கலைக்களஞ்சியம்/அடக்கல்
அடக்கல் (Repression) : இரண்டு இயல்பூக்கங்களுக்கிடையே நம் மனத்திலே உண்டாகும் போராட்டத்தின் விளைவே அடக்கல் என்பது. அச்சம் ஓர் இயல்பூக்கம்; விடுப்பு (Curiosity) மற்றென்று. விடுப்பினால் ஒன்றை அறிய ஆசைப்படுகிறேம். அனால் அதனால் என்ன தீங்கு ஏற்படுமோ என்ற அச்சம் தடுக்கிறது. இவ்விரு இயல்பூக்கங்களுக்கிடையில் எழும் போராட்டத்தால் அடக்கல் விளைகின்றது. இடல்பூக்க உள்தூண்டல்களில் போராட்டம் நிகழம்போது அறிவுச் சக்தி அல்லது அறவுணர்ச்சிச் சக்தி செலவாகின்றது. அது மோட்டார் வண்டியின் பொறியை ஓடும்படி செய்யும் சமயத்திலேயே முட்டுப் போட்டு ஓட வொட்டாமல் தடுப்பது போன்றதாகும்.
அடக்கல் என்பதை இங்கு நாம்பிராய்டு (Freud) என்னும் அறிஞர் கூறும் பொருணிலேயே கூறுகிறேம். நாகரீக மக்கள் தங்கள் நாகரீகத்தைப் பாதுகாப்பகற்காகச் செய்யும் பெருஞ் செலவை பிராய்டு தம்முடைய நூல்கள் அனைத்திலும் கூறுகிறார். அந்தச் செலவு யாதெனில் மக்கள் தம் விருப்பப்படி யெல்லாம் நடந்து கொள்வதைத் தடுப்பதேயாகும். இப்போராட்டங்களுள் ஒருவனுடைய சொந்த அசைகளுக்கும் சமுதாயம் வருத்துள்ள நடத்தை முறைக்கும் ஏற்படும் போராட்டமும், ஒருவனுடைய இயல்பூக்க ஆசைகளுக்கும் நேர்மையையும் நல்லொழுக்கத்தையும் கடைப்பிடிக்கவேண்டும் என்று அவன் கொண்டுள்ள உணர்ச்சிக்கும் இடைவே ஏற்படும் போராட்டமும் மிக முக்கியமானவை. முதற் போராட்டம் சமுதாயக் கவலையையும், மற்றது அறவுணர்ச்சிக் கவலைகளையும் உண்டாக்குகின்றன. இந்த இரண்டு கவலைகளுக்கும் காரணம் சமய பக்தர்கள் மனச்சான்று என்று கூறும் அந்த சுகமே (Super Ego) என்று பிராய்டு கருதுகிறார். அதீத அகம் வளர்வது சிசுப் பருவத்திலுள்ள பலக் குறைவினால்தான். சிறு குழந்தை தன்தேவையைக் கெல்லாம் பிறரையே சார்ந்துள்ளது. அதனால் அது அவர்களுடைய அன்பை இழக்காதிருக்க முயல்கின்றது. அவர்களுடைய அன்பை இழந்துவிட்டால் அவர்களுடைய பாதுகாப்பும் போய்விடும்; அவர்களுடைய தண்டனையும் கிடைக்கும். ஆகவே அவர்களுடைய அவர்கள் அன்பை இழந்துவிடாமலிருப்பதற்காக செய்யக்கூடாது என்று கூறுவதை அது செய்யாமலிருக்கின்றது. இவ்வாறு தண்டனைக்கு அஞ்சியே தடுக்கப்பட்டதைச் செய்யாதிருப்பதனால் பிறர் காணாதவாறு அந்தக் காரியத்தைச் செய்ய அது விரும்புகிறது. இந்த விருப்பத்தையே சமுதாயக் கவலை என்று பிராய்டு கூறுகிறார். இதை மனச்சான்று என்று கூறலாகாது.
பிறருடைய வரையறையைத் தாண்டாமல் நடப்பது மனச்சான்று ஆகாது. அது வெறும் சமுதாயக் கவலையேயாகும். தன் நெஞ்சின் வரையறையைத் தாண்டாமல் நடப்பதே மனச்சான்றின்படி நடப்பதாகும். பிறர்க்கு அஞ்சி நடப்பவன் அதை விட்டுவிட்டுத் தன்னுடைய அதீத அகம் கூறுவதுபோல் நடக்கத் தொடங்கினால் அப்பொழுது அவனிடம் ஒரு பெரிய மாறுதல் தோன்றும். அப்பொழுதே மனச்சான்று என்பது பிறக்கின்றது. இந்த இடத்தில் விருப்பம் செயல் என்னும் இரண்டுக்கும் எவ்வித முரண்பாடும் நிகழ்வதில்லை.
