கலைக்களஞ்சியம்/அஜராட்டம்

அஜராட்டம் தோட்டத்தில் வளர்க்கும் பூச்செடி. வெண்மை நிறமானது. சிலவற்றில் சிவப்பு நிறமுள்ள பூக்கள் உண்டு. சாமந்திக் குடும்பத்தைச் சேர்ந்தது. பூக்கள் எல்லாம் குழாய் வடிவமான மண்டலச் சிறு பூக்கள். காய் முதிர்ந்தால் அதன்மேலுள்ள புல்லி மாறுபட்டு மயிர்க் குச்சம் போலாகிறது. விதை பறந்து பரவுவதற்கு இந்தக் குச்சம் உதவியாகிறது. இந்தச் செடிகளில் ஓர் இனம் சாதாரணமாகத் தோட்டங்களிலும் தெருப்பக்கங்களிலும் வளர்ந்திருக்கும். ஒரு வித நல்ல மணமுள்ளது. இதற்குப் பூம்புல் என்று பெயர். இதன் தண்டிலும் இலையிலும் மயிர் நிறைந்திருக்கும். இது 1-3 அடி உயரம் வளரும். இந்தியாவில் கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரம் வரையில் எங்கும் இதைக் காணலாம். வெட்டுக் காயத்துக்கும் புண்ணுக்கும் இதன் இலையை மருந்தாகப் பயன் படுத்துகிறார்கள். குடும்பம்: கம்பாசிட்டீ (Compo- sitae); பூம்புல் என்பது அஜராட்டம் கோனிசாய்டிஸ் (Ageratum conyzoides).