கலைக்களஞ்சியம்/அகத்திய நட்சத்திரம்

அகத்திய நட்சத்திரம் (Canopus, alpha Carinar) கண்ணுக்குத் தோன்றும் நட்சத்திரங்களிலெல்லாம் ஒளியில் இரண்டாவதாக விளங்குகிறது. இதைவிடப் பிரகாசமானது சிரியன் ஒன்றே. இது மஞ்சள் நிறமான வெளிச்ச முள்ள மிகப் பெரிய நட்சத்திரம். இது தெற்கு வானத்தில் கரைனா என்னும் நட்சத்திரத் தொகுதியில் தெரிவது. வானகோளத்தின் மத்திய ரேகையிலிருந்து தெற்கே 53 பாகை விலக்கத்தில் உள்ளது. ஆதலால் பூமத்தியரேகைக்கு 37 பாகைக்கு வடக்கே இருப்பவர்களுக்கு இது தெரியாது. சூரியனுக்கு இது 130 ஒளி யாண்டுத் தொலைவில் இருக்கலாம் என்று கருதுகின்றனர்.