அடக்கல் என்னும் சொல்லோடு ஒடுக்கல் (Suppression) என்னும் சொல்லும் கூறப்படுவதுண்டு. இரண்டுக்கும் ஒரே பொருளேயாயினும் தலையாய ஒரு வேறுபாடுளது. ஒருவன் தன்பால் எழும் ஆசையை வேண்டாம் என்று தடுத்துக்கொண்டு அவ்வாறு தடுத்துக் கொள்ளுவதையும் அறிந்திருப்பானானால் அப்பொழுது நிகழ்வது ஒடுக்கல். ஆகவே ஒடுக்கல் என்பது ஒருவன் தானாக முயன்று அறநெறி நிற்பது ; அடக்கல் என்பது அவன் அறியாமலே நிகழ்வது. பல பொருள்கள் முதலில் ஒடுக்கப்பட்டுப் பிறகு அடக்கல் நிலை அடைகின்றன. ஆனால் ஒடுக்கப்படும் பொருள்களும் தன்னைவிட்டுப் பிரிந்து போவதில்லை. கேடு உண்டாக்காத முறையில் சிலவும், கேடு உண்டாக்கும் முறையில் சிலவும் பிற் காலத்தில் புறத்தே தோன்றுகின்றன.
இயல்பூக்க ஆசை ஒன்றை அடக்குவது என்பது ஆற்றில் போகும் நீரை அணைபோட்டுத் தடுக்க முயல்வது போலாம். ஆற்று நீரை அணைபோட்டுத் தடுப்பது கடினமான செயல்; நிறைந்த வெற்றி கிடைப்பது அரிது. நிறைந்த வெற்றி கிடைப்பினும் அணைக்குக் கீழுள்ள நிலங்கள் நீர் பெறாமல் வளங்குன்றி வறண்டு போகின்றன. அத்துடன் அணையானது நீரைத் தடுப்பினும் நீர் மிகுந்துவிடுமாயின் அணை உடைந்து மிகுந்த கேட்டை விளைவித்து விடுவதுமுண்டு. அதுபோல் இயல்பூக்க ஆசைகளை முற்றிலும் அடக்குவது என்பது முடியாத செயல். முடிந்தாலும் கேடே விளையும். அதனால் இயல்பூக்கச் சக்தியை நல்வழியில் பயன்படுமாறு செய்வதே சிறந்த வழி. இவ்வாறு நல்வழியில் பயன்படச் செய்வதை உயர்வு மலர்ச்சி (Sublimation) என்று கூறுவர். நாகரிக வாழ்வில் மிகப் பல ஆசைகளுக்கு அணைபோடுமாறு ஏற்படுவதால் இந்த உயர்வு மலர்ச்சியை ஏற்படுத்துவது என்பது எளிதன்று. பொருள்களைத் தனதாக்கவும், பிறரைத் தன் ஆணைவழி ஒழுகச் செய்யவும் வேண்டுமென்று இயல்பாக எழும் ஆசைகளைத் தடுப்பதற்காகச் சமூகம் ஏற்படுத்தும் சட்ட திட்டங்கள் தன்னுடைய சுதந்திரத்தில் தலையிடுகின்றன. இதன் காரணமாக அடக்கப்பெறும் இயல்பூக்க ஆசைகளிலே மிகுதியாக அடக்கப்பெறுவது ஆண் - பெண் உறவு இயல்பூக்கம் (Sex Instinct) ஆகும். மற்ற இயல்பூக்கங்களைப் பலவிடங்களில் பலவாறாக வெளியே தோன்றும்படி செய்யலாம். ஆனால் நாம் விரும்பும் வண்ணம் ஆண்-பெண் உறவு இயல்பூக்கத்தை நாகரிக சமுதாயத்தில் வெளித்தோன்றும்படி செய்வது எளிதன்று. ஆனால் அதுதான் தலையாயதும் சிறிதளவும் புறக்கணிக்க முடியாததுமான இயல்பூக்கமாகும். அதனால்தான் சில உளஇயலார் அடக்கல் பற்றிக் கூறும்போது ஆண்-பெண் உறவு இயல்பூக்க அடக்கலையே மனத்திற்கொண்டு கூறுகிறார்கள். அவர்களுள் தலையாயவர் பிராய்டு; அவர் இயல்பூக்க அடக்கல் என்பதெல்லாம் பெரும்பாலும் ஆண் - பெண் உறவு இயல்பூக்க அடக்கலே என்று கூறுகிறார்.
