கலைக்களஞ்சியம்/அக்ரேனியா

அக்ரேனியா (Acrania) முதுகுத் தண்டு விலங்குப் (Chordata) பெருந் தொகுதியில் ஒரு சிறு தொகுதி (Sub-phylum). அக்ரேனியா என்பதற்குத் தலையில்லாதவை என்று பொருள். இவ்வகை உயிர்களில் தலை என்று சொல்லக்கூடிய பாகம் இல்லை. எலும்பு வளையங்களால் ஆக்கப்பட்ட முதுகுத் தண்டும் கிடையாது. அதற்குப் பதிலாகப் பிரம்பு அல்லது தடிபோன்ற நோட்டோகார்டு (Notochord) என் னும் உறுப்பு இருக்கின்றது. கடலில் கரைக்கு அருகில் மண்ணில் புதைந்து வாழும் ஆம்பியாக்சஸ் (Amphioxus) என்னும் சிறு பிராணியும் அதற்கு நெருங்கிய தொடர்புடைய மற்றுஞ் சில பிராணிகளும் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவை. இவற்றிற்குச் செபலோ கார்டேட்டா (Cephalo chordata) (த. க.) என்றும் பெயர்.