கலைக்களஞ்சியம்/அக்கி

அக்கி (Herpes) தோலின்மேல் தோன்றும் நோய். இது பல வகைப்படும். அவற்றுள் சாதாரண அக்கி, அக்கிப்புடை என்னும் இரண்டு முக்கியமானவை. சாதாரண அக்கி மேல்தோலில் தோன்றுகிறது. இது ஒருவகை வைரசினால் விளைகிறது. இது தோன்றுமுன் நமைச்சலும், எரிச்சலும் உண்டாகும். நோய் தோன்றும் பாகம் சிவந்து காணப்படும். பின்னர் விரைவில் சிறு கொப்புளங்கள் தோன்றும். சாதாரணமாக இது முகத்திலும், கன்னத்திலும், மூக்கின்மெலும் வரும். மார்ச்சளி, வயிற்றுக் கோளாறுகள், நியுமோனியா, மலேரியா, மெனிஞ்ஜைட்ஸ் ஆகிய நோய்கள் பீடித்திருக்கும்போதும் இது உண்டாகலாம். அக்கி ஒருமுறை தோன்றினால் பலமுறை அடுத்துவரும் குணமுடையது. தோல் சிவந்து நமைச்சலும், எரிச்சலும் தோன்றும்போதே நைட்ரச ஈதரை அதன்மேற் பூசி இதைத் தடை செய்யலாம். அக்கித்தோன்றி குணமாகுந் தருவாயில் மின்சாரச்சிகிச்சை செய்து மறுமுறை வராமல் தடுக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அக்கி&oldid=1453373" இலிருந்து மீள்விக்கப்பட்டது