கலைக்களஞ்சியம்/அசுணம்

அசுணம் : இசையை அறிவதொருவிலங்கென்பர் (அசுண நன்மா - பெருங்கதை : 47:241). யாழொலியைக் கேட்டு மகிழ்தலும் பறையொலியைக் கேட்டுத் துன்புறுதலும் அசுணத்திற் கியல்பு என்பர். (பெருங்:47:241-43). இதன் இயல்பைக்கலி:143, நான்மணி:4, சீவக:1402, கம்பராமாயணம்-அவையடக்கம் முதலியவற்றிற் காண்க. தலைவன் பிரிவைப் பொறாத தலைவியின் நிலைக்கு அசுணம் பறையொலிகேட்டு வருந்தும் நிலையை உவமை காட்டுவார் (பெருங்:47:241--45). சூடாமணி நிகண்டு இதனைக் கேகயம் என்றும் கூறும் (சூடா:விலங்கின்:54). இதனைப் பறவையென்பாரும் உளர். இதன் உருவம் நிறம் முதலியவை தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அசுணம்&oldid=1453674" இலிருந்து மீள்விக்கப்பட்டது