கலைக்களஞ்சியம்/அசோகு
அசோகு (பிண்டி,செயலை) நேர்த்தியான நிழல் மரம், மஞ்சள், கிச்சலி, சிவப்புநிறப் பூக்கள் செண்டுச் செண்டாகப் பூத்திருக்கும்போது மிகவும் அழகாக தோன்றும். இது 20-30 அடி உயரம் வளரும். பூக்கள் மணமுள்ளவை. இலைக்கக்த்தில் பல பூக்கள் அடர்த்தியாகச் செறிந்து சமதனமஞ்சளியாக இருக்கும். மஞ்சரி செண்டுபோலத் தெரியும்.
புல்லி முதலில் மஞ்சள், பிறகு கிச்சிலி, கடைசியில் சிவப்பாக மாறும். இந்தப் பூவில் அல்லியில்லை. சூல்தண்டு வளையம் போலச் சுருண்டிருக்கும், கனி, தட்டையான சிம்பை (legume). இந்த மரம் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் சாதாரணமாக வளர்கிறது. இதைத்தோட்டங்களில் வைத்து அழகுக்காக வளர்கிறார்கள். புத்த தேவருக்கு அரசமரம் போல் ஜீனதேவருக்கு அசோகு பவித்திரமானது. இது பெண்கள் கால் உதை பட்டால் மலரும் என்பது கவி சமயம். இதன் பட்டை நாட்டு மருந்துக்கு பயன்படுவது.
குடும்பம்:லெகியூமினேசீ (leguminoseae).
உட்குடும்பம்: சீசால்பினய்டீ (caesalpinoideae)
இனம்: சாரக்கா இண்டிக்கா (saraca Indica).
நெட்டிலிங்க மரத்தையும் அசோகமரம் என்று சொல்வதுண்டு. பார்க்க: நெட்டிலிங்கம்.