கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/6. கை நாடித் துடிப்பால் பெண்டுல
6. கை நாடித் துடிப்பால் பெண்டுல நேரத்தை கணக்கிட்டார்
அந்தக் காலத்தில் கிரேக்கத் தத்துவஞானியான அரிஸ்டாட்டிலின் கணிதப் புலமை பலரை ஆட்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாட்டிலும் பெரும் கல்வியாளர் எனப்படுவோர் எல்லாரும் இவருக்கு மாணவர்களாக இருந்தார்கள்! எங்கு பார்த்தாலும்-எந்த பிரச்னையானாலும் அவரது புலமைக்கே மக்களிடம் மிகப்பெரிய செல்வாக்கும், பெருமையும் நம்பிக்கையும், பக்தியும் இருந்து வந்தது... அவர் திறமையை மறுத்துப் பேசவோ, அதற்கு இழுக்குத் தேடவோ, தவறு என்று அவர் கண்டித்துரைக்கவோ எவருக்கும் தைரியம் வந்தது இல்லை. இவ்வாறாக ஓராயிரம் ஆண்டு காலம்வரை ஐரோப்பா கண்டத்திலே அழிக்கப்பட முடியாத கல்விமானாக மக்கள் இடையேயும் சரி அரசு சார்பாகவும் சரி, மத ஆதிக்கம் மதமதப்பிலும் சரி புகழ் பெற்ற இடம் பெற்றிருந்தார்.
அரிஸ்டாட்டில் தனது ஆராய்ச்சியில் என்னென்ன புதுமைகளைக் கண்டு பிடிப்பாகச் சொன்னாரோ அந்த வாக்கே உண்மையான வேதவாக்காக, தெய்வவாக்காக அறிவு நுட்பவாக்காக எல்லோராலும் அப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
கலீலியோவின் தொடர் ஆராய்ச்சியின் எதிரொலி அரிஸ்டாட்டில் முடிவை எதிர்த்துக் கொண்டே வந்தது. கணிதத்தில், வானியலில் அரிஸ்டாட்டிலின் முடிவை பலமாக எதிர்த்து தவறுகளைத் தவறு என்று கூறலானார்.
தமிழ் நாட்டிலேயே இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் நக்கீரர் பெருமகனார், எப்படி தெய்வத் தவறையும் எதிர்த்து, நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று அஞ்சா நெஞ்ச அரிமா வள்ளுவனைப்போல வாதாடி தவறை மறுத்து உண்மையை உலகுக்கு நாட்டினாரோ அதுபோலவே கலீலியோவும் அரிஸ்டாடிலின் ஆய்வு ஆதிக்கத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்து, மறுத்து, வாதம் செய்து, பிற ஆய்வுச் சோதனைகளை ஆதாரமாகக் கொண்டு அவரது கணிதப்புலமையையும், வானியல் தவறுகளையும் சுட்டிக்காட்டி உண்மையை உலகிலே நாட்டினார்!
இந்த நக்கீரவாதம், ஏதோ புதிதாகக் கலீலியோவுக்கு மட்டும்தான் வந்தது என்பதன்று; அறிவியல்வாதிகள் இடையே எழும் அறிவுச் சிக்கல்கள் அல்லது ஆராய்ச்சிச் சிக்கல்கள் உடையவர்களாகவே விளங்கினார்கள். அந்த அறிவு வேட்கைகளால் இந்த உலகம் புதுப்புது கண்டு பிடிப்புக்களை அனுபவித்துக் கொண்டே வந்தது எனலாம்.
அந்தந்த எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் வாதப்பிரதி வாதங்களையும் கூர்மையாகக் கவனித்து வரும் அறிவியல், விஞ்ஞானவியல், தர்கவியல், வரலாற்றியல் கலைஞர்களுக்குத்தான் அவற்றின் அருமையும், பெருமையும் புரியும் அதனால், அவர்கள் அவற்றை இவ்வளவு எளிதாக மறுத்துவிடமாட்டார்கள்.