கலைக்களஞ்சியம்/அசர்பைஜான்

அசர்பைஜான் : 1. சோவியத் ரஷ்யாவைச்சேர்ந்த பொதுவ உடமைக் குடியரசுகளில் ஒன்று. இது காக்கேசியப் பிரதேசத்தில் ஈரான் எல்லைப்புரத்திற்கு வடக்கே இருக்கிறது. இக்குடியரசு நாடு கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையேயும் ஆர்மீனியன் சோவியத் குடியரசிற்குக் கிழக்கேயும் காக்கசஸ் மலைகளுக்குத் தெற்கேயும் அமைந்துள்ளது. பருத்தி, பழங்கள், காய்கறிகள் முதலியவை விளைகின்றன. பெட்ரோல் முதலிய தாது எண்ணெய் உற்பத்தி இங்கு முக்கியமாக நடைபெறுகிற கைத்தொழில். பரப்பு சு. 33460 சதுர மைல்; மக் : 3,209,700 (1939). தலைநகரம் பாக்கு (BAKU). மக்: 809,347 (1939).

2. ஈரானிலுள்ள வடமேற்கு மாகாணம் ஒன்றும் இப்பெயர் பெறும். இங்கு ஈரானியர்களும், துருக்கியர்களும், ஆர்மீனியர்களும் மிகுதியாக வசிக்கின்றனர்; துருக்கி மொழியே பெரும்பாலும் பேசப்படுகிறது. இது மற்ற ஈரானிய மாகாணங்களைக் காட்டிலும் செழிப்பானது. இங்கு விளையும் பழங்கள் முதலியவை அநேகமாக சோவியத் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மரங்கள் அடர்ந்துள்ள காடுகள் இங்கு அதிகம் இல்லை.

அசர்பைஜான்

இந்நாட்டு மக்கள் போர்த் தொழிலுக்கு ஏற்றவர்கள். பரப்பு : 32,000 சதுரமைல்; மக் ; சு. 20 லட்சம். தலை நகரம் : டப்ரீஸ் (மக்.272,000) (1949). டப்ரீஸிலிருந்து, பல ரெயில் பாதைகள் வடக்கும் தெற்கும் நோக்கிச் செல்லுகின்றன.