கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/7. அரிஸ்டாட்டில் தத்துவத்தை கலீலியோ வென்றார்

7. அரிஸ்டாட்டில் தத்துவத்தை கலீலியோ வென்றார்,

எடுத்துக் காட்டுக்காக, அரிஸ்டாட்டில் தவறை எதிர்த்துக் கலீலியோ நிலை நாட்டிய விஞ்ஞான உண்மை என்ன என்பதற்கான ஒரு சம்பவத்தைப் பார்ப்போமா?

"ஓர் இடத்திலே இருந்து இரண்டு வெவ்வேறு கனப் பொருட்கள் ஒரே நேரத்தில் கீழே விழுந்தால், அல்லது விழச் செய்தால், அதிக கனமுள்ள பொருள் மற்ற இலேசான பொருளை விடச் சீக்கிரமே தரையில் விழும்." என்றும், "அவ்வாறு விழும் பொருளின் நேர வித்தியாசம், அந்தப்பொருள்களின் கனவேறுபாட்டைப் பொருத்தது" என்று, தலை சிறந்த தத்துவஞானியான அரிஸ்டாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே ஆய்வு செய்து கூறி இருந்தார்.

அரிஸ்டாட்டிலின் இந்தக் கருத்தை எதிர்த்துக் கலீலியோ கணிதப் போர்க்களத்திலே எதிர்ப்புக் கொடி தூக்கிவிட்டார். இந்தக் கருத்தை ஏற்கமாட்டேன்; இது தவறான ஓர் ஆய்வு என்று பலமாகக் கண்டனம் செய்து அவர் பேசினார்; எழுதினார்!

கலீலியோ எழுப்பிய இந்தக் கண்டனக் குரல்களைக் கேட்ட கணித உலகம், சற்றுக்கண்களைத் திறந்து விழிப்புணர்வு பெற்றது! காரணம், கரடுமுரடானக் குரலாக இருந்தது கலீலியோவின் குரல்!

அரிஸ்டாடிலை எதிர்த்து அவருக்குப் பிறகு இப்படிக் கண்டனக் குரல் எழுப்பியவர்கள், அவரது ஆய்வு முடிவில் முரண் செய்தவர்கள் சிலரில், கலீலியோவைத் தவிர வேறு யாரும் இப்படி மோதல் களத்தை உருவாக்கியதில்லை என்றே கூறலாம்!

அரிஸ்டாட்டிலை எதிர்த்தது சரி; எப்படி அவர் எதிர்த்தார்? ஏன் எதிர்த்தார்? காரணம் என்ன?என்பதைக் கூறிவிட்டல்லவா அவர் தனது இரும்பு வாதத்தை வைக்க வேண்டும்; இதோ கலீலியோவே பேசுகிறார் பாருங்கள்.

"ஓர் இடத்தில் இருந்து மிகக் கனமான ஒரு பொருளையும், மற்றொரு கனம் மிகக் குறைந்த பொருளையும் ஒரே நேரத்தில் தரையில் விழச் செய்தால் அல்லது வீழ்ந்தால், அவை உறுதியாக ஒரே நேரத்தில் தான் தரையில் வந்து விழுமென்றார்" கலிலியோ!

"ஒருவேளை இடையிலே ஏற்படும் காற்றின் அலைவைத் தடுப்பால் பொருள்கள் கீழே விழுவதில் அற்ப நேரம் வித்தியாசம் ஏற்படலாம்; அதனால், இருபொருள்களும் கீழே விழும் ஒரே சமய நேரத்தில் பாதிப்பும் ஒன்றும் நேரிட்டு விடாது" என்றும், கலீலியோ சற்று அழுத்தம் திருத்தமாக அடித்துக் கூறினார்.

