கலைக்களஞ்சியம்/அக்காந்தோடியை
அக்காந்தோடியை : பாறையடுக்குக்களில் பாசில் (Fossil)களாகப் புதைந்து கிடக்கும் மிகப்
பழங்கால மீன்வகை. இதுவரையில் அறிந்திருக்கும் மீன்களிலெல்லாம் காலத்தால் முந்தினவை. இவற்றில் பல இனங்கள் காணப்படுகின்றன. இவை ஸ்காட்லாந்தில் கெய்த்னெஸ், போர்பார் என்னும் இடங்களில் அகப்படும் பழைய செம்மணற் பாறை (Old red sand stone)யில் அகப்படுகின்றன. இந்தப் பாறைகள் டெவோனியன் காலத்தைச் சேர்ந்தவை. அந்தக் காலம் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகலாம். அக்காலத்தில் இவை செழித்திருந்தனவெனத் தெரிகிறது. அது முதல் 10 கோடி ஆண்டு கரிக்காலத்தின் பகுதியாகிய கீழ்ப்பெர்மியன் காலம்வரையில் இவைவாழ்ந்து வந்திருக்கின்றன, இவை சிறு மீன்கள். தோல் சுறாவின் தோல்போல் சொரசொரப்புள்ளது. அதற்குக் காரணம் அதிலுள்ள முள்போன்ற சிறுசெதில்கள். இவற்றின் கண்ணைச் சுற்றிலும் சிறு தகடுகளாலான வளையம் ஒன்று அமைந்திருக்கிறது. இந்த மீன்களில் சாமானிய மீன்களுக்கு இருப்பதுபோல முன் ஒரு ஜதைத் துடுப்பும் பின் ஒரு ஜதைத் துடுப்பும் இருப்பதல்லாமல் இவற்றிற்கு இடையே வரிசையாக ஜதை ஜதையாக வேறு துடுப்புக்களும் இருக்கின்றன. இப்படி இந்த மீன்களில் முன், பின் துடுப்புகளுக்கு இடையேயும் துடுப்புக்கள் இருப்பதைக் கவனித்தால், மீன்களுக்கு இரண்டு பக்கங்களிலும் தொடர்ச்சியான ஒரு மடிப்பு முதலில் இருந்தது, அது பல துடுப்புக்களாகப் பிரிந்தது, அவற்றில் இப்போது தோள் துடுப்பும், தொடைத் துடுப்பும் மட்டும் எஞ்சியிருக்கின்றன என்னும் கருத்துத் தோன்றுகின்றது. அக்காந்தோடியையின் ஒவ்வொறு துடுப்பின் முன்பும் ஒரு வலுவான முள் உண்டு. அக்காந்தஸ் என்றால் முள் என்று பொருள்.