கலைக்களஞ்சியம்/அங்காளம்மன்

அங்காளம்மன் : “சிவபிரானிடமிருந்து தோன்றிய வீரபத்திரனும் பத்திரகாளியும் தனித் தனியே உலாவித் தக்கன் வேள்வியை அழித்தனர்” எனக் கந்தபுராணங் கூறுமாறு சிவபெருமான் உமையம்மை இடமிருந்து தோன்றினவர்களே வீரபத்திரனும் பத்திரகாளியும் ஆவர். இச்சத்தியே அங்காளியாவர். இவர் அர்த்தநாாி வடிவினர். இவர் கோவில் முன்னர்த் திருநந்திதேவரும் பலிபீடமும் இடபக் கொடியும் இருத்தல் இதனை இனிது விளக்கும். இவர் தக்கனுடைய வேள்வியை வீரபத்திரருடனிருந்து அழித்து ஆடிய திருவிளையாடலை நினைவுகூர்தற்கே ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசையில் மயான நிருத்தம் (மசான கொள்ளை) என்னும் உற்சவத்தைக் கொண்டாடுகின்றனர்.

வல்லாள கண்டன் என்னும் அரக்கனையும் அவன் மனைவியையும் சிசுவையும் மருத்துவ வியாஜமாக பேய்ச்சி வடிவினராய் அழித்ததும் இவரது ஒரு கோலம். அங்காளம்மன் கோயிலில் பொியாண்டவன் என்று சொல்லுவது வீரபத்திரரைக் குறிக்கும். இவர் 1000 முகங்களையுடையவர். பொியாண்டவன் புசை புாிபவர் மண்ணால் 1000 இலிங்கங்கள் வைத்துப் பூசிப்பர். ப. அ. கி.