கலைக்களஞ்சியம்/அசுவகோஷன்

அசுவகோஷன் : சமஸ்கிகருத இலக்கியத்திலும் பெளத்த மகத்திலும் சிறப்புற்ற ஆசிரியன். முதலில் அந்தணனாயிருந்து பின் பெளத்தம் தழுவியவன். இவன் ஊர் அயோத்தி. இவன் தாய் சுவர்ணாட்சி. கி.பி முதல் நூற்றாண்டில் வடமேற்கிந்தியாவில் ஆண்டு வந்த கனிஷ்க மகாராஜனின் அவையில் இவன் இருந்தான் எனக் கருதப்படுகிறது. ஆனால், சமீபத்தில் இவனுடைய காலம் கி.மு. முதல் நூற்றாண்டாயுமிருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர். பெளத்த மதத்தில் முதற்பெங் கவி அசுவகோஷன் ஆவான்.

இவனுடைய சிறந்த காப்பியம் புத்த சரிதம். இது புத்த பகவானின் சரிதையை 28 சருக்கங்களில் கூறுவது. இந்தியாவில் இந்த நூலின் ஒரு பகுதியே அகப்பட்டிருக்கிறது; முழு நூலும் சீனத்திலும் திபத்திலும் மொழிபெயர்ப்பு மூலம் காப்பாற்றாப்பட்டடிருக்கிறது. இவனுடைய இரண்டாவது காப்பியம் செளந்தரநந்தம். இதில் புத்தர் தமது ஒன்றுவிட்ட தம்பி நந்தனை, அவன் மனைவியிடம் அவனுக்கிருந்த மோகத்திலிருந்து நீக்கித் துறவியாக்கிப் பெளத்த சங்கத்தில் புகுத்திய கதை வருணிக்கப்பட்டிருக்கிறது. இதில் காப்பிய முறையிருப்பதோடு, உபதேசங்கள் பின்பாகத்தில் மிகுதியாகக் காண்ப்படும். மனச்சாந்தியையும், வீடுபேற்றையும் நோக்கமாகக் கொண்டு, காப்பியநடை இங்குக் கையரளப்பட்டதென ஆசிரியனும் இறுதியில் கூறுகிறான்.

தனக்கு முன்னிருந்த வைதிக மகத்தைத் தாக்கும் வஜ்ரஸூசி என்னும் சிறு நூலொன்றை இவன் எழுதியதாகச் சிலர் சொல்லுவார்கள். இந்நூலை இவன் எழுதவில்லை என்பதும் சில ஆராய்ச்சியாளர்களின் முடிவு.

ருத்ராலங்காரம் அல்லது கல்பனாலங்க்ருதிகா (கல்பனாமண்டிதிகா) என்ற புத்த கதைகள் கொண்ட காப்பிய நூலொன்றை இவனே செய்ததாக முன்பு நம்பப்பட்டு வந்தது. இந்நூல் அசுவகோஷன் காலத்தில் இளைஞனாயிருந்த குமாரலாதன் என்ற பௌத்த ஆசிரியன் எழுதியதென்று இப்போது தெளிவாகிறது.

கண்டீ ஸ்தோத்ரம் என்ற பக்திபரமான சிறு துதியொன்றும் இவன் இயற்றியதாகக் கூறப்படுகிறது. காப்பியத்தைப் பௌத்தமதத் தொண்டில் பயன்படுத்தியது போல் நாடகக் கலையையும், அசுவகோஷன் கையாண்டான் என்ற செய்தியும் கிடைக்கிறது. சாரீபுத்ரன், மௌகல்யாயனன் இருவரையும் புத்தர் தம் மதத்தைத் தழுவச் செய்த நிகழ்ச்சியை அசுவகோஷன் பத்து அங்கங்கள் கொண்ட சாரீபுத்ர ப்ரகரணம் என்ற நாடகமாக எழுதினான். இந்தநாடக நூல் இந்தியாவில் அகப்படவேயில்லை; மத்திய ஆசியாவில் பண்டைய பௌத்த ஸ்தலங்களைத் தோண்டி எடுக்கும்போது டர்பான் (Turfan) என்ற இடத்தில் இந்த நாடகத்தின் சிற்சில பகுதிகள் ஆச்சரியமாய் லாய்டர்ஸ் (Leuders) என்ற ஜெர்மன் சம்ஸ்கிருதப் பேராசிரியரால் கண்டுபிடிக்கப்பட்டன. இத்துணுக்குக்களில் வேறு இரு நாடகங்களின் பகுதிகளும் காணப்படுகின்றன; ஒன்றில் கீர்த்தி, புத்தி முதலிய குணங்கள் பாத்திரங்களாக வருகின்றன; மற்றென்றில் விலைமாது, விடன் முதலியவர் காணப்படுகின்றனர். இதிலிருந்து கிறிஸ்து தோன்றின காலத்தில் சமஸ்கிருத நாடகவிலக்கியம் பல மாதிரியான வளர்ச்சியை அடைந்திருந்தமை தெரிகிறது. இவை போலவே ராஷ்ட்ரபால நாடகம் என்னும் அசுவகோஷன் செய்த நாடகமொன்றும் பிற்காலத்திய நூல்களிலுள்ள மேற்கோள்களிலிருந்து தெரிய வருகிறது.

பௌத்த மத நூல்களுள் பல இவன் பெயரில் காணப்படும்; ஆனால் இவற்றுள் எவை இவனே எழுதியவை, எவை பிறர் எழுதி இவனுக்கிருந்த புகழால் இவன் மேல் சுமத்தப்பட்டவை என்று அறிய முடியாமற் குழப்பமாயிருக்கிறது.