இந்த ஆண் - பெண் உறவு இயல்பூக்கம் சிசுப் பருவத்திலேயே காணப்படுவதாக பிராய்டு கூறுகிறார். இதைக் கேட்டவுடன் இது உண்மையாயிருக்குமா என்று மக்கள் வியப்புற்றனர். ஆனால் இப்பொழுது அது மாறிவிட்டது. சிசுப் பருவத்திலேயே இந்த இயல்பூக்கம் காணப்படுவதால் இந்த இயல்பூக்கம் சிசுப்பருவத்திலேயே அடக்கவும் படுகிறது. சிசுப் பருவத்தில் தோன்றும் இந்த இயல்பூக்கம் ஆறாவது வயது முதல் குமரப் பருவம் (Adolescence) வரை மறைந்து உள்ளே வளர்ந்து வருகிறது. அதன்பின் வேகத்துடன் வெளித் தோன்றிவிடுகிறது. ஆனால் அது எக்காலத்தும் விரும்பும் அளவு போக்குப் பெறுவதில்லை. அவ்வியல்பூக்கம் மிகுந்து தோன்றும் குமரப்பருவத்தினர்கூட அப்படி மிகுந்து தோன்றாதது போலவே நடித்துவிடவேண்டியவர்களா யிருக்கிறார்கள். இயல்பூக்கம் உள்ளே புயல்போல் நிகழும் சமயத்தில் வெளியே அமைதிபோல் காட்டுகின்ற இந்தச் செயலையே அடக்கல் என்று கூறுகின்றோம். உயிர்ச் சக்தியாகிய லிபிடோ என்னும் மோட்டார் வண்டியின் எஞ்சின் வேலை செய்யத் தொடங்கி விடுகிறது, ஆயினும் வலிய தடை போடப்பட்டதால் வண்டி நகராமல் நின்றுவிடுகிறது.
அடக்கப்பட்ட நுகர்ச்சிகள் பல வழிகளில் புறத்தே தோன்றும். சில வேளைகளில் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் தன்னையறியாமலே வெளித் தோன்றி விடும். சில வேளைகளில் எதையேனும் நன்றாகச் செய்யாமை, எதையேனும் உடைத்து விடுதல் போன்ற சிறு தவறுகள் வாயிலாகத் தோன்றும். சாலைகளில் வண்டிகளில் அகப்பட்டுக் கொள்ளுதல், எந்திர சாலைகளில் பொறிகளில் சிக்கிக் காயமோ மரணமோ அடையதல் போன்ற பெரிய கேடுகளுக்குங்கூட அடக்கப்பட்ட நுகர்ச்சிகளே காரணமாயிருக்கலாம். ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்து, தவறு செய்துவிட்டதாக உணர்ந்தால் தவறு செய்தோமென்ற அந்த உணர்ச்சி அடக்கப்பட்டிருந்த பிறகு சில வேளைகளில் தவறான காரியங்களைச் செய்யுமாறு செய்துவிடும். மனச்சோர்வு, கவலை, காரணமின்றி அழுதல், சிறு செயல்களைக்கூட மிகுந்த அக்கரையுடன் செய்தல் போன்றவையும் புறத்தே நிகழும் அடக்கப்பட்ட நுகர்ச்சிகளேயாம். அடக்கப்பட்ட நுகர்ச்சிகளை அடக்க முடியாதவர்கள்ளுள் சிலர் யாரிடமும் பேசாமல் விலகி யிருப்பர், சிலர் பிறர் செயல்களில் தலையிடுவர், சிலர் பிறரிடம் தவறாக நடந்து கொள்வர்.
இயல்பூக்க ஆசைகளை நல்வழியில் நிறைவேற்றிக் கொள்ள இயலாதவர்கள் அவற்றை அடக்கிப் பலவிதமான கேடுகளை அடைகிறார்கள். இயல்பூக்கச் சக்தியாகிய லிபிடோவை நாகரிக சமுதாயத்தில் அடக்குவது நாகரிகமற்ற சமுதாயத்தில் அடக்குவதைவிடக் கடினமாயிருக்கிறது. நாகரிக சமுதாயத்தில் அடக்குவதால் உண்டாகும் கேடுகளே நாம் நாகரிகத்துக்குத் தரும் விலையாகும். ஏ. வி. மே.