கலைக்களஞ்சியம்/அக்கிப்புடை

அக்கிப்புடை (Hetepes Zoster) என்ற நோய் அக்கியைவிடச் சிக்கலானது. பயற்றம்மையை விளைவிக்கும் வைரசையொத்த நுண்மம் இதற்கு காரணம். இது தொத்துநோயாகப் பரவக்கூடும். அதிகமான நரம்பு வலிக்குப்பின் திடீரென்று சிரங்கு தோன்றும். பிறகு அங்கங்கே கொத்துக் கொத்தாகக் குருக்கள் தோன்றும். இவை சீழ்ப்பிடித்துச் சில நாட்களில் வறண்டு பொருக்குத் தட்டும். கொப்புளம் தோன்றும்போது நமைச்சலும், எரிச்சலும் மிக அதிகமாக இருக்கும். பொதுவாக இது விலாப்புறத்தில் ஏதாவது ஒரு பாகத்தில் மட்டும் தோன்றும். அக்கிப்புடை மறைந்த பல மாதங்கள் வரை அந்த இடத்தில் வலி இருப்பதுண்டு. இந்நோய் தோன்றும்முன் பலவீனம், காய்ச்சல் முதலிய கோளாறுகள் சிலருக்கு உண்டாகலாம். ஒருமுறை அக்கிப்புடை தோன்றினால் பல ஆண்டுகளுக்கு மீண்டும் வருவதில்லை.

வலியைக் குறைக்க ஆஸ்பிரின் அல்லது அதன் குணமுள்ள மாத்திரை கொடுப்பதுண்டு. ஓரிடத்தில் சிரங்கு தோன்றியதும் போரேட்டெட் டால்க்கம் தூளைத் தூவிப் பஞ்சினால் கட்டிவிடவேண்டும். நச்சு நீக்கும் பசைகளைத் தடவாமல் இருப்பது நல்லது. பிட்யூட்டரி சுரப்பியின் சாற்றை (pituitary extract) உட்செலுத்துவதால் வலிகுறைவதோடு நோயும் விரைவில் குணமாகுகிறது என்று சொல்லப்படுகிறது.