கலைக்களஞ்சியம்/அக்வைனஸ், செயின்ட் தாமஸ்
அக்வைனஸ், செயின்ட் தாமஸ் (சு. 1227—1274) இத்தாலியிலுள்ள நேபிள்ஸ் நகரத்தில் பிறந்த ஒரு தார்க்கிகர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்கொலாஸ்டிக்குகளுள் (Scholastics) சிறந்தவர். புராதன சாத்திரக் கொள்கைகளையும், அரிஸ்டாட்டில், சிசெரோ போன்றவர்களுடைய அரசியற் கொள்கைகளையும் பொருத்தி இடைக்கால அரசியல் தத்துவத்தை அறிவியல் தத்துவமாக்க உதவியவர். சட்டம் என்பது மாற்றுதற்குரிய தன்று, அழிவில்லாதது, இயற்கையானது என்பதும் உலகியற் சட்டமானது அடிப்படைச் சட்டத்தை நிறுவுவதற்கான ஒரு முயற்சியே என்பதும் இவர் கருத்துக்கள். இவர் இயற்றிய நூல்கள் : 1. அரசுத் தத்துவம், 2. அரிஸ்டாட்டிலின் அரசியற் கொள்கை விரிவுரை, 3. பாரமார்த்திக முழுவுரை. சி. எஸ். ஸ்ரீ.