இந்த பலமான எதிர்ப்பைக் கேட்ட அன்றைய அறிவியல் உலகம், மாமேதை அரிஸ்டாட்டில் கருத்துக்கு எதிர்ப்பா? மறுப்பா? கண்டனக்குரலா? எவனவன் பேதைமைப் பிடித்தப் பித்தன்? என்று ஏசிய சிலர் கண்மூடித்தனமாக, பழக்கமாகிவிட்ட ஒரு மூட நம்பிகையின் வழக்கம்போலப் பேசி எள்ளி நகையாடினர் கலீலியோ என்ற மகத்தான ஒரு தத்துவ ஞானியை!

ஓர் ஆராய்ச்சியில் கருத்து முரண் இருந்தால் அதை வரவேற்பவன் அறிஞன் எதிர்த்து எள்ளி நகையாடுபவன் அறிவின் வறிஞன்! என்று எண்ணிய கலீலியோ என்ற அறிவு அரிமா, எதைப் பற்றியும் கவலைப்படாமல், அந்த அவமதிப்பின் ஏளனச் சொற்களை ஏறிட்டும் பாராமல், கேளாமல், பொருட்படுத்தாமல், "எனது முடிவிலே எந்தவித மாற்றமும் இல்லை" என்று எதிர்வாதமிட்டார்

"எதிர் தர்க்கம் மட்டும் செய்யவில்லை அவர் எனது முடிவை எங்கு வேண்டுமானாலும் நின்று நிரூபிததுக் காட்டுவேன்" என்று பகிரங்கமாகச் சவால் விடுத்தார்!

பைசா பல்கலைக்கழகத்துப் பேராசிரியரான கலீலியோ ஒரு நாள், தனது மாணவர்களையும், தன்னுடன் பணியாற்றும் மற்ற பேராசிரியர்களையும் உடன் வருமாறு அழைத்துக் கொண்டு புகழ் பெற்ற பைசா நகரைத்தைச் சேர்ந்த சாய்ந்து கோபுரத்தின் அருகே வந்தார்.

அப்போது, யார் யார் கலீலியோ கருத்துக்கனை எள்ளி நகையாடி ஏளனம் பேசினாரோ? அவர்களை எல்லாம் அங்கே வந்து கூடுமாறு ஏற்கெனவே அவர் விடுத்திருந்த வேண்டுகோள்படி பலர் வந்து கூடினார்கள்.

இவர்களுக்கு இடையில் கலீலியோ பத்துப் பவுண்டு கன எடையுள்ள குண்டு ஒன்றையும், ஒரு பவுண்டு கன எடையுள்ள மற்றொரு இண்டையும் எடுத்துக் கொண்டு வேடிக்கையும் அறிவு வேட்கையும் கொண்ட அக்கூட்டத்தின் முன்பு, கலீலியோ பைசா நகர் சாய்ந்த கோபுரத்தின் உச்சிக்கே ஏறிச் சென்றார்.

கோபுரத்தின் உச்சியில் இரண்டு குண்டுகளையும் அருகருகே அவர் வைத்தார்! ஒரே நேரத்தில் அந்த இரண்டு குண்டுகளையும் கீழே தள்ளினார்!

கலீலியோ எழுப்பிய கண்டனக் குரலுக்கு ஏற்றவாறு இரண்டு குண்டுகளும் ஒரே நேரத்தில் தரையில் வந்து விழுந்தன! கூடியிருத்த பேராசிரியர் குழு, மாணவர் திரள் மக்கள் கூட்டம் அனைவரும் இந்தக் குண்டுகள் வந்து சேர்ந்த கணித நேரத்தை நேரில் பார்த்து ஆச்சரியப்பட்டு நின்றார்கள்.

அன்று வரை எழுதப்பட்ட நூல்கள், நூலாசிரியர்கள் பேராசிரியர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளாக கற்றுக் கொடுத்த தத்துவத் தவறு, அரிஸ்டாட்டிலின் தவறான தத்துவக் கணிப்பு, இவ்வளவு காலமாக மக்கள் நம்பி வந்த நம்பிக்கை எல்லாமே பொய்யாய் போய் விட்டதே என்று அங்கே கூடியிருந்தோர் வியந்து போனார்கள்.

