கலைக்களஞ்சியம்/அ
கலைக் களஞ்சியம்
─⚘──⚘──⚘──⚘──⚘──⚘──⚘──⚘──⚘──⚘──⚘──⚘──⚘─
அதமிழ் நெடுங் கணக்கில் முதல் எழுத்து. “எழுத்தெனப்படுப அகர முதல் னகர இறுவாய்” என்று தொடங்குகிறது தொல்காப்பியம்; “அகர முதல எழுத்தெல்லாம்” என்று தொடங்குகிறது திருக்குறள்; இந்திய நாட்டுப் பிற மொழிகளிலும் இதுவே முதலில் வரும் எழுத்தாம்.
வடிவம் : இந்த எழுத்தின் வடிவம் வளர்ந்த வரலாற்றைக் கீழே காணலாம் :.
அசோகன் (கி.மு. 3ஆம் நூற்றாண்டு} | |
அரிட்டாபட்டி (கி.மு. 2ஆம் நூற்றாண்டு} | |
சிற்றண்ணல் வாயில் {சித்தன்ன வாசல்} {7ஆம் நூற்றாண்டு} |
|
அரிக்கமேடு (முதல் நூற்றாண்டு} | |
திருநாதகுன்றம் (5ஆம் நூற்றாண்டு} | |
நரசிம்மவர்மன் மாமல்லன் (7ஆம் நூற்றாண்டு} |
|
பல்லவமல்லன் (8ஆம் நூற்றாண்டு} | |
பிற்காலப் பல்லவர்:இராசராசன் (10ஆம் நூற்றாண்டு} |
|
பிற்காலச் சோழர் பாண்டியர் (12-13ஆம் நூற்றாண்டு} |
|
இப்போது |
இந்தக் கோல் எழுத்தினை விரைவாக ஓலையில் எழுதி வந்த போது, வட்டெழுத்து வடிவம் தோன்றியது என்பர். பாண்டிய நாட்டிலும், மலையாள நாட்டிலும் வட்டெழுத்து வழங்கியது. வட்டெழுத்தில் அகரத்தின் வடிவம் கீழ்க்கண்டவாறு மாறி வந்துள்ளது.
| 8ஆம் நூற்றாண்டு | |
10ஆம் நூற்றாண்டு | ||
13ஆம் நூற்றாண்டு | ||
14ஆம் நூற்றாண்டு | ||
18ஆம் நூற்றாண்டு |
ஒலி : அகரத்தினை எழுத்தாகக் கூறும் போது, சாரியையைச் சேர்த்து அகரம், அகாரம், அஃகான் என்று வழங்கியதாக இலக்கண நூல்களிலிருந்து அறிகிறோம். அ—னா என்று வழங்குவதனை இன்றும் கேட்கிறோம். குழந்தைகள் எழுத்துக்களைப் பாட்டோசையாகப் பாடும் போது அ-ஆனா என வழங்குவதனையும் காண்கிறோம்.
அ என்ற ஒலியை a என அனைத்து நாட்டு ஒலி நூலோரும் எழுதிக் காட்டுவர். நாவினைப் படுக்க வைத்து, வாயினைத் திறந்ததும் ஒலி அ என வெளி வருகிறது. ஆதலின் இதை அடிப்படை ஒலி என்பர் பரிமேலழகர். வாயினையும், நாவினையும் பலவகையில் மாற்றுவதால், இந்த ஒலியே பலவகை எழுத்துக்களாக மாறுகின்றது; “கடவுள் எங்கும் நிறைந்திருப்பது போல எல்லா எழுத்துக்களிலும் அகரம் உண்டு” என்பர் நச்சினார்க்கினியர். தனி மெய்யெழுத்துக்களை ‘இக்’ ‘இங்’ என்று இப்போது ஓதுவது போன்று அல்லாமல், அகரம் சேர்த்தே க, ங என முன்னாளில் வழங்கி வந்தனர்.
அ என்ற ஒலி, எடுத்துச் சொல்லப் பெறாத போது, நெகிழ்ந்து போய்ப் பல வகையாக மாறும். தமிழ்ச் சொற்றொடரில் எழுவாயிலேயே பால் விளங்கி விடுவதால், பயனிலையாக வரும் வினைச் சொல்லில் பாலை விளக்கும் விகுதி எடுத்துச் சொல்லப் பெறாமல் அவ்வாறு நெகிழ்ந்துபோகும். வருகின்றனன் என்னும்போது கடைசியில் வரும் அன் என்ற அகரம் நெகிழ்ந்து பொது உயிரின் ஒலிபெறும். (Neuter vowel-But என்பதில் வரும் உயிர் போன்றது - இதனை A என்று எழுதுவர்.) அளவுக்குமேல் எடுத்துச் சொல்லும்போதும் இந்த ஒலி மாறும். பின்னர்ச் சார்ந்துவரும் எழுத்துக்களின் இயைபால் மேலும் மாறும். பின்னர்ச் சார்ந்துவரும் எழுத்துக்களில் இயைபால் மேலும் மாறும். வம்பன், இராமன் என்ற சொற்களில் கடைசியில் வரும் ன் என்ற எழுத்து மேல் அண்ணத்தின் முயற்சியால் பிறப்பதால் அ என்பதும் அண்ணச் சாயல் (Palatalisation) கொண்டு, இகரக்கூறு பெற்று, எகரம் போலாகி வம்பெ0 இராமெ0 என ஒலிக்கும். கும்பம் என்பது போன்ற இடங்களில் இதழ் அல்லது உதட்டின் முயற்சியால் பிறக்கும் மகரத்தின் சார்பால் உதட்டுச் சாயல் (Labialisation) கொண்டு உகரக்கூறு பெற்று ஒகரம் போலாகிக் கும்பொ0 என ஒலிக்கும்.
