கலைக்களஞ்சியம்/அக்காந்தொசெபலா

அக்காந்தொசெபலா (Acanthocephala): முள் தலைப் புழுக்கள். இவை யெல்லாம் ஒட்டுண்ணி வாழ்க்கைக்கே அமைந்திருக்கின்றன. இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் ஒரு நிலையிலேனும் உணவு உட்கொள்ளுவதற்கான சிறப்பான உறுப்பு ஒன்றும் காணப்படுவதில்லை. இவற்றில் ஆண் வேறு, பெண்வேறு. முதிர்ச்சியடைந்த புழுக்கள் முதுகுத்தண்டுள்ள பிராணிகளின் குடலில் வாழ்வன. அங்கிருக்கும் உணவைத் தம் உடலின் மேற் சுவர் வழியாகவே உள்ளுக்கு இழுத்துக்கொள்ளுகின்றன. சில வகைகள் மிகச் சிறியவை. இரண்டு மில்லி மீட்டர்கூட இருப்பதில்லை. மற்றும் சில இனங்கள் 500 மில்லி மீட்டர் அல்லது இருபது அங்குலத்துக்குமேல் இருக்கும். பெண்ணைவிட ஆண் சிறியதாக இருக்கும். இந்த ஒட்டுண்ணிகள் தமது ஆதாரப் பிராணிகளுக்குள்ளே அவற்றின் உணவின் வழியாகத்தான் கப்போதும் புகுகின்றன. இவற்றின் முதல் ஆதாரப் பிராணி ஒரு கணுக்காலி (Arthropoda). அதிலிருந்து அதை இரையாகக் கொள்ளும் மற்றொரு பிராணி இதற்கு இடையாதாரப் பிராணியாக இருக்கலாம் (intermediate host).அந்தப் பிராணியிலிருந்து அதை யுட்கொள்ளும் முழுகெலும்புப் பிராணியின் உடம்புக்குள் வரலாம்.

இந்தப் புழுக்களில் காணும் சிறப்பான உறுப்பு உடலின் முன்முனையிலுள்ள நாக்குப்போல நீட்டத்தக்க உறிஞ்சி (Proboscis) என்பது. இதை வெளியே நீட்டவும் உள்ளே இழுத்துக்கொள்ளவும் கூடும். இதன் மேலெல்லாம் கொக்கி போன்ற முட்கள் இருக்கும். இவற்றின் உதவியால் புழு ஆதரப் பிராணியின் குடற் சுவரை நன்றாகப் பற்றிக்கொண்டிருக்கும். பல இனங்களில் புழுவின் உடம்பின்மேலும் முட்கள் இருக்கலாம். ஆண் பெண் புழுக்கள்சேர்ந்து, பெண்ணின் உடலுக்குள் முட்டைகருவுற்று வெளியாகி ஆதாரப்பிராணியின் மலத்துடன் புறம்பே வரும். இந்தக் கருப்பட்ட முட்டையை நிலத்திலுள்ள வண்டுகளின் லார்வாக்கள் தின்னலாம். அவற்றின் உணவுப்பாதையில் முட்டை பொரித்து அக்காந்தர் என்னும் நிலைமை அடைகிறது. அது வளர்ந்து உருமாறி அக்காந்தெல்லா நிலையடைகிறது. இந்த நிலையில்தான் இது வேறு பிராணிகள் உடலில் ஒட்டுண்ணியாகப் பற்றக்கூடிய ஆற்றில் உடையது. வண்டின் லார்வாவில் உள்ளவரையிலும் அக்காந்தெல்லா முதிர்நிலை யுறுவதில்லை. அந்த லார்வாவைப் பன்றியோ வேறு யாதோ ஒரு முதுகுத்தண்டுப் பிராணி தின்றால் அதன் குடலில் அக்காந்தெல்லா நிலையைக் கடந்து முதிர்ச்சி நிலையடைகிறது.அப்போதுதான் இந்தப் புழுவின் வாழ்க்கை வட்டம் பூர்த்தியாகிறது.