அரிஸ்டாட்டிலின் கணிதக் கோட்பாடுகளைத் தகர்த்தெறிந்த கலீலியோ, மேலும்பல ஆய்வுகளைத் தொடர்த்து செய்து சோதனைகள் பல நிகழ்த்தினார்.

மேலே இருந்து கீழே விழும் பொருள்களைப் பற்றி அவர் மூன்று பொது விதிகளை உலகுக்கு எடுத்துரைத்தார். அந்த மூன்றும் இன்னும் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகளிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டு வருகின்றன.

அரிஸ்டாட்டில் கோட்பாடுகள் தவறு என்பதைக் கலீலியோ நிரூபித்தார்! தாம் கூறிய விதிகள் தான் உண்மையானவை என்பதையும் மக்களைக்கூட்டி அவர் மெய்ப்பித்துக் காட்டினார்.

கலீலியோ பிறப்பதற்கு முன்பு-ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரிஸ்டாட்டில் கிரீஸ் நாட்டில் தோன்றினார்.

உலகம் முழுவதையும் வென்று தமது ஆட்சியின் கீழ் கொண்டு வர விரும்பி; அதற்காகப் பல போர்க்களங்களை கண்டு வெற்றி பெற்றவன் மாவீரன் அலெக்சாண்டர். ஆந்த அலெக்சாண்டர்; இந்தியா வரை படையோடு வந்து இங்கும் சில வெற்றிகளை நாட்டிவிட்டு அவர் திரும்பிச் சென்ற போது வழியில் மாண்டுவிட்ட உலகப்பெருவீரனான அலெக்சாண்டரின் ஆசான் அரிஸ்டாட்டில் என்ற அந்த பல்கலை ஆசான்!

பல நாட்டுப் பலமிக்க மன்னர்கனை வீழ்த்தி அவர்களை அதிகாரத்தின் ஆணவத்தால் அடிமைகளாக்குவதை காட்டிலும், பல நாடுகளும் பின்பற்றும் அறிவாசானாக இருப்ப்தே சிறந்தது என்ற விருப்பமும், அவன் மீதும் நம்பிக்கையும் கொண்டவர் அரிஸ்டாட்டில் என்ற தத்துவ ஞானி!

அந்த வித்தகர் தாம் கண்டறிந்த உண்மைகனைத் தொகுத்துப் பலநூல்களை வெளியிட்டு, அறிவியல் கலை வளர தொண்டாற்றிய அற்புதமான விஞ்ஞானி அரிஸ்டாட்டில்!

வானவியலுக்கும், தத்துவ ஞானத்திற்கும், தர்க்க வாதத்திற்கும், வரலாற்றுணர்வுகளுக்கும், விஞ்ஞானத் துறை வித்தகத்துக்கும், ஆய்வியல் எனும் சுரங்க ஆழத்திற்கும், தாவரவியல், விலங்கியல், போன்றவற்றுக்கும் அளப்பரிய தொண்டாற்றிய தொண்டர் அரிஸ்டாட்டில்!

உலகத்திற்கு அவர் செய்துள்ள அறிவுச் சேவைகள் அரிதரிது! அதனால்தான் உலகம் போற்றும் கற்றோர் ஏற்று மதிக்கும் கல்விமானாக மட்டும் அல்ல, அவர் பிறந்த கிரீஸ்நாடே கூடி அரிஸ்டாடிலை அறிவுத் தெய்வமாக மதித்துப் போற்றியது எனலாம்!

