கலைக்களஞ்சியம்/அக்கமகாதேவி

அக்கமகாதேவி (அக்கமாதேவி, மகாதேவியக்கா) : கன்னட நாட்டுப்‌ பெண்மணி. சிவபக்தியிற்‌ சிறந்தவர்‌. அனுபூதியிலாழ்ந்தவர்‌. பசவண்ணருடனிருந்து அவர்‌ கல்யாண்‌ என்னும்‌ நகரத்‌தில்‌ நிறுவிய வீரசைவ நிலையமாகிய சிவானுபவ மண்டபத்தில்‌ தொண்டுபுரிந்து வந்த புண்ணியவதி. அவர்‌ பெற்ற அனுபவத்தின்‌ சாரத்தைத்‌ தெளிவான கன்னடத்தில்‌ இனிமையாகவும்‌ நெஞ்சிற்‌ புகுந்து அழுந்துமாறும்‌ உபதேச மொழிகளாகிய வசனங்கள்‌ என்னும்‌ வடிவில்‌ வெளியிட்டார்‌.

பசவண்ணரும்‌ இவரும்‌ ஒரே காலத்தவராதலால்‌, இவருடைய காலம்‌ ஏறக்குறைய 1160 ஆகும்‌. வீமலர்‌, சுமதி என்போர்‌ இவருடைய தந்தையும்‌ தாயும்‌ ஆவர்‌ என்பதும்‌ அவர்கள்‌ தக்காணத்து உடுதடி, என்னும்‌ ஊரில்‌ வாழ்ந்து வந்தனர்‌ என்பதும்‌ சாமரசன்‌ என்னும்‌ கன்னடக்‌ கவி எழுதிய பிரபுலிங்கலீலையிலிருந்து தெரிகின்றது. சமண மதத்தினனான கௌசிகன்‌ என்னும்‌ அரசன்‌ வலக்கட்டாயத்தினாலே இவ்வம்மையை மணந்தனனென்றும்‌, இவருடைய தூய வாழ்க்கையின்‌ முன்பு காமுகனான கௌசிகன் தன்‌ வலியிழந் தொழிந்தனென்றும்‌, எல்லாச்‌ செல்வங்களையும்‌ துறந்து இவர்‌ கல்யாண்‌ நரத்தை யடைந்து பசவேசுவரருடைய திருமுன்பு இறைவனுக்குத்‌ தொண்டு செய்துவந்தனர்‌ என்றும்‌ வரலாறு வழக்குகின்றது. பிறகு இவர்‌ ஸ்ரீசைலம்‌ என்னும்‌ திருப்பருப்பதம்‌ சென்று தாம்‌ விரும்பி வழிபடு மூர்த்தியாகிய மல்லிகார்ச்சுனரை வணங்கி அவருடைய பெயரை ஒவ்வொரு வசனத்தின்‌ இறுதியிலும்‌ முத்திரையாக வைத்துப்‌ பல வசனங்களை இயற்றிப்‌ பாடி, மகிழ்ந்தார்‌. கன்னட மக்களையும்‌ மகிழ்வித்தார்‌. வாழ்க்கையின்‌ இரகசியத்தை மக்களுக்கு மிகமிக எளிதாகத்‌ தெளிவுறுத்தினர்‌. வீரசைவ வசன இலக்கியத்தில்‌ அக்கா அவர்களுடைய இடம்‌ இணையற்றதாகும்‌. எம்‌. எம்‌. ப.