கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/13. ஒளியை ஆராய்ந்த முதல்வன் கலீலியோ!
13. ஒளியை ஆராய்ந்த முதல்வன் கலீலியோ!
ஒளியைப் பற்றிக் கலீலியோ ஆராய்ந்தார். அவர் ஒளியைப் பற்றி ஆராய்வதற்கு முன்னரும் அவரது காலத்திலும் ஒளிக்கு வேகம் உண்டு என்று சிந்தித்துப் பார்த்தவர்கள் எவரும் இல்லை. அதனால், ஒளியின் வேகத்தை நாமே ஆராய்லாமே என்ற எண்ணத்தில்; ஒளியை அவர் ஆராய்ச்சி செய்தார்!
கலீலியோ முயற்சியால் அவரது ஒளி ஆராய்ச்சியில் நல்ல பயன் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் ஒளியின் வேகத்தை அளந்து கணக்கிடலாம் என்ற கருத்தை முதன் முதலில் உலகுக்கு உணர்த்திய மனிதர் அவர்தான்.
டேனிஷ் நாட்டு வானவியல் அறிஞரான ஆண்டில் ரோமர் என்பவர், கி. பி. 1615-ஆம் ஆண்டில் கலீலியோ கருத்தின் அடிப்படையில் ஒளியின் வேகத்தை அளந்தறிந்தார்!
ஒளி ஒரு விநாடிக்கு 1,86,325 மைல் வேகம் உடையது என்று அவர் கண்டுபிடித்தார். இந்த அரிய கண்டுபிடிப்புச் சாதனையிலே இருந்து நமக்கு ஒளி வந்து சேரும் நேரத்தைக் கணக்கிட முடிந்தது.
மற்றும் பல அரிய உண்மைகளையும் நாம் தெரிந்து கொள்ளவும் ஒளியின் வேகம் வழிகாட்டியது எனலாம்.
வானவியல் ஆராய்ச்சியில் அரிய பெரிய சாதனைகளைச் சாதித்தவர் கலீலியோ! உலகத்துக்கும், மக்களுக்கும் பயன்படும் அறிவியல் கருவிகளைக் கண்டுபிடித்து வழங்கியவர்!
கலீலியோ தனக்காகவோ அல்லது சுயநலத்துக்காவோ எதனையும் செய்தறியாதவர்! அவரது கண்டு பிடிப்புக்கள் அனைத்தும் உண்மையானவை என்று உலக மக்களுக்கு நிரூபித்துக் காட்டினார்!
வெனிஸ் நகர மக்கள் இடையே கலீலியோ தனது கருத்துக்களைப் பலமுறை விளக்கிக் கூறினார்! பாதுவா பல்கலைக் கழக மாணவர்களும், பேராசிரியர்களும் அவர் கண்டறிந்த கருத்துக்களை எல்லாம் போற்றிப் புகழ்ந்தார்கள்!
கலீலியோ கருத்துக்கனை, சாதனைகளை உலகத்திலே உள்ள தத்துவஞானிகள் பாராட்டினார்கள்! அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள், விஞ்ஞானிகள், வசன நூல் வித்தகர்கள் அனைவரும் வியந்து வாழ்த்தினார்கள்.
இவ்வளவுக்கும் இடையே மதவாதிகள் மட்டுமே கலீலியோ கருத்தை அவமதித்தார்கள். அரிஸ்டாட்டில் கருத்துக்களை மறுப்பவன், எதிர்ப்பவன், துரோகி விரோதி என்றெல்லாம் கலீலியோ மீது குற்றம் சாட்டினார்கள்.
அதனால் கிறித்துவப் பாதிரியார்கள் எல்லாருமே கலீலியோவை எதிர்த்தார்கள். அவரை பைபிள் விரோதி, இயேசு பெருமானுக்கு எதிரி என்ற அவதூறுப் பிரச்சாரம் செய்து வந்தார்.
கிறித்துவப் பெருமக்களுடைய எதிர்ப்பை கலீலியோ மீது ஏவிவிட்டார்கள். பாரதியார்களும்-கிறித்துவர்களும்! இதற்குப் பாவமன்னிப்பும் கூட கிடையாது என்று ஆணவமாக ஆடினார்கள்!
மதவாதிகள், இம்மைக்கும் மறுமைக்கும் நல்வழி காட்டிடும் மார்க்கவாதிகள். அவர்கள் கிறித்துவர்கள் ஜெபக் கூட்டம் நடைபெறும் தேவாலயங்களிலே எல்லாம் கலீலியோவைப் பற்றிக் குறை கூறிப் பேசி வந்தார்கள்.