அரிஸ்டாட்டிலின் உண்மைகள் மாற்றக் கூடாதவை; அவர் கூறிய உண்மைகள் அசைக்க முடியாதவை; அவர் மொழிகளை எதிர்ப்பவர். அல்லது மறுப்பவர், அனைவரும் சமுதாய விரோதிகளே; யார் அவரது கருத்துக்கு எதிர் கருத்துப் பேசுகிறார்களோ அவர்களை அழிப்பதே காலத்தின் சட்டம்! அழிக்க முடியாமல், 'போகட்டும் போ' மன்னிக்கப்படுவர்களானாலும் இப்படி அவர்களை அடக்கி நசுக்கி ஒடுக்கிய பின்பே அந்தப் பாவமன்னிப்பை வழங்கப்படல் வேண்டும் என்று அந்தந்த நூற்றாண்டு வாழ் மக்கள் எண்ணி நடந்துவந்தார்கள்!

இந்த எண்ணம் கொண்ட மக்கள் மனம், அரிஸ்டாட்டிலின் மீதும் அப்படியே பற்றிப் பரவி இருந்தது! அதே மனம் கலீலியோ காலத்து மக்கள் இடையேயும் இருந்தது என்றால் அது என்ன ஆச்சரியப்படத்தக்க விஷயமா!

இந்த அரிஸ்டாட்டில் வாசம் பற்றிய மக்கள், கலீலியோவின் உண்மைகளை, அவர் தம் கருத்துக்களை எப்படி ஏற்பார்கள்? அவர் மீது அறிவுப் பொறாமை பிடித்தவர்களும் எப்படி அவரது உண்மை ஆய்வு முடிவுகளை வரவேற்பார்கள்? அதனால் ஆயிரமாயிரம் மக்கள் கலீலியோ கருத்துக்களை அரிஸ்டாட்டில் மோகத்தால் மறுத்தார்கள்!

உண்மைகளை ஏற்க மறுப்பவர்கள் பல்துறைகளிலே இருக்கிறார்கள் என்றால் என்னபொருள்? அவர்களுடைய அறிவை அவர்களே நம்ப மறுக்கிறார்கள் என்பதல்லவா உண்மை?

இவற்றை எல்லாம் எண்ணி யெண்ணிப் பார்த்த கலீலியோ, மன விரக்தி கொண்டு; தன்னை எதிர்ப்பவர்கள் அனைவர் மீதும் அவர் கோபப்பட்டார்! தன்னையும் தனது முடிவையும் கேலி பேசியவர்களை; அவர் ஏறெடுத்தும் பாராமல் அலட்சியப்படுத்தினார்!

கலீலியோவை மறுத்தவர்கள் யார் தெரியுமா? தலை பழுத்த அறிவுக் கணிச்சுவை முதியவர்கள்; வயது ஏறி ஏறி வயிரம் பாய்த்த நெஞ்சமுடையவர்கள்! அதாவது அக்காலப் பெரியார்கள்; மதவாதிகள்!

மதவாதிகளையும், பெரியார்களையும், சான்றோர்களையும் பழித்தால் அல்லது உதாசினப்படுத்தினால், இல்லை அவர்கள் பகையானால் அதனால் விளையும் கேடுபாடுகள் என்ன சாமான்யமானதாகவா இருக்கும்?

முதுமை பெற்றவர்கள் எல்லாரும் ஒன்று கூடி, பைசா நகர் பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் என்ற பதவியிலே இருந்து கலீலியோவை நீக்கம் செய்து விட்டார்கள். அதனால் பல்கலை அறிஞரான அவர், பலவிதமான தொல்லைகள் ஏற்று அனுபவிக்கும் காலம் வந்தது.

அதற்குப் பிறகு கலீலியோ தனது அரிய முயற்சிகளால் தொல்லைகளால் பாதுவா Padua University பல்கலைக் கழகத்திலே கலீலியோ உயர் பதவி பெற்றார்! அங்கே அவர் பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றினார். சிறந்த சேவையாளர் என்ற பெயரையும், புகழையும் பெற்றார். தமது ஐம்பத்தைந்தாம் வயதுவரை அவர் தளராமல், தளர்வில்லாமல், சோராமல் சோர்வில்லாமல், களைக்காமல்-சளைக்காமல், மக்கட் தொண்டே தனது தொண்டென, அறிவுத் தொண்டாற்றிச் சேவை புரித்தார்.