கலைக்களஞ்சியம்/அகஸ்டஸ்

அகஸ்டஸ் (கி.மு.63-கி.பி.14): ரோமாபுரியின் முதல் பேரரசனான அகஸ்டஸின் உண்மைப் பெயர் அக்டேவியஸ் என்பது. இவன் ஜூலியஸ் சீசரின் உடன் பிறந்தவளின் மகளுடைய மகன். சீசர் இவனுக்கு ராணுவத்திலும் அரசியலிலும் பயிற்சியளித்தார். சீசர் இறக்கும்போது அக்டேவியாஸுக்கு 19 வயதுதான். ஆயினும் ஆழ்ந்த எண்ணங்களும், உறுதியான மனமும் படைத்த அக்டவியஸ் படிப்படியாக முன்னணிக்கு வரலானான். சீசரின் தத்து மகனும் ஆனான். கி.மு.43-ல் ஆன்டனி, லெபிடஸ் என்னுமிருதலைவர்களுடன் அக்டவியாஸ் ஒப்பந்தம் செய்துகொண்டு தங்களுக்குள் ரோமானிய சாம்ராச்சிய அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொண்டனர். ஆன்டனி கிழக்குப் பிரதேசத்தில் பகைவர்களுடன் போராடிக் கொண்டிருக்கையில் இத்தாலியிலேயே யிருந்த அக்டேவியஸ் தன நிலையை உறுதியாக்கிக் கொண்டான். லெபிடஸ் பதவியை விட்டு விலகிக்கொண்டான் (கி.மு.30). அக்டேவியஸ் ஆன்டனியுடன் போரிட்டு அவனை அக்டியும் போரில் வென்றான் (கி.மு.31). கி.மு.27 முதல் அக்டேவியஸ் ரோமானிய சாம்ராச்சியத்தின் தனி அதிகாரியானான். அக்ஸ்டஸ் என்னும் பட்டப்பெயர் சூட்டிக்கொண்டு தனது 79 ஆம் வயது வரை அப்பெரிய அரசை ஆண்டான். ரோமின் அரசியல் பெயரளவிற்குக் குடியரசாக இருந்தபோதிலும் அகஸ்டஸ் சர்வதிகாாியாகவே விளங்கினான். அவன் காலத்திற்குமுன் சாம்ராச்சியத்தில் புகுந்த ஊழல்களைக் களைந்தான். இதனால் மக்களின் அன்பைப் பெற்றான். இவன் காலத்தில் ரோமானிய சாம்ராச்சியம் மிகுந்த உயர் நிலையை யடைந்ததால், அது அகஸ்டன் பொற்காலம் எனப் புகழ்பெற்றது. கி.பி.14-ல் அகஸ்டஸ் காலமானதிலிருந்து அவன் மரபினர் பலர் ரோமனிய பேரரசர்களாக ஆண்டனர். இவர்கள் சீசர் வம்சத்தைச் சார்ந்தவர்களாகையால் சீசர் என்னும் பெயர் பேரரசர்களின் பட்டப் பெயராக மாறிற்று. டி. கே. வெ.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அகஸ்டஸ்&oldid=1453441" இலிருந்து மீள்விக்கப்பட்டது