பலா என்பது மொழி முதல் எழுத்தோசை பெறாவிடின் ப்லா, பிலா என்றாகும்போது அகரம் இகரமாக மாறக் காண்கிறோம். அவர்கள் என்பது வட தமிழ் நாட்டில் வழங்கும் போது அவங்கள் என்றும் அவுங்கள் என்றும் வகரச் சார்பால் உதட்டுச் சாயல் பெற்று அகரம் உகரமாகும் ; தென் தமிழ் நாட்டிலும், கொங்கு நாட்டிலும் அவர்கள் என்பதில் உள்ள ரகரச் சார்பால் அண்ணச் சாயல் பெற்று அவிகள் என்றாகும்போது அகரம் இகரமாகக் காண்கிறோம். ரகரம் கெடுவதால் முன்னுள்ள அகரம் நீண்டு அவாள் என்று வழங்கும்போது அகரம் ஆகாரமாக மாறக் காண்கிறோம். ஔ என்பது அவ் என்றும் ஐ என்பது அய் என்றும் எழுதப்பெறும்போது ஐ ஔ என்ற இரண்டும் அகரமாகக் காண்கிறோம். இரண்டு மாத்திரை எழுத்துக்களாகிய இவை ஒரு மாத்திரையாக இவ்வாறு ஒலிக்கும்போது ஐகாரக் குறுக்கம் ஔகாரக் குறுக்கம் எனப் பெயர் பெறும். அரசன், அத்தை போன்ற சொற்களில் வரும் அகரம், அண்ணச் சாயல் பெற்று அரைசன் ஐத்தை என வழங்கும்போது ஐகாரமாகும் ; பசுமை + தமிழ் = பைந்தமிழ் என்று ஆகும். இவ்வாறெல்லாம் அகரம் பிற உயிரெழுத்துக்களாக மாறக் காண்கிறோம். அத்தகைய பொது நிலையில் சிலபோது அகர ஒலி நின்றுவிடுகிறது.
இந்நாளைய பேச்சு வழக்கில் அவன் அவள் முதலிய சொற்களில் ஈற்று மெய் ஒலிக்கப்பெறுவதில்லை. னகரத்தின் சார்பால் அகரம் மூக்கொலியாக மாறுகிறது. அவo - ஆண்பால் ; அவ - பெண்பால். பிரெஞ்சு மொழியில் வழங்கும் மூக்கொலிஉயிர் தமிழிலும் இவ்வாறு வழங்கக் காண்கிறோம்.
குசுகுசு எனப் பேசும்போது அகரம் ஒலி எழுத்தாக (Voiced letter) அல்லாமல் உயிர்ப் பெழுத்தாக (Breathed letter) மாறக் காண்கிறோம்.
தாய்த் திராவிட மொழியில் ஐ என்ற ஒலியுள்ள எழுத்து இருந்தது என்றும் அதற்கென வடிவெழுத்து ஒன்றனை அமைக்காமையால் அஃது அ என்றும் எ என்றும் யா என்றும் எழுதப் பெற்றதென்றும் ஆனை, யானை, ஏனுக (தெலுங்கு) என்பவையும், யான் (தன்மை ஒருமைச் சொல்), ஏம் ஓம் (தன்மைப் பன்மை விகுதி) என்பவையும், இன்றும் ஐ ஒலி band முதலான சொற்களில் வருவதனைத் தமிழர் ப்யாண்டு முதலாக எழுதுவதும் ஒலிப்பதும் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு என்றும் மொழி நூல் வரலாறு கூறும். அன் என்ற தன்மை ஒருமை விகுதியில் உள்ள அகரம் ஐ என்பதன் மரூஉவே ஆகும் என்பர்.
பொருள் : அ என்பது எழுத்துச் சாரியையாகக் க முதலியவற்றில் வரும் எனக் கண்டோம். உரி + பயறு = உரிய பயறு போன்ற இடங்களில் அகரம் சொற்களில் சாரியையாக வரும். திரு+மேகலை= திருவ மேகலை (சிந்தாமணி 530) என்பதுபோன்ற இடங்களில் அகரம் அசை நிலையாக வந்தது என்பர்.
