கலைக்களஞ்சியம்/அஜாதசத்துரு

அஜாதசத்துரு: முதல் மகத சாம்ராச்சியத்தைத் தாபித்த பிம்பிசாரன் (சு. கி.மு. 525-500) மகன். இவன் தன் தந்தை ஆண்ட சமயத்தில் சம்பாவில் இளவரசனாக ஆட்சி செலுத்தினான். இவன் பிம்பிசாரனைக் கொன்று இராசக்கிருகத்தில் அரியணை யேறினான் என்று சொல்லப்படுகிறது. இவன் சமணனாகையால் பௌத்தர்கள் இவனைப் பற்றி இவ்வாறு கூறி வந்தனரென்று சிலர் எண்ணுகிறார்கள். கோசல நாடும் வைசாலியும் சேர்ந்து சுமார் பதினாறு ஆண்டுகள் அஜாதசத்துருவுடன் போர்புரிந்தன. அஜாதசத்துரு இரு நாடுகளின் மக்களிடை மனவேறுபாட்டை உண்டாக்கிக் கடைசியில் வென்றான். வைசாலி தன் குடியரசை இழந்தது. இரு நாடுகளும் மகதராச்சியத்துடன் இணைக்கப்பட்டன. இப்போர் நடந்தகாலத்தில் அஜாதசத்துரு பாடலிக்கிராமத்தில் ஒரு பெருங்கோட்டையைக் கட்டினான். இதுதான் பிறகு பாடலிபுரம் என்ற சிறந்த நகரமாக மேன்மையடைந்தது. மகதப் பேரரசைப் பலப்படுத்தினவன் இவனே. இவன் சமணனாக இருந்தாலும் புத்தரிடம் மதிப்பு வைத்தவன். கி.மு.487-ல் புத்தர் இறந்த பிறகு இராசக்கிருகத்தில் இவன் முயற்சியால் பௌத்த சங்கத்தின் முதல் மாநாடு கூடிற்று. கே. ஆர். வெ.