கலைக்களஞ்சியம்/அசல் குறிப்பு

அசல் குறிப்பு : கணக்குப் புத்தகங்களிலாவது பேரேட்டிலாவது பதிவு செய்யப்படுவதற்குமுன், ஒவ்வொரு வியாபார நடவடிக்கையும் முதலில் பதிவு செய்யப்படும் முதற்பதிவுப் புத்தகமே அசல் குறிப்புப் புத்தகமாகும். அசல் குறிப்புப் புத்தகத்தில் பதிவுற்றுள்ள பற்றுவரவு நடவடிக்கைகளை, இரட்டைப்பதிவு முறைப்படி, அவற்றிற்கு உரிய கணக்குகளாகப் பகுத்து எழுதும் முறை அசல் குறிப்புப் பதிவு எனப்படும். நெப்போலியன் சட்டத் தொகுப்பு அமலில் இருக்கும் ஐரோப்பிய நாடுகளில் தற்காலத்திலும் அசல் குறிப்புப் புத்தகத்தைக் கையாளுவது மிகத் தேவையாக இருப்பதுமன்றி, எல்லா வியாபார நடவடிக்கைகளும் அவை எத்தகைய இயல்புடையனவாயினும் இப்புத்தகத்தில் முதலில் பதிவு பெற வேண்டும். ஆயினும் எல்லா நடவடிக்கைகளும் ஒரே புத்தகத்தை உபயோகிப்பதால், அக்குறிப்புகளைப் பெயர்த்தெழுதும் வேலை சலிப்பையுண்டாக்கும் என்று கருதப்பட்டது. விற்பனைச் சிட்டை, விற்பனை வாபசு சிட்டை, கொள்முதல் குறிப்பு, கொள்முதல் வாபசு குறிப்பு, செலுத்து உண்டியல் குறிப்பு, வரத்து உண்டியல் குறிப்பு, ரொக்கச் சிட்டை, சில்லறைப் பணச் சிட்டை முதலிய தற்காலத்தியத் துணைச் சிட்டைகள் பயன் முறையில் கொண்டுவரப்பட்டிருப்பதால் பெயர்த்தெழுதும் வேலையினால் உண்டாகும் சலிப்பு பாதிக்குமேல் குறைந்துவிட்டது. ஆயினும் இச்சிட்டைகள் இப்பொழுதும் விற்பனை அசல் குறிப்பு என நடைமுறையில் வழங்கப்படுகின்றன. தற்காலத்தில் அசல் குறிப்புப் புத்தகம், மேற்கூறப்பட்ட சில்லறைச் சிட்டைகளில் பதிவு செய்யமுடியாத விவகாரங்களைக் குறிக்கவும், கணக்கு மாற்றுதல், பிழையைத் திருத்துதல், விடுபட்டதைச் சேர்த்தல், கணக்கு முடித்தல் போன்ற மிக முக்கியமான பதிவுகளைச் செய்யவும் உபயோகிக்கப்படுகின்றது. ஜீ. சௌ.