வந்த வழியே சாரட்டுகள் மீது ஏறிச் சவாரி செய்து சென்றார்கள்.

சாரட்டுகள் பின்னாலே ஓடிப்போயா உங்களுடைய அபிப்பிராயம் என்ன என்று கேட்பார் கலீலியோ? அப்படி அவர்கள் ஓடியதைக் கண்டு ஓணான் தலையாட்டுவதைப் போல ஆட்டிக்கொண்டே, அடுத்துள்ள கல்வியாளர்கள் சிலரை அழைத்து வந்து; டெலஸ் கோப் கருவிகளை அவர்களிடம் கொடுத்துப் 'பாருங்கள்; பிறகு கூறுங்கள் உங்களது எண்ணங்களை' என்று அக் கருவிகளை அவர்களிடம் கொடுத்தார்.

கல்வியாளர்கள் வாங்கிக் கொண்ட பார்வைக் குழாய் மூலம் வானவெளி இயக்கத்தை இரவிலே கண்டு ரசித்தார்கள்; பார்த்துப் பரவசமடைந்தார்கள்; திரும்பத் திரும்ப வான மண்டலம், சந்திரமண்டலம், வியாழன் மண்டலம் காட்சிகளை எல்லாம் கண்ணாழத்தோடு கண்டு கொண்ட பின்பு, 'விந்தையான தந்திரக் கருவியய்யா இது தாறு மாறாக எங்களை ஏமாற்றிட நாங்கள் என்ன அறிவற்ற முட்டாள்களா?' என்று பேசி விட்டு இது மாதிரியான வித்தைகளைப் பார்க்க இனிமேல் இப்படி எங்களைக் கூப்பிடாதே என்று ஆவேசமாகப் போய் விட்டார்கள்.

பாவம் கலீலியோ! மனமுடைந்தார்! ஏன் அழைத்தோம் இவர்களை? எதற்காக மதித்துக் காட்டினோம்? இவர்கள் இந்த பூமியிலே பிறந்தது வீணுக்காகவா? எதற்கும் பயன்படாதவர்களாக பிடிவாதக்காரர்களாக இருக்கிறார்களே! என்று வேதனைப்பட்டார்?

அவர்களது எண்ணங்களையும், பேச்சுக்களையும் தெளிவாகத் தெரிந்து கொண்ட கலீலியோ இதற்குமேல் இவர்களது உதவிகளையும், ஒத்துழைப்புகளையும் எதிர் பாராமல் அவர் தனது பணிகளையே கண்ணும் கருத்துமாக மீண்டும் தொடரலானார்!