சாரியைகளை எல்லாம் பழைய வேற்றுமையுருபுகள் என்பர் அறிஞர் கால்டுவெல். அகரம் ஆறாம் வேற்றுமைப் பன்மையுருபாக வரும் (தன கைகள்). இரண்டாம் வேற்றுமை உருபாம் ஐகாரம் பழந் தமிழில் அ எனவும் வரும். கான நாடனைக் களிறஞ்சும்மே= கானநாடனக்களிறஞ்சும்மே (தொல்காப்பியம் 591).
தன கைகள் என்பது போன்ற இடங்களில் வரும் தன என்பது வினையாலணையும் பெயராம் என்று கொள்வோரும் அகரம் பலவின்பால் விகுதியே என்று கொள்வோரும் உண்டு. ஒருமை பன்மைகளில் வெவ்வேறு உருபு பெறுவதும், இஃது அஃறிணை விகுதியாதலின் அஃறிணையில் வரும்போது மாறாது, உயர்திணை கொண்டு முடியும்போது கு என மாறுவதும் இதனை வலியுறுத்தும் என்பர் (தொல். 577). பல என்பதில் ஈற்று அகரம் பலவின்பாற் பெயர் விகுதி; வந்தன என்பதில் பலவின்பால் வினைமுற்று விகுதி. செய் என்னும் வாய்பாட்டு வினை எச்சத்திலும் அகரம் விகுதியாக வருகிறது. செய்கின்ற, செய்த என்ற வாய்பாட்டில் வரும் நிகழ் கால இறந்த காலப் பெயரெச்சங்களின் விகுதியாகவும் நல்ல, கரிய போன்ற குறிப்புப் பெயரெச்சங்களின் விகுதியாகவும் அகரம் வரக் காண்கிறோம். தற்கிழமையும் பிறிதின் கிழமையுமாம் வேற்றுமைப் பொருளினையே அகரம் எங்கும் குறிக்கும் என்று கொள்வோரும் உண்டு. ஓங்க, நீங்க என்ற இடங்களில் அகரம் வியங்கோள் விகுதியாக வருகிறது.
அ என்பது வாரான் என்பதுபோன்ற இடங்களில் எதிர் மறையைச் சுட்டி ஆன் என்பதில் கலந்து விட்டது என்று கூறுவோரும், அல் என்பதன் மரூஉவே அந்த அகரம் என்று கூறுவோரும் உண்டு.
தமிழில் மொழிக்கு முதலில் வாராத ரகரத்தில் தொடங்கும் மொழிகளின் முதலில் அகரம் தமிழோசை நயம் பிறப்பிக்க வரும் (Prothesis). உ-ம். அரங்கம், அரதனம்.
அ என்பது தொலைவில் உள்ளாரைச் சுட்டும் சேய்மைச் சுட்டு எழுத்தாம். அகரமானது அவன் அவள் முதலிய சொற்களில் சொல்லின் அடிப்படையாய் அகச் சுட்டாகியும், அக்கொற்றன் அச்சாத்தன் முதலியவற்றில் சொல்லின் புறத்தேவரும் புறச்சுட்டாகியும் வழங்கிவரும். பேசுகின்ற அல்லது எழுதுகின்ற இடத்திற்கேற்ப மேற்கண்டபடி குறிப்பாகப் பொருளுணர்த்தும் பண்டறிசுட்டாக வருவதன்றி அக்கடவுள், அத்தம்பெருமான் (சிந். 221) என்பன போன்ற உலகறி சுட்டாக எங்கும் யாவர்க்கும் விளங்கவும் வரும்.
வடமொழியில் அரூபம் (ரூபம் இல்லாதது), அநேகம் (ஒன்று அல்லாதது), அதர்மம் (தருமத்திற்கு மறுதலையாம் பாவச் செயல்) என்ற சொற்களில் ந என்பது அ எனத் திரிந்து இன்மை, அன்மை, மறுதலைப் பொருளில் வரும். அச் சொற்கள் தமிழில் வழங்கும்போது அப் பொருள்களில் அகரம் வழங்கக் காண்கிறோம்.
அ என்பது எட்டு என்ற எண்ணின் அடையாளமா வும் வழங்கி வருகிறது. அஉ அறியா அறிவில் இடை மகன் (யாப்பருங்கல விருத்தி பா. 142), எட்டினோடிரண்டும் அறியேனையே (திருவாசகம்- திருச்சதகம்) என வருதல் காண்க. சுழியோடு தொடங்காத அகரமே எட்டிக் குறிக்கும் என்பர் சிலர். இதன் வடிவ வரலாற்றினைக் கீழே காண்க:
அ என்பதற்குக் கடவுள் என்பதே பொருள் என்பர். அது திருமாலையும் சிவனையும். குறிக்கும். [அவ்வென் சொற் பொருளாவான் (பாகவதம் சிசுபா. 90). அகாரம் அவன்— (திருமந்திரம் 751)] அகரம் என அறிவாகி (விநாயக புராணம்-1) என்பதனால் கடவுளறிவுக்கும் அது பெயராம். தெ.பொ. மீ.