கலைக்களஞ்சியம்/அட்லான்டிக் சமுத்திரம்
அட்லான்டிக் சமுத்திரம் : கிழக்கே ஐரோப்பா, ஆப்பிரிக்காக் கண்டங்களுக்கும், மேற்கே வட தென் அமெரிக்காக் கண்டங்களுக்கும் இடையே உள்ள பெரிய நீர்ப்பரப்பு. இதற்கும் பெரியது பசிபிக் சமுத்திரம் ஒன்றே. இச்சமுத்திரத்தின் வடகோடி ஆர்க்டிக் சமுத்திரத்தோடும், தென்கோடி அன்டார்க்டிக் சமுத்திரத்தோடும் கலக்கின்றன. இது தெற்கு வடக்கில் 9,000 மைல் நீளம் உள்ளது. இதன் உச்ச அகலம் (பிளாரிடாவிலிருந்து ஜிப்ரால்டர் வரை) 4.150 மைல். இச்சமுத்திரத்தின் பரப்பு : சு. 32 லட்சம் ச. மைல்.
இச்சமுத்திரம் போர்ட்டோ ரீக்கோ பள்ளம் என்னுமிடத்தில் 30,000 அடி ஆழம் இருக்கிறது. இதுவே இதன் உச்ச ஆழம்.
கிழக்கில் மத்தியதரைக் கடலும் மேற்கில் ஹட்ஸன் வளைகுடா, மெக்சிகோ வளைகுடா, கரிபியன் கடல் என்பவையும் இச்சமுத்திரத்தை அடுத்த நீர்நிலைகள். பிரிட்டிஷ் தீவுகளும், ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, நியூ பவுண்டுலாந்து முதலியவையும், மேற்கிந்தியத் தீவுகளும் இச்சமுத்திரத்திலுள்ள முக்கியமான தீவுகள். இச்சமுத்திரத்தின் நீர்மட்ட வெப்பநிலை 80° பா. லிருந்து 28° பா. வரையுள்ளது. வட அட்லான்டிக்கில் இரு நீரோட்டங்கள் முக்கியமானவை. வளைகுடா நீரோட்டம் பிளாரிடா ஜலசந்தியிலிருந்து தொடங்கி தென்மேற்கு ஐரோப்பாவரை செல்லுகின்ற வெப்ப நீரோட்டம்; இதனால் ஐரோப்பாவின் அட்லான்டிக் கடற்கரையில் அமெரிக்கக் கிழக்குக் கடற்கரையைவிட வெப்பம் அதிகமாயிருக்கிறது. லாப்ரடார் நீரோட்டத்தால் கானடாவில் குளிர் மிகுந்து காட்டுகிறது. அவ்வாறே தென் அட்லான்டிக்கிலுள்ள பிரேசில் நீரோட்டம் வெப்ப நீரோட்டமாகவும், பாக்லாந்து நீரோட்டம் குளிர் நீரோட்டமாகவும் உள்ளன. இங்குள்ள கனாரி, பெங்கூலா நீரோட்டங்களும் முக்கியமானவை.
இச்சமுத்திரத்தில் உணவிற்குரிய மீன் மிகுதியாகக் கிடைக்கிறது.